கடற்கரையில் டூ பீ்ஸ் நமீதா

நண்பர் ஒருவரிடம் தற்போது இளவேனில் காலம்  என்பதால் ஒரு சிறு சுற்றுலாவுக்கு ஒழுங்கு செய்யலாமே என்றேன். Google க்குள் தலைகீழாக நின்று சுற்றுலா பற்றித் தேடியலுத்து மாலையே தொலைபேசினார். அவரிடம் தொடர்ந்து பேசினால் நான் விரும்பாத இடத்துக்கு அழைத்துப்போவாரோ என்ற நிலை நெருங்கிக் கொண்டிருந்ததால், நாம் மீன் பிடிக்கப் போனால் என்ன என்றேன்.
”உமக்கு தலைக்கு வெளியில தான் ”இல்லை”” என்றார் அன்பாய்.

மறுநாள், மீண்டும் Google க்குள் தலையைவிட்டு தேடியபோது அவரிடம் ஓஸ்லோவை சுற்றி மீன் பிடிப்பதற்கான 9 இடங்கள் இருந்தன. அதில் இடத்தை தேர்வு செய்வதை என்னிடம் தந்தார். ஆண்கள் தனியே போவது என்றே நாம் பேசியிருந்தோம். அவரின் நண்பர்களுக்கும்  அழைப்பு விடுக்கப்பட, விடுக்கப்பட்ட அழைப்பு உடனேயே பாதகமான பதிலுடன் திரும்பிவந்தது. குடும்பசகிதமாக வருவதானால் தாம் வருவதாக அவர்களுக்கு கட்டளையிடப்பட்ட விதத்தில் எழுதப்பட்டிருந்தது அதில். நாம் மகிழ்ச்சியாக இருக்கத் தானே அழைத்தோம். ஏன் இப்படி புரியாமல் பேசுகிறார்கள் என்று  எமக்குப் புரியவில்லை. இருப்பினும் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டோம்.

எனக்கு  சனக்கூட்டமான இடத்தில் மீன் பிடிப்பது சம்மதமில்லை. எனவே ஒஸ்லோவில் இருந்து ஏறத்தாள 60 - 70 கிமீ அப்பாலிருந்த இரு அமைதியான இடத்தை தேர்ந்தெடுத்தேன். மீ்ண்டும் கூகிலாண்டவரின் உதவியுடன் நாம் செல்லவிருக்கும் இடத்தினை படங்களின் மூலம் பார்த்து வழியினையும் குறித்தக்கொண்டோம்.

காலை 8 மணிக்கு குறிப்பிட்ட ஒரு இடத்தில் கூடி பின்பு ஊர்வலமாய் செல்லலாம் என்பதால் குறிப்பிட்ட இடத்தில் கூடினோம். 4 குடும்பங்கள். அனைவரும் நாமிருவர் நமக்கிருவர் விதிகளை மீறியவர்களாய் இருந்தார்கள். நாம் கூடிய இடத்திலேயே அவர்களின் கும்மாளம் ஆரம்பித்தது. எல்லோரும் நேரத்தை புனிதமாக மதிப்பவர்களாகையால் நாம் ஏறத்தாள 2 மணிநேர தாமதத்துடன் ஊர்வலத்தை ஆரம்பித்து. குறிப்பிட்ட இடத்தை அடைந்த போது நேரம் 11ஐ நெருங்கியிருந்தது.

வாகனங்களை விட்டு இறங்கியதும் குழந்தைகள் கடற்கரைக்கு ஓட, தாய்மார் ” அப்பா, பிள்ளைகள் தண்ணீக்குள்ள போகுதுகள்” என்ற போது ஒரு கணவர் என்னை தண்ணியடிக்கவும் விடமாட்டாய் பிள்ளைகளை தண்ணீக்குள் போகவும் விடமாட்டாய் என்றபோது பதிலாய் கிடைத்த பார்வையின் உக்கிரம் தாங்காமல் அடங்கிக் கொண்டார்.

