எனது அப்பா இலங்கை போலீசில் வேலைசெய்தவர். அவரின் போலீஸ் இலக்கம் 1124. இந்த இலக்கத் தகடு எப்பொழுதும் அவரின் ஒரு தோளில் இலக்கமும் மறு தோளில் சில நட்சத்திரங்களும் மினுங்கிக் கொண்டே இருக்கும். அவ்வப்போது அதை ஒரு பழந்துணி தந்து அவற்றை மினுக்கச் சொல்லுவார். என் மனதுக்கு அது பெருமையாய் இருக்கும்.
எனக்கு ஞாபகம் இருந்த காலத்தில் இருந்து அவரிடம் ஒரு ரங்குப்பெட்டி இருந்தது. மிகவும் பாரமானது. இரும்பிலானது. அதன் உடல் அமைப்பில் சில மடிப்புக்கள் இருந்தன. அதைத் தூக்க இருபுறமும் மடித்துவிடக்கூடிய கைபிடிகள் இருந்தன. அப்பாவின் பல ரகசியபொருட்கள் அதனுள் இருப்பதாக எனது கற்பனையோடிக்கொண்ருந்தது. அது போலீஸ் வேலையில் அப்பா சேர்ந்த போது கொடுக்கப்பட்டதாக அப்பா சொன்னதாக ஞாபகம் இருக்கிறது.
அப்பாவும் அதை தொட விடமாட்டார். நானும் அவர் சற்று சந்தோசபானம் அருந்தி மித மிஞ்சிய சந்தோசத்தில் இருந்த போதும் கேட்டுப்பார்த்திருக்கிறேன். மனிதர் அந்த விடயத்தில் மட்டும் ரொம்பவே நிதானமாய் இருந்தார்.
1981 இல் அப்பா பூலோகம் வெறுத்து மேல்லோகம் போனபோது அந்தப் பெட்டியை நான் எனது உரிமை என்று அம்மாவுடன் சண்டைபிடித்து பெற்றுக் கொண்டேன்.வீட்டுக்கு மூத்தவன் என்பதால் அம்மாவும் எதிர்த்துப் பேசவில்லை.
பல வருடக் கனவு அன்றொருநாள் நிறைவேறியது. பெட்டியை மெதுவாய் திறந்தேன். அலாவுதீன் அற்புத விளக்கை தேய்த்துவிட்டு நின்றபோது எப்படி அவனின் மனது இருந்திருக்குமோ அப்படி இருந்தது மனம். அப்பா மேலே இருந்து பார்த்துக்கொண்டிருப்பாரோ என்று பயமாயும் இருந்து.
மெதுவாய்த் திறந்தேன். முதலில் தெரிந்தது எண்ணையூறிப்போன பச்சை சாம்பல் நிறமான தேவாரப்புத்தகம். அதில் என்ன இருக்கப்போகிறது ஒரு 16 வயதேயான எனக்கு. அடுத்து அப்பாவின் போலீஸ் உடுப்புகள், சாரன் என சில உடுப்புகளும். அப்பாவின் பாடசாலை பரிசுக்கிண்ணங்களும், சான்றிதழ்களும் இருந்தன. இன்னும் தோண்டிப்பார்த்த போது அவர் அந்தக்காலத்தில் கால்ப்பந்து விளையாடிய பூட்ஸ், கோடுபோட்ட ஸ்டொக்கிங்ஸ், ஓட்டப்போட்டிகளின் போது பயன்படுத்தப்படும் stopwatch என்று பல ”ஆட்டோகிராப்” சமாச்சாரங்கள் இருந்தன. இவற்றுடன் மூன்று முக்கியமான பொருடகளும் அதனுள் இருந்தது. முதலாவது அப்பாவின் போலீஸ் தொப்பி, மற்றயது போலீசார் மழைக்காலங்களில் பயன்படுத்தும் ரெயின்கோர்ட். இவற்றுடன் இரண்டு தோட்டாக்களும் இருந்தன. அந்த தொப்பியும், ரெயின் கோர்ட்டும் இது நடந்து சில காலங்களின் பின் என்னை ஒரு போலீசாக ஏறாவூர், செங்கலடிப் பகுதியில் நடமாடவைக்கும் என்று நான் அன்று அறிந்திருக்கவில்லை.
