ஒரு பேதையின் போதை

சில நாட்களுக்கு முன் கணணி உதவி வேண்டும் என்று ஒரு ஆண் தொலைபேசினார். பிரச்சனையை கேட்டறிந்து கொண்டு அவரின் விலாசம் கேட்டேன். ஓஸ்லோவில் அதிகளவில் பணத்தில் மிதப்பவர்கள் வாழும் இடத்தில் இருந்தது அவரின் வீடு. அடுத்தத நாள் வருவதாக கூறி, அடுத்த நாள் முன் மாலை நேரத்தில் அவரின் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.

புதிய வீடு, அடக்கமான ஆர்ப்பாட்டமில்லாத வீடு. இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. வெளியில் வந்து கைகுலுக்கி அழைத்துப் போனார். வீட்டுக்குள் போனதும் அவரின் மனைவியும் தன் பெயரைச் சொல்லி கையைக்குலுக்கிய போது அவரின் முகத்தை எங்கேயோ பார்த்திருப்பதாக மனம் சொல்லிற்று. பெயரையும் எங்கோ கேட்டமாதிரி இருந்தது. எனினும் எங்கு,  எப்போது, எந்தச் சந்தர்ப்பத்தில் என்று என்னால் நினைவில்கொள்ள முடியவில்லை. அங்கு நின்றிருந்த நேரம் முழுவதும் இதுவே மனதைக் குடைந்தபடி இருந்தது. அவர்களின் வீட்டின் ஓரிடத்தில் ஒரு விளையாட்டு வீரர் போட்டி அணியும் ஒன்று மிக அழகாவும், நோர்த்தியாகவும் ஒரு கண்ணாடிச் சட்டத்தினுள் வைக்கப்பட்டு சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்தது. அதில் Torino என்றிருந்தது.

அன்று அவர்களின் வீட்டில் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் முடியாததால் நாளை மீண்டும் வருவதாகச் சொல்லிப் புறப்பட்டேன். சிந்தனை மீண்டும் அந்த வீட்டில் நான் கண்ட அந்தப் பெண்ணை பற்றியதாகுவே இருந்தது. எங்கு கண்டேன் அவரை? என்ற இடத்தில் இருந்து சிந்தனை அகல மறுத்தது. ஆனால் அவரை நான் எங்கோ கண்டிருக்கிறேன் என்ற உணர்வு மட்டும் வலுவாகிக் கொண்டே இருந்தது.

மறு நாள் மீண்டும் அங்கு போன போது கணவன் முக்கியவேலையாய் வெளிய செல்ல நாம் இருவரும் தனியே விடப்பட்டோம். அவரின் கணணியில் அவரின் பெயரை பதிய வேண்டியேற்பட்ட போது மீண்டும் அவரின் பெயரைச் சொன்னார். இந்தப் பெயரை எங்கோ கேட்டிருக்கிறேன் என்றேன் அவரிடம். சிரித்து எங்கே என்று கேட்டார்? அதைத் தான் நேற்றில் இருந்து யோசித்துக்கொண்டிருக்கிறேன் என்‌ற போது.. அப்படியா  என்று ஆச்சர்யப்பட்டார்.

இனியும் பொறுக்க முடியாது நீங்கள் யார் என்றேன். தான் ஒரு சாதாரண பனிச்சறுக்கு வீரர் என்றார். அப்போது தான் மின்னலடித்தது எனது நினைவுகளுக்குள். நீங்கள் Winter olympics இல் பங்குபற்றியவரல்லவா? நீங்கள் 4ம் இடத்தை பெற்றவர் தானே என்றேன். ஒளி கொண்டன அவரது கண்கள். புன்னகைத்தபடியே தலையாட்டினார்.

சிலருடன் உடனடியாகவே பழகிவிடலாம். சிலருடன் பழகுவதற்கு நாட்களெடுக்கலாம். சிலருடன் அவரிகளின் மனதைத் தொடும் விடயத்தை பேசினாலேயே இலகுவில் பழகலாம். தனது வாழ்வின் பெரும் பகுதியை பனிச்சறுக்கு விளையாட்டிற்கே அர்ப்பணித்த ஒருவருக்கு, ஒரு வெளிநாட்டவன் அதுவும் பனிச்சறுக்கும் கலாச்சாரம் அற்ற நாட்டவன் தன்னைப்பற்றி அறிந்திருந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.  கண நேரத்தில் நண்பர்களாகிப்போனோம்.

