தமிழ்மண     நட்சத்திரவாரத்திற்காக (ஜூலை 19 - 26.   2010) எழுதப்பட்ட ஆக்கம் இது
................................................................................................
அதிகமாய்   மனிதர்கள் என்னைக்  காயப்படுத்துவதில்லை... நானும் அதையே முயற்சிக்கிறேன்   என்று தான்  நினைக்கிறேன். ஆனால் சிலருக்கு மட்டும் கடவுள் மற்றவரை   காயப்படுத்து என்று  அருள் கொடுத்திருக்கிறாரோ என்னவோ அந்தளவுக்கு பாடாய்ப்   படுத்துவார்கள்.
(ஒரு ஊர் தளபதிக்கு அந்த ஊர் ஜனாதிபதி   மாதிரி என்று வைத்துக்  கொள்ளுங்களேன்)
எனக்கும், வேறு   சிலருக்கும் அந்த அருள் கிடைத்திருக்கிறது என்றே எண்ணத்  தோன்றுகிறது    எங்கள் நடவடிக்கைகள்.
நாம்,
ஆளை ஆள் கண்டால்
நாயும்   கல்லும்
என்பதற்கு
உதாரணமாய் இருக்கிறோம்.
மனிதனாய்   அவர் கல்லை எடுக்க நான் நாயாயும் ..
அப்புறமாய்
நான் மனிதனாகி   கல்லைத் தூக்க அவர் நாயாய் ஓடுவதும்.
மனது வெந்துவிடும் வேதனைய்யா   அது.
அந்த சிலரைக் கண்டால் மட்டும் எனக்கு இன்னமும் bp   ஏகத்துக்குமாய் எகிறி..  தோலை பிய்த்துக்கொண்டு ரத்தம் வந்துவிடுமோ என்ற   பயமேற்படுகிறது. பாரத்தை  இறக்கிவைத்து ஆறுதலாய் இருப்போம் என்றால்...   மனக்குரங்கு ஈகோ என்னும்  மரத்தில் தாவித்திரிகிறது கொப்புக் கொப்பாய்.
சில   வேளை அவர்கள் ராமர் side ஆகவும் நான் ராவணன் side ஆகவும் இருந்தோமோ    முற்பிறப்பில்? என்ற சந்தேகமும் வருகிறது.
இந்தப் பிறவியிலும் நான்   தான் ராவணன்.. (ஆதாரங்கள் தேடுபவர்கள் ராமாயணம்  படியுங்கள்)
45   வருட வாழ்பனுபவத்தில் நெற்றியில் சில கோடுகள் வந்து குந்திவிட்டன.
அது   முதிர்ச்சி வந்து விட்டதற்கான அறிகுறி என்பதை என்னால் தற்போது ஏற்றுக்    கொள்ள முடியவில்லை
காரணம்
முதிர்ச்சி வந்தால் வெறுப்பு   வராதாமே?
(அப்ப நான் யூத்?.. இருக்கலாம்)
மனசே   ரிலாக்ஸ் படித்தேன்.. அவர் சொல்வது நன்றாகத்தானிருக்கிறது வாசிக்கும்  போது   மட்டும்.
நிஜவாழ்வில் அதை நான் விரும்பினாலும் குறிப்பிட்ட சில   ஜீவன்களுக்கு மட்டும்  என்னால் அன்பு காட்டவே முடியாதிருக்கிறது. குரூரம்   வற்றாத ஊற்றாய் ஊறி ஊறி  வருகிறது அவர்கள் குரல் கேட்டாலே..
மனிதனா   நீ என்று கேட்கிறது மனச்சாட்சி? மெளனமே எனது பதில்.. மௌனம்   சம்மதத்திற்கு  அறிகுறியல்லவா?
என் மனச்சாட்சி என்னால் கொலை  கொலைசெய்யப்படுகிறது  இவர்களைக் காணும் போது  மட்டும்.
 ஆக ஒரு  கொலைகாரன் என்பதும்  புரிந்து தான் இருக்கிறது இந்த 45 வருட  அனுபவத்தில்.
பால்யத்தில்   உலகத்தையே திருத்த முற்பட்ட முட்டாளாய் இருந்தேன். மனிதர்களை    வெறுத்தவர்களுக்கு உபதேசம் பண்ணியிருக்கிறேன். தற்போது முட்டாளாய்    முட்டாள்களுடன் இருக்கிறேன். உபதேசம் பக்கமே தலைவைப்பதில்லை.
நிர்வாணமான   ஊரில் உடையுடன் நடமாடினால் சிக்கல் அல்லவா.. அது தான். (நீ  மட்டும் என்ன   சுத்தமானவனா என்று சண்டைக்கு வராதீர்கள்.. நான்  சுத்தமானவனில்லை  என்பதைக்  சொல்வதற்காகவே நான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்)
எனக்கு   போதி மரமாய் இருந்து தேவைக்கு அதிகமாகவே போதித்திருக்கிறார்கள்,  நான்   ”வெறுப்பவர்கள்”. மேலதிகமாய் போதிப்பவர்கள் இனியும் எனக்கு வேண்டாம்    என்கிறது மனது. வயதாகிவிட்டது இனியும் படித்து என்னத்தை வெட்டிக்கிழிக்கப்    போகிறேன். முதியோர் கல்வி என்றும் ஒன்று இருக்கிறது தான்.. அந்த நேரம்    வரும்போது அதைப்ப்ற்றிச் சிந்திக்கலாம்.
