இன்றும் நிலக்கீழ் ரயிலின் தாலாட்டுப் போன்ற அசைவில் என்னை மறந்திருந்தேன். கையில் சேகுவேராவின் மோட்டார் சைக்கில் குறிப்புகள் இருந்தும் மனம் அதில் லயிக்க மறுத்தது. வாசிக்க வேண்டும் என்று நான் விரும்பினாலும் மனது என் விருப்பத்திற்கு எதிராக இயங்கிக்கொண்டிருந்ததால் புத்தகத்தை முடிவிட்டு சுற்றாடலை அவதானித்துக் கொண்டிருந்தேன்.
எனக்கு முன் இருக்கையில் ஒருவர் தன்னை மறந்து ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவரின் வலது ஆள்காட்டி விரல் மூக்குக்குள் நுளைந்து, சுரங்கம் தோண்டியது. அந்த விரலை தன்னை மறந்த நிலையில்அப்படியே வாய்க்குள் வைத்தார், சூப்பினார். மனிதருக்கு 35 வயதிருக்கும். மிக அழகாய் உடுத்திருந்தார். மனிதர்களால் நிரம்பியிருக்கும் நிலக்கீழ் தொடரூந்தில் இப்படி செய்கிறாரே என்று யோசித்துக் கொண்டிருக்கையில் கண்ணை மெதுவாய் நிமிர்த்தி தன்னை யாராவது கவனிக்கிரார்களா என்று பார்த்தார். நான் அவரைப் பார்த்துக் கொண்டிருப்பதை அவர் பார்க்க முதல் கண்களை தாழ்த்திக் கொண்டேன். தன்னை எவரும் கவனிக்கவில்லை என்று ஆறுதல்பட்டிருப்பாரோ?
இப்படித்தான் நிலக்கீழ் தொடருந்தில் மூக்கு குடைவதில் இருந்து சில குறிப்பிட முடியாத இடங்களை கண்மூடி சொறிந்து தன்மை மறப்பவர்கள் வரை காணக் கிடைக்கிறது.
அன்றொரு நாள் இரவு 11 மணிபோல் வீடு நோக்கி வந்து கொண்டிருக்கிறேன். இருவர் தம்மை மறந்து ஏகத்துக்குமாய் முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். பயப்படாதீர்கள்.... ஆணும் பெண்ணும் தான். வயது 20க்குள் இருக்கும். அவர்களின் வேகம் என் அடிவயிற்றை கலக்கிக் கொண்டிருந்தது. இருப்பினும் நிலமை மோசமாசதற்குள் அவர்கள் இறங்கிக் கொண்டார்கள். தொடரூந்தால் இறங்கும் போதும் முத்த மழை முடிந்ததாயில்லை. அருகில் இருந்தவர் அர்த்தத்துடன் புன்னகைத்தார். நானும் சிரித்தேன்.
நான் தொடருந்தில் பயணிக்கும் போது புன்னகைக்கும் மனிதர்கள், தனக்குத் தானே பேசிக் கொள்பவர், யாரையோ திட்டிக் கொண்டிருப்பவர், தன்னை மறந்து அழுபவர்கள் என்ற பலரையும் கண்டிருக்கிறேன். ஒவ்வொரு தொடருந்தும் எத்தனை எத்தனை கதைகளை சுமந்து கொண்டு மௌனமாய் ஓடிக்கொண்டிருக்கிறது, வாழ்க்கையைப் போல.
புகையிரத நட்புகள் அல்லது இரயில் சினேகங்கள் என்று கூறப்படும் நிகழ்வுகளுடன் எனக்கும் சில அனுபவங்கள் உண்டு. அதன் சுவைகளையும் சுமைகளையும் அறியக் கூடியதாயிருக்கிறது.
நானும் சில வருடங்களுக்கு முன் ஒருத்தியை சந்தித்தேன். 15 நிமிட பயணத்துக்குள் நண்பர்களாகிப் போனோம். அவளின் பார்வையும், துருதுருக்கும் கண்ணும், மொழியின் இனிமையும் அவளை மறக்க முடியாதாக்கியிருக்கிறது.
