இருளின் ஒளி

எல்லா மனிதர்களுக்கும் மனதுக்கு நெருக்கமான ஒரு இடமிருக்கும். மனம் அமைதியுறும் இடம். அப்படி எனக்கும் ஒரு இடமிருக்கிறது. 1987ல் நோர்வேக்கு வந்தபோது முதன்முதலாக நகரத்தினுள் நடந்த வீதி அது. நகரத்தின் மையத்தில் இருக்கிறது. பழைய புகையிரத நிலையத்திற்கு நேரெதிரே ஆரம்பித்து நோர்வே அரசனின் அரண்மனையில் முடிவடையும் இந்த வீதி.

இந்த வீதியில் நடப்பது ஒரு நண்பனுடன் உரையாடியபடியே நடப்பது போன்றது. நடந்து முடியும்போதெல்லாம் மனது ஆறிப்போயிருக்கும். இந்த வீதியில் நடந்த அனுபவம் ஒன்றினை பால்வீதிப்பயணங்கள் என்று முன்பு எழுதியிருக்கிறேன். இதுவும் அப்படியானதே.

நேற்று மனது அழுந்திக்கிடந்ததனதல் நாளின் பெரும்பகுதி தூக்கத்தில் கழிந்தது. என்னை வற்புறுத்தி வெளியே அழைத்துவரவேண்டியிருந்தது. நேரம் மாலை 9 மணி. எங்கே செல்வது என்ற தீர்மானமின்றி நடந்துகொண்டிருந்தேன்.

சற்றுநேரத்தில் எனது வீட்டில் இருந்து நான்கு கிலோமீற்றர்களுக்கு அப்பாலுள்ள ஒரு நிலக்கீழ்தொடரூந்து நிலையத்தை கண்ணுற்றபோது கால்கள் என்னை அங்கு அழைத்துப்போயின. 30 நிமிடத்தின்பின் நகரின் மையத்தில் நின்றிருந்தேன். அங்கிருந்து ஒரு நிமிட நடையில் ஆரம்பிக்கிறது நான் மேலே கூறிய வீதி.

நேரம் மாலை 11 மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. கடும் குளிர். நகரின் மையப்பகுதி என்பதால் வீதிகளில் இருந்து பனி வழிக்கப்பட்டிருந்தது. இந்த வீதியுடனான எனது நினைவுகளில் அதிகமானவை வீதியின் ஆரம்பத்தில் இருந்த ஒரு கமரா கடையினுடனானவை. 1980களின் இறுதியில் புகைப்படக்கலையைவிட வேறு எதையும் மனது சிந்திக்காத காலம். ஏறத்தாழ வாரத்தில் 3 – 4 முறை அந்தக் கடைக்குச்செல்வேன். இப்போது அந்தக் கடை அங்கில்லை. முதற்காதலின் நினைவுபோன்றது அந்தக்கடையின் நினைவுகள்.

ஞாயிற்றுக்கிழமை இரவு என்பதால் வீதி வெறிச்சோடிக்கிடந்தது. கண்ணில்பட்ட முதல் மனிதர் ஒரு போதைப்பொருள் பாவனையாளர். தனது சொத்துக்களை இரண்டு பைகளில் அடைத்துவைத்திருந்தார். அவரால் நிற்கமுடியவில்லை. உடலை வளைத்து நின்றுகொண்டிருந்தார். இல்லை, அவர் தூங்க முயற்சித்துக்கொண்டார். எத்தனை கொடுமையான தூக்கமாக இருக்கும் அது. வாழ்வு சிலவேளைகளில் அவலம்.

அவரைக் கடந்தபோது ஒரு பிச்சைக்காரர் இரண்டு விளக்குகளுடன் தூங்கிப்போயிருந்தார். அவருக்கு வலதுபுறமும் இடதுபுறமும் இரண்டு விளக்குகள் மங்கி மங்கி எரிந்துகொண்டிருந்தன.

இந்த நீண்ட வீதியை பல வீதிகள் குறுக்காக கடக்கின்றன. முதலாவது சந்தியில் இரண்டு பால்வினைத்தொழிலாளிகள் நுகர்வோருக்காகக் காத்திருந்தனர். வீதியின் மறுபுறம் இன்னும் இரண்டுபேர். காமத்திற்குப் பகலென்ன இரவென்ன.

