சில நாட்களுக்கு முன்பு ஒரு நாள் நண்பர் ஒருவர் வீட்டில் சந்தித்தேன் அவரை. வயதில் என்னில் முத்தவர். வயது 60 ஐ நெருங்கிக்கொண்டோ அல்லது கடந்துகொண்டோ இருக்கலாம். அவருடன் இரு நாட்கள் பழகக்கிடைத்தது. அவரின் தன்மைகள் எல்லாம் என்னைக் கவர்ந்தது என்றேனேயானால் அது பொய். ஆனால் அவருடனான சந்திப்பின் பிழிவு, இச் சந்திப்பை மறக்க முடியாததாக்கியிருக்கிறது.
அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட விதமும், பேச்சும் எனக்கு ஈர்ப்பைத் தருவதைத் தவிர்த்த பெருத்த எரிச்சலையே தந்தது. எனினும் அடுத்தநாள் ஏற்பட்ட சந்திப்பும், அதைச் சுற்றியிருந்த சுழலும், மனிதர்களும், உரையாடல்களும் நான் இலங்கைத் தமிழ் இலக்கிய உலகிலும், அரசியலிலும் உலாவரும் ஒரு முக்கியமானவரை சந்தித்திருக்கிறேன் என்னும் உணர்வைத் தந்திருந்த போது, அவரின் வாழ்வு பற்றிய கண்ணோட்டமும், கருத்துக்களும் அவருடன் இலகுவாக உரையாடலாம் என்றுணர்த்தின.
பெருமனிதர்களை சந்திக்கும் போது என்னிடம் வந்தமரும் சம்பிரதாயங்கள், முகஸ்துதிகள், ஒரு வித இடைவெளியுடன் நடைபெறும் உரையாடல்கள் போல் அல்லாது மிக இலகுவாக அவருடன் உரையாட முடிந்தது. வயதில் மூத்தவர் என்றாலும் எமது குசும்புத்தனமான நகைச்சுவைகளுக்கு சற்றும் குறையாத நகைகைச்சுவையுடன் எம்முடன் உரையாடிக் கொண்டிருந்தார்.
தனது வாழ்வின் பக்கங்களை எல்லாம் ஆற்றில் மிதக்கும் இலையின் பயணத்தைப்போன்ற அமைதியாகவும், வேகமாகவும், தடைகளை கடக்கும் திருப்பங்களுடாகவும் சொல்லிக்கொண்டிருந்தார். நாமும் அவருடன் பயணித்துக்கொண்டிருந்தோம்.
பல தசாப்த்தங்களைக் கடந்திருந்த அவரின் மேற்கத்திய நாட்டு வாழ்வு அவரில் பெரும் ஆளுமை செலுத்திக்கொண்டிருந்ததை அவரின் மொழி, சொற்றாடல், கருத்துக்கள், வாழ்வை அவர் பார்க்கும் முறை என்பவற்றினூடாக அறியக்கூடியதாக இருந்தது. இருப்பினும் கிராமத்து வாசம் எதிர்பார்க்காத அளவு மிகுந்த ஆதிக்கத்தை அவரிடம் செலுத்திக்கொண்டிருந்தையும் மறுப்பதற்கில்லை.
துடிப்பான இளைமைக்காலம், எழுத்தினூடாக வந்து காதல், வாழ்க்கைப் போராட்டம், சமூக சிந்தனை, எழுத்துலகம், விடுதலைப்போராட்டத்தின் தாக்கமும் வரிந்து கொண்ட பாதையும் அத்துடன் இன்றைய முதுமையின் ஆரம்பப் படிகள் வரையிலான அனைத்து வாழ்வியல் சிக்கல்களையும் அவர் பேசிக்கொண்டிருந்த போது அவரும் எனது வயதை, அதையொத்த சிக்கல்களுடன் கடந்திருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். அதேவேளை நான் இன்னும் வாழாத வாழ்க்கையை, அவர் வாழ்ந்திருந்த கதையை அவர் கடந்து போனபோது கண்கள் கட்டப்பட்ட நிலையில் திசையற்று அலையும் என்னைப் போன்றவர்களை கைபிடித்து அழைத்துப் போனது போல் இருந்தது.
