மனிதம் வாழ்ந்திருந்த காலமது

நினைவுகளை உயிர்ப்பிப்பதற்கு ஒரு சிறு காட்சிபோதுமானதல்லவா?

இன்று முகப்புத்தகத்தில் ஒருவர் ஏறாவூரில் உள்ள ஒரு டெயிலரின் புகைப்படத்தை இட்டிருந்தார். அது ஏற்படுத்திய நினைவலை இது.

1980 களில் பதின்மவயதுக் கோளாறுகளுடன் அலைந்து திரிந்த காலம். உடைகளில் அதீத கவனம். மினுக்காத உடைகள் நான் அணிவதில்லை.

மூத்தவன் படிக்கிறான். அதுவும் சென்றல் கொலிஜில். கள்வனுக்கு போலீஸ் வேலைகொடுத்ததுபோன்று அவனுக்கு மாணவர் தலைவர் பதவியைவேறு அதிபர் கொடுத்திருக்கிறார் என்பதற்காக அம்மா காலையில் உடைகளை மினுக்கிவைப்பார்.

எனக்குப் பிடிக்காத உடைகளை (அழகாகப் பொருந்தாத) அவர் மினுக்கினால் அன்று காலை அம்மாவிற்கு உரு ஆடிக் காண்பிப்பேன்.

அந்நாட்களில் பெல்பொட்டம் பிரபலமாக இருந்தது. நண்பர்கள் எல்லோரும் ஒரு இடத்தில் தைப்பதற்கு கொடுப்பார்கள். அந்த தையற்கார் உடையின் நேர்த்தியில் அதிக கவனமெடுப்பதில்லை. எனவே நான் அங்கு செல்வதில்லை.

ஏறாவூர் லங்காபேக்கரிக்கு முன்னிருந்த ஒரு கடையின் முன்பக்க ஓரத்தில் தனது தையல்இயந்திருத்துடன் ஒருவர் குந்தியிருப்பார்.

அவர் எப்படி அறிமுகமாகினார் என்பது நினைவில்லை. அவர் பெயர் நினைவில் இல்லை. ரவூப் அல்லது ராசீக் என்பதாயிருக்கலாம். 30 – 35 வயதிருக்கும். ஏழ்மை அவருடன் இருந்தது.

திருமணமாகி குறுகியகாலத்திலேயே அவர் மனைவி புற்றுநோயால் இறந்துபோனார். சிறு குழந்தையும் அவருக்கு இருந்தது.

குழந்தையைப் பார்க்கவென்று பகல்நேரங்களில் அடிக்கடி சைக்கிலில் புறப்பட்டுவிடுவார் அவர். நான் அவரை நானா என்றே அழைத்தேன். அவர் மனே என்பார்.

உடையின் நேர்த்தியில் மிகக் கவனமெடுத்து, அழகாகத் தைப்பார். குரு, உல்லாசப்பறவைகள் படங்களின் பாதிப்பில் உடையணிந்த காலம் அது. பத்திரிகைகளில்வரும் நடிகர்களின் படங்களைக் காண்பித்து இப்படி சைட் பொக்கட் வைய்யுங்கள், பின்பக்க பொக்கட்டுக்கு மூடி இருக்கவேண்டும், இப்படி கொலர் வைய்யுங்கள் என்று எதைக்கொடுத்தாலும் மறுநாள் அதை மிக அழகாக முடித்துத்தருவார்.

மறுநாள் காலையில் வசந்தமாளிகை ஆனந்தின் நடையில் நெஞ்சு நிமிர்த்தி பேரூந்து நிலையத்திற்குச் செல்வேன். அழகிகளின் கண்கள் என்னை மொய்க்கவேண்டும் என்று நெஞ்சு படபடக்கும்.

