எனது நண்பருக்கு ஒரு பையன் இருக்கிறான். அவனுக்கு 9 வயது. அண்மையில் நான் அவர்கள் வீட்டில் நின்றிருந்தபோது, என்னை தனது அறைக்கு அழைத்துப்போனான். அறையின் நீள அகலத்தை அளந்து சொல் என்றான்.
அளந்து கூறினேன். பெரிய மனிதன்போல் தலையாட்டியபடியே சிந்தனையில் ஆழ்ந்துபோனார் சாக்ரடீஸ்.
என்னய்யா யோசிக்கிறாய்? என்று சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனை கேட்டேன்.
”சஞ்சயன் மாமா”என்று ஆரம்பித்தான்.
”இந்த அறை 4 x 4,9 மீற்றர். இந்த கட்டில் பெரும் இடத்தைப்
பிடிக்கிறது”
”ம்” இது நான்
”நான் இந்தக் கட்டிலை அகற்றிவிட்டு, ஏணி உள்ள ஒரு உயமான கட்டிலை வைத்தால், கட்டிலுக்கு கீழே பெரிய மேசை வைக்கலாம்.
”உனக்கேன் அய்யா பெரிய மேசை” என்றேன்.
ஒரு புழுவைப் பார்ப்பதைப்போல் என்னைப் பார்த்தான்.
”உனக்கு கணிணிகளைப்பற்றித் தெரியாது”
”ம்.. உண்மைதான். உன்னளவுக்கு எனக்குத் தெரியாதுதான்” என்றேன்.
” நான் இதில் Mac இனத்திலான பெரிய கணிணியுடன் இரண்டு கணிணித் திரைகளை வைக்கப்போகிறேன். அத்துடன் ஜன்னலருகில் கட்டிலில் xBoxவியையாடும் விதத்தில் ஒரு பெரிய தொலைக்காட்சி வைக்கப்போகிறேன்” என்றான்.
”நீதான் எனது அறைக்கு நீல நிற பெயின்ட் அடித்துத் தரவேண்டும்” என்றும் கட்டளையிட்டான்..
எனக்கு தலை சுற்றத்தொடங்கியது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு.. ”ராசா.. உனது இந்த அபிவிருத்தித் திட்டத்தை உன் அப்பாவிடம் கூறிவிட்டாயா?” என்றேன் பேரன்பு கலந்த குரலில். (எனக்குத்தெரியும் அவனின் அப்பா என்ன பதில் சொல்வார் என்று)
இரண்டு கைகளையும் தலையில் வைத்தபடி கட்டிலில் குந்திவிட்டான்.“
என்ட ஒஸ்லோ முருகா! நான் ஏதும் பிழையாக சொல்லிவிட்டேனோ?
29.05.2015
No comments:
Post a Comment
பின்னூட்டங்கள்