நோய்மை என்னும் தத்துவவாதி

நோய்மையில் விழும்போது எம்மருகே ஒரு தத்துவவாதியும் புகையின் கால்களுடன் வந்து உட்கார்ந்துகொள்கிறான். நோய்மையானது மறந்துபோன பலதையும் இந்த தத்துவவாதியின் ஊடாக நினைவூட்டத்தொடங்குகிறது.
உணவைக் கட்டுப்படுத்தியிருக்கலாம், உடற்பயிற்சி செய்திருக்கலாம் என்பவை போன்ற பல காலம் கடந்த ஞானங்களை உணர்ந்துகொண்டிருப்போம். நோயுறும் மனிதனுக்கு வைத்தியம் முக்கியம், எனினும் அவனைப் புரிந்துகொண்ட வைத்தியரும் அவசியம். நோயுற்ற மனிதன் முன்னிலும் அதிகமாக பேசுகிறான் விழைகிறான். வலியை, பயத்தை, நோயை, சுகப்படுவேனா என்ற சந்தேகத்தை என்று, பேசுவதற்கு அவனுக்குள் பலவிடயங்கள் இருக்கின்றன. நோயுற்றவனுக்குள் பேசமுடியாத வலிகளும் இருக்கும். எல்லோருடனும் பகிரமுடியாத வலியாகவும் இருக்கும் அது. சிலர் அதனை அழுது அழுது வடித்துக்கொள்கிறார்கள். சிலர் முணுமுணுத்துக் கடந்துகொள்கிறார்கள். இன்னும் சிலர் தங்களுக்குள்ளேயே புதைத்துக்கொள்கிறார்கள். 1980களில், மட்டக்களப்பு மெதடிஸ்ற் மத்திய கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலம். அந்நாட்களில் அங்கு வழிகாட்டிகள் (Pathfeinders) என்று ஒரு சங்கம் இருந்தது. எங்கள் அதிபர் பிரின்ஸ் காசிநாதரின் சிந்தனை வடிவம் அது. ‘நீ சமூகத்தினால் உருவாக்கப்பட்டவன். எனவே சமூகத்திற்கு எப்போதும் பிரதியுபகாரமாயிரு’ என்பதுதான் அந்தச் சங்கத்தின் நோக்கம். மட்டக்களப்பு நகரம் அமைந்துள்ள புளியந்தீவுக்குச் சற்று அப்பால் மாந்தீவு என்று ஒரு தீவு உண்டு. அது மனிதர்களின் குடியிருப்பற்ற தீவு. அந்தத்தீவுக்கும் வேறுபகுதிகளுக்கும் எதுவித தொடர்பும் கிடையாது. அங்கு சமூகத்தினால் ஒதுக்கப்பட்ட சில மனிதர்கள் வாழ்ந்திருந்தனர். ஒரே ஒரு படகுமட்டும் அவசியம் எனின் அங்கு சென்றுவரும். இலங்கையில் அமைந்திருந்த மிகச்சொற்பமான தொழுநோயாளிகளுக்கான வைத்தியசாலை அங்கு அமைந்திருந்தது. எதுவித வசதிகளும் இல்லாத வைத்தியசாலை. தொழுநோய்கண்டவர்களுக்கு மீட்சி இருக்காத நாட்கள் அவை. நோய்த்தொற்று ஏற்பட்டதும் அங்கு வருபவர்கள், நோய்முற்றி, அங்கங்கள் உருக்குலைந்து, அழுகி கோரமான மனிதவுடல்களுடன் இறுதியாய் மூச்சடங்கும்வரை அங்குதான் வாழவேண்டும். அவர்களுக்கான சவச்சாலையும் அங்குண்டு. நோய்மைக்கு இன, மத, மொழி வேறுபாடுகிடையாதல்லவா. முதல் நாள் நாம் அங்கு அழைத்துப்போகப்பட்டபோது வாவியைக் கடக்கும்வரை மனதில் இருந்த குதூகலமான மனநிலை அங்கு வாழ்ந்திருந்த மனிதர்களைக் கண்டபோது அகன்று போனது. உருக்குலைந்த கை கால்விரல்கள், மூக்கு, வாய், கோரமான முகங்கள் என்பன எம்மை அதிர்ச்சியான ஒரு மனநிலைக்குள் தள்ளியிருந்தது. 40 வருடங்களின் பின்பும் அந்தக் காட்சி இன்றும் நினைவிலிருக்கிறது. மாந்தீவினுள் புத்தவிகாரை, மசூதி, கோயில் இருந்தது என்றே நினைவிருக்கிறது. நோய்மையில் இருந்தும், மனவலிகளில் இருந்தும் விடுபட அவர்கள் இறைஇல்லங்களை நாடியிருக்கக்கூடும். கையறுநிலையில் மனிதர்களுக்கு அனுமானுஷ்யசக்திகளில் அதீத நம்பிக்கை எற்பவதுண்டல்லவா. வருடக்கணக்கில் ஒரு சிறு இடத்தினுள் அங்கங்கள் அழுகி உருக்குலைய உருக்குலைய ஒரு சிறு இடத்தில் வாழ்ந்து முடிந்த அந்த மனிதர்களின் மனநிலைகள் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப்பார்க்கிறேன். எத்தனை வேதனையான வாழ்க்கையாக இருந்திருக்கும் அது. மனிதனுக்கு இன்னொரு மனிதனின் அன்பு, ஸ்பரிசம், அரவணைப்பு என்பன எத்தனை முக்கியமானது என்பதை காலம் எனக்கு கற்பித்திருக்கிறது. மாந்தீவு