கட்டிப்புடி வைத்தியம்


வாழ்வு எனக்கு பல அருமையான மனிதர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இனம், மொழி, மதம், நாடு  என்று நாம் வேறுபட்டிருந்தாலும் அனைவரும் வாழ்க்‌கையுடன் போராடும் மனிதகள் என்பதும், சக மனிதனை நேசிப்பவர்கள் என்பது மட்டுமே எமக்கிடையில் உள்ள ஒற்றுமை.

வலிகளை பகிரும்போது எம்மையறியாது ஒரு ஆறுதல் எமக்குள்,  ஊருக்குள் ஊடுருவும் பனிபோல் மெதுவாய் எம்மையறியாது எம்மை சுற்றிக்கொள்கிறது, பனிக்காலத்து குளிரில் போர்வையின் வெம்மைபோன்ற சுகத்தை தருபவை அவை. நானும் பலரிடம் எனது வலிகளைப் பகிர்ந்திருக்கிறேன். அதேபோல் பலரும் என்னிடத்தில் தங்கள் வலிகளை பகிர்ந்திருக்கிறார்கள்.

முதன் முதலில் என்னுடன் தன் இரகசியத்தை பகிர்நதுகொண்டவர் யார் என்று நினைத்துப்பார்க்கிறேன். அது 1970 இறுதிக்காலங்களில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் விடுதி நண்பனாய் இருக்கவேண்டும். பெற்றோர் மீதான ஏக்கமும், வீடும், பசியும், அவனது கிராமமும் அவனை பாடாய்படுத்திய ஒரு மாலைப்பொழுதில் நாம் ஒழிந்துபிடித்துவிளையாடிய பொழுதில், நாளை நான் விடுதியில் இருந்து மாணதலைவர்களின் அடாவடியான கட்டுப்பாடுகளாலும், பசியின் காரணமாகவும்தப்பி ஓடப்போகிறேன் என்றாான் அவன். எனக்கு நா வரண்டுபோனது. அவன் பிடிபட்டால் அவனது கதி என்னவாகும் என்று எனக்கு நன்கு தெரிந்தே இருந்தது.

எங்கள் பேராசான் பிரின்ஸ் காசிநாதரின் அரசாட்சி நடந்துகொண்டிருந்த காலம் அது. ஒழுக்கம் என்பதைத்தவிர வேறு எதையும் பேசாத கடும் கண்டிப்புள்ள மனிதர் அவர். அவரின் கட்ளையின் கீழ் இயங்கும் மாணவதலைவர்களை கடந்து இவன் எப்படி தப்பி ஓடப்போகிறான் என்று சிந்தித்து பயந்துகொண்டதை எல்லாம் பொய்யாக்கி அடுத்தநாள் காலை மாயமாய் மறைந்திருந்தான் அவன். அன்று அவனது இரகசியத்தை காத்ததால், அவன் மீண்டும் விடுதிக்கு திரும்பியபின் அவனுக்கு நெருங்கிய நண்பனாய் மாறியிருந்தேன்.

இதன் பின், பால்யத்து தோழர்களின் சில்மிசங்கள்,  என்னுடன்  இணைந்து காட்டுப்பகுதியில் உட்கார்ந்திருந்து 20  ‌கோல்ட்லீப் சிகரட்டுக்களை ஊதித்தள்ளிய தோழன், இந்துப் பெண்ணை ஒருதலையாய் காதலித்த இஸ்லாமிய நண்பன் என்று தொடங்கி, சென்னையின் மொட்டைமாடிகளில், பம்பாய் நகரத்து வீடு ஒன்றில், நோர்வேயில் பலபாகங்களிலும், நேற்று மாலை (28.02.2014) எனது  ”அந்தரத்தில் உறைந்துபோன மழைத்துளி” பதிவினை வாசித்துவிட்டு உரையாடுகையில் தன்வாழ்வின் வலிபற்றி பேசிய முன்பின் அறியாத ஒரு பெண்வரை என் மனதுக்குள் பலரின் இரகசியங்கள் உண்டு. ஏன் என்னிடத்தில் பலரும் தங்கள் மனதின் வலிகளைப் பகிர்கிறார்கள் என்று நான் நினைத்துப்பார்ப்பதுண்டு. சில கேள்விகளுக்கு பதில் கிடைக்காவிட்டால் மனம் மகிழும். அப்படியான கேள்விதான் அதுவும்.