ரங்குப்பெட்டியை ஆராய்து அடுத்தடுத்த நாட்களில் அப்பாவின் சேட்களை ஒரு டெயிலரிடம் கொண்டுபோனேன். அவரும் எனது அளவுக்கு உள்ளால் ஒரு தையல் போட்டு சேட்களை அளவில் சிறிதாக்கினார். தம்பி ”கொலர்” மாத்த எலாது என்றார். வீடு வந்து உடைமாற்றி வெளிக்கிடும் போது அம்மா ஒரு விதமாய் முறாய்த்தார். பின்பு ”மூத்தவன்” என்பதாலோ என்னவோ ஒன்றும் சொல்லவில்லை. அன்று மாலை Eravur United மைதானத்தில் பூட்ஸ்போட்டு விளையாடினேன். பந்துக்கும் அப்பாவின் சப்பாத்துக்கும் ஒத்தேவரவில்லை. அன்றுடன் அப்பாவின் சப்பாத்து தனது கால்ப்பந்து விளையாட்டை நிறுத்திக்கொண்டது.
பின்பு வந்த காலங்களில் எனது தொழில்நுட்ப ஆராய்ச்சியின் காரணமாக அப்பாவின் stopwatch அசைய மறுத்தது. ஒன்றுக்கும் உதவாத மணிக்கூடு என்று பட்டம் சூட்டி அதை ஒரு மூலையில் போட்டேன். அம்மா கேட்டால் கையைக்காட்ட இருக்கவே இருக்கிறாள் 4 வயதுத் தங்கை என்பதால் அது பற்றிய கவலை அற்றுப்போனது. அம்மாவும் கேட்கவில்லை. அதனால் நான் ஒரு பொய் குறைவாகச்சொன்னேன் எனது வாழ்க்கையில்.
ஏறத்தாள 1985களில் ஒரு நாள் மழைபெய்து கொண்டிருந்த போது அப்பாவின் ரெயின் கோர்ட்ஐ மாட்டிக்கொண்டு சைக்கிலில் நண்பனின் வீட்டுக்கு போனபோது நண்பன் நான் அருகில் போய் ”டேய்” என்னும் வரை பேயைய் பார்ப்பது போல நின்றிருந்தான். தன்னிடம் போலீஸ் வருகிறது என்று நினைத்து பயந்தானாம் என்றான் கேட்டபோது. இப்படிதான் ஆரம்பித்தது நான் போலீஸ் ஆன கதை.
நண்பனின் வீடு ஒரு ஒழுங்கைக்குள் இருந்தது. ஒழுங்கையின் ஆரம்பம் ஒரு முக்கியமான வீதியில் இருந்தது. ஒழுங்கையும் அந்த வீதியும் சந்திக்கும் இடத்தில் ஒரு மரம் இருந்தது. அந்த வீதியால் தான் காட்டுப்பகுதியில் இருந்து மங்களும், அனுமதியில்லாத விறகுகளும் இரவு நேரங்களில் கொண்டுவரப்படும்.
அது ஒரு மழைநாள் ஒழுங்கையின் ஆரம்பத்தில் இருந்த மரத்தின் கீழ் நின்றபடி பேசிக்கொண்டிருந்தோம். நான் அப்பாவின் ரெயின்கோர்ட் போலீஸ் தொப்பி போட்டபடி நின்றிருந்தேன். நண்பன் குடையுடன் சைக்கிலில் நின்றபடி என்னுடன் பேசிக்கொண்டிருந்தான். எமக்கருகிருல் இருந்த தெருவிளக்கு மிகவும் மங்கலாய் இருக்க அதைச் சுற்றி ஈசல்கள் பறந்து கொண்டிருந்தன.
அப்போது சற்று தூரத்தே இரு சைக்கில்கள் விறகுடன் மிக மெதுவாய் வந்து கொண்டிருந்தன. திடீர் என ”டேய் போலீஸ்டா” என்று ஒரு குரல் கேட்க, நான் நிமிர்ந்து பார்க்க அந்த இரு சைக்கில்களும் ஒரு U turn போட்டு வேகமெடுத்தன. நான் எனக்குப் பின்னால் திரும்பிப் பார்த்தேன். செங்கலடிச் சந்திவரை இருட்டாய் இருந்தது. திடீர் என மூளைக்குள் ஒரு ஔி தோன்ற மிகவும் அதட்டலான குரலில் ”டேய்” என்றேன் அந்த இரு சைக்கில் மனிதர்களும் திரும்பி திரும்பி பார்த்தபடி இருட்டில் மிக வேகமாய் கரைந்து போனார்கள்.
