மரணம் இல்லாத வீடு

மரணத்தின் அருகே பலமுறை உட்கார்ந்திருந்திருக்கிறேன். அவற்றில் முதலாவது எனது தந்தையுடையது. மட்டக்களப்பு பெரியாஸ்பத்திரியில் கறள் பிடித்து, வண்ணம் மங்கியிருந்த இரும்புக் கட்டிலில் படுத்திருந்தபடி, நெஞ்சை உயர்த்தி உயர்த்தி காற்றைத் தேடிக்கொண்டிருந்தார் அப்பா. என்னை அணைத்திருந்த அம்மாவை நிமிர்ந்து பார்த்தேன். “தேவாரம் படி, அப்பா இனி இல்லை” என்றார் எனது காதுக்குள். கைகளைக் கூப்பி "ஐந்து கரத்தனை..." என்று மனதுக்குள் முணுமுணுத்தேன். அப்பா காற்றைத் தேடுவதை நிறுத்திக்கொண்டார்.


அதேபோல் அம்மாவின் இரட்டைத் தங்கையின் இறுதி மூச்சும் அவரருகே உட்கார்ந்திருந்தபோது நின்றுபோனது.

எங்களை வளர்த்த ஒரு சிங்களப்பெண் எங்கள் வீட்டில் ஏறத்தாழ நாற்பது வருடங்கள் வாழ்ந்திருந்தார். தாயிலும் மேலான தாய் அவர். விழுந்து காயப்பட்டிருந்த அவரை எனது மடியில் தாங்கியிருந்தபோது அவரது உயிர் பிரிந்தது.

மூத்தோர் இல்லங்களில் பணிபுரிந்த பொழுதுகளில், சிலரின் இறுதிக் கணங்களில் அருகே நின்றிருக்கிறேன். உதவ முடியாது என்பதை உணர்ந்த நிலையில், அவர்களது கண்களைச் சந்திப்பது என்பது இலகுவானதல்ல.

பல பத்து வருடங்களுக்கு முன்பொரு நாள் 82 வயதான மூதாட்டியின் அருகே உட்கார்ந்திருந்தேன். எலும்புடன் ஒட்டிய தோல், குழிவிழுந்த கண்கள். வெளிறிய முகத்தில் கரு நீல நிறத்தில் நாளங்கள் புடைத்துத் தெரிந்தன.

கண்கள் மூடியிருக்க நினைவினை இழந்திருந்தார். காய்ந்துபோயிருந்த வாயினைக் குளிர் நீரில் நனைத்த பஞ்சினால் ஒற்றியெடுத்தேன். நீண்ட ஆறுதலான மூச்சொன்றை விட்டார். அண்மையில்தான் விழுந்து தொடையெலும்பு முறிந்திருந்தது. சில நாட்களாக மெது மெதுவாக நடக்கத்தொடங்கியிருந்தார். ஆனால், திடீரென்று சுகயீனமுற்றதனால் படுத்திருக்கிறார். இதயத்துடிப்பு பலவீனமாகவும் குறைவாகவும் இருந்தது.

கணவருக்குச் செய்தியை அறிவிப்பதற்கு முயற்சித்தோம். அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. கைத்தொலைபேசி இல்லாத காலம். முன்மதிய நேரத்தில் கணவர் வந்தார். வந்தவருக்குப் பெரும் அதிர்ச்சி. அப்பெண்ணின் அருகில் உட்கார்ந்திருந்து அவரது தலையை நீவிவிட்டபடியே உட்கார்ந்திருந்தார். அவர்களைத் தனியே விட்டுவிட்டு வெளியேறினேன்.

மதியம்போல் அவருக்குக் காப்பி எடுத்துச்சென்றபோது அப்பெண்ணின் கையில் தலையைவைத்து அழுதுகொண்டிருந்தார்.

