இன்று (22.07.2011) மதியம் 15:20 மணி போல் நான் நின்றிருந்த கட்டடமே அதிருவது போல் ஒரு சத்தம் கேட்டது. நெஞ்சின் அதிர்வுகள் அடங்க முதலே பலர் கட்டடத்தினை விட்டு வெளியே ஓடுவதையும், கூடிக் கூடிக் கதைப்பதையும் கண்டேன். நெஞ்சின் அதிர்வு அடங்க மறுத்துக் கொண்டிருந்தது. 20 வருடங்களுக்கு முன்னான சில ஒலிகளை மனம் நுகர்வதை அறிந்தேன்.
மஞ்சல் ஆம்பியூலன்ஸ் வண்டிகள் ஒலியெழுப்பியவாறு நான் நின்றிருந்த கட்டடத்தை கடந்து கொண்டிருக்க போலீஸ் வாகனங்களும், தீயணைப்புப்படை வாகனங்களும் அதை பின் தொடர்ந்து கொண்டிருந்தன.
வெளியில் வந்தேன். அருகில் நின்றிருந்த ஆபிரிக்க நண்பரின் முகத்தில் கலக்கம் குடியிருந்தது. என்ன நடந்தது என்றார் என்னிடம். தெரியாது என்றேன். என்ன நடக்கின்றது என்று அறிய முடியாமையினால் மீண்டும் எனது கந்தோருக்குள் நுளைந்து நோர்வே பத்திரிகைகளின் இணையத்தளத்தை பார்த்த போது, நோர்வே பாராளுமன்ற அலுவலகங்களுக்கு அருகாமையில் பாரிய குண்டு வெடிப்பு என்றிருந்தது. எனது கந்தோரில் இருந்து ஏறத்தாள 500 மீற்றர்களும் இல்லை இவ்வடத்திற்கு.
சற்று நேரத்தில் படங்களை வெளியிட்டார்கள். வானொலியில் அறிவித்தார்கள். ஊரோ அல்லோகல்லப்பட்டது. அனைவரும் வீதியில் நின்று எங்கே என்ன நடக்கின்றது என்று அறிய முற்பட்டுக் கொண்டிருக்க போலீஸ் அனைவரையும் கலைந்து செல்ல வேண்டினார்கள்.
மாலை 6 மணி போல் வானொலியில் நோர்வே தொழிற்கட்சி இளைஞர்களின் பெரும் கூட்டம் ஒன்றில் போலீஸ் உடையில் வந்த ஒருவர் துப்பாக்கிச் சூடு நடாத்தியதாக அறிவிப்பு வந்தது.
சற்று நேரத்தில் புகையிரதச் சேவை ”மர்ம பார்சல்” ஒன்றின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இணையத்தில் அறியக்கிடைத்தது.
15:20 மணிபோல் மனதுக்குள் புகுந்து கொண்ட அசெளகரீயமான உணர்வு அதிகமாககிக் கொண்டே போனது.
இப்போது நேரம் 21:00 மணி.
தொழிட்கட்சி இளைஞர்களின் கூட்டத்தில் போலீஸ் உடையில் வந்தவர் ஒருவர் ஏறத்தாள 30 இளைஞர்களை சுட்டுக் கொலை செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. போலீசார், போலீஸ் உடையில் வந்தவரை கைது செய்துள்ளனர்.
இரத்தவங்கி உடனடியாக இரத்தம் தேவைப்படுவதாக அறிவித்திருக்கிறது. அனைத்து விதமாக கூட்டங்கள், சந்திப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. பாதைகள் தடுக்கப்பட்டு ஒஸ்லோவின் பாதுகாப்பில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். எங்கும் பதட்டம் படிந்து போயிருக்கிறது.
எத்தனையோ வருடங்களின் பின் இப்படியான ஒரு பதட்டமான நாளை அனுபவிக்கிறேன். காலம் செப்பனிட்டுவிட்டது என்று நினைத்திருந்த நினைவுகள் எல்லாம் வானத்தில் வட்டமடிக்கும் தும்பிகளை (helicopter) கண்டதும் உயிர்தெழுவதையும், அசௌகரீயம் மனதுக்குள் பாம்பு போல் நெளிவதையும் உணர முடிகிறது.