என்னிடம் உள்ள கடும் முன்கோபம் எனது தந்தையுடடையது. ஆனால் பலர் கூறும் ”உன்னுடன் பேசுவது ஆறுதலானது” என்னும் வார்த்தையின் முழுப் பெருமையும் எனது தாயாருக்கே உரியது. அவரிடம் எத்தனையோ நல்ல பழக்கவழக்கங்கள் இருந்தாலும் நான் என்னையறியாமல் அவரிடம் இருந்து இதைமட்டுமாவது கற்றுக்கொண்டிருக்கிறேன் என்பது, பலமனிதர்களும் என்னுடன் உரையாடலாம் என்று கூறும்போது புரிகிறது.

அம்மா ஒரு வைத்தியர். அவரிடம் வைத்தியம்பார்த்துக்கொள்ளவேண்டும் என்று பலர் பல மணிநேரங்கள் பயணம்செய்து வருவார்கள். எங்கள் வீட்டில் தங்கியிருந்து மறுநாள் பயணப்பட்டவர்களும் உண்டு. சிலர் வாரக்கணக்கில் வீட்டில் தங்கியிருந்து மருத்துவம் பெற்ற கதைகளும் உண்டு. அம்மா இவர்களிடம் பணம் வாங்கியதில்லை.

இப்போது அம்மா வைத்தியம் பார்ப்பதில்லை. சில வருடங்களுக்கு முன் ஏறாவூருக்கு அம்மாவை அழைத்துப்போயிருந்தேன். அம்மாவை அங்கு எல்லோருக்கும் ”அம்மா” என்றால்தான் தெரியும். அம்மா ஏறாவூரில் தங்கியிருந்த சில மணிநேரங்களுக்குள் ஊருக்குள் அம்மா வந்திருக்கிறார் என்ற கதை பரவ அம்மாவை சந்திக்க பலரும் வந்தபோதுதான் வாழ்க்கையில் பணத்தால் சம்பாதிக்கமுடியாத ஒன்றை அம்மா தனது அடக்கமான மனதாலும், அன்பான வார்த்தைகளினாலும், தன்னடக்கத்தினாலும் சம்பாதித்திருக்கிறார் என்பதை அறிந்துகொண்டேன்.

”செய்யதுஉம்மா” என்னும் பெயரில் அம்மாவை மிக நன்றாக அறிமுகமான ஒரு முதிய முஸ்லீம் பெண் இருக்கிறார். அம்மா என்றால் அவருக்கு அத்தனை பிடிப்பு. அம்மாவும் நான் ஏறாவூருக்கு செல்லும்போதெல்லாம் அவரை சந்தித்து அன்பைத்தெரிவி என்பார். அவரைச் சந்திக்கும்போதெல்லாம் இவர் தான் அம்மாவின் மகன், அம்மா என்னை பார்க்க மகனை அனுப்பியிருக்கிறார் என்று அனைவருக்கும் சொல்லியபடியே பெருமைப்படுவார். அம்மாவைப் பற்றி எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார் என்பார்கள் அவரது அயலவர்கள்.

இவர் மட்டுமல்ல ஏறாவூரைச் சுற்றி பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அம்மாவில் அத்தனை பிடிப்பு, அத்தனை மரியாதை. இத்தனைக்கும் அம்மா அவர்களுக்கு உறவினரோ, அயலவரோ, ஊரவரோ இல்‌லை. ஆனால் அம்மாவிடம் சில முக்கிய தன்மைகள் உண்டு. அவையே அம்மாவை அனைவருக்கும் பிடித்துப்போக காரணமாய் இருக்கிறது என்று நினைக்கிறேன்.  தன்னடக்கம், நான் டாக்டர் என்ற செருக்கு சற்றும் இல்லாதவர். அனைவரும் சமம் என்னும் கருத்துடையவர். எமது வீட்டினுள் எவரும் வரலாம் செல்லலாம். அம்மாவும் எங்கும் செல்வார், வருவார். நோயாளிகளிடம் பேசுவதற்கு அதிக நேரத்தினை எடுத்துக்கொள்வார். எவர், எப்பொழுதிலும் நோய் என்று வந்தால் முகம்சுளிப்பதில்லை. அது சாமம் கடந்த பொழுதுகளாக இருப்பினும்கூட. இனம், மொழி, சாதி இதையெல்லாம் அவர் சிந்திப்பதே இல்லை. சக மனிதன்மீதான அவரது அன்பும், மரியாதையும், அவரது எளிமையும், தன்னடக்கமுமே அவரை இப்போதும் பலருக்கு பிடித்துப்போக காரணமாயிருக்கிறது.

