இலங்கையில் தமிழர்களின் எதிர்காலம்?

இலங்கையில் தமிழர்களின் எதிர்காலம்?  (கூட்டத்தின் தலைப்பு) இக் கூட்டம் பற்றிய எனது பார்வை

இலங்கையில் தமிழர்களின் எதிர்காலம்  (Tamilenes fremtid på Sri Lanka? ) என்னும் தலைப்பில் நோர்வே வலதுசாரிக்கட்சியினாலும் நோர்வே ஈழத்தமிழர் அவையினாலும் இன்று நோர்வே பாராளுமன்றத்தில் ஒரு ”lobby” கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இக் கூட்டத்தின் உள்ளடக்கத்தில் இலங்கையில் அபிவிருத்தி அரசியல் என்னும் தொனியிலான தலைப்புடன் ஒரு உரையாற்றப்பட இருந்ததால் இக் கூட்டத்தில் பங்குபற்றும் ஆவல் உருவாகியது.

கூட்டம் 14:00 மணிக்கு என்றிருந்ததால் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு 13:00 மணிக்கே ஆஜராகியிருந்தேன். கூட்டத்தினை ஆரம்பித்து வைத்த இடதுசாரிக்கட்சி உறுப்பினர் Peter Gitmark போரில் உயிர்நீத்த அனைவருக்கும் அகவணக்கம் செலுத்தி கூட்டத்தை ஆரம்பித்துவைத்தார். அதன் பின் நோர்வே ஈழத்தமிழர் அவையினர் தாங்கள் யார் என்பதை விளக்கிக் கூறினர்.

அடுத்ததாக Dr. Jude Lal Fernando இலங்கைப் பிரச்சனைக்கு சிங்கள, பௌத்த மத சிந்தனைகள் காரணமாயிருக்கலாமா என்னும் தொனியிலான தலைப்பில் உரையாற்றினார்.  சிங்கள மதத்தலைவர்களும், அரசியல்வாதிகளும் எவ்வாறான சிந்தனையுடன் செயற்பட்டார்கள் என்பதை சுட்டிக்காட்டிய போது தமிழர்களால் இஸ்லாமிய சமூகத்திற்கு ஏற்படுத்தப்பட்ட வலிகள் பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தால் இன்னும் நியாயமாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து.

அடுத்ததாக Maria Bergram Aase நோர்வே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ”இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறல்” வழக்கு பற்றி சிறு விளக்கமளித்தார். இவர் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை பற்றி மட்டுமே பேசினார். இவர் ஈழத்தமிழர் அவையினரின் சார்பில் இவ் வழக்கினை நீதிமன்றத்தில் நெறிப்படுத்துவதால் அவரின் வாதங்கள் நடுநிலையாக இருக்க முடியாது என்பது பரிந்து கொள்ளக் கூடியதே.

Rohitha Bashana என்னும் புலம்பெயர் பத்திரிகையாளர், பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தமா அல்லது இன அழிப்பா? என்னும் தொனியில் இலங்கை அரச முக்கியஸ்தர்கள் ஆற்றிய உரைகளின் தொகுப்புகளை அடிப்படடையாக வைத்து உரையாற்றினார். யதார்த்தத்தை பிரதிபலித்தது இவரது உரை.

ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இலங்கையில் அபிவிருத்தி அரசியல் என்னும் உரை பெருத்த ஏமாற்றத்தையே தந்தது. இன்றைய அபிவிருத்தி பற்றி ஏதும் கூறப்படும் என எதிர்பார்த்திருந்தது எனது தவறு தான். திருத்திக்கொள்ள முயல்கிறேன், என்னை.

இன்றைய கூட்டத்தின் முக்கிய காரணமாக நாளை (31.05) நோர்வே பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள இலங்கை பற்றிய ஐ.நா சபையின் மனிதஉரிமைகள் மீறல் பற்றிய விவாதத்தையும் அத்துடன் சில இலங்கை சம்பந்தமான சில முக்கிய அறிக்கைகள் அண்மைக் காலங்களி்ல் வெளிவரவுள்ளதாலும், தமிழர் பிரச்சனைகள் குறித்த தகவல்களை இந்தக் கூட்டத்தின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  வழங்கி இதன் முலமாக தமிழர் பிரச்சனைகளை பலரும் கவனிக்கத்தக்கதாக மாற்றுவதே நோர்வே ஈழத்தமிழர் அவையினரின் நோக்கமாக இருக்கும் என்பது எனது கருத்து.

இதில் தவ‌று ஏதுவுமே இல்லை. வரவேற்கப்படவேண்டிய செயல் இது. இருப்பினும் இன்றைய கூட்டத்தில் அவதானிக்கக்கூடியதாக இருந்த சில விடயங்கள் அவர்களின் நோக்கத்திற்கு சாதகமாக அமையாமல் போகலாமோ என அஞ்சுகிறேன்.