தூண்டில்கள் ஆயத்தம் செய்யப்பட்டன. அவற்றில் பல புதிய தூண்டில்கள். நண்பரிடம் ஒரு தூண்டில் கடனாக வாங்கி ஒரு கற்குவியலின் மீது நின்று கொண்டு துண்டிலை வீச ஆரம்பித்தேன்.

எல்லாமாக ஆறு தூண்டில்கள் மீன் வேட்டையில் இறங்கியிருக்க, எனக்கருகில் கணவனின் தூண்டிலை திமிங்கலம் இழுத்தால் கணவனைக் காப்பாற்றுவதற்காக நிற்பது போல் நின்றிருந்தார் ஒரு நண்பரின் மனைவி. இன்னொரு மனைவியோ இவனை திமிங்கிலம் இழுத்தால் மகிழ்ச்சி என்பது போல் கரையில் வேறெங்கோ பார்த்தபடி வாய்க்குள் எதையோ அரைத்தபடி நின்றிருந்தார்.

நண்பர் முதல் தரம் தூண்டிலை வீச அது அவருக்கு அருகில் இருந்த மனைவின் கூந்தலில் சிக்கியது. ”தள்ளி நில்லடி” என்றார் நண்பர்.
”எறியுற தூண்டில கடலக்குள்ள எறியுங்க, எனக்கேன் தூண்டில் போடுறீங்க” என்றார் தர்ம பத்தினி
”உனக்கு தூண்டில் போட்டத போல ஓரு மோட்டு வேலை இனி ஒரு ஜென்மத்திலயும் செய்ய மாட்டேன்” என்று நண்பர் கூறியது நல்ல வேளை அவர் மனைவிக்கு கேட்டவில்லை.

அடுத்த  முறை தூண்டிலை நண்பர் எறிய அது அவருக்கு முன்னால் 4 அடி தள்ளி விழுந்தது. நண்பரின் முகத்தில் பெருமிதம் பொங்க மனைவியைப் பார்த்து ”எப்படீ” என்று கண்ணால் கேட்க அவர் ” உதுக்கு தூண்டில் தேவையே, கையாலயே தூக்கிப் போடலாமே” என்றார். கணவனின் சுய நம்பிக்கை கீழே விழுந்த முட்டை போலாகியது.

சில முயற்சிகளின் பின் நண்பர் தூரத்திற்கு எறியப் பழகிக் கொண்டார். மனைவியோ ஒவ்வொரு முறையும் நண்பர் தூண்டிலை எறியும் போதும் ”ஏனப்பா! இன்னும் மீண் பிடிபடேல்லயோ” என்று ஏகத்துக்கும் நண்பரை உசுப்பிக் கொண்டிருக்க, நண்பர் ரொம்பவும் சூடாகி ”இந்தா நீ பிடி” என்று சொல்லி தூண்டிலை மனைவியிடம் கொடுத்துவிட்டு நகர, அங்கு நின்றால் என்னை கடலுக்குள் குதிக்க வைத்துவிடுவார் நண்பரின் மனைவி என்பதால் நானும் நண்பருடன் சேர்ந்து வேறு இடத்திற்கு மாறினோம்.

நானும் நண்பரும் நான்கு அடி வைக்க முதல் நண்பரின் மனைவி ”இங்காருங்கோ, இங்காருங்கோ! மீன், மீன் என்று கத்தியதால் திரும்பிப் பார்த்தேன். தூண்டில் ராமனின் நாண் ஏற்றிய வில்லு போல வளைந்திருப்பது தெரிந்தது. நண்பரின் மனைவி பெரும் பாடு பட்டு துண்டிலை இழுத்துக் கொண்டிருக்க எனக்கும் சந்தேகம் வர அவரிடம் இருந்து தூண்டிலை வாங்கிக் கொண்டேன். நண்பரின் மனைவி ”இண்டைக்கு பின்னேரம் இடியப்பமும் மீன் தலை சொதியும் வைக்கலாம்” என்றபடியே அருகில் இருந்த கத்தியை எடுத்து மீனை வெட்ட ஆயத்தமானார். நானோ தூண்டிலுடன் போராடி அதை கரைக்கு இழுத்த போது அது பெரும் பாசி ஒன்றை இழுத்து வந்திருந்தது. ”என்ட மீனை நீங்கள் விட்டு விட்டீர்கள்” என்று அவர் சொல்ல... நண்பர் ”எனப்பா இரவைக்கு இடியப்பமும் பாசிச் சொதியும் வைக்கலாமே” என்றார். மனைவி ஆச்சரியமாய் அடங்கிப் போனார்.

