வைக்கோல்பட்டறை நாயாவதே நமக்கு முக்கியம்

குணா கவியழகனின் படைப்புக்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளா? அவர் உண்மைச் சம்பங்களை தொட்டுச்செல்லும் புனைவுகளைத்தானே எழுதுகிறார். அதற்காக அவர் உண்மையை மட்டும்தான் எழுதவேண்டும் என்று கோருவது படைப்பாளிக்கு கட்டளை இடுவது போன்றாகாதா? அது முறையா?

எனவே ஒரு ஆய்வுக்கட்டுரையை விமர்சிக்கிறேன் என்ற ரீதியில் குணா கவியழகனின் படைப்புக்களில் உள்ள ஒவ்வொரு காட்சியையும் நான் அணுகமாட்டேன்.

கதை, கதை நகர்த்தப்பட்ட விதம், பாத்திரப்படைப்பு என்று நூலைப்பற்றிய பலதையும் பேசாமல் சரித்திர நிகழ்வுகளை சரியாகக் குறிப்பிடப்படவில்லை என்பதை அடிப்படையாக்கொண்டு புலிகளுக்கு சார்பான கருத்துக்களை முன்வைக்கிறார் என்பது தகுந்த விமர்சனப் பார்வையாகுமா?

ஆதாரபூர்வமான சரித்திர நிகழ்வுகளை முன்வைத்து ஒரு படைப்பை உருவாக்குவது எனின் அதை இப்படைப்புக்களை விமர்சிப்பவர்கள் எழுத முனையலாம் அல்லவா?

குணா கவியழகன் என்ன வேற்றியக்கத்தவரா புலிகளை விமர்சித்து கதையெழுத? வெளிவந்த அவரது படைப்புக்கள் அவரது நிலைபாட்டையும், கருத்தியலையும் தெளிவாகக் கூறுகின்றன. இவற்றின் பின்னணியில்தானே நாம் அவரது ஏனைய படைப்புக்களையும் வாசிக்கிறோம்.



குணா கவியழகன் பாரிசில் ஆற்றிய உரையையும் அவரின் பின்னணியில் இருந்துதானே நோக்கவேண்டும். அந்த உரைக்கு கிடைத்திருக்கும் வாதப்பிரதிவாதங்களையும் கவனத்தில்கொள்வது அவசியம்.

நல்ல வேளை சாண்டில்யனுக்கு எம்மைப்போன்றதொரு விமர்சகர்கூட்டம் இருக்கவில்லை. இல்லையேல் மனிதர் தற்கொலை செய்துகொண்டிருக்கக்கூடும்.

புலத்து ஈழத்தமிழர்களுக்கு “புலி சார்பு அல்லது புலி எதிர்ப்பு” என்றதொரு கொடிய நோய் பீடித்திருக்கிறது.

எதையும் இந்தக் கண்ணோட்டத்திலேயே புலத்துச் சமூகம் அணுகமுயல்கிறது. இது ஆரோக்கியமானது எனக் கொள்ளலாமா?

மனிதர்களைப் பார்த்து நட்பாக புன்னகைப்பதுகூட இவ்வாறான கண்ணோட்டத்திலேயே என்பதை நன்கு அறிவோம்.

சார்பு மற்றும் எதிர்ப்பு நிலையானது நண்பர்களாவதில் இருந்து, நூல்வெளியீடுகளில் மட்டுமல்ல மரணவீட்டிலும் தொடர்வதாகவே தென்படுகிறது.

வேதனை என்னவென்றால் முன்னைநாள் புலிகள்தான் இப்போது மும்மரமாக மோதிக்கொள்கிறார்கள். மாற்றியக்கங்களும் அவ்வப்போது இந்நோயால் பாதிக்கப்படுவதுண்டு. ஆனால் இவர்கள் இப்போது மௌனித்து சிறுபான்மையாகிவிட்டார்கள்.
அண்மையில் ஒரு மனிதரின் இறுதிச் சடங்கில் உட்கார்ந்திருந்தேன். அங்கும் புலிக்காய்ச்சல் கடுமையாக வீசிக்கொண்டிருந்தது. ஓரிரு மனிதர்களைத் தவிர்த்து.

