ஊருக்குப் போயிருந்த போது ஏதேட்சையாக சந்தித்த மனிதரெருவரைப்பற்றிய கதையிது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் ஆனால் அவர் தமிழில் மட்டக்களப்பு வாசம் பலமாய் வீசியது. ஆண்டுகள் பலவாகிவிட்டதாம் புலத்தினுள்ளேயே புலம் பெயர்ந்து.
அமைதியன முகமும், அதுக்கேற்ற புன்னகையையும் கொண்டிருந்தார். முகத்தில் வயதுக்கு மீறிய முதிர்ச்சுி தெரிந்தது. வயது 20 களின் முடிவில் அல்லது 30 களின் ஆரம்பத்தில் இருக்கும். நான் தங்கியிருந்த ஒரு விடுதியில் முகாமையாளராக தொழில் புரிவதாய்ச் சொன்னார்.
ஓரு நாள் மாலை 10 மணியளவில் ஏதேட்சையாக சந்திக்கக் கிடைத்தது இவரை. பழகி சில நிமிடங்களுக்குள்ளாகவே மிகவும் அன்னியோன்யமாய் பேசினார்.
பலாலி கிழக்கில் காணி, நிலங்களுடன் பெருமையாய் வாழ்ந்திருந்ததாயும், பாதுகாப்புவலையத்துக்குள் அவை உட்பட்டுப் போனதால் தங்களின் குடும்பச் சொத்துக்கள் என்று அவற்றை தம்மால் உரிமைகொண்டாடவோ, விற்பனை செய்யவோ முடியாதிருக்கிறது என்றார்.
விடுதலைப்போராளியாய் வாழ்ந்திருந்திருக்கிறார் மட்டக்களப்பில். உட்கட்சிப் பிரச்சனையின் பின் விடுதலை வெறுத்து ஓதுங்கிக் கொண்டாராம்.
வெளிநாட்டில் வேலை செய்துதங்கைகளுக்கு கலியாணம் முடித்துக் கொடுத்திருக்கிறார். தாயார் தன்னுடன் வசிக்கிறாராம். அவருக்கு இன்னும் கல்யாணகமாகவில்லை என்றும் அறியக்கிடைத்தது.
பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இரண்டு வருடம் விசா இன்றி அலைந்திருக்கிறார். அது பற்றி அவர் சொன்ன விடயங்களே என்னை அதிகமாக சிந்திக்கவைத்தது. வாழ்வின் உச்சம் தொட்டாரோ என்னவோ, ஆனால் நிட்சயமாக வேதனையின் உச்சம் தொட்டிருந்தார் இந்த மனிதர்.
பிரான்சில் விசா இல்லாமல் பல தமிழர்களிடம் கள்ளமாய் வேலை செய்த பணம் இன்னும் நிலுவையில் இருப்பதாய் புன்னகையுடன் சொன்னார். மேசன் வேலை, கழுவல் வேலை, கடையில் எடுபிடி வேலை, என்று எத்தனையோ வேலைகள் செய்திருக்கிறார். வேதனை என்னவென்றால் அடிமாட்டு சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்கும் பல நாட்கள் கைகட்டி, வாய்பொத்தி அலையவேண்டியிருந்ததாம். ”மனிசனுக்கு மதிப்பில்ல அங்க” என்று அவர் சொன்னபோது ஏனோ பலமாய் வலித்தது.
பிரான்ஸ்சில் இன்னொரு குடும்பத்துடன் ஒரு வீட்டில் வாடகைக்கிருந்தாராம்,. அந்த வீட்டில் இரண்டு அறைகள் இருந்ததாயும் அவற்றில் ஒன்றில் அக்குடும்பமும் மற்றயதில் இவருடன் சேர்த்து 5 ஆண்களும் வாழ்ந்திருந்திருக்கிறார்கள்.
வீட்டு உரிமையாளர் இவரை தினமும் குளிக்காதீர்கள் தண்ணீர் ”பில்” அதிகமாய் வருகிறது என்று சொன்னதாயும், தான் அவரிடம், மேசன்வேலை 15 மணிநேரம் செய்து வந்தபின் எப்படி குளிக்காமல் இருப்பது என்று கேட்ட போது அது உங்கட பிரச்சனை என்று அவர் சொன்னதாயும், பின்பு தான் அதிக வாடகை குடுத்த பின்பே தினமும் குளிக்க அனுமதிக்கப்பட்டதாகக் கூறினார்.
எனக்கு இதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்பது ஆச்சர்யமாகவும், வேதனையாகவும் இருந்தது.
வெளிநாட்டில் பணத்துக்காய் மனிதர்கள் பிணமாவாதயும், வாழ்கையை மனிதத்துடன் வாழ மறுக்கிறார்கள் என்றும் சொன்னார்.
நெதர்லாந்தில் ஒரு தோட்டத்தில் வேலை செய்ததாயும், வின்டர் குளிரில் வாழ்ந்திருந்த நேரத்தை விட விறைத்திருந்த நேரங்களே அதிகமென்றார்.
ஒரு கட்டத்தில் வெளிநாட்டு வாழ்க்கை வெறுத்து IMO மூலமாக ஊர் திரும்பியிருக்கிறார்.
வெளிநாடு போவதற்கு பட்ட கடனையும், தங்கைகளுக்கு கலியாணத்தையும் செய்ய வெளிநாடு தனக்கு உதவியிருந்தாலும், அது கற்பித்த பாடங்களே தனக்கு பிச்சையெடுத்தென்றாலும் ஊரிலே வாழ் என்று உபதேசம் பண்ணியதாம்.
ஊர் வந்து, ஹோட்டேல் மனேஜ்மன்ட் படித்து, தற்போது விடுதி முகாமையாளராக வாழ்வதாயும், வருமானம் சிறிது என்றாலும், வலியில்லாத வாழ்க்கை வாழ்வதாய் சொன்ன போது அவரின் முகத்தைப் பார்த்தேன், உண்மையின் உண்மை தெரிந்தது அவர் முகத்தில்.
.
நடந்து வந்த பாதை..... கடந்து போன காலம்.....பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteமிகவும் அருமை. வாழ்க்கையை நன்றாக் உணர்ந்திருப்பார். துணிந்து முடிவெடுத்து இருக்கிறார்