இதயத்திற்கு வாழ்வு என்பது மிகவும் இலகுவாக இருக்கிறது. அது தனது துடிப்பை நிறுத்தும் வரை ஓயாது துடித்துக்கொண்டிருக்கிறது. என்னும் தொனியில் தனது 4000 பக்கங்களுக்கும் அதிகமான, மிகப் பிரபலமான ”எனது போராட்டம்” என்னும் சுயசரிதத்தை ஆரம்பித்திருப்பார் நோர்வேஜிய எழுத்தாளரான Karl Ove Knausgård.
நேற்றிரவு கணணி திருத்துவதற்காக அழைக்கப்பட்டேன். குளிர் அதிகமாயில்லை, - 9 பாகை மட்டுமே. வீடு தேடிப்போய் அறிமுகமான போது அவரின் பெயர் ”யேலேனா” என்று சொல்லியபடியே மிக மென்மையாய் கையைப்பிடித்துக் குலுக்கினார். சஞ்சயன் என்பதை உச்சரித்துப் பார்த்தார். ஒரு அழகிய ரஸ்ய நாட்டு நடுவயதுப் பெண்ணிண் வாயில் நுளைய மறுத்தது ”மகாபாரதத் தூதனின்” பெயர்.
அவரின் கணணிணைத் திருத்திக் கொண்டே பேசிக்கொண்டிருந்தோம். சற்று நேரத்தில் இருவரும் ஒரே அலைவரிசையில் இருப்பவர்கள் என்பது இருவருக்கும் புரிந்தது. பேச்சு ஆரம்பத்தில் வெளிநாட்டவரும் நோர்வேஜியர்களும் என்னும் பகுதிக்குள் புகுந்து மீண்டு, தொழில், இயற்கை, வாசிப்பு என்று வந்த போது நான் ஒரு சில ருஸ்ய நாவல்கள் வாசித்திருக்கிறேன் என்றேன். மிகவும் ஆச்சரியப்பட்டார். அன்னா கரீனினா கட்டாயம் வாசி என்றார். அப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியுள்ளேன் என்ற போது அன்னா கரீினாவை படைத்தன் இலக்கிய உலகின் உச்சத்தை தொட்டுவிட்டார் லியொ டால்ஸ்டாய் என்றும் கூறினார். தமிழ் மொழியில் பல ருஸ்ய மொழிபெயர்ப்புக்கள் உள்ளன என்ற போதும் ஆச்சயப்பட்டார்.
அவர் அருகில் உள்ள வயோதிபமடத்தில் பகுதிநேரத் தொழில் புரிவதாகக் கூறி, அவரே அதற்கான காரணத்தையும் விளக்கினார். அவருக்கும், ஒரு ஈராக்கியருக்கும் பிறந்தவொரு குழந்தை இருக்கிறதாம். அக் குழந்தை ADHD என்னும் ஒரு வித நோய் உண்டு என்றும், அதனால் அவன் மிகுந்த சிரபப்படுவதாகவும் சொல்லி பெரு மூச்சுசொன்றை உதிர்த்தார். அதனாலேயே தான் பகுதிநேர வெலை செய்வதாகவும், மிகுதி நேரங்கள் குழந்தை சம்பந்தமான காரியங்களுக்கு செலவளிகிறது என்றார்.
தற்போது தனது மாஜிக் கணவன் குழந்தையை பார்த்தக் கொள்வதாயும், தான் மிகுந்த களைப்படைந்திருப்பதாயும், அண்மைக் காலம் வரை ஒரு நோர்வெஜியருடன் தான் சேர்ந்து வாழ்ந்து, காலாச்சாரப் பிரச்சனைகளின் காரணமாக தற்போது பிரிந்து வாழ்வதாயும் சொல்லி முடித்து, உன்னை எனது பிரச்சனைகளை சொல்லி சங்கடப்படுத்துகிறேன் என்ற போது இல்லை என்னால் புரிந்து கொள்ள முடியும் என்றேன். நன்றி சொல்லி தேனீருடன் வந்தமர்ந்தார் மீண்டும்.
தனது தாயும் சகோதரன் ஒருவரும் ருஸ்யாவில் வாழ்கிறார்கள் என்றும், விதி தன்னை இந்த நாட்டில் கொண்டுவந்து விட்டிருக்கிறது என்றும், தான் நம்பிய ஆண்கள் இருவரும் தன்னை ஒரு போகப்பொருளாக பார்த்தார்களே அன்றி தான் விரும்பிய அருகாமையை, பாதுகாப்பை தராமலும் தனது சுய கொளரவத்தை மதியாமலும் நடந்ததனால் தான் தற்போது தனியே வாழ்கிறார் என்றார். அவரின் கதைகளில் அவர் ஆண்களில் மட்டும் குறை கூறுவது போலிருந்ததனால் மிகவும் அவதானமாய் நீங்கள் உங்கள் ஆண்களை மட்டும் குறை கூறுவதை விட்டு சுயவிமர்சனம் செய்த கொள்வதும் அவசியம் தானே என்றேன். என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.
