காலத்தின் விதை

மூத்தவள் காவியாவிற்கு 7 – 8 வயதாக இருந்த காலத்தில் நாம் ஒரு சிறுகிராமத்தில் வாழ்ந்திருந்தோம். அப்போது இளையவள் அட்சயாவிற்கு வயது 3 – 4.

அந்த ஊரில் பல கூட்டுப்பாடற் குழுக்கள் (Choir)  இருந்தன. இதுவே நோர்வேயின் பாடற்கலாச்சாரத்தின் அத்திவாரம். எங்கு சென்றாலும் அந்த ஊரில், பல்கலைக்கழகங்களில், வேலைத்தலங்களில், விளையாட்டுக்கழகங்களுக்குள் இப்படியான பல கூட்டுப்பாடற் குழுக்களைக் காணலாம். இக்குழுக்கள் அதிகமாக நோர்வேஜிய கிறீஸ்தவமதப்பாடல்களையே பாடுவார்கள் (எங்கள் தேவாரங்களைப்போன்றவை).

காவியாவின் நண்பிகள் இக்குழுக்களில் இருந்தமையினால் அவளும் அங்கு சென்றுவரத்தொடங்கினாள். அக்காள் செல்கிறாள் என்பதால் தங்கையும் சேர்ந்துகொண்டாள்.

அந்நாட்களில் Lisa Børud என்னும் பெண் குழந்தை மிகவும் பிரபல பாடகியாக இருந்தாள். அவளுக்கும் காவியாவிற்கும் ஒரே வயது.

அவர் பாடிய Jesus passer på meg (யேசு என்னை பாதுகாக்கிறார்) என்ற பாடல் மிகப்பிரபலமாக இருந்தது. எங்கள் வீட்டில் அக்காள் பாட தனது மழலைக்குரலால் தங்கையும் அதே பாடலைப்பாடிக்கொண்டிருப்பார்கள்.

ஒருநாள் Lisa Børud எங்கள் ஊரில் ஒரு பாடல்நிகழ்ச்சியினை நடாத்தியபோது எனது மகள்களின் கூட்டுப்பாடற் குழுவும் அந்நிகழ்ச்சியில் பங்குபற்றியது. அக்காளுக்கு புளுகம் தாங்கமுடியவில்லை. தங்கையும் அக்காவின் புளுகத்திற்கு ஈடுகொடுத்துக்கொண்டிருந்தாள்.

ஏறத்தாழ 13 – 14 வருடங்களுக்கு முன்னான கதை. இதன்பின்னான காலங்களில் காவியாவிற்கு மதங்களில் நம்பிக்கையற்றுப்போனது. தன்னை ஒரு மனிதநேயவாதி என்றறே அடையாளப்படுத்துறேன் என்பாள்.

“உனது வாழ்க்கை. அதை நீயே தெரிவுசெய்யவேண்டும்“ என்றுதான் எனது பதில் இருக்கும் என்பது அவளுக்குத் தெரியும்.

இன்று ஒரு புறநகரப்பகுதியினூடாக நடந்துகொண்டிருந்தேன். அது வெளிநாட்டவர் மிகவும் குறைவாக குடியிருக்கும் இடம். ஒரு சந்தியில் திரும்பி நடக்கும்போது எனக்குப் பின்னால் ஒரு அழகிய குரல் Jesus passer på meg பாடலைப்பாடியபடி வருவதைக் கேட்டு, நடையை நிறுத்தி திரும்பிப்பார்த்தேன்.

என்னைக் கண்டதும் பாடலை நிறுத்தி ”ஹாய்” என்றாள்.

”மிக அழகாகப் பாடுகிறீர்கள். உனக்கு Lisa Børud இன் பாடல்கள் பிடிக்குமா?” என்றேன்.

“சிவந்து சிரித்தபடியே …. உனக்கும் அவவைத்தெரியுமா?“ என்றாள்.

”ஆம், எனது மகள் உனது வயதில் இந்தப் பாட்டில் பைத்தியமாக இருந்தாள்”

”எனது வயதிருக்குமா உனது மகளுக்கு?”

”இப்போது அவருக்கு 21 வயதாகிறது ஆனால் அவளுக்கு 8 வயதான நாட்களில் அவள் இந்தப்பாட்டை பாடிக்கொண்டிருந்தாள்”

”எனக்கு 8 வயது”

”நினைத்தேன்”

”சென்றுவருகிறேன்” என்றுவிட்டு உரத்துப் பாடியபடியே நடக்கத்தொடங்கினாள்.

என்னை, கடந்தகாலத்துடன் கைகோர்த்துக்கொண்டே நடக்கத்தொடங்கினேன்.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்