மெதுவாக அவரது தோளில் கையைவைத்தேன். நிமிர்ந்து பார்த்துத் தேம்பினார். அருகே இருந்து அணைத்துக்கொண்டேன். “இவளை இப்படி என்னால் பார்க்க முடியாதிருக்கிறது” என்றவரிடம் காப்பி குடியுங்கள் என்று குவளையை நீட்டினேன். “நன்றி” என்று வாங்கிக்கொண்டார்.

சூடான காப்பி அவருக்கு ஆறுதலாக இருந்திருக்க வேண்டும். முழுவதையும் குடித்துமுடித்துவிட்டு…

“இவளை இப்படிப் பார்ப்பது எனக்கு எனது முதலாவது மனைவியை நினைவூட்டுகிறது. அவளும் இப்படித்தான் மூச்சுப்பேச்சின்றி இரண்டு நாட்கள் இருந்து இறந்தாள். அப்போது அவளுக்கு 30 வயது. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான பின்பும் அந்த நாட்களை என்னால் மறக்க முடியவில்லை”

மனிதர்கள் தங்களை மறந்து பேசும்போது அவர்களைப் பேச விட வேண்டும் என்பதால், அவரது கதைகளுக்கு "ம்… "போட்டுக்கொண்டிருந்தேன்.

அவரது கண்கள் கலங்கியிருந்தன. குரல் தழுதழுத்தது.

“அவள் இறக்கும்போது நாம் திருமணம் முடித்து இரண்டு வருடங்கள்."

“ம்”

“அதே வருடம் எனது தம்பியும் விபத்தொன்றில் இறந்துபோனான். அம்மாவும் அப்பாவும் புற்றுநோயினால் இறந்துபோனார்கள். மிகவும் நொடித்துப்போயிருந்த என்னை மீட்டு எடுத்தவள் இவள். இவளுடன் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்திருக்கிறேன். இப்போது இவளும் போய்விடுவாளோ என்று பயமாக இருக்கிறது”

“வாருங்கள் வெளியே சென்று வருவோம்” என்று அழைத்தேன். எழும்பியவரால் சமநிலையைப் பேண முடியவில்லை. தள்ளாடினார். அவரைப் பிடித்துகொண்டேன். எனது கையை இறுகப்பிடித்தபடியே நடந்தார்.

வெளியே உட்கார்ந்திருந்தபோது “எனக்குப் புரஸ்ட்ரேட் புற்றுநோயிருக்கிறது” இன்னும் எத்தனை காலம் உயிரோடிருப்பேன் என்று தெரியாது. இவளுக்கும் நான் அதைச் சொல்லவில்லை” என்றுவிட்டு மௌனமானார்.

நான் அவரது முதுகை ஆறுதலாகத் தடவிவிட்டேன்.

“உங்கள் குழந்தைகளுக்குத் தெரியுமா?“

“இல்லை, எமக்குக் குழந்தைகள் இல்லை. இவளை இப்படிப் பார்க்க என்னால் முடியாதிருக்கிறது. இறந்துவிடுவாளோ என்று பயமாக இருக்கிறது. ஏறத்தாழ ஐம்பது வருடங்கள் மரணம் என்னருகே வரவில்லை. நானும் அதன் நீண்ட கரங்களை மறந்துவிட்டிருந்தேன். ஆனால், இப்போது அது மீண்டும் நெருங்கிவருகிறது போலிருக்கிறது” என்று சொல்லி அழுதார்.

“வைத்தியர் அப்படி எதையும் எங்களிடம் சொல்லவில்லை. சற்று பலவீனமாக இருக்கிறார் என்றுதான் சொன்னார்” என்று ஒரு பொய்யை அவருக்குச் சொன்னேன். அவருக்கு அது ஆறுதலாக இருந்திருக்க வேண்டும்.

“அப்படியா சொன்னார். கடவுளே! நன்றி”

“வாழ்வு எப்போதும், தான் தற்காலிகமானது என்பதை எமக்கு மரணங்களின் ஊடாகத்தானே அறிவிக்கிறது. இல்லையா?” என்றேன்.