இப்போது புரிந்தது அவரின் வீட்டில் கண்ணாடிச் சட்டத்தினுள் வைக்கப்பட்டு சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த அந்த Torino  என்று எழுதப்பட்ட உடையின் ரகசியம்.

நான்காம் இடம் என்பது மிகவும் வேதனையைத் தரும்  இடமல்லவா என்றேன். சற்றே மொளனித்தார். ‌அந்த மௌனத்தின் கனத்தை நான் நன்றாகவே புரியக்‌கூடியதாயிருந்தது. அவர் மெதுவாய் புன்னகைத்தார். அவரின் புன்னகையில் வேதனை தெரிந்தது.

ஆம், நான்காம் இடம் என்பது மிகுந்த வலியைத் தருவது. அதுவும் நான் மிக மிக குறைந்தளவு நேரத்தில் எனது வெற்றியை தவறவிட்டேன். ஆனால் அதன் பின்னான காலங்களில் அவருடன் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் ” தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்துகள்” பாவித்திருந்ததாக ஒலிம்பிக் கமிட்டியில் அறிவித்தார்களாம். ஆனாலும் அவர்களின் பரிசில்கள் திரும்பப்பெறப்பட்டு மற்றவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், உண்மையான விளையாட்டுவீரர்களின் தூய்மையான விளையாட்டு விழுமியங்கள், சில முறையற்ற விளையாட்டு முறைகளை பின்பற்றும் விளையாட்டு வீரர்களினால் பாழடிக்கப்படுகிறது என்றார்.

அதன் பின் மீண்டும் அடுத்த வருட விளையாட்டுக்களுக்கு பயிட்சியில் இருந்த காலத்தில் நோர்வேயில் வாழும் ஒரு வித உண்ணி (Tack) யின் தாக்குதலுக்கு உட்பட்டதால் பல வருடங்கள் சிறந்த முறையில் பயிட்சியில் ஈடுபடமுடியாதிருந்து இந்த வருடம் தான் முழுமையான பயிட்சியில் ஈடுபடுவதாகவும் சொன்னார்.

உடற்பயிற்சி பற்றி பேச்சு வந்த போது ஒரு நாளைக்கு காலையில் 2 மணிநேரமும் மாலை 2 மணிநேரமும் கிழமையில் எழு நாட்கள் பயிட்சி செய்கிறாராம். பயிட்சியின் இடையில் உள்ள  ஓய்வு நோரம் பயிட்சி நேரத்தைப் போன்று முக்கியமானதாம் அவருக்கு என்றும் கூறினார்.

அவரின் கணணிக்கு ஒரு ”இரகசியச் சொல் (password)”  தேவைப்பட்ட போது அவரால் தரப்பட்ட இரகசியச் சொல் மீண்டும் அவர் போட்டியில் பங்கு பற்றி தங்கம் வெல்ல வேண்டும் என்னும் அவரது மனநிலையை தெரிவிக்கும் விதத்தில், ஏறத்தாள இப்படி அழைத்திருந்தது 2goldsInOlym.

நான் புறப்பட்ட போது நீங்கள் உங்கள் இலட்சியத்தில் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்றேன். நன்றி, நிட்சயமாய் சாதிப்பேன், வெற்றியின் போதையை நிட்சயமாய் நுகர்வேன் என்றார்.

அடுத்த பனிக்கால பனிச்சறுக்கு விளையாட்டுக்களுக்காக நான் காத்திருக்கிறேன்.

இன்னைய நாளும் நல்லதே!

3 comments:

  1. வேறு தலைப்பு வைத்திருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து. இது கதையில் வரும் பெண் தான் போதை மருந்து எடுத்தார் என்றமாதிரி அர்த்தப்படுகிறது.

    ReplyDelete
  2. அப் பெண்ணுக்கு வெற்றியின் மீதுள்ள போதையே நினைத்தே நான் இப்படியான தலைப்பை வைத்தேன்.

    ReplyDelete
  3. இந்த மாதிரியான மனிதர்களை பற்றி கேள்விப்படும்போது எனது லட்சியம் என்ன என்று என்னை யோசிக்க வைக்கிறது.
    அருமை சஞ்சயன்.
    - இளங்கோ

    ReplyDelete

பின்னூட்டங்கள்