அன்றொருநாள் காலை நிலக்கீழ் தொடரூந்தில் ஏறியபோதே அவர்கள் இருவரையும் நான்
கண்டேன். தமிழர்கள். எதிர் எதிரில் உட்காந்திருந்தார்கள். நான்
அவர்களுக்கு அருகில் இருந்த இருக்கையில் இருந்துகொண்டேன். எனது பையுக்குள்
இருந்த கே. டானியலின் பஞ்சமர் புத்தகத்தில் சாதீயப் பிரச்சனைகள், கொலைகளில்
என்னை மறந்து இருந்த போது அவர்களின் உரத்த உரையாடல் எனது கவனத்தை
திசைதிருப்பிற்று. எவ்வளவோ முயன்றும் புத்தகத்தில் கவனம் செல்ல மறுத்தது.
அவர்களில் ஒருவர் 35 - 40 வயதானவராக இருக்கு மற்றவரோ 30 களின்
இறுதியில் இருந்தார். வயதில் மூத்தவர் திருநீறு, சந்தனம் என
பக்தகோடியாகவும் மற்றவர் பக்திக்கான எவ்வித சின்னங்களையும் சுமக்காமலும்
அமர்ந்திருந்தார்கள்.
அவர்களின் உரையாடல் சுவராசியமாய் இருந்ததால் அவர்களை கேட்காமலே எனது காதைக்
கொடுத்தேன். நாகரீமற்ற செயல் தான் ஆனாலும் எழும்பிப் தூரப் போய் நிற்கும்
மனநிலையில் நானிருக்கவில்லை. அவர்களும் மெதுவாய் கதைக்கவில்லை.
அவர்கள்
ஏற்கனவே அறிமுகமானவர்கள் போல் இருந்தனர். அவர்களில் வயதனாவர் நோர்வேயில்
தங்கியிருப்பதற்கான வதிவிட அனுமதி அற்றவராக இருந்தார். மற்றவர் தற்காலிக
வதிவிட அனுமதி பெற்றிருந்தார் என அவர்களின் உரையாடலில் புரிந்தது.
”என்னடாப்பா புதினம்” என்றார் பெரியவர்
”ஒரு புதினமும் இல்லையண்ணை. குளிர்தான் உயிர எடுக்குது” என்றபடியே தொடர்ந்தார் இப்படி
“லண்டனில்
ஒரு சாத்திரி வந்திருக்கிராராம், காண்டம் பார்ப்பாராம்” என்றார் இளையவர்.
”என்ட சாதகம் ஊரிலயடாப்பா. இல்லாட்டி ஒருக்கா பார்த்திருக்கலாம், விசா
கிடைக்குமோ, இல்லாட்டி பிரான்ஸ்சுக்கு போவமோ என்று கேட்டிருக்கலாம்”
என்றார் பெரியவர் அங்கலாய்த்தபடியே.
”அண்ணை! பேரும் பிறந்த திகதியும் காணுமாம்” ஆள் veitvet center இல் நிற்கிறாராம். சனம் அள்ளுப்படுதாம்”
”சே.. சாதகமில்லாமல் எப்படி பார்க்கறது, அப்ப உது பொய்ச்
சாத்திரம்”என்று பெரியவர் அங்கலாய்க சிறியவர் தனது நண்பர் சாதகமின்றி
காண்டம் பார்த்ததை எடுத்துக் கூறினார். பெரியவர் சற்று நம்பியது போல
இருந்தது.
”எவ்வளவு காசு கொடுத்தவராம்?” என்றார் பெரியவர்.
”200 குறோணறர் மட்டல எண்டு சொன்னவன். என்னட்ட சாமியார்ட நம்பர்
இருக்கு கேக்கட்டோ” என்று பதிலை எதிர்பார்க்காது நம்பரை அமத்தி தொலைபேசியை
காதில் வைத்தார்.
மற்றையவர் காதை சின்னிவிரலால் குடைந்தபடியே தொலைபேசி உரையாடலை அவதானிக்கத் தயாரானார்.
” ஹலோ. ஹலோ! ஆர்.. சாமியாரே கதைக்கிறியள்”
”..”
”அய்யா” காண்டம் பார்ப்பியளோ?”
”..”
”நான் ஸ்ரீலங்கா, ஒஸ்லோவில இருக்கிறன்”
”..”
”சாதகம் வேணுமோ?”
”..”
”பிறந்த திகதியும் பெயரும் காணுமோ”
”..”
”தட்சனை எவ்வளய்யா கொண்டுவரவேணும்?”
”..”
” எத்தின மணிவரைக்கும் நிற்பியள்?”
”..”
”நான் பிறகு எடுக்கிறன்”
இப்படியாய் சம்பாசனை முடிய, பெரியவர் ஆவல் தாங்காதவராய்
”என்னவாம் சாமியார்” என்றார்.