என்ன தான்   கோபதாபமிருந்தாலும்
எனக்கு என்னை அறிய உதவிய இந்த போதிமரங்களுக்கு
நன்றி   சொல்லாமல் இருக்க முடியவில்லை..
எந் நன்றி   கொன்றார்க்கும் உய்வுண்டாம்., உய்வில்லையாம் செய் நன்றி கொன்ற  மகர்க்கு   என்கிறதல்லவா குறள்?
ஏற்கனவே சேர்த்து வைத்திருக்கும்   பாவத்துக்கு அளவில்லை. .அத்தோடு இது  சேர்ந்தால் மீண்டும் ஒரு பாவப்பட்ட   ஒரு பூமியில் பிறக்க வைத்து விடுவார்கள்  மேலுள்ளவர்கள்.. வேண்டாமய்யா   வில்லங்கம்.
வெறுப்பு எங்கு இருக்கிறது, எப்படி   வாழ்கிறது, எப்படி வித்திடுகிறது?  தெரிந்தால் சொல்லுங்கள்.. அறிய   ஆவலாயிருக்கிறேன்.
வீட்டில், ஊரில், நகரத்தில், நாட்டில் என்று   வெறுப்பு தன்னிஸ்டத்துக்கு  வளர்ந்து திரிகிறது போலிருக்கிறது. அதனாலோ   என்னவோ நம்மில் பலர் நிம்மதியை  தொலைத்திருக்கிறோம்.
நீருயர   வரம்புயரும், வரம்புயர நெல்லுயரும் என்பது போலிருகுகிறது  வெறுப்பும்.   உங்களுக்கும் அப்படியாய்த்தான் இருக்கும்.. மனதுடன்  பேசிப்பாருங்கள்.
எனது   இறந்தகாலத்தை திரும்பிப் பார்க்கிறேன். பலருடன்  வெறுப்பிருந்திருக்கிறது   எனக்கு. முதலில் ஞாபகம் வருபவர் ஒரு நண்பன் (பெயர்  மறந்து விட்டது)   பள்ளிக்கூடத்தில் பிஸ்கட் சீட்டு போட்டதால் வந்தது  வெறுப்பு (சீட்டு   என்றாலே பிரச்சனை தான்). ஒரு நாளைக்கு 2பிஸ்கட்  குடுத்தால் வெள்ளிக்கிழமை 8   திரும்பிவரும். நண்பர் 7 தான் தந்தார். அதிலும்  2 உடைந்திருந்தது.
(1)   பேச்சுவார்த்தை முற்றி கைகலத்த போது நண்பனுக்கு உதவியாய் பிராந்திய    வல்லரசுகள் உதவிக்கு வந்ததால் சில சிராய்புக்களுடன் தப்பி வாழ நேர்ந்தது    எனக்கு.
வெறுப்பைக்காட்டுவதில் தான் எத்தனை விதங்கள்
வார்த்தையால்
கண்ணால்
முகபாவனையால்
செய்கைகளால்
குரலால்
ஏன்   மௌனத்தினாலும் வெறுப்பை உமிழ முடிகிறதே எமக்கு. தலைசிறந்த நடிகர்கள்    வெறுப்பை உமிழ்பவர்கள்
மிருகங்களுக்கும் வெறுப்பு   வருகிறது. எங்கள் வீட்டு நாய்க்கும் புனைக்கும்  இடையில் ”கெமிக்கல்” ஒத்து   வந்ததில்லை ஒரு நாளும். நாய் பல் வைத்தியரிடம்  பல்லை காட்டுபவன் மாதிரி   உர்ர்ர்ர்ர் என்று சத்தமிட்டு பல்லைக்காட்ட,  பூனையோ பாம்பு போல சீறும்.   பின்பு இரண்டும் ஆளுக்கு ஆள் குண்டியைக்  காட்டிக்கொண்டு வந்த வழியே   திரும்பிப்போகும்.
நம்ம வீட்டு நாய் பக்கத்துதெருவுக்கு   போனாலும் இனம் தன்னினத்தை வெறுப்பதை  பார்க்கலாம் அல்லது கேட்லாம்.
இப்படி   வெறுப்பு அங்கும் தனது இருப்பை நிறுவியிருக்கிறது.
சிலருக்கு   வெறுப்பு முத்திப்போய் அடி தடி, ஆஸ்பத்திரி என்றும் முடியும்.
சிலர்   ஜெயிலுக்கும் அனுப்பப்படுவார்கள்..
