அன்றொருநாள் காலை உடல்நிலை சரியில்லையாதலால் எனது வைத்தியரைச்
சந்திப்பதற்காய் அவரின் வைத்தியசாலையில் காத்திருந்தேன். அப்போது கதவைத்
திறந்து கொண்டு ஒரு வயதான தமிழரும், அவர் மனைவியும் உள்ளே வந்தார்கள். அவரை
நான் அறிவேனாகையால் கையைக் காட்டினேன். அவரால் என்னை யார் என்று அடையாளம்
காணமுடியவில்லை. எனவே அருகில் வந்து பார்த்தபடியே, சற்றுச் சிந்தித்தார்.
பின்பு ஆஆ... சஞ்சயன் தானே என்றார். சிரித்தேன். நாம் பல
வருடங்களுக்குப்பிறகு சந்திக்கிறோம். குறைந்தது 15 வருடங்களாவதிருக்கும்
அருகில் அமர்ந்துகொண்டார். அவர் மனைவி சற்றத் தள்ளி இருந்த ஒரு கதிரையில்
அமர்ந்து கொண்டார்.
அவருடனான அறிமுகம் 1987 இல் நடந்தது. மிகவும் திறமையுள்ளவர். அவரின்
தமிழ்ப்புலமை அலாதியானது. எல்லோருடனும் மிக இலகுவாகப் பழகுவார். அவரின்
தாராளமான பேச்சு அவரின் மீது பலருக்கும் அவர் ஒரு ”அலட்டல்” மனிதன் என்ற
ஒரு எண்ணத்தையே கொடுத்தது. அவருக்கு பல பட்டப்பயெர்கள் வைக்கப்பட்டு
அழைக்கப்பட்டார். அதிலொன்று ”வெடிப்பு”
நானும் ”வெடிப்பு” என்றழைக்கப்பட்டகாலம் அது. வித்தியாசமான கருத்துள்ளவர்கள் அனைவரும் ”வெடிப்பு” என்று அழைக்கப்பட்ட காலமது.
அவருக்கும்
எனக்கும் குறைந்தது 20வயது வித்தியாசம் இருக்கும். அண்ணண் என்றே அவரை
அழைத்தேன். 1987ம் ஆண்டு நாம் வெளியிட்ட ஒரு கையெழுத்துப்பிரதியொன்றில்
அவர் தமிழ், தமிழின் தொன்மை, பெருமைபற்றியதொரு கட்டுரை எழுதியதும் நினைவில்
இருக்கிறது. அம்மலர் வெளியீட்டுக்குழுவிலும் அவர் அங்கம் வகித்தார்.
16திகதி வைகாசி 1987ம் ஆண்டு நான் மறக்கமுடியாத நாள். அன்று தான் முதன்
முதலாக நான் பல வருடங்கள் குடியிருந்த நோர்வேயின் வடமேற்குக் கரையோரக்
கிராமத்துக்கு இன்னும் பல தமிழர்களுடன் அழைத்துவரப்பட்டேன்.
அந்த கிராமத்து வாழ்க்கயைின் போதுதான் நான்
மேற்கூறிய அந்த அண்ணண் அறிமுகமானார். அதன் பின் நான் அக்கிராமதிலேயே
தங்கிவிட, அவர் சற்றுத் தூரத்தில் இருந்த ஒரு கிராமத்தில் குடியேறினார்.
மனைவி குழந்தைகள் ஊரில் இருந்து வந்தார்கள், படித்தார்கள், வளர்ந்து
பெரியவரானார்கள்.
அவரை பல வருடங்களுக்கு முன்பு அடிக்கடி சந்திப்பதுண்டு. காணும்போது
மகிழ்ச்சியாய் உரையாடுவார். அப்போதும் அவரைச்சுற்றியிருந்த பலர் அவரை
”வெடிப்பு” என்றே அழைத்துக்கொண்டிருந்தனர்.
அவர் பற்றியதொரு சம்பவம் பசுமரத்தாணியாய் நினைவில் நிற்கிறது. நாம்
ஒன்றாய் வாழ்ந்திருந்த காலத்தில், நாம் தங்குமிடத்தில் ஏறத்தாள 50 - 60
இலங்கைத் தமிழர்கள் தங்கியிருந்தார்கள். பலரும் தங்களது 20 வயதுகளில்
இருந்தார்கள். சிலர் அதனிலும் இளமையாகவிருந்தார்கள்.
