எனது மூத்தமகள் குழந்தையாய் இருந்த 1998 - 1999ம் ஆண்டுக் காலங்களில், எங்கள் வீட்டுக்குப் பின்னால் இருந்த நீரோடைக்கு அழைத்துபோவேன். சப்பாத்தைக் களற்றி குளிர நீரில் காலைவைத்து சிலிர்த்துச் சிரிப்பாள். கூழாம்கற்களை எடுத்து நீரில் எறிவாள். நான் அவளைப் பார்த்தபடியே இருப்பேன்.
அந்த நீரோடை எமது இரகசிய இடம். இரகசியமாய் காதிற்குள் ”வா.. நீரோடைக்குப் போவோம்” என்பாள். எங்கே போகிறோம் என்று எவருக்கும் கூறாது புறப்பட்டுப்போய் வருவோம்.
மணவிலக்காகி இந்தக் கிராமத்தைவிட்டு 8 வருடங்களுக்கு முன் ஒஸ்லோவுக்கு இடம்பெயர்ந்தேன். அவளும் லண்டனுக்கு இடம் பெயர்ந்தாள்.
நேற்று முன்தினம் மகளும் நானும் மீண்டும் இக் கிராமத்துக்கு விடுமுறையைக் கழிக்க வந்திருக்கிறோம்.
நேற்றுமாலை, ”புறப்படு எங்கள் நீரோடைக்கச் சென்றுவருவோம்” என்றாள். நெஞ்சு விம்மி கண்கலங்கிப்போனேன் நான்.
நீரோடையைச் சுற்றி சுற்றி நடந்தாள். நீர் குறைவாக இருக்கிறது என்றாள். வழிந்தோடும் நீரை எடுத்துப் பருகினாள். தன்னை நீரோடையோடு சேர்த்துப் படம் எடு என்றாள். எடுத்துக்கொடுத்தேன்.
அங்கிருந்து வரும்போது அவள் அதிகம் பேசவில்லை. நானும் பேசும் நிலையில் இருக்கவில்லை.
மணவிலக்குகளின் தாங்கொணா வேதனை குழந்தைகளைப் பிரிவது. அதை அணு அணுவாக அனுபவித்தவன் நான்.
10 - 15 ஆண்டுகளின் பின் அதிலும் 8 ஆண்டுகள் அதிக தொடர்பில்லாத காலங்களின்பின், அவள் என்னை ”அந்த நீரோடைக்கு” அழைத்துப்போனதால் மீண்டும் உயிர்த்திருக்கிறேன்.
ஒத்திவைக்கப்பட்ட மகிழ்ச்சிகள் இரட்டை மடங்கு மகிழ்ச்சியைத் தருபவை.
26 July 2015
No comments:
Post a Comment
பின்னூட்டங்கள்