நேற்றிரவும், இன்றைய அதிகாலையும் மிகவும் நம்பிக்கையுடையதாக இருக்கவில்லை.
மனதுடன் போராடிப் போராடியே காலை 4 மணி போல் தூங்கிப்போனேன். காலை 6 மணிக்கு
நடக்க ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது திட்டமாயிருந்தது. எனினும்
விழித்தெழுந்த போது நேரம் 5.50. நடக்க ஆரம்பித்த போது நேரம் 6:40.
என்னை நானே திட்டியபடியே நடக்க ஆரம்பித்தேன். கணுக்காலின் நேற்றைய வலி
குறைவாகவே இருந்தது, இன்று. எனவே எனது வேகத்துக்கு ஏற்ப நடந்து
கொண்டிருந்தேன். அப்பப்ப வலியை உணர்ந்தாலும் அதன் பாதிப்பு இன்றும்
இருக்குமோ என்பதனை அறிய ஆவலாயிருந்தது மனது. பலரும் என்னைக் கடந்தபடியே
சென்றனர். நானும் அவர்களுடன் போட்டிக்காக நடக்கும் நிலையில் இருக்கவில்லை.
எனது உடல் நிலைக்கேற்ற வேகத்துடன் இயற்கையை ரசித்தபடியே நடந்து
கொண்டிருந்தேன். வெய்யிலின் கொடுமை இன்றிருக்கவில்லை. மிகவும் இனிமையான
காலநிலையாகவே இருந்தது.
முதல் 17 கிமீ எதிர்பார்த்திருந்தபடியே எதுவித கிராமங்களும் இல்லாமல் வயல்
வெளிகளிகளினூடாக சென்றுகொண்டிருந்தது. எனது கால் வலி அதிகரிக்க
ஆரம்பித்தது. ஒரு இடத்தில் சற்று ஓய்வு எடுத்தபடியே பாதத்தில் இருந்து நீர்
வடிவதற்கா இடப்பட்டிருந்த இருந்த நூலை அகற்றினேன். பழைய சப்பாத்துக்களை
மாற்றிக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன். எதிர்பார்த்ததை விட பலன் அதிகமாய்
இருந்தது.
மதியம் போல் பலரும் அவரவர்களின் தங்குமிடங்களில் தங்கிக்கொண்டனர். நான்
நடந்து கொண்டிருந்தேன். மனம் முழுவதும் ஒரு எகாந்தமான நிலைக்குள் சென்றுகொண்டிருந்தது.
நேற்றைய மாலை, இரவு மற்றும் இன்று காலை மனதில் இருந்த சஞ்சலங்கள்
மறைந்திருந்தன. மனதில் தெம்பு குடிவந்திருந்தது.
iPod ”ஆத்தாடி பாவடை காத்தாட” என்று தன் பாட்டுக்கு பாடி மனதை எனது
விடலைப்பருவத்திற்கு அழைத்துப்போனது. அதே போல் மயக்கம் என்ன திரைப்படத்தின்
”பிறை தேடும்” பாடலும் மனதை இதமாக வருடிப்போனது. இசையும், வார்த்தைகளும்
மனதை இதமாக வருடி, ரணமான மனதுக்கு களிம்பு தடவக்கூடியவை என்பது எத்தனை
உண்மை என்பதை உணரக்கூடியதாயிருந்தது இன்று.
iPod இல் சில podcast கள் இருந்தன. அவற்றைக் ரசித்தபடியே நடந்து
கொண்டிருந்தேன். மதியம் 3 மணிபோல் பசிக்காக ஒரு உணவகத்தினுள் ஒதுங்கினேன்.
அங்கு காத்திருந்தது ஒரு அதிசயம்.
என்னைக் கண்டதும் நீ இலங்கையைச் சேர்ந்தவனா என்றார், அந்த வயதான பெண்
உரிமையாளர். தலையை மேலும் கீழுமாய் ஆட்டினேன். உன்னைப் பார்த்தாலே
தெரிகிறது என்றார். சிரித்துவைத்தேன். அதன் பிறகு வந்த 30 நிமிடங்களில்
நான் உண்பதற்கு மட்டுமே வாயைத் திறந்தேன். உரிமையாளரோ மிகுதி எல்லா நேரமும்
வாயைத்திறந்திருந்தார்.
Martina Bòtel என்ற பெண் Germany நாட்டைச் சேர்ந்தவர். 1994ம் ஆண்டு
இலங்கைக்கு சென்ற போது நீர்கொழும்பில் ஒருவரைக் காதலித்திருக்கிறார்.
இருவரும் கத்தோலிக்கர்கள். இலங்கையின் வட கிழக்கு தவிர்ந்த பல இடங்களும்
அவருக்கு தெரிந்திருந்தன. காதல் சில மாதங்களில் தொலைந்து போயிருக்கிறது.