கொலையிலும் முடிவதுண்டு
வெறுப்பு   மோதலாகி பிறகு காதலாகி கசிந்து கண்ணீராயும் ஓடும்  தமிழ்ப்படங்களில்
சில   பெரிசுகளுக்கு வெறுப்பின் மேல் விருப்பு வருவதால் உலகமாகாயுத்தங்களும்,    பிராந்திய, உள்நாட்டு யுத்தங்களும் வந்து போகும்
வெறுப்புகளிலும்   பல வகைகள் இருக்கின்றன..
நான் சிறுனாயிருந்த போது   சிவாஜி ரசிகர்களை வெறுத்தேன்.
77 எலெக்சனில் ராஜதுரையை வெறுத்தேன்   (காசி அண்ணணுக்காய்.... ஆனால்  இருவரும்  ஒரே கட்சி என்பது தான் அதில்   முக்கிய பாயின்ட்)
சர்மா சேரின், பிரின்ஸ்சேரின் அடியை வெறுத்தேன்
80   களில் பெண்கள் பஸ்ஸை முந்தாமல் போகும் கிழட்டு ட்ரைவரை வெறுத்தேன்
பதன்ம   வயதில் அப்பரை வெறுத்தேன்
இவை பெரிய பிரச்சனையைத் தராத   கடந்து போகும் வெறுப்புகள்
ஆனால்
உரிமைப்பிரச்சனை
காணிப்பிரச்சனை
காதல்   பிரச்சனை
பணப்பிரச்சனை
குடும்பப்பிரச்சனை போன்ற  வெறுப்புக்கள்
ஒரு  சந்ததியில் இருந்து அடுத்ததுக்கும் மாறக் கூடிய  சக்தி பெற்றவை
வெறுப்பு
சந்ததி  விட்டு சந்ததி மாறும் போது
வெறுப்பின்  காரணம் தெரியாமலே
ஒருவர்  மற்றவரை வெறுக்கும் கூத்தும் நடக்கும்
வெறுப்பு   நட்பையும் உருவாக்கும் என்பதை அறிந்ததுண்டா?
எதிரியின் எதிரி  எனக்கு  நண்பன் என்னும் கூற்று அதை நிருபிக்கிறதே.
வெறுப்பு   எப்போது தோன்றியிருக்கும்?
அதற்கு எனன வயதிருக்கும்?
எனக்குத்   தெரிந்த ஒரு வெறுப்புக்கு வயது, இந்த வருடத்துடன் 2010 ஆகிறது
என்ன   புரியவில்லையா?
பிறந்திருந்த யேசுவை கொல்ல அந்த மன்னன்
ஆட்கள்   அனுப்பிய
கதையைத் தான் சொல்ல வருகிறேன்.
இதைவிட   வயதானது வெறுப்பு என்கிறது ”வல்காவிலுருந்து கங்கைவரை” என்னும்  புத்தகம்..   அதில் இருக்கும் வெறுப்பு ஏறத்தாள கி.மு 4500 ஆண்டுகளுக்கு  முன்னானது..
மனிதர்களுக்கும்   மிருகங்களுக்கும் மட்டும் தான் வெறுப்பு வரும் என்றில்லை
சமயங்களுக்கும்,   அரசுகளுக்கும் வரும், இயற்கைக்கும் வரும்
மதம் மாறாத   சமணர்களை கழுவிலேற்றியதும்
வாளா? பைபிளா? என்று கேட்டதும்
சமயம்   தானே.
பொஸ்னியா, ருவான்டா, ...... போன்ற சில நாடுகளின்   அரசுகளும் வெறுப்பை தன்  மக்கள் மீது காட்டியிருக்கின்றன. 2ம் உலகமகா   யுத்தம் இதைவிடக் கொடியது.
இயற்கை தனது வெறுப்பை   இயற்கைச்சீற்றங்களாக வெளிக்காட்டிக்கொள்கிறது
இப்படி   எங்கும் இருக்கும் வெறுப்பை
நான் மட்டும் எப்படி என்னிடம் வராதே   என்பது?
இயற்கையை மீறுவது போலாகாதா, அது?
வெறுப்பினால்
(2)   மனிதம் கொன்று மிருகம் வளர்த்திருக்கிறேன்
இன்று வரை.. இனியும்   நடக்கலாம்
நான் சுகமாயில்லை என்பதை அறிந்துகொள்ளுமளவுக்கு   நான் சுகமாயிருக்கிறேன்
என்பதே போதுமானதாயிருக்கிறது எனக்கு..
எனவே
மிருகம்   கொன்று
மனிதம் வளர்த்து
சற்றே சுயத்தை சுத்திகரிக்க   முயற்சிக்கிறேன்
அதன் முதற் படி தான் இது
தயக்கமென்ன   தோழா?
நான் நிற்கும் முதற்படியில்
எக்கச்சக்கமாய்   இடமிருக்கிறது
யாரும் ஏறிநிற்கலாம்
புரிந்ததா   ஏதும்?
---------------------------------------------
(1)    சஞ்சயன் மகாபாரதத்தில் பேச்சுவார்த்தைக்கு போனவன். நம்ம பெயரும்  சஞ்சயன்   தானே
(2)  இரவல் வாங்கிய வார்த்தைகள்
. 

 
 
No comments:
Post a Comment
பின்னூட்டங்கள்