இன்று தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட ”குழந்தைப் போராளி” என்றும் என்னும் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தேன். அக் கதையின் நாயகி தனது ஒன்பது வயதுக்குள் பல வேதனைகளைக் கடக்கிறாள். என்னை ஆச்சர்ப்படுத்திய விடயம் அவரின் ஞாபக சக்தி. உண்மைக்கதை என்பதால் கற்பனைகள் மிகுதியாக இருக்கமாட்டாது என்றே நம்புகிறேன். இருப்பினும் கதைக்கு கற்பனை தவிர்க்கமுடியாததாகிறது.
அ.முத்துலிங்கம் அய்யாவின் ”உண்மை கலந்த நாட்குறிப்புகள்” புத்தகத்தின் முன்னுரையில், கதையில் உண்மையும் கற்பனையும் பற்றி எழுதியிருப்பார். உண்மையில் நடந்ததொன்றை அப்படியே நினைவில் நிறுத்தி, எழுத்தில் கொணர்வது என்பது மிக மிகக் கடினமான காரியம். ஆனால் அந்த ”நினைவை” வாசகனுக்கு பரிமாறும் போது கற்பனையையும், உண்மையையும் கலந்து ருசிசேர்த்து பரிமாறுவதிலேயே எழுத்தாளனின் திறமை அடங்கியிருக்கிறது என்னும் தொனியில் இருந்தது அ.முத்துலிங்கம் அய்யாவின் கருத்து.
கடந்த சில காலங்களாக நானும் நினைவுகளில் முத்துக்குளித்து எழுதத் தொடங்கியிருக்கிறேன். ஏன் எழுதுகிறேன் என்ற கேள்விக்கு எனக்குள் தெளிவான பதில் இல்லை. ஆனால் மனதுக்கு ஆறுதலாயிருக்கிறது. வெம்மையயும், வெறுமையாயும் கடந்து போகும் பல மணிநேரங்களை மனதுக்கு இதமாக மாற்றிப்போகிறது எழுத்து. இப்பொதெல்லாம் ஏதும் எழுதாவிட்டால் ஒரு வித பதட்டம் வரத்தொடங்கியிருக்கிறது. ஏன் என்ற கேள்விக்கு பதில் இல்லை. ஆனால் யாரோ எழுத்து என்பது ஒரு பிசாசுமாதிரி அது உன்னைப்பிடித்தால் விடாது என்றது உண்மை என்பது மட்டும் நன்றாகப் புரிகிறது. எனக்கு எனது அனுபவங்களை எழுதுவதை விட வேறு எதிலும் ஆர்வம் இன்றுவரை வந்தததில்லை. எனவே எனது கதைகளில் உண்மையின் பங்கு அதிகமாகவே உண்டு.
நினைவுகளில் மூழ்கி முத்தெடுக்கும் போது சில நினைவுகள் மிகவும் இதமாக மனதை மயிலிறகால் தடவிப்போகும். சில சம்பவங்களின் நினைவுகளோ ”காய்ந்த புண்ணின் கறுப்புநிறத் தோலை நகத்தினால் மெதுவாய் அகற்றும் போது போது திடீர் என வலித்து ரத்தம் கசிவது” போல ஒரு அசூசையான உணர்விணைத் தந்து போகும். ஒரு சில சம்பவங்களோ நினைத்துப்பார்க்கக் கூட முடியாத அளவிற்கு மனதினுள் ஒரு வித அச்சத்தை விதைக்கக்கூடயவை. சம்பவங்களால் ஆனதே வாழ்க்கை என்பதை உறுதிப்படுத்துகின்றன எனது நினைவுகள்.
அண்மையில் ஒரு நேர்வேயின் பழம் பெரும் அரசியல்வாதியொருவரின் கணணி திருத்தும் போது அவர் எழுத்தாளராக இருப்பது அறிந்து பேசிக்கொண்டிருந்த போது அவரிடம் ”அய்யா, உங்களுக்கு தெரிந்த எல்லா அரசியல் ரகசியங்களையும் எழுதியிருக்கிறீர்களா? என்ற போது, மனிதர் என்னை ஊடுருவிப் பார்த்த பின் மெளனம் சாதித்தார். எனக்கு அதன் அர்த்தம் புரிந்ததால் மௌனமாய் இருந்தேன். மெதுவாய் தோளில் கைவைத்து புன்னகைத்தார். அவர் கண்களின் மொழி புரிந்தது எனக்கு.