ஏறத்தாள தினமு்ம் அவளை சந்திப்பேனா என்ற நம்பாசையுடன் தான் தொடரூந்தில் ஏறுகிறேன். இன்று வரை மீண்டும் நாம் சந்தித்துக் கொள்ளவில்லை. நாம் சந்திக்கும் சந்தர்ப்பம் இல்லை என்றும் சொல்வதற்கில்லை.
அவள் அப்படி ஒன்றும் பெரிய பெண் இல்லை. அவளுக்கு 4 - 5 வயதிருக்கலாம். பனிக்காலத்தில் ஒரு நாள் காலை நான் நின்றிருந்த புகையிரத நிலையத்தில் நின்றிருந்தாள், தனது தமிழ்ப் பெற்றோருடன். அழகான உடை. பனிக்கால உடையில் அவளின் அழகு பெரும் அழகாயிருந்தது. அழகான தொப்பி, அதற்கேற்ற பனிக்காலத்து மேலாடை, பனிக்கரடியின் கால்கள் போன்ற அழகான சப்பாத்து, கையிலே சிறு பை என நின்றிருந்தாள். புகையிரதம் வர நாம் ஏறிக் கொண்டோம். அதிஸ்டவசமாய் எனக்கு உட்காருவதற்கு இடம் கிடைக்க, அவள் என்னருகில் தன் தந்தையின் கால்களை கட்டிப்பிடித்தபடியே நின்றிருந்தாள்.
மெதுவாய் அவளைத் தொட்டு என்னருகே சிறு இடம் கொடுத்து உட்காரச் சொன்னேன். அம்மாவை நிமிர்ந்து பார்த்தாள். அனுமதி கிடைத்ததும் அருகிலே உட்கார்ந்து கொண்டாள்.
புகையிரதம் பனியினுள் ஓடிக் கொண்டிருந்து. நாம் நண்பர்களாகிக் கொண்டிருந்தோம். அவளின் பெயர் கேட்டபோது ”கிளவ்டியா” என்று சொன்னாள். எனது நண்பர்கள் இருவருக்கு இதே பெயரில் குழந்தைகள் இருப்பதால் அப் பெயரை இலகுவாய் நினைவில் நிறுத்த முடிந்தது. தான் குழந்தைகள் காப்பகத்திற்கு போவதாயும், தனது உணவுப் பெட்டியினுள் ஒரு சாக்லேட் உண்டு என்றும், அப்பாவுடன் மாலை வீடு வருதாயும் மழழைத் தமிழும் நோர்வேஜியன் பாஷை கலந்தும் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளின் அழகிலும், மழழை மொழியிலும் என்னை இழந்து போயிருந்தேன். அவளின் பெற்றோர் இடையிடையே எம்மை பார்த்து சிரித்தபடி இருந்தனர்.
அவள் இறங்கும் போது கையைக் காட்டியபடியே இறங்கிப் போனாள். புகையிரதம் நகர ஜன்னலினூடாக கையைக் காட்டினேன். அழகாய் புன்னகைத்து கையசைப்பது தெரிந்தது.
கடந்த முன்று வருடங்களாக, நான் தினமும் பயணிக்கும் தொடரூந்தில் அவளைச் சந்திக்கலாம் என்று நப்பாசை ஏனோ எனக்குள் இருந்து கொண்டேயிருக்கிறது. ஏன் என்ற காரணத்தை தேடுவதை தவிர்த்து, அந்த ஏகாந்தத்துடன் தினமும் பயணிக்கிறேன்.
இன்றைய நாளும் நல்லதே.
..
அதே ஏகாந்தம் என்னையும் தொற்றிக்கொண்டது சகா! அருமையான பதிவு, இன்னும் எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteஅண்ணே, ரொம்ப sentiment போடாதீங்கோ. அழுதுப்புடுவேன்.
ReplyDelete