ஒருவர் சமூகத்திற்கு நன்மையை செய்யினும் அது விமர்சிக்கப்படவேண்டும் என்பதற்காகவே விமர்சிக்கப்படுகிறது.

இந்த இரண்டு பகுதியினரில் ஒரு பகுதியினர் கோயிலைக் கட்டினால், மற்றைய பகுதி அதை இடிக்கும் அல்லது இன்னொரு கோயிலை, மற்றைய கோயிலுக்கு எதிர்ப்புறமாகக் கட்ட முனைவதுடன் அங்கு பணிபுரியும் ஐயருக்கும் சம்பளத்தை அதிகமாக் கொடுத்து இரகசியமாக அழைக்கும்.
சமூகத்திற்கு எது அவசியமானதென்பதைத் தவிர்த்து, வைக்கோல் பட்டறை நாயாவதே நமக்கு முக்கியமாகியிருக்கிறது.

இவற்றையெல்லாம் கடந்து இணைந்து செயற்படும் பகுதியினரும் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவர்கள் மிகச் சொற்பமானவர்களே.

இப்போதைய புலம்பெயர் இலக்கியத்தில், இலக்கிய விமர்சமும்கூட சார்பு, இந்த சார்பற்ற நிலைகளை பின்பற்றியதாகவே உள்ளது.

அண்மையில் ஒசுலோவில் நடந்தேறிய ஒரு நாடகத்தினை, ஒரு ஊடகவியலாளர் முகப்புத்தகத்தில் பினாமியாக மாறி விமர்சித்திருந்தார் . சிலருக்கு தங்கள் சொந்தப்பெயரில் விமர்சனங்களை முன்வைக்கும் துணிவில்லை என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆனால் இவர்கள் விமர்சனங்களை முன்வைக்கும்போது ஆகக் குறைந்தது விமர்சிக்கப்படும் நூலையாவது வாசித்திருக்கவேண்டும். வெறுமனே முகப்புத்தக நேரலையைப் பார்த்துவிட்டுக் காய்ச்சலின் அகோரத்தில் பினாத்துவதுதான் வேதனை.

இதுதான் இப்போதைய புலத்து இலக்கியப்போக்கு.

இதைத்தானா எதிர்கால சந்ததிக்கு கற்றுத்தர விழைகிறோம்?

இதுபோலத்தான் அண்மையில் ஓசுலோவில் நடந்த இன்னுமொரு இலக்கிய நிகழ்விலும் காய்ச்சலின் காரணமாக அந்நிகழ்வு சென்றடையவேண்டிய பரப்பு வேண்டுமென்றே மட்டுப்படுத்தப்பட்டது.

நமக்கு பீடித்திருக்கும் கொடும் நோயின் காரணமாக நாடு, இனம், தேசியம் என்பது எல்லாமே பலமிழந்துவிட்டன.

எழுத்தாளர் சுஜாதாவின் அறிவியல்புனை (Science fiction) கதையொன்றில் ஒரு சமூகத்தைக் கட்டுப்படுத்தும் நஞ்சில் இருந்து அச் சமூகத்தைக் காப்பாற்றுவதற்காக, நச்சின் வீரியம் பலமிழப்பதற்காக, நீரின் விகித்தை அதிகரிப்பதாகவும் அதன் மூலமாக நஞ்சின் அடர்த்தி குறைந்து அச் சமூகம் மீள்வதாகவும் எழுதியிருப்பார்.

அதுபோலத்தான் இன்று முகப்புத்தகத்தில் ஒரு செய்தி வாசித்தேன்.

ஈழத்தில் புலிகள் இயக்கத்து முக்கிய பிரமுகர் ஒருவரது குழந்தையின் பிறந்தநாளில் புளொட், டெலோ, ஈபிஆர்எல்எப் மற்றும் மாற்றுக்கருத்துக்கொண்ட பலரும் கலந்து சிறப்பித்து அக்குழந்தையை வாழ்த்தினராம்.

இந் நிகழ்வு எமக்கு ஒரு முக்கிய செய்தியை கூறமுயல்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது.


No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்