அவரின் பழுத்த இலக்கிய அனுபவமும், அரசியல் அனுபவமும் வாழ்வனுபவமும் இருந்ததால் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தார். நாமும் கேட்டுக்கொண்டே இருந்தோம். பிரபலங்களின் பலவீனங்களையும் கொண்டிருந்தார் அவர். அது புரிந்திருந்ததால் அவரின் உரையாடல்களை வடிகட்டியே காதுக்குள் விட்டுக்கொண்டிருந்தேன். இவ்வளவு பெரிய மனிதரிடம் சற்று செருக்கும், தற்பெருமையும், மிகைப்படுத்தலும் இருப்பதில் எனக்கு ஏற்பில்லை என்றாலும் யாதார்த்த உலகில் இவரைப் போன்றவர்களிடம் உள்ள பலவீனம் அது தான் என்பது புரிந்திருப்பதால் அதை தவிர்த்தே அவருடனான உரையாடலை அனுபவித்துக்கொண்டிருந்தேன். நடுநிசி கடந்து அதிகாலை நெருங்கிக் கொண்டிருந்தது நாம் தூங்க முயன்ற போது. மிக மகிழ்ச்சியான பின்மாலைப் பொழுது அது.
மறுநாள் காலையுணவு மேசையிலும் உரையாடல் தொடந்தது. அவரை வழியனுப்ப புகையிரதநிலையம் வரை அவருடன் நடந்து போனேன். ஏறத்தாள 30 நிமிடங்கள் அவருடன் தனிமையில் உரையாடக் கிடைத்த போது அவரின் வாழ்வினைப் பற்றி பகிரப்படாத சில பல விடயங்களை பகிர்ந்துகொண்டார். மெளனமாய் அவரருகில் அவரின் பயணப்பொதியுடன் நடந்து கொண்டிருந்தேன். படிகளில் எனது கையைப்பிடித்தவாறே ஏறினார். புகையிரதம் வரும் நேரம் நெருங்கும் வரை பேசிக்கொண்டிருந்தோம்.
ஒரு கேள்வி கேட்டார். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. சற்ற நேரம் மௌனமாய் நின்றிருந்தேன். முதுகைத் தடவி விட்டார். ஆறுதலாயிருந்தது எனக்கு. கேள்விகளால் எனது மெளனத்தை நிரப்பாமல் புரிதலினூடான அவரது செய்கையால் மனிதனின் உணர்வுகளை அவர் புரிந்து கொண்டது மனதுக்கு ஆறுதலாயும், அதே வேளை அவரது பெருந்தன்மையையம் உணர்த்தியது.
புகையிரதத்தில் ஏற்றி அவரருகில் பயணப்பொதியையும் வைத்து, சென்று வாருங்கள் என்ற போது தம்பி! தொடர்பிலிருங்கள். முருகனைக் கும்பிடுங்கள் என்றார். அவரின் வேண்டுகோளில் ஒன்றை நிறைவேற்றுவதாகச் சொன்னேன். சிரித்தார்.
புகையிரதம் கடந்து போன பின் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தேன். அவர் அந்தக் கேள்வியைக் என்னிடம் கேட்க நான் என்ன பிடி கொடுத்தேன் என்று சிந்தனையோடிக்கொண்டிருந்தது. பதில் கிடைக்கவேயில்லை. சிலவேளை அவரின் வாழ்வனுபவம் அவருக்கு அதை உணர்த்தியிருக்கக்கூடுமோ?
இன்றைய நாளும் நல்லதே.
.
நன்று!
ReplyDeleteபெரியவர்கள் குறிப்பாலேயே உணர்ந்து கொள்வார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம் போலும்
ReplyDeleteஎல்லாம் சரி அப்படி என்ன கேள்வின்னு யோசிச்சி எனோட மூளை இப்போ காது வழியா தெரியுது...
ReplyDeleteநீங்கள் சந்தித்த அந்த பிரபலம் யார் என்று சொல்லுங்களேன். அப்பிடி அவர் உங்களிடம் என்ன கேள்வி தான் கேட்டார்? ப்ளீஸ் சொல்லுங்களேன்?
ReplyDelete