இந்த அண்ணணை எம்முடன் தங்கியிருந்த பலர் எப்போதும் கேலிபேசுவம், நக்கல் பண்ணுவதும் வழக்கம். ஒரு நாள் பலரும் ஓரிடத்தில் கூடியிருந்து உரையாடிக்கொண்டிருந்த போது
ஒரு சிலர் குறிப்பிட்ட அந்த அண்ணணை கிண்டல் பண்ணியபடி இருந்தார்கள்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார் அண்ணண். அவர்களின் நக்கல் எல்லைமீறிய
போது ” இவ்வளவு கதைக்கிறீர்களே, நான் செய்வதை உங்களால் செய்ய முடியுமா
என்றார்?
”அண்ணை! சத்தியமா உங்களைப்போல எங்களால கதைக்கஏலாது” என்றான் ஒருத்தன் நக்கலாய்.
அண்ணணுக்கு ரோசம் பொத்துக்கொண்டுவந்தது. நான் இப்ப செய்யுறதை நீங்கள்யாரும்
செய்தால் நான் எனது மாதாந்த கொடுப்பனவை தருகிறேன் என்றார். சிலர் ஓம்
என்று பந்தயம் கட்டினார்கள். கூட்டம் கூடியது.
அண்ணண் எழுந்தார். குனிந்தார். திடீர்என்று கைகளால்
நடக்கத்தொடங்கினார். நடந்தது மட்டுமல்ல மாடிப்படிகளில் ஏறி இரண்டாம் மாடியை
அடைந்தார். பார்த்துக்கொண்டிருந்தவர்களின் முகங்கள் செத்துப்போயிருந்தன.
மீண்டும் கையாலேயே கீழே இறங்கிவந்த அண்ணண், எங்கே உங்களில் யாராவது
செய்யுங்கோ பார்ப்போம் என்றார். எவரும் எழும்பவில்லை. தலையைக்
குனிந்திருந்தார்கள்
அண்ணண் அவர்களைப் பார்த்து நக்கலாய் சிரித்துவிட்டு தனது
அறைக்குச்சென்றுவிட்டார். ஒரு மனிதனை கேலிசெய்யும்போது அவனுக்குள் ஒருவித
வேகம் விளித்துக்கொள்கிறது. தனக்கான இடத்தை நிறுவிக்கொள்ள, திறமையை
வெளிப்படுத்த, அமைதியை உடைத்தெறிய அந்த வேகம் உதவுகிறது என்பதை அன்று அறிந்துகொண்டேன்.
கேலிபேசுபவர்களுக்கு கேலிபேசப்படுபவரின் மனநிலை, வலி, காயங்கள் எதுவும்
புரிவதில்லை. ஆனால் அன்று அந்த அண்ணண் செய்துகாட்டிய ஒரு செயல், அதன்பின்
அவர் உங்களால் முடியுமா என்று கேட்டது போன்றவை கேலிபேசியவர்களின் மனநிலையை
உலுப்பியிருக்கும் , வெட்கித்துப்போகும் மனநிலையைக்கொடுத்திருக்கும் என்றே
எண்ணுகிறேன். கேலிசெய்தவர்களின் வாயை மூடச்செய்த அவரின் செயல்
மறக்கமுடியாதது.
”என்ன அண்ணண் சுகமில்லையோ” என்றேன். தனக்கு தலைசுற்றும், காலில் பெரு வலி கண்டிருப்பதாகவும் சொன்னார். அப்போது அவருக்கு அவர் கையால்
நடந்த கதையைக் கூறினேன். சிரித்தபடியே ”அது அந்தக்காலம், இப்போ
வயதுபோய்விட்டது” என்றார். நாம் பலதையும் பேசிக்கொண்டிருந்தோம்.
வயோதிபம்பற்றி அதிகம் பேசினார். அவரின் பேச்சில் பயமும், இனம்புரியாத
நடுக்கமும் இருந்தது.
அப்போது வைத்தியர் அவரை வந்து அழைத்துப்போனார். அண்ணண் மெதுவாக ஒரு
காலை இழுத்து இழுத்து நடந்துபோவதைப் பார்த்த எனக்கு, எனது வயோதிபத்தை நினைக்க
பயமாயிருந்தது.
No comments:
Post a Comment
பின்னூட்டங்கள்