நானோ குறிப்பிட்டதொரு எல்லையை மனிதர்கள் கடந்துவிடும்போது கொதிக்கும் தன்மையுடையவன். எதையும் நேருக்குநேரே பேசிவிடுபவன். மனதுக்குள் எதையும் அடக்கத்தெரியாதவன். ஆனால் அம்மா இதற்கு எதிர்மாறானவர்: அவரின் பொறுமைக்கு எல்லை இல்லை, மற்றையவரின் மனம்நோகப் பேசமாட்டார். எதையும் மனதுக்குள் புதைத்துவிடுவார்.  இதனால் எமக்கிடையெ அவ்வப்பொது சற்று முறுகல்நிலை வந்துபோவதுண்டு.  நீ ஒரு சோடாப்போத்தில் என்பார் என்னை அந்நேரங்களில்.

அம்மாவுக்கு உரையாடற்கலை இயற்கையாகவே வாய்த்திருக்கிறது.

உரையாடலுக்கும், விவாதத்துக்கும் இடையே உள்ள ‌வேறுபாட்டினை நாம்  சிந்திப்பதில்லை. இவை இரண்டும் எதிர் எதிர் திசையில் மனிதர்களை இட்டுச்செல்பவை. உரையாடல் நண்பர்களையும், விவாதங்கள் எதிரிகளையும் சம்மாதித்துத்தருபவை. இதனாலோ என்னவோ அம்மா உரையாடலையே விரும்புவார்.

உரையாடலின் பின்பு இரு மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்திருப்பார்கள். விவாதத்தின் பின்பு புரிதல் என்பது இருக்காது. ஒருவரின் கருத்தை ஒருவர் வென்றிருப்பார். தோல்வியுற்றவர் மனம் தோல்வியின் மனநிலையிலும், வெற்றியுற்றவர் மமதையிலும் இருப்பார்.  இது இரு மனிதர்களுக்கிடையில் புரிதலை ஏற்படுத்தப்போவதில்லை.

நோர்வேஜிய மொழியில் ஒட்டகமொழி என்று ஒரு புத்தகம் பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்திருந்தது. அது உரையாடலின் அவசியம் பற்றியும், சிறந்த உரையாடலின் அம்சங்கள் என்ன என்பது பற்றியும் பேசுகிறது. ஒட்டகத்தைப் போன்று விசாலமான பார்வையும், ஒட்டகத்தின் இருதயத்தைப்பொன்ற பெரிய இதயத்தினுடனும் உங்கள் உரையாடலை மேற்கோள்ளுங்கள் என்பதே அப் புத்தகத்தின் சாரம்.


எனக்கு நோர்வேக்கு வந்த காலங்களில் ஒரு எரித்திரிய நாட்டு நண்பன் இருந்தான். அற்புதமான மனிதன் அவன். முபரஹாது என்பது அவன் பெயர். அவனின் முகத்தில் அதீத அமைதி குடியிருக்கும். அன்பாகப்பேசுவான். எவ்வளவு நேரம் கதைத்துக்கொண்டிருந்தாலும் அவனால் செவிமடுத்துக்கொண்டிருக்கமுடிந்தது. 


அதேபோல ஒரு நோர்வேஜிய நண்பர் இருக்கிறார். என்னை விட வயதில் அதிகமானவர்.  அவரும் முன்னையவரைப்போலவே அழகிய மனதினைக் கொண்டவர்.


நான் நோர்வே வந்து வாழ்ந்திருந்த வடமேற்குக் கரையேரத்துக் கிராமத்தில் பல வைத்தியர்கள் இருந்தனர். அதில் ஒருவர் எந்த நோயுடன் சென்றாலும் நீ உடற்பயிட்சி செய்பவனா என்பதே அவரது கேள்வியாய் இருக்கும். இது முழுமாத கர்ப்பிணியாக இருப்பினும்கூட. அவரது மருந்துகளில் முக்கியமானது உடற்பயிட்சி. அவரை ஊரே உடற்பயிட்சி வைத்தியர் என்றே அழைத்தது. அவா் ஒரு பிரபல்யமான மரதன்ஓட்ட வீரன் என்பதை நான் அறிந்துகொண்டபோது அவர்மீது இருந்த கோபம் குறைந்துபோனது. அவரால் நோயாளியுடன் ஒரு சிறுவார்த்தையையேனும் அன்பாகவோ பரிவாகவோ பேசமுடியாது. மனிதர்களை ஏதோ ஒரு இயந்திரம் போலவே நினைத்துக்கொண்டார். நடாத்தினார். அதனால் பலரும் அவரிடம் செல்வதை விரும்பவில்லை.

