இன்றைய காலைப் பொழுது, நித்திரை கலைந்தாலும் ஏகாந்த நிமிடங்களை அனுபவித்துக் கொண்டிருந்தேன். நினைவுகள் ஏனோ பம்பரமாய் காலத்தைச் சுற்றிக்கொண்டிருந்தது. எனது இளையவளுக்கு மூன்று நான்கு வயதிருந்த காலத்தில் எனக்கு யாதுமே அவளாய் இருந்த காலம். பெயரியவள் சற்று வளர்ந்திருந்ததால் அவளின் உலகம் சற்று வேறாய் இருந்தது எமக்கு இன்னும் வசதியாய் இருந்தது.
சனி ஞாயிறு காலைப் பொழுதுகள் மிகவும் மிருதுவான, இதமான இனிமையானவை. தூக்கம் கலைந்து ஏகாந்த நிமிடங்களை அனுபவிக்கும் போது ஓடி வந்து குதிரை ஓடுவாள் என் முதுகில். எனது ஏகாந்த நிமிடங்கள் பேரானந்த நிமிடங்களாகும். மெதுவாய் அள்ளியெடுத்து நெஞ்சிலிருத்தியதும் என்னுடன் பேசி, பாடி, கோபித்து, சிணுங்கி, சிரித்து மீண்டும் ஒரு குட்டித் தூக்கத்தினுள் நாமழ்ந்து போவோம்.
கைசூப்பியபடியே என் கையினுள் எக் கவலையும் இன்றி தூய்மையாய் தூங்கும் அவளை மணிக்கணக்காய் ரசித்திருக்கிறேன். ஒவ்வொரு நிமிடங்களும் ஆயிரம் கதை சொல்லும். அவள் முகம் கண்ணால் உட்புந்து இரத்தத்தில் கலந்துபோன காலங்கள் இவை. தூக்கத்தில் முகபாவனைகள் சிரிப்பு, விம்மல், அழுகை, பேரமைதி என மாறிக் கொண்டிருப்பதும், அவள் தூக்கத்தில் சிரித்தால் நானும் சிரித்து, அழுதால் நெஞ்சுருகி அவளை அணைத்து ஆறுதல்படுத்தியும், நாம் மகிழ்ச்சியாய் வாழ்ந்திருந்த காலங்கள் அவை.
மீண்டும் தூக்கம் கலையும் போது அவளின் சினுங்கலுக்கு பதிலளித்தும், தலைகோதி, கலைந்த சுறுள் மயிர் ஒதுக்கும் போது கிடைக்கும் அவளின் மந்தகாரமான புன்னகைக்கு ஈடாக இவ்வுலகில் ஏதுமில்லை. அத்தனை பேரழகு அது. அந்தக் காலை வேளையிலும் கதை கேட்பாள். புதிதாய் கற்பனையில் ஒரு சிறுமிப் பாத்திரம் உருவாக்கி சற்று வேகம், வீரம், கலந்தூட்டும் போது விரியும் கண்களின் அழகுக்காய் எத்தளை கதைகள் வேண்டுமானாலும் சொல்லலாம்.
அக்கா அறைக்குள் வருகிறாள் என்றால் வாயில் கைவைத்து ”உஸ்” என்பாள் அதனர்த்தம் நாம் போர்வைக்குள் ஒளியவேண்டும் என்பதே. கால் முதல் தலைவரை முடிய போர்வைக்குள் தன் வாயை இரு கைகளாலம் பொத்தியபடி கண்ணால் சிரித்திருக்க, நானும் வாயில் விரல் வைத்து சத்தம் போடாதே என்னும் போது பதிலாய் கிடைக்கும் பிரகாசமான கண்களும், அக்கா பொய்யாய் எங்கே பூக்குட்டியும் அப்பாவும் என்னும் போது அடக்க முயற்சித்து அடக்கமுடியாது வெளிவரும் ”களுக்” சத்தத்துடன் சிரிப்பும் கலந்து முடிவடையும் அந்த தேடல் படலம்.
அக்கா! ”குதிரை” என்பாள். கண நேரத்தில் இரு இளவரசிகளையும் நான் முதுகில் சுமந்திருக்க அவர்கள் காற்றில் கடுகிக்கொண்டிருப்பார்கள். என் ஆன்மா அந்த பேரின்பத்தை அனுபவித்திருக்கும். இடையிடையே அப்பா நோகுதா என்பார்கள். நொந்தாலும் அனுபவிக்கும் பரவசத்தில் இல்லை என்ற வார்த்தையே வெளிவரும்.
முதுகு வலிக்கும் நாட்களில் ”அம்மா, முதுகில் ஏறி நடவுங்கோ” என்பேன். பிஞ்சுக்காலால் முதுகில் நடப்பாள். அவள் நடப்பதாலும், நடக்கும் போது விழுவதாலும், விழுந்து சிரிப்பதாலும் என் வலிகள் மறைந்து போன இனிமையான காலங்கள் அவை.
எட்டு ஆண்டுகளின் பின்னான இந்தக் காலைப் பொழுது அப்படியானதாக இல்லை என்றாலும். நினைவுகளின் நீரூற்றில் தீயணைந்து போகிறது.
இன்றைய நாளும் நல்லதே!
எனது பூக்குட்டிக்கும், காவியாவுக்கும் இது சமர்ப்பணம்.
.
காலம் எழுதிய அழியாத கோலங்கள். மீட்டும் போதும் இனிக்கும். பகிர்வுக்கு நன்றி
ReplyDelete