நண்பனும் நானும் சிரித்து ஓயவே சற்று நேரமாயிற்று. அடுத்து வந்த மழைக்காலம் செங்கலடிச்சந்தியில் ஒரு போலீஸ் தொப்பிபோட்ட போலீஸ்காரன் பெரும் அட்டகாசம் பண்ணிக்கொண்டிருந்தான். வண்டில்களில் லாம்பு இல்லாமல் வந்தால் அதட்டினேன், சைக்கிலில் ”லைட்” இலாமல் வந்தால் வெருட்டினேன். சிறுவர்களின் தலையில் குட்டி அனுப்பினோம்...
எனது நண்பனுக்கும் எனக்கும் மட்டுமே இந்த ரகசியம் தொரிந்ததாக நாம் எண்ணிக்கொண்டிருந்த ஒரு நாள், அம்மா தம்பி அந்த அப்பாட ரெயின் கோர்ட் எங்கடா என்ற போது எடுத்த நீட்டினேன். குசினிப்பக்கம் போனவர் அடுப்பில் இருந்த கொள்ளிக்கட்டையால் அதை சுட்டு ஓட்டையாக்கினார். உருகியக ரப்பர் மனம் மூக்கினுள் நுளைந்த போது உங்கட கூத்துகளப் பற்றி ”அன்டி” (நண்பனின் தாயார்) சொன்னவ என்றார். அத்துடன் அப்பாவின் ரங்குப்பெட்டியை பரிசோதித்தார். அப்பாவின் தொப்பியும் பறிபோனது. உள்ளே இருந்த தோட்டாக்களையும் கண்டபோது அம்மா ஆடியே போய்விட்டார். டேய் ஆர்டா இது தந்தது என்று பெரிய விசாரணையே நடாத்தினார். அப்பாவிடம் இருந்ததாக சொன்னதை அவர் ஏற்கவில்லை. நான் ஏதோ ஒரு விடுதலை இயக்கத்தில் இருக்கிறேன் என்று கடும் விசாரனை நடாத்தினார்.
அதன் பின் அந்த தோட்டாக்களை அம்மாவின் நேரடி பார்வையில் தோட்டத்தினுள் ஆழமான கிடங்கு கிண்டி புதைக்கவேண்டியேற்பட்டது.
இதன் பின்பு சிலகாலம் அம்மாவின் கெடுபிடிகள் அதிகமாகி நான் தேவைக்கு அதிகமாக சூடாகி எல்லா வீடுகளிலும் நடப்பது போல எங்கள் வீட்டிலும் நடந்தது. ஏனைய அம்மாமாரைப் போல் எனது அம்மாவும் நடந்தவற்றை சில நாட்களில் மறந்து போனார். நானும் போலீஸ் தொழிலை உதறிவிட்டு ஊரில் இருந்த அழகிகளை கண்காணிக்கும் தொழிற் கல்வியில் தேர்ச்சிபெறலானேன்.
அப்பாவின் ரங்குப்பெட்டி இன்னமும் அம்மாவிடம் இருக்கிறது. அது எனக்கு என்று கிழவியை வெருட்டி வைத்திருக்கிறேன். அவரும் ”சரியடா.. அது உனக்குத் தான் என்றிருக்கிறார்”
அந்த மழைக்காலங்களும் அழகானவையே.
எனது அப்பாவுக்கும், செங்கலடிச்சந்தியில் உதவி பொலீஸ் அத்தியச்சகராக எனக்கு உதவி புரிந்த திருவாளர் ராஜன் அவர்களுக்கும் இது சமர்ப்பணம்.
(கனடாவில் இலங்கை போலீஸ் ரெயின்கோர்ட உடனும், போலீஸ் தொப்பியுடன் ஒருவர் நின்றிருந்தால் அவர் என்னிடம் உதவி பொலீஸ் அத்தியச்சகராக இருந்தவராக இருக்கலாம். எனவே தயங்கமல் போட்டுத் தாக்குங்கள்)
.
அருமையான நினைவூட்டல்கள்.
ReplyDelete