அவையாவன:
  • Lobby செய்யும் போது எவரை எமது செய்தி சென்றடைய வேண்டும் என்பதில் நாம் மிக அவதானமாக இருத்தல் அவசியம். (கலந்து கொண்டவர்களில் ஆகக் குறைந்தது 75 வீதமானவர்கள் தமிழர்கள்)
  • இன்றைய கூட்டத்தில் நாளை பாராளுமன்றத்தில் விவாதத்தில் கலந்து கொள்பவர்கள் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்? இதில் வெளிநாட்டு விடயங்களை கையாள்பவர்கள் எத்தனை பேர்? நாம் ஓரளவாவது திருப்திப்பட முடியாத எண்ணிக்கை அது என்பது மட்டும் உண்மை. இதற்கான காரணத்தை ஆராய்வது முக்கியமாகிறது.
  • உரையாற்றுபவர்களின் ஆளுமை என்பது இத்தகைய Lobby கூட்டங்களில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. Dr. Jude Lal Fernando இன் உரையின் ஆழுமை குறிப்பிடத்தக்கது. சிறந்த உள்ளடக்கத்தை கொண்டிருந்தாலும் Rohitha Bashana உரை சபையோரில் முக்கியமானவர்களை சென்றடைந்ததா என்பது கேள்விக்குறியே. ஒரு  முக்கிய விடயத்தை குறைந்த நேரத்தில் சபையோர் மீது முன்வைக்கும் நடவடிக்கையானது மிகவும் நுட்பமான கலை. அதைக் சிறப்பாக கையாள்பவர்கள் மட்டுமே வெற்றிபெறுகிறார்கள். நாம் வெற்றிபெறும் காலம் வரும்.
  • கூட்டத்தின் உள்ளடக்கத்தினையும் நேர அட்டவணையையும் தயாரித்தவர்கள் ஏனோ தங்கள் உரையின் நேரங்களை கவனத்தில் கொள்ளவில்லை. இப்படியான தவறுகள் தவிர்க்கப்படல் மிக மிக அவசியம்.  முக்கியமாக Dr. Jude Lal Fernand தனக்குத் தரப்பட்ட நேரத்தை விட15 நிமிடங்கள் ‌மேலதிகமாக உரையாற்றினார் என்பதை கூட்டத்தின் அமைப்பாளரே சுட்டிக் காட்டினார் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். Rohitha Bashana வின் உரையும், வேறு சில உரைகளும் நேரத்தினை ஒழுங்காக் கடைப்பிடிக்காமையினால் ஒரு வித unprofessional image ஐ சபையோருக்கு கொடுத்து என்பதை எனக்கருகில் இருந்த நோர்வேஜயர்களின் உடலசைவுகளைக் கொண்டு அவதானிக்கக் கூடியதாயிருந்தது.
  • நேரக்கட்டுப்பாட்டினை கவனத்தில் கொள்ளாததால் கேள்வி நேரம் ஏறத்தாள இல்லாது போயிற்று. கருத்துப்பரிமாற்றங்கள் இப்படியான சந்தர்ப்பங்களில் மிக அவசியம்
கேள்வி நேரத்தில் Aftenposten பத்திரிகையாளர் இன்றைய  கூட்டத்தில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைப்பற்றி மட்டுமே பேசுகிறீர்கள், ஆனால் ஐ.நா சபையின் அறிக்கையில் உள்ள விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்களை பற்றி பேசப்பட‌வில்லையே ஏன்? என கேட்ட போது  ”நாம் எவ்வித மனித உரிமை மீறல்களையும் ஆதரிக்கவில்லை” . ஆனால் குற்றவாளிகள் தண்டிக்கப்படல் வேண்டும் என்று பதிலளிக்கப்பட்டது.

எது எப்படியோ? இன்றைய கூட்டம் எனக்கு புதிதாய் எதையும் அறிவித்ததாய் உணரமுடியவில்லை. இருப்பினும் Lobby முயற்சி பாராட்டப்பட வேண்டியதே. இவ்வகையில் NCET அமைப்பினர் பாராட்டப்படவேண்டியவர்கள்.

இறுதியாக:

இன்றைய கூட்டத்தில் நோர்வேஐிய தொலைக்காட்சிகள் எவையும் இன்றி வேறு ஒரு தொலைக்காட்சி மட்டும் ஏ‌க போக உரிமையுடன் உலா வந்தது போலிருந்தது எனக்கு. அது ஆவணப்படம் தயாரிப்பாகவும் இருக்கலாம். நோர்வே தமிழர்களுக்கு இச் செய்தி சென்றடையக் கூடிய நோர்வேஜிய தொலைக்காட்சிகள் இக் கூட்டத்தில் சமூகமளிக்காததற்கான காரணம் என்ன என சிந்திக்கச் சொல்கிறது மனம்.

ஒரு விடயத்தை நாம் ஒருவரிடம் முன்வைக்கும் போது அவர், நாம் வழங்கும் தகவல்கள் சரியா பிழையா என வேறு சிலரின் தகவல்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் சந்தர்ப்பம் அதிகம். அதிலும் இங்குள்ள அரசியல்வாதிகளை கேட்கவே வேண்டாம். எனவே எமது நம்பகத்தன்மையை  நாம் தக்கவைத்துக் கொள்வதற்கு எமது தகவல்கள் ஓரளவாவது நம்பகத்தன்மையை கொண்டிருத்தல் அவசியம்.

இம் மாதம் தமிழர்கள் நடாத்திய மூன்று கூட்டங்களுக்கு சென்றிருக்கிறேன்.  அதில் ஒன்று அரசியலுக்கு அப்பாட்பட்டு பொதுநலத்தை அடிப்படையாக கொண்டு நடாத்தப்பட்ட கூட்டம். எம் மக்களுக்கு நாம் எவ்வாறு உதவலாம், அவர்களின் தேவைகள் என்ன என்பது பற்றியது அது. மன நிறைவைத் தந்த கூட்டம் அது.

ஏனைய இரண்டு கூட்டங்களிலும் அரசியல் என்னும் தூரிகை எடுத்து காற்றில் கோடு போடுகிறார்கள்.   அக் கூட்டங்களில் இருந்து வீடு திரும்பும் போது மனதுக்குள் எதோ நெருடியபடி இருந்தது. ”மனது நெருடுடப்படுவது” தான் எமக்கு விதிக்கப்பட்ட ஒற்றுமையோ?

.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்