ஆனால் அந்த காதலன் ஒரு நியூசிலாந்து பெண்ணை திருமணம் முடித்து
நியுசிலாந்தில் வசிப்பதாகக் கூறினார். இலங்கையை நன்றாகவே அறிந்திருந்தார்.
தற்போது ஒரு Spain நாட்டவரை காதலித்து, இங்கு ஒரு தங்குமிடத்தையும்
உணவகத்தையும் நடாத்தி வருவதாகக் கூறினார். அவரின் உணவகத்திற்கு சென்ற முதல்
இலங்கையர் என்ற கொளரவம் எனக்குத்தான் என்றும், எனவே அவரது விருந்தினர்
புத்தகத்தில் என் வரவை தமிழிலும் நோர்வே மொழியிலும் பதியக்கேட்டார்.
வாழ்த்திக் கையெழுத்திட்டுக்கொடுத்தேன்.
மாலை 4 மணியில் இருந்து 18:45 மணிவரை ஒரு ஏகாந்தமான மனநிலையில் நடந்து
கொண்டிருந்தேன். சுற்றுவட்டாரம் முழுவதிலும் மனித நடமாட்டமே இல்லை. இயற்கை
முழுவதும் எனக்காகவே இருந்தது. மனதில் இருந்த சில ஏமாற்றங்கள், தளும்புகள்,
காயங்கள், தோல்விகள், ஏமாற்றங்கள் எல்லாம் மெதுவாய்
கழுவுப்பட்டுக்கொண்டிருப்பது போலிருந்தது. மனது பஞ்சாய் இருக்க, கால்கள்
வலியை மறந்து நடந்து கொண்டிருந்தன. 28 கி.மீ கடந்தது. 30 கி.மீ கடந்தது
31கி.மீ நெருங்கிற்று.
எத்தனையோ வருடங்களின் பின் மனதில் ஒருவித சமரசம் குடிவந்திருப்பது போல்
உணர்ந்தேன். எய்தவன் இருக்க அம்பின்மேல் நான் வன்மம் வளர்ப்பதை
உணரக்கூடியதாய் இருந்தது. அம்புகளை மன்னிக்கும் பக்குவம் என்னை நெருங்குவதை
அவதானிக்க முடிந்தது. இருப்பினும் எய்தவர்களை மன்னிக்கும் பக்குவம் வர
மாட்டாது என்றே எண்ணுகிறேன். அதையே நானும் ஒரு விதத்தில் விரும்புகிறேன்
போலிருக்கிறது. அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.
இன்று ஏறத்தாள 12 மணிநேரங்களாக இன்று நடந்து கொண்டிருக்கிறேன். கூரிய
வார்த்தைகளினால் சீழ்கட்டுப்பட்ட மனதின் சீழ்க்கட்டிகள் உடைந்து, சீழ்
வடியும் போது ஏற்படும் வலியுடன் கூடிய சுகம் மனதில் குடிவந்திருக்கிறது.
வார்த்தைகளை விட கூரிய ஆயுதங்கள் எதுவுமில்லை இவ்வுலகில் என்பதனை நன்கு அனுபவித்து அறிந்திருக்கிறேன்.
அவற்றையெல்லாம் மன்னிக்கும் மனமும் காலமும் வரும் என்னும் நம்பிக்கை
எனக்கில்லை.
அப்பப்பா .. எத்தனை எத்தனை குற்றச்சாட்டுகள், பொய்கள், திட்டமிட்ட
கூட்டுத்தாக்குதல்கள், மிக மிக நெருங்கியவர்களாய் இருந்தவர்களிடம் இருந்து
பரிசாய் கிடைத்திருக்கிறது. மறுக்கப்பட்ட மென்மையான உறவுகள், உரிமைகள்
எத்தனை எத்தனை. இழந்தபோன காலங்களின் பெறுமதி அளவிட முடியாதது.
நினைத்திருக்கவே முடியாத இடங்களில் இருந்து கிழித்தெறியப்பட்ட முகமூடிகள்
மூலம் புரிந்த உண்மைகள், வாழ்க்கையை உணர்த்திய பின் அவற்றை உணர்ந்து
நிமிரும் போது வாழ்க்கை 47 வருடங்களை கடந்து கொண்டிருக்கிறது.
இன்யை நாளைப் போன்றதோர் நாளை இதுவரை நான் அனுபவித்ததில்லை. என்னை மறந்து
நடந்து கொண்டிருக்கிறேன். நடக்க நடக்க எவற்றையெல்லாம், எவரையெல்லாம்
ஜெயிக்க விரும்பினேனோ அவற்றையெல்லாம், அவர்களையெல்லாம் ஜெயித்த உணர்வு
மனதினை ஆட்கொண்டுகொண்டிருந்தது.
