தொலை தூரம் தொலைந்தவர்கள்

ஏறத்தாள  ஒரு வருடத்திற்கு முன்பொரு நாள் கணணி உதவி வேண்டும் என்று ஒருவர் அழைத்தார். அவர் வீடு தேடிப் போய் இறங்கினேன். கதவருகில் அவரைக் கண்டதும் என் மனது எச்சரிக்‌கை மணியடித்தது. வயது 55 இருக்கலாம். பேச்சு சீராக இல்லை. நடை நிதானமாக இல்லை. அவரின் நடை ஒரு மணிநேரத்திற்கு 100 மீற்றர் என்னும் வேகத்தில் இருந்தது. என்னை வீட்டுக்குள் அழைத்தார். நான் அவரைக் கடந்து வீட்டுக்குள் சென்றேன்.

வாசலில் மனிதர் ஆச்சர்யப்படுத்தினார். உள்ளே அவரின் வீடு என்னை ஆச்சர்யப்படுத்தியது.  வீடு முழுவதும் கணணியும் கணணி சார்ந்த பொருட்களுமாக ”கணணி நிலம்” போன்று  இருந்தது.
அவரின் வீட்டில் 23 கணணிகள் இருந்தன
அவற்றில் 18 ஒரே நேரத்தில் இயங்கின
நான்கு50 அங்குல தொலைக்காட்ச்சிப்பெட்டிகள்
இரண்டு இணைய இணைப்புக்கள் (மிக மிக வேகமான இணைப்புக்கள்)
4 தொலைக்காட்சி இணைப்புக்கள் Digital box
எண்ணிக்கையில்லாத சிறு சிறு கணணி உபகரணங்கள்

நான் அவற்றைப் பார்த்து ஏங்கிப் போய் நின்ற போதுதான் அவர் என்னை வந்தடைந்தார். அவரின் பேச்சில் அவர் ஒரு ”கறுப்பனை” எதிர்பார்த்திருக்கவில்லை என்பது புரிந்தது. 

என்ன பிரச்சனை என்றேன். தனது கணணிகளுக்கிடையில் உள்ள ”நெட்வோர்க்” வேலை செய்யவில்லை என்றார். பிரச்சனையின் முலத்தை தேடி ஓடினேன் நான்.  முக்கியமாக ஒரு உபகரணம் செயலிழந்திருந்தது.  அதை விளக்கிய போது பொறு என்னிடம் புதிதாய் ஒன்று இருக்கிறது என்றார். அவர் தந்த உபகரணத்தை நான் இணைத்த போது அவரின் ”நெட்வேர்க்” இயங்கத் தொடங்கியவுடன் மனிதர் முழுவதுமாக மாறிப் போனார்.

என்ன குடிக்கிறாய் என்றார். சாக்லொட் எடுத்து வைத்தார். பழங்கள் எடுத்து வந்தார். ‌தேநீர் வந்தது. உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

பல வருடங்களுக்கு முன் கப்பல் ஒன்றில் காப்டன் பதவியில் இருந்திருக்கிறார். மனைவி இரு குழந்தைகள் என வாழ்ந்திருந்த நாட்களில் துருக்கிக்கு குடும்பத்துடன் சென்றிருந்த போது மனைவி ஒரு துருக்கிய மனிதரை காதலிக்க ஆரம்பித்து, இவரையும் குழந்தைகளையும் பிரிந்து சில காலங்கள் அந்த துருக்கியருடன் வாழந்திருந்த போது மன அழுத்தம் இவரை தாக்கியிருக்கிறது. அதன் பின் சக்கரை வியாதி, அதைத் தொடர்ந்து நரம்புத் தளர்ச்சி இப்படி பல வியாதிகள் இவரைத் தாக்கியிருக்கின்றன. தனக்கு இல்லாத நோயே இல்லை எனலாம் என்றார் சுய நகைச்சுவையுடன்.

காலப் போக்கில் மன அழுத்தத்தினால் மனிதர்கள் எவரையும் சந்திப்பதை தவிர்த்து வருகிறாராம். நடுச் இரவில் ஊர் உறங்கிய பின்  மட்டும் வெளியில் போய் வருவார். தூக்கமின்மையினால் பெரும் அவதிப்படுவதாகவும் சொன்னார். மருந்துக்டைபோன்று வீடு முழுவதும் மருந்துகள் அரைந்து கிடந்தது

ஏறத்தாள ஒரு மணிநேரத்தின் பின் என்னை அவருக்கு மிகவும் பிடித்துப் போக அன்று மாலை முழுவதும் என்னை உட்கார்த்தி வைத்துப் பேசிக்கொண்டிருந்தார்.  அவரின் நிலை உணர்ந்ததால் நானும் அவருடன் உட்கார்ந்திருந்தேன்.

