வாழைச்சேனையைச் சேர்ந்த முகப்புத்தக நண்பரும், பெரியவருமாகிய Slm Hanifa நானா அவர்கள் தான் நிலத்தில் படுத்துறங்குவது போன்றதொரு புகைப்படத்தினை இன்று பதிந்திருந்தார். அது என்னை உறக்கத்தின் உலகில் அலையவிட்டிருக்கிறது. நான் அதனுடன் அலைந்துகொண்டிருக்கிறேன்.
தூக்கம் மனிதனுக்கு நிலத்தடி நீர் போன்றது. சட்டென்று தூங்க முடிந்தால் நீங்கள் பெருவாழ்வு வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்.
தூக்கம் வராத நாட்களையும் வாழ்க்கை எனக்கு பரிசளித்திருக்கிறது. அதன் கனம் நீரில் பனிமலையைப்போன்றது.
தூக்கத்திலும் ஆழ் உறக்கம் என்று ஒரு பதம் உண்டு. அதுவே மனிதனுக்கான புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.
ஒருகாலத்தில் படுக்கையில் சரிந்து, கண்ணிமைகளை திறக்கமுடியாத அயர்ச்சியில், பல இரவுகளைக் தூக்கம் இன்றி கடந்துகொண்டிருக்கிறேன். காலையில் இரட்டை அயர்ச்சியுடன் விழித்தெழுந்த காலம் அது.
உடல் தூங்க முற்பட்டாலும் உள்ளம் தூக்கத்தை அனுமதிக்காத நிலையை நாம் அனைவரும் கடந்துவந்திருப்போம் அல்லவா? அதன் தார்ப்பர்யம் உங்களுக்குப் புரியும்.
இப்போதெல்லாம் காலம் என்னுடன் நட்பாயிருக்கிறது. இலகுவாக தூங்க முடிகிறது. சற்று ஆழ் நிலைத் தூக்கத்துடன், தூங்கும்போது பாதுகாப்பு உணர்வும் ஏற்படுகிறது. இதனால் கிடைக்கும் மன அமைதியானது வாழ்க்கையை அமைதிப்படுத்துகிறது.
இன்று Slm Hanifa அவர்களின் புகைப்படத்தினைப் பார்த்தில் இருந்து மனது அக்காட்சியில் அலைபாய்ந்துகொண்டிருக்கிறது.
அவர், சாரளங்களினூடே வெளிச்சமும் காற்றும் உட்புகுந்துகொண்டிருக்க, செந்நிறமான நிலத்தில் விரிக்கப்பட்ட பன்புல்லினால் வேயப்பட்ட பாயில் படுத்திருக்கிறார்.
அந்த நிலத்தின் குளிர்மையையும், வெம்மையிலும் குளிர்ச்சியைத் தரும் பன்பாயின்தன்மையையும் உணர்ந்துகொண்டே தூங்குவததான் எத்தனை இதத்துக்குரியது.
இது மட்டுமா? தலையனை, பருத்தியிலான தலையணை உறை. இவற்றின் குளிர்ச்சியையும் மெதுமையையும் நினைத்துப்பார்க்கிறேன்.
இரண்டு காற்றாடிகள் அவருக்கு சாமரம் வீச ஒரு அரசனைப்போன்று சயனித்திருக்கிறார் ஹனீபா நானா.
அந்தக் காட்சியினுள் என்னைப் பொருத்திப் பார்க்கிறேன். நிலத்தின் குளிர்மை, பாயின் பன் வாசனையும் சுகமும், தலையணையின் மெதுமை, காற்றின் தளுவல், காலினை குளிரில் இருந்து பாதுகாக்கும் வெள்ளைத்துணி, சூழலின் ஓசைகள் இப்படி எத்தனை எத்தனை பரிமானங்களை உணர்த்திப்போகிறது அப்புகைப்படம்.
நானா, நீங்கள் பெருவாழ்வு வாழ்கிறீகள்.
No comments:
Post a Comment
பின்னூட்டங்கள்