வீதியைக் கடந்துகொண்டேன். வலதுபக்கமாக ஒரு தேவாலயம் இருக்கிறது. தேவாலயத்தின் உயரமான கூரையின்மேல் பனி கொட்டியிருந்தது. பகல்போல் தேவாலயத்தைச் சுற்றி மின்வெளிச்சம். அந்தக் காட்சி அழகாய் இருந்தது. அப்போது தேவாலயத்தின் மணிக்கூடு நேரம் 11 மணிக்கான ஒலியை எழுப்பியது. இருளிலும் மனதை அள்ளும் மெது இசை.
தேவாலயத்திற்கு எதிர்ப்பக்கத்தில் ஒரு பாலின்ப மகிழ்விகள் (sextoys) விற்கும் கடை இருக்கிறது. பகலில் என்றால் காமம்

வழிந்தோடிக்கொண்டிருக்கும் இடம் இது. நிறம் நிறமான பல வடிவங்களினான ஆணுறுப்புக்களின் விளம்பரங்கள் குளிரில் விறைத்துக்கிடந்தது. காமத்திற்கும் ஓய்வுவேண்டுமோ என்னவோ.
எதிரே ஒருவர் வந்துகொண்டிருந்தார். அவரின் உடற்பருமையை அவரால் தூக்கிக்கொண்டு நடக்கமுடியாது சிரமப்பட்டார். கையில் உணவுப்பொருட்களைக் கொண்ட பை. அவரைக் கடந்துகொண்டுபோது அவது மூச்சுச்சத்தம் பலமாகக் கேட்டது. இரவு சில மனிதர்களுக்கு பாதுகாப்பைக்கொடுக்கிறது. சிலருக்கு அமைதியின்மையைக்கொடுக்கிறது. என்னைக் கடந்துகொண்டவர் இதில் முதலாவது ரகமாக இருக்கவேண்டும். நான் இரண்டாவது ரகம்.

இரவின் மனிதர்களைக் கண்டிருக்கிறீர்களா? அவர்கள் பகலை வெறுப்பவர்கள். இருள் அவர்களை உயிர்ப்பிக்கிறது. பகலை அவர்கள் சட்டைசெய்வதே இல்லை.

பல வருடங்களுக்கு முன் ஒரு நோர்வேஜியருக்கு உளவள துணைவராக இருந்தேன். சம்பளம் இல்லாத வேலை. ஆனால் மனதுக்கு பிடித்தமானவேலை. அவர் ஒரு கப்பலின் தலைவனாக இருந்தவர். நோயுற்று, கடும் மன அழுத்தத்திற்கு உட்பட்டு, மண விலக்காகி தனியே வாழ்ந்தார். அவர் இருளின் மனிதர். பகலில் வீட்டின் திரைச்சீலைகளைக்கூட விலக்கமாட்டார்.

வெளிச்சத்தின் மீது அத்தனை வெறுப்பு அவருக்கு. இருண்டபின்பே வெளியே செல்வார். தேவையானதை வாங்கிக்கொண்டு வீடு திரும்புவார். அவரோடு நான் உரையாடும் நேரங்களில் “பகலை ஏன் வெறுக்கிறீர்கள்’’என்றேன். “தெரியாது, ஆனால் நோயுற்றபின் இரவு மனதுக்கு இதமாக இருக்கிறது|| என்றார். அவரது அந்தப் பதில் மிகவும் கனமானது. நோயுறுவது எத்தனை பெரிய சோகம். மனிதனை உயிருடனேயே கொன்றுபோடுகிறது அது.

இப்போதும் எனது வீட்டிற்கருகே உள்ள ஒரு பெற்றோல்விற்பனை நிலையத்தில் இரவு நேரங்களில் ஒருவரைக் காண்பதுண்டு. நீண்ட தாடியும் பெருத்த உடம்புமான மனிதர். பகல்நேரத்தில் அவரை நான் கண்டதே இல்லை. இரவு நேரங்களில் பல மணிநேரம் அங்கிருப்பார்.