மனிதர்களை நினைத்துப்பார்க்கிறேன் எத்தனை எத்தனை ஆண்டுகள் இன்னொரு மனிதனின் அன்பு, அரவணைப்பு, ஸ்பரிசமின்றி வாழ்ந்து கழித்திருப்பார்கள். எத்தனை கொடுமையான நிலை இது. இதைவிட வறுமையான வாழ்க்கையேதுமுண்டா? தொழுநோய்பற்றி வைத்தியர் ஒருவர் உரையாற்றினார். எமது அச்சங்கள் அகன்றபின் சிரமதானம் ஆரம்பிக்கப்பட்டது. குப்பைகளை அகற்றினோம், கான்களை, தங்குமிடங்களை சுத்தப்படுத்தினோம். அதன்பின்பு 2 – 3 தடவைகள் அங்கு சென்றுவந்தபின் அங்கிருந்தவர்களுடன் ஒருவித உறவு ஏற்பட்டிருந்தது. எமது வருகைக்காக அவர்கள் காத்திருந்தார்கள். நாம் அங்கு செல்வதற்கு காத்திருந்தோம். அவர்களின் கண்களில் வாஞ்சை ஒளிந்திருந்து எம்மை பார்த்துக்கொண்டிருந்து. எம்முடன் உரையாடுவதற்காக காத்திருந்தார்கள். தமிழும் சிங்களமும் தெரிந்திருந்ததால் அவர்களுடன் உரையாடியிருக்கிறேன். என்ன பேசினோம் என்பது நினைவில் இல்லை. அண்மையில் கொழும்புக்கு அருகே உள்ள Hendala தொழுநோயாளர் வைத்தியசாலையில் ஒருவர் 70 வருடங்களாக வாழ்ந்திருந்ததாக அறியக்கிடைத்தது. அந்த மனிதரின் வாழ்க்கைக்குள் என்னைப் பொருத்திப்பார்க்கிறேன். எத்தனை கொடுமையானதாக அவருடைய வாழ்வு இருந்திருக்கும். எத்தனை கொடியது சில மாந்தர்களின் யாக்கை. இன்று நான் முழங்கால் அறுவைச் சிகிச்சையின்பின் படுத்திருக்கிறேன். உடல்வலிக்கு மருந்து, பசித்தால் உணவு, குளிருக்கு வெப்பம் என்று எல்லாம் இருக்கின்றன. இருப்பினும் ஒரு அந்தரங்க வலி இருந்துகொண்டே இருக்கிறது. அது என்ன என்று எழுதத்தெரியவில்லை. கால் முன்பைப்போன்று இயங்குமா? மீண்டும் சத்திரசிகிச்சை அவசியமா? முன்பைப்போன்று நடப்பேனா? ஓடலாமா? விளையாடலாமா என்றெல்லாம் மனதுக்குள் பல பயங்கள் இருக்கின்றன. இன்றைய நாள் மாந்தீவில் அலைந்துகொண்டிருக்கிறது. எத்தனை எத்தனை மனிதர்களின் வேதனைகளை எத்தனையோ பத்து ஆண்டுகளாய் தனக்குள் புதைத்திருக்கிறது அந்த நிலம். நோயாளிக்கு நோயாளி என்ன பேசிக்கொண்டிருப்பார்கள்? யாருடைய வலியை யார் கேட்பது? முடிவு தெரிந்தபின் வாழ்வது எத்தனை கனமானதாக இருந்திருக்கும்? அருகில் இருந்தவர் மறையும்போது மற்றையவரின் மனம் என்ன பாட்டைப்பட்டிருக்கும்? என்னால் நினைத்துப்பார்க்கவே முடியாதிருக்கிறது. 1980களில் ஒருமுறை மலேரியா காய்ச்சலால் பீடிக்கப்பட்டு பல நாட்களின் பின் எழுந்தேன். எழுந்த முதல்நாள் என்னால் நிற்க முடியவில்லை. பயந்துபோனேன். அழுதேன்.
எனது அம்மா ஒரு வைத்தியர். அன்பாகவும் ஆறுதலாகவும் மலேரியா காய்ச்சல் வந்தால் இப்படித்தான் இருககும். இன்னும் சில நாட்களுக்கு உனக்கு மிகுந்த ஆறுதல் தேவை. ஆனால் அடுத்த கிழமை நீ நடக்கலாம். சைக்கில் ஓடலாம் என்று விளங்கப்படுத்தி உற்சாகமூட்டினார். அம்மா மடியில் படுக்கவைத்துக்கொண்டு நான் துயிலும்வரையில் உரையாடிக்கிகொண்டிருப்பார். பாதுகாப்பான மனநிலையில், பயம் அகன்று உறங்கிப்போவேன். எஸ். ராவின் துயில் நாவல் நோய்மைபற்றிப் பேசும் ஒரு அற்புதநாவல். அதில் ஒரு பாத்திரம் தான் சந்திக்கும் நோயாளிகளின் அந்தரங்க வலிகளை தனது பேச்சால் வடிந்தோடச்செய்வார். நோய்க்கும், மீட்சிக்கும் இடையில் மனிதர்கள் படும் எல்லையில்லாத துயர்களையும், நோயும் மதமும்பற்றிய ஆழமான கேள்விகளையும் எழுப்பும் ஒரு நாவல் துயில். நோய்மைபற்றி வாசிக்க விரும்புகிறீர்களா. துயில் அவற்றில் முக்கியமானது. இரண்டாம் தடவையாக துயில் கையில் இருக்கிறது.

1 comment:


  1. அருமையான கண்ணோட்டம்

    ReplyDelete

பின்னூட்டங்கள்