அவரால் நடக்க முடியாதிருப்பதால் ஒவ்வொரு இடத்திலும் தனக்கு எல்லா பொறுட்களும் இருக்க வேண்டும் என்று தன் வீட்டில் பல கணணி சார்ந்த பொருட்கள் இருப்பதற்கான காரணத்தை விளக்கினார். எதுவும் எப்பவும் நடக்கலாம் என்பதால் ஒவ்வொரு பொருளுக்கும் அது பழுதடைந்தால் அதை ஈடு செய்ய ஒரு பொருள் எப்பவும் அவர் வீட்டில் இருந்தது என்பது பின்பு எனக்கு தெரிய வந்தது.

அடுத்து வந்த வாரங்களில் பல தடவைகள் கணணி திருத்த அழைத்தார். கணணி திருத்துவது மட்டும் எனது தொழிலாய் இருக்கவில்லை. அவருக்கு பேச்சுத் துணையாயும் இருந்தேன். அவரின் காதலி என்று ஒரு பெண்ணை அறிமுகப்படுத்தினார். காதலுக்கு கண்ணில்லை என்பது உண்மைதான் என்பதை யதார்த்த உலகில் நான் உணர்ந்து கொண்டது அன்று தான். தினமும் இவருக்குரிய  பொருட்களை கொள்வனவு செய்து கொடுப்பது இவர் காதலியின் கடமைகளில் ஒன்று. எனக்கு முன்னாலேயே அவருக்கு ஒரு ”இச்” கொடுத்துவிட்டு விடைபெற்றார் காதலி.

ஓரிரு  வாரங்களில் நெருங்கிய நண்பர்ளாய் மாறியிருந்தோம் நாம். அலைவரிசை பெருந்திப்போகும் நட்பு கிடைத்தது போலிருந்தது அவரது நட்பு. அவரை வாருங்கள் வெளியே போய் வருவோம் என ஒரு நாள் அழைத்தேன். சங்கடப்பட்டார். சற்றே வற்புருத்தினேன்.  அவர் மிகவும் அசௌகரீயமாய் உணர்வதை உணர்ந்ததால் வேண்டாம் பின்பொருநாள் போவோம் ‌ என்று கூறிய போது கண்களால் நன்றி என்றார்.

நான் தொழில் இன்றி வாழ்ந்திருந்த காலம். நோய்கள் மற்றும் வாழ்வின் முட்படுக்கை ஆகியவற்றுடன் முட்டி மோதி நடப்பதற்கே திராணியற்றுக் கிடந்த நாட்கள் அவை. மனம் விட்டுப் பேசுவதற்கு அவருக்கு நானாயும் எனக்கு அவராயும் இருந்ததால் ஒருவருக்கு ஒருவர் வடிகால்களாயும், மனத்தைரியம் கொடுப்பவர்களாய் இருந்தோம்.  பின்பு வந்த காலங்களில் எத்தனையோ தடவைகள் அவரை வாருங்கள் வேளியே செல்வோம் என்ற போதெல்லாம் முடியாது, பின்பொருநாள் என்பார்.

எனக்கு தொழில் கிடைத்ததை அவருடன் பகிர்ந்த போது மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதன் பின்னான காலங்களில் நேரமின்மையினால் தொடர்பு குறைந்து போனது. இருப்பினும் அவ்வப்போது தொடர்பு கொள்வேன். அவரும் தொடர்பு கொள்வார்.

அண்மையில் ஒரு தொலைபேசி வந்தது எனக்கு அவரிடமிருந்து. குரலில் ஒரு துள்ளல் இருந்து. தற்போது மன அழுத்த நோய் சற்று குறைந்திருப்பதாயும். ஒரு பயிட்சி முகாமிற்கு தான் சென்று வருவதாயும் கூறினார்.

அத்துடன்,  நாம் இந்த கோடைக்காலத்தின் போது மீன் பிடிக்கப் போகவேண்டும் என்றழைத்திருக்கிறார்.  நிட்சயமாய் என்று பதிலளித்திருக்கிறேன்.

மனிதனையும் மனத்தையும் செப்பனிட கடந்தோடும் காலத்தை விட சிறந்த வைத்தியன் இல்லை என்பது மீண்டும் நீரூபனமாகியிருக்கிறது.

இன்றைய நாளும் நல்லதே.



.

2 comments:

  1. >அவரின் வீட்டில் 23 கணணிகள் இருந்தன
    அவற்றில் 18 ஒரே நேரத்தில் இயங்கின
    நான்கு50 அங்குல தொலைக்காட்ச்சிப்பெட்டிகள்
    இரண்டு இணைய இணைப்புக்கள் (மிக மிக வேகமான இணைப்புக்கள்)4 தொலைக்காட்சி

    நானும் உங்கள் வசனத்தில் சொல்வதானால், "நமீதாவைப் பார்த்த பெரிசு போல பெருமூச்சு விட்டேன்"

    ReplyDelete

பின்னூட்டங்கள்