எனக்கு அவர் அளவுக்கு அனுபவம் இல்லை. ஆனால் எல்லா உண்மைகளையும் எழுத்தில் கொணர முடியாது என்பது புரியும் அளவுக்கு அனுபவம் இருக்கிறது.
உண்மைகள் என்பது எப்போதும் இனிப்பாக இருக்கவேண்டும் என்று இல்லை. அது கசப்பாகவும் இருக்கும், இருக்கவும் வேண்டும். ஆதலால் உண்மையுடன் கைகோர்த்து வாழ பலத்த மனோதிடம் அவசியமாகிறது. மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவும், சுயவிமர்சனத்துக்கும் நாம் கசப்பான உண்மைகளை ஜீரணித்து அதனுடன் கைகோர்த்து வாழவேண்டியிருக்கிறதல்லவா?
எனது எழுத்தில் அதிக உண்மையும் அதே வேளை மிகைப்படுத்தப்படாத, கதையை நகர்த்த தேவையான, கதையின் கருத்தை மாற்றியமைக்காத சில கற்பனைகளும் உண்டு.
உதாரணமாய் அண்மையில் நான் எழுதிய ”எலிசபெத் மகாராணியின் குவாட்டரும் எனது கட்டிங்'உம்” என்னும் ஆக்கத்தை வாசித்த அன்பர் ஒருவர் நீஙகள் இப்படி குடித்துவிட்டு வெறியில் ஆட்களுடன் மோதி விழுந்து கிடப்பீர்கள் என்று நான் நம்பவில்லை என்று அன்பாய் சூடாகி என்னை ரொம்பவும் சூடாக்கினார்.
குடிப்பழக்கம் இல்லாத நான் இப்போது குடிக்கத் தொடங்கியிருக்கிறேன். அத்துடன் குடித்துவிட்டு தட்டுத் தடுமாறி விழுந்து எழும்பி நடக்கின்றேன் என்பது அவரது வாதம்.
அந்தக் கதையில் உள்ள இறுதி இரண்டு பந்திகளும் கற்பனையே. ஆனாலும் அதில் ஓரு வித உண்மையும் இருக்கிறது. அதாவது ஒருவன் மது அருந்தினால் நான் அங்கு குறிப்பிட்டிருந்தவை நடக்கலாம். நான் மிக மிக சொற்பமான அளவு மது அருந்தியிருந்தேன்.
எனக்கு அந்தக் கதையை நகைச்சுவையாய் முடிக்க அவசியமாயிற்று என்பதால் நான் சற்று கற்பனை கலந்தேன் அவ்வளவே. அத்துடன் 3 -4 மேசைக்கரண்டி அளவு மது அருந்தினால் மனிதன் நிலை தடுமாறி தலைகீழாக நடப்பான் என்றோ, அல்லது அதனால் அவன் நான் கற்பு நெறி தவறியது போல் மிகைப்படுத்திக் கதைக்கவேண்டிய அவசியம் இருப்பதாகவோ எனக்குப் புரிவில்லை.
இந்த பதிவை இரண்டு நாட்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்று காலை நிலக்கீழ் தொடரூந்தில் பயணித்த போது சுஜாதாவின் ” கடவுள்களின் பள்ளத்தாக்கு” என்னும் கட்டுரைத் தொகுதி வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ”நகைச்சுவை பற்றி ஒரு சீரியசான கட்டுரை” என்னும் கட்டுரையை இவ்வாறு முடிக்கிறார் சுஜாதா.
புத்திசாலித்தனமான நகைச்சுவை:
வாழ்வின் அபத்தங்களை நன்றாக கவனித்து மிகையில்லாமல் அல்லது சற்றே மிகை சேர்த்து புண்படாமல் சொல்வது. இது தான் எல்லாவற்றிலும் மிக உயர்ந்த நகைச்சுவை.
இன்றைய நாளும் நல்லதே.
.
.
No comments:
Post a Comment
பின்னூட்டங்கள்