வெளிச்சம்தான் மகிழ்ச்சியானது, பாதுகாப்பானது என்று நினைத்திருந்தேன். ஆனால் இருளும் அப்படியானது என்பதை இவர்கள் கற்றுத்தருகிறார்கள்.

மீண்டும் ஒரு சந்தியில் நின்றிருந்தேன். டொக் டொக் என்ற காலணியின் ஒலி தூரத்தேகேட்டது. ஒரு பெண்ணின் காலடியோசை. மெல்ல மெல்ல? என்னை நோக்கிவந்து என்னையடைந்துபோது ஒலி பெரிதாகக்கேட்டது. கடந்தும்போனது. மெது மெதுவாக காற்றில் கரைந்துபோனது. ஒலியின் அழகில் மனதைப்பறிகொடுத்திருந்ததில் ஒலிக்குரியவரை கவனிக்கத்தவறிவிட்டேன்.

எனக்கேதிரே ஒரு ஆண் பெண்போல் ஒப்பனைசெய்துகொண்டு, பெண்களின் உடையணிந்து வந்தார். அதீத ஒப்பனை. கடந்துபோன அவர் பின்னே மனம் ஓடியது. திருநங்கையாக இருக்குமோ? அல்லது பெண்களைப்போன்று ஒப்பனைசெய்ய, உடையணிந்து மனதின் இரகசிய ஆசையை இரவில் தீர்த்துகொள்ளும் மனிதரா? அல்லது பால்வினைத்தொழிலாளியா? எது எப்படியோ.... இவரும் இருளின் நண்பர்.

எதிரே ஒரு பெரும் தொலைக்காட்சிப்பெட்டியில் அழகிகள் இரண்டு துண்டு உடைகளுடன் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் நடந்துகொண்டிருந்தார்கள். இந்தக் குளிர்காலத்தில் ஏனிந்த இரண்டு துண்டு உடை? இருளை ஆராதிக்கும் மனிதர்களுக்கா?

வீதியின் நடுப்பகுதிக்கு வந்திருந்தேன். எதிரே ஒரு போலீஸ்வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. உள்ளே இருந்த ஒரு ஆணும் பெண்ணும் வீதியை பார்த்துக்கொண்டிருந்தனர். இரவின் பாதுகாவலர்கள்.

அவர்களையும் கடந்து நடந்துகொண்டிருந்தேன். பாராளுமன்றமும் கடந்துபோனது. ஒரு உணவகத்தின் வெளியே இருவர் தனித்தனியே இருந்து உணவருந்திக்கொண்டிருந்தனர். குளிரைப் போக்குவதற்கு அவர்களருகே மின்சூட்டடுப்பு சிவப்புநிறமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது. இருளையும் தனிமையும் விரும்பும் மனிதர்களாக இருக்கலாமோ?

நான் நடந்துகொண்டிருந்தேன். வலது பக்கத்தில் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை கட்டிடங்கள் ஒளியூட்டப்பட்டிருந்தன.

மனதில் இருந்து அமைதியின்மையும் அழுத்தமும் மெது மெதுவாக அகன்றுகொண்டிந்தது. இப்போது நோர்வே அரசனின் அரண்மனைக்கருகில் நின்றிருந்தேன்.

வீதியின் அதி உயரமான பகுதி இது.
எனக்கு முன்னே 7. September1875 அன்று சிலையாய் நிறுவப்பட்ட Karl III Johan என்ற நோர்வே – சுவீடன் அரசன் தனது குதிரையில் நின்றபடியே முழு வீதியையும் பார்த்துக்கொண்டிருந்தார். அவரது சிலைக்கு கீழ் ‘மக்களின் அன்பே எனக்கான பரிசு’ என்று குறிக்கப்பட்டிருந்தது.

சிலையின் அடித்தளத்தில் நின்று வீதியைப்பார்த்தேன்.

இருளிலும் அழகாயிருந்தது எனது Karl Johans gate.

1 comment:

  1. என்றாவது ஒரு பொழுதில் நோர்வேயை தருசனம் காண்போம்!

    ReplyDelete

பின்னூட்டங்கள்