நிமிர்ந்து பார்த்து… “புரியவில்லையே” என்றவரிடம் -

“நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது. நீங்கள் பெரியவர். உங்களவு வாழ்வனுபவம் என்னிடம் இல்லை. ஆனால், நீங்கள் கலங்குவதைக் காணும்போது வருத்தமாக இருக்கிறது. எங்களுக்குப் பாடசாலையில் புத்தர் மரணம்பற்றிப் போதித்த கதையைக் கற்பித்தார்கள். உங்களுக்கும் அது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்” என்றுவிட்டு நிறுத்தினேன்.

‘கீழைத்தேய நாட்டவர்களிடம் இப்படியான பல கதைகள் இருக்கின்றன என்று தெரியும் ஆனாலும் எனக்கு அவற்றில் அதிக நாட்டமிருந்ததில்லை. இருப்பினும், இப்போது அந்தக் கதையைக் கேட்க ஆர்வமாயிருக்கிறேன். சொல்”

“நான் இறை நம்பிக்கை உடையவன் அல்லன். ஆனால், யதார்த்த வாழ்க்கையைப் பேசும் கதைகளில் ஆர்வமுள்ளவன்”

“அப்படியா? நான் கிறிஸ்தவன். கடந்த ஞாயிறும் தேவாலயத்திற்குச் சென்றிருந்தேன். நீ ஏன் உன் மதத்தைப் பின்பற்றுவதில்லை.”

“எனக்கு எதற்கும் விளக்கம் அவசியம். புரியாதவற்றை 'அவை அப்படித்தான்' என்று ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. சடங்குகளை மேற்கொள்வதுதான் மதப்பற்று என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது. எனவே, அன்பையும் மனச்சாட்சியையும் அடிப்படையான நெறிகளாகக் கொண்டிருக்கிறேன்”

“வித்தியாசமாக இருக்கிறது உனது விளக்கம். புத்தரின் அந்தக் கதையைச் சொல்”

”ஒரு கைம்பெண் தன் குழந்தை இறந்தபோது அதை உயிர்ப்பித்துத் தருமாறு புத்தரிடம் கேட்கிறார். புத்தர் அவரிடம் “ஊரில் மரணம் நடைபெறாத ஒரு வீட்டிலிருந்து கடுகு வாங்கி வா, உன் குழந்தையை உயிர்ப்பிக்கிறேன் என்ற நிபந்தனையை முன்வைக்கிறார்”

“கடுகு என்றால் என்ன?”

“உணவுப்பொருள். வாசனைப் பொருள் என்றும் கொள்ளலாம்”

“ம்”

“அப்பெண் ஊரெல்லாம் அலைந்தும் மரணம் நடைபெறாத வீடு ஒன்றையேனும் கண்டுபிடிக்க முடியாது திரும்பும்போது அவளுக்கு மரணம் அனைவருக்குமானது என்பது புலப்படுகிறது”

எனது தோளை இறுகப்பற்றிக்கொண்டார். அதன்பின் நாம் அதிகம் பேசிக்கொள்ளவில்லை.

அன்று இரவுவரை அப்பெண்ணின் அருகிலேயே இருந்தார் என்று மறுநாள் அறிந்தேன். மறுநாள் காலையிலேயே வந்து அப்பெண்ணருகே உட்கார்ந்திருந்தார்.

அடுத்த நாள் அப்பெண்ணுக்கு நினைவு தவறிக்கொண்டிருந்தது.

அன்றும் காப்பி எடுத்துப்போனேன். எனது கைகளைப் பற்றியபடி என்னையும் உட்காரச் சொன்னார்.

அவரது முகத்தில் முன்பிருந்த இயலாமையும் சோர்வும் களைப்பும் குறைந்து நிதானித்திருப்பது போன்று உணர்ந்தேன்.

வெளியே முகில்களற்ற வானம் நீலமாய் விரிந்திருந்தது. மெதுவான காற்றிற்கு மரங்கள் அசைந்துகொண்டிருந்தன.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்