தூண்டில் எறிவதிலேயே நேரம் போய்க் கொண்டிருந்தது. ஒரு மீனும் அகப்பட்டதாயில்லை. இதற்கிடையில் ஒரு உள்ளூர் நோர்வேஜியன் வந்தார். வந்து  சில நிமிடங்களில் ஒரு மீன் பிடித்தார். நான் மூன்று மணிநேரமாக நிற்கிறோம் அவன் இப்போது தான் வந்தான் அவனுக்கு மீன் பிடிபடுவது நியாயமில்லாதது என்று நண்பர் தனது மனநிலையை காட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது எமக்கருகால் ஒரு நோர்வஜிய மனிதரும் அவருடன் இரு துண்டு உடுப்புடன் நமீதாவை மிஞ்சிய கவர்ச்சியுடன் தமது சிறிய கப்பலில் சென்றனர். அப் பெண் எம்மைப் பார்த்து கையசைத்து ”ஹாய்” என்ற போது தேவைக்கு அதிகமாய் உணர்ச்சிவச்பட்ட நண்பனின் மாலைப் பொழுதை நினைத்து நினைத்து நானும்  நண்பரும் சிரித்துக்கொண்டு பரிதாபப்பட்டடோம்.

கடல்குளித்த குழந்தைகளுக்கு பசியெடுக்க உணவு தயாரிப்பு நடந்து, உணவு உண்ட பின்பும் மீன் அகப்பட்டதாய் இல்லை. இதற்கிடையில் ஒரு பெண் மட்டும் தூண்டில் இல்லாமல் மீன் பிடிக்கும் இடங்களுக்கு அலைந்து கொண்டிருந்தார். தன்னை மீன்கள் கண்டால் தாவி வந்து காலடியில் விழும் என்று நினைத்தாரோ என்று நண்பரும் நானும் பேசிக்கொண்டோம். சிலருக்கு ஏனோ அதீத சுயநம்பிக்கை இருக்கிறது.

முன்பொரு காலத்தில் எனது தந்தையார்  நாம் அக்கரைப்பற்றில வாழ்ந்திருந்த காலங்களில் மீன் பிடிக்க முயற்சித்தார். ஏறத்தாள ஒரு வருடமாய் ”மீண்டும் முருக்கை மரத்தில் ஏறிய விக்கிரமாதித்தன்” போல் தினமும் மீன் பிடிக்கப் போவார். வெறுங்கையுடன் திரும்பிவருவார். இறுதியாக நாம் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னான நாள் கடல் அவர் மேல் இரக்கப்பட்டு ஒரு மீனைக்கொடுத்தது. அவரின் மகிழ்ச்சிக்கு அளவிருக்கவில்லை. எனக்கு  எப்படி தூண்டிலை தலைக்கு மேலால் சுற்றி வீசுவது என்று லெக்சர் வேறு அடித்தார்.  உங்களின் தூண்டிலை தலையைச் சுற்றி தூர வீசுங்கள் என்று சொல்ல நினைத்தாலும் அடக்கிக் கொண்டேன், அன்று.

நாம் புறப்படுவதற்கு முன் நண்பரின் மனைவி ஒரு மீன் பிடித்தார். அதைக் கண்டவுடன் அவர் நடுங்கத் தொடங்கிவிட்டார். ஒரு விதமாக அம் மீனை கரைக்கு இழுத்து கழுத்தை வெட்டினேன். நண்பரோ ”நல்லா கழுத்தை வெட்டுறான்” என்றார்.

