பீப்பா என்னும் பெரியப்பா




நான்கு நாள் பயணமாக இலங்கை வந்திருக்கிறேன். மருமகளின் கல்யாணம் நாளை.

அப்பாவின் அழகிய ராட்சசியின் 3 பிள்ளைகளும், இரண்டு பேரப்பிள்ளைகளும், ஒரு மருமகனும் கொழும்பில் ஒன்றாக தங்கியிருக்கிறோம். பக்கத்துவீட்டுக்காரர்கள் தலையில் தலைவைக்கும் அளவுக்கு சத்தம்.

"பீப்பா (பெரியப்பா) வா சீட்டுக்கட்டு விளையாடுவோம்" என்றான் தம்பியின் மகன்.

என்னிடமோ, அம்மாவிடமோ சீட்டுக்கட்டு இல்லை.

பீப்பா, ஓடிப்போய் வாங்கிவா என்றான் ஆங்கிலத்தில். அப்போது நேரம் மணி 21:00.

அப்பு ராசா... ஊர் உறங்கும் நேரமடா. கடை பூட்டியிருக்கும் என்றேன்.

இல்லை வாங்கி வா என்று தலைகீழாக நின்றான் விக்கிரமாதத்தனின் முதுகில் ஏறிய வேதாளமாய்.

Station rd. ஆல் நடந்து காலி வீதியை அடைந்து 45 நிமிடங்கள் காலிவீதியில் அலைந்து 2 சீட்டுக்கட்டுகளுடன் வீட்டில் ஆஜரானேன்.

சீட்டுக்கட்டைக் கண்டதும் "Not so bad பீப்பா" என்றான் பெரிய மனிதனைப்போல்.

"டேய் ... பீப்பா இல்லை... பெரியப்பா" என்றேன்.

சொல்லிப்பார்த்தான். அதுவும் பீப்பா என்றே வந்தது.

அம்மா விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார்.

"என்ன கண்டறியாத சிரிப்பு?" என்று கிழவியை ஒரு பார்வை பார்த்தேன்.

"என்ன வெருட்டிறியா" என்று எகிறினாள் கிழவி. உதவிக்கு இரண்டு பேரப்பிள்ளைகளும் சேர்ந்துகொண்டார்கள்.

காலம் எனக்குச் சாதகமாயில்லை என்பதால் அடங்கிப்போகவேண்டியதாயிற்று.

"பீப்பா வா "கழுதை" விளையாடுவோம்" என்றான் தம்பியின் மகன்.

"டேய்.... எனக்கு அது எப்படி விளையாடுறது தெரியாதடா.. ஆளை விடுடா.. அத்தையை கேளடா" என்று கெஞ்சினேன்.

"நீ ஒரு கழுதை" என்றான் ஆங்கிலத்தில். கிழவி கெக்கட்டமிட்டுச் சிரித்தாள். பேத்தியும் அவர்களுடன் சேர்ந்துகொண்டாள்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் எனக்கு "கழுதை எவ்வாறு விளையாடுவது" என்று விளங்கப்படுத்திக்கொண்டிருக்கிறான். நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

 கிழவி "உன்னை அடக்க இவன்தான் ;சரி " என்றபடியே  சிரித்துக்கொண்டிருக்கிறாள்.

முருகா.. இது நல்லாயில்லை ஆமா.


No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்