டாக்டரின் படுக்கையறை அவஸ்தை
இன்று எனக்கு நன்கு அறிமுமான ஒரு நண்பரை சந்திப்பதாய் ஒப்பந்தம் இருந்ததை கைத்தொலைபேசி சிணுங்கியபடியே அறிவித்தது. மனதில் அதைக் குறித்துக்கொண்டேன். அவருக்கு பின் மதியவேளை அவரை சந்திப்பதாகவும், நாம் ஒஸ்லோவின் மேற்குப் பகுதியில் உள்ள புறநகர் ஒன்றில் உள்ள ஒரு கோப்பிக் கடையில் சந்திப்போம் என்றும் குறும்செய்தி அனுப்பினேன். ”சரி” என்று பதில் குறுஞ்செய்தி வந்தது.
கோப்பிக்கடைக்கு வெளியே நண்பர் உட்கார்ந்திருந்தார். அவரருகே உட்கார்ந்துகொண்டேன். பரிமாறும் அற்புத அழகியொருத்தி என்ன வேண்டும் என்றாள். ஒரு தேத்தண்ணி என்றேன். என்ன தேத்தண்ணி என்றுவிட்டு மாம்பழம், தோடம்பழம், இன்னும் பல பெயா்களைக் கூறி இதில் எது வேண்டும் என்றபடியே புருவத்தை உயர்த்தினாள், மாம்பழம் எனக்குப் பிடிக்கும் என்பதால் மாம்பழம் என்றேன். சற்றுநேரத்தில் மாம்பழத்தின் சுவையுடைய தேனீர் வந்து. நண்பர் ஆப்பிள் கேக், கோப்பி வாங்கினார்.
நண்பருக்கு 65 வயதிருக்கும். அவர் ஒரு முன்னைநாள் வைத்தியர். ஐ.நா வின் வைத்தியப்பிரிவினூடாக பல நாடுகளுக்குச் சென்று தொழில் புரிந்தவர். ஒஸ்லோவின் பிரபல வைத்தியராக இருந்வர். விவாகரத்தின் பின் உக்ரைன் நாட்டு அழகியெருத்தியில் ஆசைப்பட்டு அண்மையில் அவளை திருமணம் செய்தவர்.
எனது நண்பர் பெண்கள் என்றால் அற்புதமாய் ரசிக்கும் கலைப்பண்புடையவர். இவரது புதிய மனவிக்கும் இவருக்கும் 20 வயதிலும் அதிக வயது வேறுபாடு உண்டு. வைத்தியரின் புதிய மனைவி உண்மையிலேயே அழகானவர். நான் அவரைக் கண்டிருக்கிறேன். அவருக்குப் பின்னே நாம் நடந்தாலோ அல்லது அவரை நோக்கி நாம் நடந்தாலோ எமக்கு இதயநோய் வருமளவுக்கு அவர் அழகானவர். அவரும் ஒரு வைத்தியர்.
நாம் இருவரும் சூரினை முகத்தில் விழுத்தியபடியே அதன் இளம்சூட்டினை அனுவித்துக்கொண்டே உரையாடிக்கொண்டிருந்தோம். இருவரின் வாழ்க்கையும் இருவருக்கும் தெரியும். நாம் எதையும் வெளிப்படையாகப் பேசிக்கொள்பவர்கள். வாழ்க்கைபற்றி பேச்சுத்திரும்பியது.
தற்போது தனக்கும் புதிய மனைவிக்கும் இடையில் ஒரு பிரச்சனை வந்திருக்கிறது என்றார் நண்பர். அவரே தொடர்ந்தார். நான் அவளைவிட சற்று வயதானவன் என்ற போது நான் வேண்டுமென்றே செருமியபடியே ஆம்.. ஆம் நீங்கள் சற்று வயதானவர்தான் அவருடன் ஒப்பிடும்போது என்றேன். எனது கிண்டலை புரிந்துகொண்டு சிரித்தார். நானும் சிரித்தேன். நான் முன்பைப்போல் உசாராக இல்லை என்று கூறிவிட்டு ஆப்பிள் கேக்ஐ ஒரு கடி கடித்தார். பின்பு கோப்பியை வாயில்வைத்து உறுஞ்சினார். அவர் ஏதோ வில்லங்கமான விடயத்தை கதைகத்தொடங்குகிறார் என்று நினைத்த எனக்கு அவரின் ஆறுதலான நடவடிக்கைகள் பலத்த எரிச்சலைத் தந்தன.
காய்ந்திருந்த தனது உதட்டை நாக்கால் நனைத்தபடியே தொடர்ந்தார். நாம் ஒன்றாக படுக்கையறையில் இருக்கும்போதுதான் பிரச்சனைவருகிறது என்றார். ஆஹா விடயம் சுடுபிடிக்கிறதே என்று நினைத்தபடியே முகத்தை படு சீரியசாக வைத்திருந்தபடியே ”ம்.. ம்” என்றேன்.