அடுத்து எனக்கு இரு மீன்கள் பிடிபட்டன. திடீர் என எனது மவுசு ஏறியது. குழந்தைகள் என்னை சூழ்ந்து கொண்டார்கள். சிலர் அதை மீண்டும் கடலில் விடக் கேட்டார்கள். சிலர் விரிந்த கண்களுடன் மீனை சுத்தப்படுத்துவதைப் பார்த்து ”இவர் ஒரு மோசமான மாமா, பாவம் மீன்” என்றார்கள்.  நண்பர் ஒருவர் மீன்களை எடுத்துப் போய் பொரிக்கலானார்.

மாலை ஏழு மணிபோல்  3 பொரித்த மீன்களைனை ஏறத்தாள 15பேர் பிரித்து உண்டோம். எதையோ சாதித்தது போலிருந்தது. மகிழ்ச்சியான நாள். வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மீண்டும் மீன் பிடிப்பதற்கான நாளை யோசித்துக்கொண்டிருந்தோம் நண்பரும் நானும்.

 அது சரி ”கடற்கரையில் டூ பீ்ஸ் நமீதா நமீதா” எங்கே என்று நீங்கள்  கேட்கப்படாது ஆமா.. அது தான் அந்த கப்பலில் வந்தாங்க என்று சொல்லியிருக்கிறனே .....  Cool ..  cool
 எஸ்கேப்....

.

7 comments:

  1. ரசிக்க வைத்தீர்கள்!

    ReplyDelete
  2. இந்தக் கர்மப் படத்தை என்கே எடுத்தீர்கள்?

    ReplyDelete
  3. எஸ் சக்திவேல்@ cool cool :-)

    ReplyDelete
  4. //எல்லாமாக ஆறு தூண்டில்கள் மீன் வேட்டையில் இறங்கியிருக்க, எனக்கருகில் கணவனின் தூண்டிலை திமிங்கலம் இழுத்தால் கணவனைக் காப்பாற்றுவதற்காக நிற்பது போல் நின்றிருந்தார் ஒரு நண்பரின் மனைவி. இன்னொரு மனைவியோ இவனை திமிங்கிலம் இழுத்தால் மகிழ்ச்சி என்பது போல் கரையில் வேறெங்கோ பார்த்தபடி வாய்க்குள் எதையோ அரைத்தபடி நின்றிருந்தார்.//
    // தேவைக்கு அதிகமாய் உணர்ச்சிவச்பட்ட நண்பனின் மாலைப் பொழுதை நினைத்து நினைத்து நானும் நண்பரும் சிரித்துக்கொண்டு பரிதாபப்பட்டடோம்.//
    உங்களுக்கு நகைச்சுவை எளிதாக வருகிறது!

    ReplyDelete
  5. ‎3 மீனை 4 குடும்பங்கள் அதுவும் நாம் இருவர் என்ற விதியை மீறின குடும்பங்கள் பகிந்து (வகிர்ந்து ) சாபிட்டது .நல்ல சுவையான் பகிர்வு மீனை போல், அதிலும் கதா ஆசிரியார் தான் ஹீரோ மீன் பிடித்தவர், அதிலும் அந்த தூண்டில் போட்டவிடையம் இன்னும் சிரிப்பாக உள்ளது //"உனக்கு தூண்டில் போட்டத போல ஓரு மோட்டு வேலை இனி ஒரு ஜென்மத்திலயும் செய்ய மாட்டேன்”// .

    ReplyDelete
  6. மீன் சாப்பிடாதவனையும் சுவைக்க வைத்தீர்கள். உங்கள் மீன் தூண்டிலால்

    ReplyDelete
  7. இந்த மாதிரி "ஜாலியாக" ஒரு பதிவு போட்டு நாளாயிற்று. எங்கே போய்விட்டீர்கள்?

    ReplyDelete

பின்னூட்டங்கள்