இன்னொரு டாக்டர் அதிகமாய் வாயைத்திறக்கவேமாட்டார். மிக மிக மெதுவாகப் பேசுவார். அவரிடம் சென்றால் நோயும் மெது மெதுவாகவே குணமாகியது. அதிககாலம் சுகயீன விடுமுறை வழங்கும் குணமும் இருந்தது, அவரிடம். எனவே தமிழர்கள் பலர் அவரிடம் நோயாளிகளாகச் சென்றார்கள்.

நான் மன அழுத்தத்தினால் அவதிப்பட்டபோது உடற்பயிட்சி வைத்திய‌ரே எனக்கு வைத்திராக இருந்தார். எப்போதும் மலை ஏறு, குளத்தைச் சுற்றி நட, கிராமத்தைச் சுற்றி ஓடு என்றே கூறியதைகேட்டு அலுத்தனால் அந்தக்கிராமத்தில் இருந்த முன்றாவது டாக்டரை அணுகி பிரச்சனையைக் கூறி, உதவிகோரினேன்.

அந்த மனிதர் நோயாளிகளுடன்  உரையாடுவதையே முக்கியமாகக் கருதினார். அதிலும் வெளிநாட்வர்கள் என்றால் அதிகநேரம் செலவளித்தார். காலப்போக்கில் அவரே எனது குடும்ப வைத்தியரானார். எனது நோயில் இருந்து நான் மீண்டுகொள்ள அவர்  வழங்கிய உதவியும், உரையாடல்களும் முக்கிய காரணிகளாய் இருந்தன.

அம் மனிதரின் இதயம் பெரியது என்பதற்கு சாட்சியாக ஒரு நிகழ்வு நடந்தது. அவரின் மனைவி ஒரு மருத்துவத்தாதி. அவர் தொழில்புரிந்த இடத்தில் இருந்து அவர் சில மருந்துகளை திருடிப் பாவித்தார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அம்மருந்துகள் போதைமருந்துகளுக்கு ஒப்பானவை, ஆனால் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுபவை. முதலில் ஊருக்குள் கதை பரவியது. பின்பு பத்திரிகை, தொலைக்காட்சி  என அனைத்திலும் இது முக்கிய செய்தியாகியது. மனைவி நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டார். அந்நாட்களில் அந்த வைத்தியர் எமது கிராமத்தின் வைத்திய தலைமை வைத்திய அதிகாரியாக இருந்தார். அவரின் மானம், கௌரவம் என்பன பலத்த ஏளனத்திற்கும், கேலிக்கும் உட்பட்டது. அந்நாட்களிலும் மனிதர் மனைவியின் கையைப்பிடித்தபடியே நாயுடன் காற்றாட நடந்து செல்வதைக் கண்டிருக்கிறேன். அவர்கள் பிரியப்போகிறார்கள் என்றும் கதையுலாவியது. நான் 2008ம் ஆண்டு அக்கிராமத்தில் இருந்துவெளியேறும்வரையில் அவர்கள் இருவரும் கைகோர்த்தபடியே காற்றாட நடந்துதிரிந்தார்கள். அப்போதுதான் அந்த மனிதரின் அசாத்தியமான மனம் புரிந்தது. அவரின் மனிதாபிமானம் புரிந்தது. என்னால் அவ்வாறு நடந்திருக்கவே முடியாது. அத்த‌னை அவமானத்தையும் தாங்கிக்கொண்டாா் தனது துணைவிக்காக.

இன்று முகப்புத்தகத்தில் அவருக்கு பிறந்தநாள் என்று அறிவித்தல் வந்தது. உடனே வாழ்த்துக்கள் என்று எழுதி வாழ்த்தினேன். நாளை, நன்றி சஞ்சயன் என்று பதில் வரும். அத்துடன் என்னைப்பற்றி கேட்பார். குழந்தைகளைப் பற்றிக்கேட்பார். வாழ்க்கையைப்பற்றிக்கேட்பார். முக்கியமாய் 5 வருடங்களின் முன் எனக்கிருந்த நோய்கள் பற்றியும் கேட்பார். நான் அவருக்கு பொய் எழுதுவதில்லை. என்னால் பொய்கூற முடியாத மனிதர்களில் அவரும் ஒருவர்.

சில மனிதர்கள் எம் வாழ்க்கையில் கிடைப்பதற்கு நாம் அதிஸ்டசாலிகளாக இருக்கவேண்டும்.

நான் அதிஸ்டசாலி.



No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்