மனிதர் மீண்டும் அப்பிள் கேக்ஐ உண்பதில் தீவிரமாகிவிட்டார். கண்ணை மூடி ம்.. ம்.. ம் என்று ஆப்பிள் கேக்கினை ரசித்து ருசித்தார். எனக்கு இருப்புக்கொள்ள முடியாதிருந்தது. நானும் தேனீரை ரசித்து குடிப்பது போல் பாவ்லா காட்டினேன். அவராகவே தொடரட்டும் என்றே நினைத்தேன். மனிதர் இப்போது கோப்பியை கண்ணை முடி ரசித்துக்கொண்டிருந்தார். மெதுவாய் செருமினேன். நண்பர் அதைக் கண்டுகொண்டதாய் தெரியவில்லை. மீண்டும் ஆப்பிள் கேக், கோப்பி என்று நிமிடங்கள் யுகங்களாய் கடந்துகொண்டிருந்தது. இப்போது ஆப்பிள் கேக் முடிந்திருக்கிறது.
சன்சயாஆன் என்றார். எனது பெயரை அவர் இப்படித்தான் இரண்டு வருடங்களாக அழைக்கிறார். என் பெயர் சன்சயாஆன் இல்லை, சஞ்சயன் என்றேன். நீயும் இரண்டு ஆண்டுகளாக திருத்துகிறாய் நானும் முயற்சிக்கிறேன், ஆனாலும் உனது பெயரை சரியாக உச்சரிக்கமுடியவில்லை என்றார்.
எனது பொறுமை காற்றில் ஆடிக்கொண்டிக்க இருப்புக்கொள்ளாமல் அது சரி மனைவிக்கும் உனக்கும் படுக்கையறையில் என்ன பிரச்சனை என்றேன். ”பொறு” என்று கூறியபடியே கதிரையை எனக்கு அருகே இழுத்துப்போட்டுக்கொண்டார். என்னை நோக்கிக் குனிந்து மெதுவான குரலில், அவளுக்கு இப்போதெல்லாம் படுக்கையறையில் கோபம் வருகிறது என்றார். எனக்கு இரத்தம் சற்று சூடாக ஆரம்பித்தது.
பெண்கள் என்றால் அவர்களை பூப்போன்று கையாளவேண்டும் என்றேன் நான். அவரோ அதைக் கவனிக்காது கோப்பியை வாயில் வைத்து உறுஞ்சிக்கொண்டிருந்தார். இப்போது கோப்பிக் கோப்பை காலியாகி இருந்தது. அவரே தொடர்ந்தார். வயதாகிவிட்டதால் நான் மிக விரைவில் தூங்கிவிடுகிறேன் என்று அவர் கூறியபோது எனக்கு கொடுப்புக்குள் சிரிப்பு வந்தது. அவரைப்பார்த்து கண்ணடித்தடிபடியே ”அப்படியென்றால் தவறு உன்னுடையது தான். உன் மனைவிக்கு கோபம்வராவிட்டால் தான் தவறு” என்றேன்.
மனிதர் கடுப்பாகிவிட்டார். ”நீ அவளுக்கு சார்பாகப் பேசுகிறாய் என்றார்”. ”ஆம், நான் மனைவி கோபப்படுவது நியாயம் தானே” என்றேன்.
அதற்கு அவர் ” நான் தூங்கியதும் எனது குறட்டைச் சத்தம் தாங்கமுடியாததாய் இருப்பதாகவும், அவளுக்கு நித்திரை கொள்ளவதற்கு முடியாதிருப்பதால், அவளுக்கு பெரும் கோபம் வருகிறது என்றும் சென்னார்.
எனது காதுக்குள் ”சப்பாஆஆ” என்று ஒரு சத்தம் கேட்டது.
உங்களுக்கும் கேட்டிருக்குமே அந்த சத்தம். :)
Subscribe to:
Post Comments (Atom)
kadavule... naan thoongava, venammaa?
ReplyDeleteகதாசிரியரே ..அவஸ்தி அல்ல அவஸ்தை... குறட்டை ஒரு பெரும் தொல்லை. நிறைய மருத்துவ தடுப்புமுறை இருக்கிறதே... பகிர்வுக்குனன்றி
ReplyDeleteநன்றி அக்கா. அவஸ்தி என்று எழுதியபோது மனம் ஒப்பவில்லை. இப்போது புரிகிறது.
Deleteசுவாமிஜி
ReplyDeleteகுறட்டைக்கு எதும் மருந்து மாத்திரை இல்லையா?
அந்த வைத்தியர் அன்ரி பாவம்.
குறட்டை கேட்டுத் தாங்க முடியாமல்
ReplyDeleteகணவனுக்கு மனைவி அடிச்சிட்டாளோ!
கிளுகிளுப்பாக ஆரம்பித்து
ReplyDeleteயதார்த்ததில் முடித்திருக்கிறீர்கள்
உண்மைதான் குறட்டை பெரும் தொல்லை.