முதலாவது பயங்கரவாதத் தாக்குதலினால் அமைதியான ஒஸ்லோவின் இறுதி நாள் இன்று என்று ஆகியிருக்கிறது. எத்தனையோ மகிழ்ச்சியான நாட்களை இங்கு அனுபவித்திருக்கிறேன். எவ்வித பயமுமின்றி எங்கும் உலாவரக்கூடிய நகரம். மகிழ்ச்சியான மனிதர்கள். அமைதியான, அழகான நகரம்.
எனது இரண்டாவது பூமி குதறப்பட்டிருக்கிறது. அமைதியான, மகிழ்ச்சியான நகரத்தை கற்பழித்துப் போயிருக்கிறார்கள் பாவிகள். எங்கள் ஒஸ்லோவின் அழகு மீண்டும் புதுப்பிக்கப்படும் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால் இன்றைய நாளின் ரணங்கள் ஆறப் போவதில்லை. அவ் ரணங்களின் வலிகளை அனுபவிக்கப் போவது எமது குழந்தைகளே. புலத்திலும் எதிர்காலக் குழந்தைகளுக்கு ரணங்களை பரிசளித்துப் போகும் துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறார்கள் வெளிநாட்டவர்கள். பாவம் குழந்தைகள்.
நேற்றுத் தான் ”வலியை ஏற்றுக்கொள் .. அப்போது தான் வாழ்கிறாய்” என்னும் தொனியில் ஒரு பதிவு எழுதினேன். அவ் வார்த்தைகளின் உண்மை மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அதே வேளை நான் இந் நாட்டினை மிகவும் நேசிக்கிறேன் என்பதை இன்றைய சம்பவம் எனக்கு பூடமாகப் போதித்துப் போவது போலவும் இருக்கிறது. உங்களுக்கும் அப்படியானதாயிருக்கலாம். இருந்தால் மகிழ்ச்சி.
இன்றைய நாள் மற்றைய நாட்களைப் போல் நல்லதாக இல்லை.
நிம்மதி இழந்த என் ஒஸ்லோவுக்கு இது சமர்ப்பணம்.
.
ஒரே சோக மயம் தான் ..எனியாவது நோர்வே ஆயுத உற்பத்தியை இல்லாது செய்து, கிரனைட்டுக்கள் கட்டுபடுத்தும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு , மற்ற நாடுகளின் பிரச்சனைக்குள் ஆயுத வியாபாரத்தை மையமாக வைத்து மூக்கு நுளைக்காவிட்டால் ..நோர்வேயிய நல்ல மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்..அமைதியான நாடு என்றும் அமைதியாக இருக்கும்...
ReplyDeleteவருத்தமாயிருக்கிறது நண்பரே.
ReplyDeleteஇந்த வகையில் மக்கள் அச்சப் படவேண்டும் என்பதே பயங்கரவாதத்தின் ஒரே குறிக்கோள். தயவு செய்து துக்கத்தில் இருந்து வெளி வாருங்கள். சகஜ நிலை திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDeleteநிம்மதி வேண்டி வாழ வந்த நாட்டிலும் இப்படி ஒரு வெள்ளிடி விழுந்திட்டுதே.
ReplyDeleteபாவியார் போற இடம் பள்ளமும் திட்டியும் தானோ?
பாதிக்கப் பட்ட அனைவருக்கும், பாதிக்கப் பட இருப்போருக்கும் துயர் கலந்த
அஞ்சலிகளும், அனுதாபங்களும் உரியதாகும்.
இந்தச் சந்தர்ப்பத்தில் யார் ஆயுதம் செய்தான்; யார் விற்றான்; என்று விவாதிப்பது அழகல்ல.
எனது கவலை எல்லாம் பழி ஓரிடம் இருக்க, பாவம் இன்னோரிடம் விழுந்துவிடக் கூடாதே என்பதுதான்
எங்கும் எதுவும் நடக்கலாமேனும் நிலை தான் காணப் படுகிறது. . சம நிலை குழம்பும் பொது மனம் சஞ்சலபடுகிறது.
ReplyDelete