நீ நினைப்பது போல நான் என்னை சுய விமர்சனம் செய்யாமலில்லை. ஆனால் எனது நம்பிக்கைகள் உதிரத்தொடங்கிய நாட்களில் இருந்து நான் அவர்களைப் பிரிந்து வரும் வரையில் தன்னை பல தடவைகள் சுய விமர்சனம் செய்துகொண்டு பழக்கவழக்கங்களை, எதிர்பார்ப்புக்களை மாற்றிக் கொண்டு சேர்ந்து வாழ முயற்சித்து அவை செயலற்றுப் போனதாலேயே பிரியநேரிட்டது என்பது அவரின் கருத்தாக இருந்தது.
மனிதர்கள் தங்கள் நம்பகத்தன்மையை மெது மெதுவாய் இழந்து கொண்டிருக்கிறார்கள். தங்களின் நாட்டில் உள்ளது போன்ற உறவுகளின் பெறுமதியை நோர்வேயில் காணமுடியாதிருப்பது வருத்தத்தைத் தருகிறது என்றபோது ஏன் நீங்கள் உங்கள் நாட்டவர் ஒருவரை திருமணம் புரியலாமே என்ற போது தான் நோர்வேக்கு வந்து 13 வருடங்கள் ஆகின்றன. தனது பழக்கவழக்கங்கள், நடை உடை பாவனைகள், சிந்திக்கும் விதம் எல்லாம் நோர்வேஜியர்களைப் போலுள்ளதால் இந் நிலையில் தன்னுடன் வாழப்போகும் தனது ஊர் கணவனுக்கு அவை சகிக்கத் தக்கதாக இருக்காது என்றும், அதே வேளை தன்னால் 100 வீதம் ஒரு நேர்வேஜிய மனிதராக மாறமுடியாது எனவும் அதை தனது ருஸ்ய விழுமியங்கள் தடுக்கின்றன என்றும், நான் இப்போது "No mans land" என்னும் இருநாடுகளுக்கு இடையில் உள்ள இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடாத நிலப்பகுதியில் உள்ளவர்களின் மனநிலையில் உள்ளேன் என்ற போது என் மனதில் அப்பாடா நான் மட்டும் இப்படியான கலாச்சார சிக்கல்களில் இல்லை பலரும் அதை கடந்து வர முயன்று கொண்டிருக்கிறார்கள் என்பதும் புரிந்தது.
உன்னைப் போலத்தான் நானும் பல விடயங்களில் இன்னும் குழம்பிய குட்டையாய் இருக்கிறேன். நான் தற்போது எனது ஊருக்கும் அன்னியன், அதே வேளை நோர்வேயிலும் அன்னியன் எனவே நான் யார்? எனது அடையாளங்கள் எவை? நான் எங்கு போய்க் கொண்டிருக்கிறேன்? எனது தாய்நாட்டு விழுமியங்களை இழந்து இந் நாட்டு விழுமியங்களுடன் வாழ்கிறேனா என்பவை பற்றி பெருத்த குளப்பத்தில் இருக்கிறேன் என்றேன். நாங்கள் ஒரே படகில் பயணிக்கிறோம் என்றார் ஆங்கிலத்தில். எனது தலை அதை அமோதித்தது.
நீ கூறிய விடயங்களே மாற்றங்களை அனுமதிக்கும் எல்லா வெளிநாட்டவர்களுக்கும் பெரிய சவாலாக இருக்கிறது. காலாச்சார மாற்றங்களை அனுமதிக்காமல் பல ஆண்டுகளாக இங்கு வாழும் மனிதர்கள் இப்படியான சிக்கல்களை உணரமாட்டார்கள், ஆனால் அவர்களின் வாழ்வும் இலகுவாய் இல்லை என்றார். ஒரே குடும்பத்தில் இப்படியான இருவர் இணையும் போது எற்படும் சிக்கலை சிந்தித்துப் பார்த்தேன்.. தலை சுற்றத் தொடங்கியது.
தான் களைத்திருப்பதால் நிம்மதியானதொரு வாழ்க்கையை நோக்கி கனவு காண்பதாய்ச் சொன்ன போது கனவுகளே நிஜத்துக்கு வழிகாட்டிகள் என்றேன். அவர் புன்னகையில் வேதனைகளின் வலி தெரிந்தது. வாழ்வு என்பது என்றும் மாறிக்கொண்டே இருக்கும், எனவே உங்கள் வாழ்விலும் மாற்றங்கள் வரும் என்றபோது மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொன்னார்.
அவரின் கணணிதிருத்தி வீடு திரும்பும் போது மனதுக்குள் நான் யார் என்னும் கேள்விக்கு விடைதேட முயற்சித்த போது எதிரே தெரிந்த வீதி சமிஞ்சைவிளக்கு மஞ்சலில் இருந்து சிவப்புக்கு மாறிக்கொண்டிருந்தது.
இன்றைய நாளும் நல்லதே
.
nice.,,
ReplyDeletehttp://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_420.html
ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...
உங்கள் வாழ்விலும் மாற்றங்கள் வரும். மாற்றம் ஒன்றே மாறாதது .........
ReplyDelete......நிஜமான வரிகள். .
எங்கள் பிள்ளைகளுக்கு இந்த நிலைமை வரவே கூடாது. இந்த நாடோடி வாழ்க்கை எங்களுடனேயே முடியட்டும்.
ReplyDelete