32 கி.மீ கடந்து 34 - 36 கி.மீ என்று வெற்றியின் போதையை அனுவணுவாய் ஒரு வித
குரூரத்துடன் ரசித்து, ருசித்தபடி நடந்து கொண்டிருந்தேன். நேரம் 18:45
வந்த போது ஏறத்தாள 38 கி.மீ கடந்திருந்தேன். உணர்ச்சிகள் கட்டுக்கடங்கத்
தொடங்கியிருந்தன.
19:00 மணிபோல் ஒரு தங்குமிடத்தினுள் புகுந்து, குளித்து, உணவுண்ட பின்பும்
இன்றைய உணர்ச்சிகளின் போதையை இன்னும் உணர்ந்து கொண்டிருக்கிறேன்.
வெற்றிகொள்ள முடியாத எதையோ அல்லது எவரயோ வெற்றி கொண்ட போதையின் சுகமே
அலாதியானது. அது ஒரு வித தன்னம்பிக்கையை தந்து போயிருக்கிறது. என்னாலும்
முடியம் என்று உணரத் தொடங்கியிருக்கிறேன்.
எனது பயணத்தின் நோக்கமாக எதை நான் கருதினேனோ அதை இன்று உணர்ந்திருக்கிறேன்.
நாளையும், அதற்கடுத்து வரும் நாட்களிலும் மீண்டும் மீண்டும் சிலரையும், பலதையும் நான் வென்றாக வேண்டும்.
என்மதில் உள்ள அனைத்து வலிகளையும் நடந்து நடந்து, வெற்றியை உணர்ந்தபடியே நான் கடந்து கொள்வேண்டும்.
இல்லை இல்லை கடந்து கொள்வேன்.
இன்றைய நாள் மிகவும் நல்லது.
கொசுறுத் தகவல்:
யாத்திரையில் இன்று வரை ஏறத்தாள 330 கிமீ நடந்து முடித்திருக்கிறேன். :-)
.........................
உங்களால் இந்தப் பதிவினை புரிந்துகொள்வது சிரமமாயிருக்கலாம் என்பதனை நான்
புரிந்து கொள்கிறேன். இது எனது இன்றை நாளின் வாக்குமூலமே அன்றி வேறெதுவுமில்லை. தவிர என்னை நான் புனிதனாகவும் அறிவித்துக்கொள்ளவில்லை என்றும் அறிக.
யாத்திரையில் இன்று வரை ஏறத்தாள 330 கிமீ நடந்து முடித்திருக்கிறேன். :-)
ReplyDeleteயாத்திரை வெற்றியாக அமைய வாழ்த்துகள்.. !
வெற்றிகொள்ள முடியாத எதையோ அல்லது எவரயோ வெற்றி கொண்ட போதையின் சுகமே அலாதியானது. அது ஒரு வித தன்னம்பிக்கையை தந்து போயிருக்கிறது. என்னாலும் முடியம் என்று உணரத் தொடங்கியிருக்கிறேன்......................
ReplyDeleteஉங்கள் அனுபவங்களை எங்களுக்கும் அறிவாக பகிர்வதுக்கு நன்றி.......... பல யதார்த்தங்களை அப்படியே உங்கள் எழுத்துகளில் காண்கிறேன்.
வார்த்தைகள் ஊடே வாழ்வின் முகாந்திரம் அறிய முடியும் யாத்திரை தொடருங்கோ வெற்றி வாகை சூடிவாங்கோ அண்ணா!
ReplyDeleteWishing u all the best dear friend. God bless u.
ReplyDeleteபுதுப்புது அனுபவங்களோடு வாழ்வைக் கை கோர்த்தபடி நடந்துகொண்டிருக்கிறீர்கள்.வாழ்வு முடிந்தாலும் முடியாத அனுபவங்களும் பயணங்களும் இருந்துகொண்டுதானிக்கும்போல.வாழ்த்துகள்.உங்கள் தைரியம் உங்களோடு இருக்கும்வரை உங்களுக்கு வெற்றிதான்.முடிந்தவரை இன்னும் இன்னும் நிறையத் தேடிக்கொள்ளுங்கள் !
ReplyDeleteசஞ்சயன் அண்ணா வாழ்கை சூழல் கதாபாத்திரங்கள் மட்டுமே மாறு பட்டு இருக்கும். கதைகள் எங்கும் ஒன்றே!
ReplyDeleteபுரியும்விதமாகவே உள்ளது வலிகள் எப்போதும் வார்த்தைகளில் வரும்போது அப்படிதான்.
ReplyDeleteமற்றவர்களுக்கு புரியாவிட்டாலும் மனது புனிதமாவது சுகமே.
சிலைவிடயங்கள் நமைபற்றி நம்மிடமே சொல்வதுபோல் இருக்கும்
கல்முனை இலிருந்து
ரூமில்