பதின்மவயதின் முதற்காதல் ஆரம்பித்த நாட்கள் அவை. அந்தக் கண்கள் உடையினை ரசிப்பது எனக்குப் புரியும்போது நண்பன் இடுப்பில் குத்துவான். அதன் அர்ததத்தை நான் ஏற்கனவே உணர்ந்திருப்பேன்.

அந்நாட்களில் நீல நிறத்தில் சிறிய வெள்ளைக்கோடுகள் இட்ட ஒரு நைலோன் துணியொன்று மிகப்பிரபல்யமாய் இருந்தது. அந்நாட்களில்தான் மிக நீண்ட கொலர் வைத்த மேலாடைகளும் பிரபல்யமாய் இருந்தன.

நைலோன், ரெற்றோன், பொலியஸ்டர், பொப்லின், பற்றிக், கொட்ரோய், கறா என்று பலவகைப்பட்ட துணிவகைகள இருந்தன. எனது தையற்காரரே இவற்றை அறிமுகப்படுத்துவார். அவர் எங்கிருந்து இவற்றை அறிந்தாரோ என்று இன்று நினைத்துப்பார்க்கிறேன்.

பெல்பொட்டம் மறைந்தபோது எனக்கு முதலாவது லோங்ஸ் தைத்துத் தந்தவரும் அவரே. லோங்ஸின் கீழ்ப்பகுதி மடித்துத் தைப்பதே அப்போது பிரபல்யமாய் இருந்து. அதையும் பலவிதமாகத் தைக்கலாம்.

குரு படத்தில், பறந்தாலும் விடமாட்டேன் பாடலில் கமல் ஒரு தொப்பி போட்டிருப்பார். ஏறத்தாழ அதைப்போன்று ஒரு தொப்பிவேண்டும் என்றேன். சிரித்தபடியே தலையாட்டினார். பின்பொருநாள் Cuffley cap இற்கு ஆசைப்பட்டேன். சிரித்தபடியே தைத்துத்தந்தார்.

காலப்போக்கில் எனது நட்புப்பட்டாளத்தின் ஆஸ்தான தையற்காரர் ஆனார். சிங்கள நண்பர்களும் அவரிடமே தைத்தார்கள். பெருநாட்கள் என்றால் மனிதர் இரவுபகலாகத் தைப்பார். வீட்டிலும் தைப்பார். பழைய போலீஸ் நிலையத்தின் முன்பாக வாவியினை நோக்கிச் செல்லும் வீதியினால் அவர் வீட்டுக்குச் சென்ற நினைவிருக்கிறது.

1984 -1985 ல் என்று நினைக்கிறேன். கறுப்புநிறதுணியில் மெது குங்கும நிறத்தில் பெரிய சதுரங்களைக்கொண்ட ஒரு நைலோன் துணியில் ஒரு மேலாடை தைத்துத் தந்தார் (அந்தத் துணி மிகப்பிரபலமாக இருந்தது அந்நாட்களில்).

அதன்பின்னான ஒருநாள் தமிழரும் இசுலாமியரும் வெட்டிக்கொண்டார்கள். ஊரே பிரளயமானது.

மீண்டும் ஊர் வழமைக்கு மீண்டபோது அவரைக் காணவில்லை.

கலவரம் அவரையும் அழைத்துப்போனதாய் கூறக்கேட்டேன்.

கண்களை மூடி நானாவை நினைத்துப்பார்க்கிறேன். தூரத்தே அவர் முகம் தெளிவில்லாது தெரிகிறது. சாரத்துடன் அவர் நடக்கிறார். அவருடனான நாட்களின் வாசனையையும் மனது உணர்கிறது.

மனிதம் வாழ்ந்திருந்த காலமது.

-------


இப்பதிவில் உள்ள துணிவகைகளை நினைவூட்டிய தியாகராசா ராஜ ராஜன் (சுருக்கர்) மற்றும் Vimal Kulanthaivelu ஆகிய கதைசொல்லிகளுக்கு ஆச்சிரமம் தனது நன்றிகளைத் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்