”அவர் சாதகம் இல்லாமலும் கணிப்பாராம். ஆனால் அது கொஞ்சம் நேரமெடுக்குமாம். பெயரும், பிறந்த திகதியும் காணுமாம்”
”தட்சனை?”
”அது
அங்க வந்தாப்பிறகு பேசலாமாம். கனக்க வராதாம். முதல்ல வரட்டாம். சில
வேளைகளில் பரிகாரங்கள் செய்தால் கொஞ்சம் கூடும் என்று நினைக்கிறேன்”
”உந்த விசா பிரச்சுனைக்கு ஒரு முடிவும் இல்ல.. காசு போனாலும் பறவாயில்ல உந்த காண்டம் பார்க்கவேணும்”
”என்ட
ப்ரெண்டுக்கு நல்லா தான் பார்த்து சொன்னவராம்” பரிகாரம் செய்தாப்போல
அவனுக்கு மனிசியோட பிரச்சனை குறைஞ்சு, வீட்டு பிரச்சனையும், வேலைப்
பிரச்சனையும் தீர்ந்ததாம்”
”அப்ப ஆள் விசயமான ஆள் தான் போல”
அவர்களை மெதுவாய் தட்டி
உங்களுக்கு ”சஞ்சயானந்தாவை தெரியுமோ” அவருக்கு மட்டக்களப்பு மாந்திரீகமும்
தெரியுமாம்” என்று கூறினால் என்ன என்று சிந்தனையோடியது. என்றாலும்
தற்பெருமை அழகில்லை என்பதால் அடக்கிக்கொண்டேன்.
இப்படியாக அவர்களின் உரையாடல் போய்க்கொண்டிருந்த போது தான் ஒஸ்லோ
கடைகளில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரமும், சில மாதங்களுக்கு முன் ஒரு
நிகழ்ச்சியில் நடைபெற்ற நகைச்சுவை நாடகமும் நினைவில் வந்தது. அந்த
நாடகத்திலும் இப்படித்தான் ஒருவர் காண்டம் பார்க்கப் போவார். சாத்திரியார்
பரிகாரம் செய்து ஒரு தகடு கொடுத்து அதை கையில் கட்டிக் கொள் என்பார். அதை
கையில் கட்டியதும் ஒவ்வாமையினால் உடம்பு முழுவதும் அரிப்பு ஏற்படத்
தொடங்கிவிடும். அவர்கள் டாக்டரிடம் சென்று மருந்த வாங்கி, தகட்டைக் களட்டிய
பின்பு, அவர் சுகப்படுவார்.
இப்போது ஊருக்குள் கொடிகட்டிப் பறக்கும் வியாபாரம் இது தான்.
வேதனைகள், துன்பங்களின் மத்தியில் வாழ்பவர்களுக்கு இது ஒரு மனஆறுதலைக்
கொடுக்கிறது என்பது என்னவோ உண்மைதான். இப்படியான மனிதர்களை வைத்து
பிழைப்பு நடத்துபவர்களை என்ன சொல்வது?
நேற்று குறிப்பிட்ட அந்த சென்டருக்குள் சென்றபோது ஒரு பெண் கையில்
வலுக்கட்டாயமாக ஒரு விளம்பரத்தை திணித்தார். சிரித்தபடியே வேண்டாம்
என்றேன். இதை நீ வாங்காவிட்டால் நீ செத்தாய் என்னும் விதத்தில்
பார்த்தார். சரி தாருங்கள் என்று வாங்கியபடியே அதை வாசித்தேன். சாமியார்
ஒருவரின் தொ(ல்)லைபேசி இலக்கமும் அவரது திருவிளையாடல்கள்பற்றியும்
எழுதியிருந்தது. கசக்கி அருகில் இருந்த குப்பைக்குள் போட்டுவிட்டு
நடையைக்கட்டினேன்
மட்டக்களப்பான் ஆகிய எனக்கும் ஒருவர் தேசிக்காய்
வெட்டிக்கொண்டிருக்கிறார். அண்ணை தேசிக்காய் வாங்கித் தரவா என்று
கேட்டிருக்கிறேன் அவரை.
அது பெரியதொரு காப்பியம். அவரின் கதையை பின்பொருநாள்
சொல்கிறேன்.
இதில் வேடிக்கை, கடவுளை நம்பவில்லை என்று கூறும் ஒரு சிலரும் காண்டத்தை நம்புவது... நானும் இதில் உள்ள வேடிக்கைகளை ஒர் பதிவாக எழுதவேண்டும் என்பதற்காகவாவது காண்டம் பார்க்க எண்ணியுள்ளேன். சாமியார் சிட்னிப் பக்கம் வந்தால் சொல்லவும். தட்சிணைதான் பிரச்சினை.
ReplyDeleteசிறந்த பகிர்வு
ReplyDeleteவரவேற்கிறேன்.