பேரன்பின் சுவை

1980களில் ஏறாவூரில் வாழ்ந்திருந்த காலத்தில் எமது சாம்ராஜ்யமாகச் செங்கலடி இருந்தது. எங்கள் பதின்மக் காலத்தின் காதல் மற்றும் வீரபராக்கிரமக் கதைகளும் இந்த ஊர்களைச் சேர்ந்தவைதான்.


இக்காலத்தில் ஆங்கிலத்தில் buddies என்பதற்கு உதாரணமாகக் கூறப்படுவது போன்று எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். பதினொரு குழந்தைகள் கொண்டது அவர்களது வீடு.

காலையில் சென்று, கிடந்து, விளையாடி, மாலை வருவேன். பல நாட்கள் அங்கு தூங்கி எழுந்து வந்ததும் உண்டு. அம்மாவுக்கும் எங்கு நிற்பேன் என்று தெரிந்திருப்பதால் கவலைப்படமாட்டார். அவர்கள் வீட்டில் நான் ஒரு மகன். எனது அம்மாவுக்கு அவர்கள் வீட்டில் 11 குழந்தைகள். நெருக்கமான குடும்ப உறவு.

நண்பனின் தாயார் காலையில் குளித்து, சாமியறையில் மணியடித்துக் கும்பிட்டு, திருநீறு தரித்து , சந்தனப் பொட்டின் கீழ் குங்கும் இட்ட பின்பே வேலைகளைத் தொடங்குவார். அங்கு தங்கியிருக்கும் நாட்களில் அந்த மணிச் சத்தத்தில் கலையும் எங்கள் துயில்.

அவரது காலைத் தேநீரின் சுவை இன்னும் ஆழ்மனதில் ஒட்டிக்கிடக்கிறது. “சஞ்சயன் இஞ்சித் தேத்தண்ணி போடவா?” என்றபடி, இதமான குடிக்கத் தக்க சூட்டில், காரமான தேயிலைச் சுவையுடன், சீனி சற்று அதிகமாக் கலந்து தருவார். பிலாக்கொட்டையிட்ட காரமான அவரது முருங்கைக்காய் குளம்பும் நினைவிருக்கிறது.

நண்பனும் நானும் இன்னும் சில நண்பர்களும் 1985ஆம் ஆண்டு சென்னைக்குக் குடிபெயர்ந்தோம். 1987இல் நோர்வேக்கு வந்து சேர்ந்தேன். நண்பன் கனடா சென்றான். பெற்றோரும் புலம் பெயர்ந்துவிட்டனர்.

நான் நேற்று கனடா வந்தேன்.

நம்புவதற்கு சிரமாகத்தான் இருக்கும், கடந்த 35 வருடங்களில் நண்பனும் நானும் இரண்டாவது தடவையாகச் சந்தித்துப் பேசியது நேற்றிரவு.

அவனது பெற்றோரின் வீட்டில் தங்கியிருக்கிறேன். காலத்தின் செலவு அவர்களில் தெரிகிறது. என்னைக் கண்ட அவர்களின் முகத்தில் அத்தனை ஈரம்.

இப்படியான கணங்கள் வாழ்வின் வரம்.

புதைந்து கிடக்கும் நினைவுகளைக் கிண்டுவதில்தான் எத்தனை எத்தனை ஆனந்தம்!

மூத்தோரின் நினைவுகளின் அனைத்து இடுக்குகளிலும் புழுதியும், சேறும், குச்சொழுங்கைகளும், வீதிகளும், நிலங்களும், வயல்களும், ஆலயங்களும், மனிதர்களும், அவர்தம் கதைகளும் படிந்து கிடக்கின்றன. எங்கள் குறும்புகளையும் அட்டகாசங்களையும் நேற்றைய நாள் போன்று நினைவினில் வைத்திருக்கிறார்கள்.

இரவு முழுக்க ஊரை அழைத்து வைத்துப் பேசிக்கொண்டிருந்தோம். போராட்டம் அழைத்துப்போன பலர் உயிருடன் வந்து போனார்கள்.

இலங்கையின் கிழக்கே, ஆர்ப்பாட்டமற்ற ஒரு சிற்றூர், உடைந்த அரிசி மூட்டை போன்று உலகெங்கும் சிதறிக்கிடக்கிறது. ஒவ்வொரு மணியாய் எடுத்துக் கோர்த்து மகிழ்ந்தோம். நீரும் நெருப்புமாய் நினைவு ஊடாடியது.

அதி நீண்ட இரவு. மனமின்றி உறங்கப்போனோம்.

அதிகாலையில் நேர மாற்றம் காரணமாக 5 மணிக்கே எழுந்திருந்தேன். நண்பனின் பெற்றோர் உறங்கிக்கொண்டிருந்தனர்.

பசித்தது…

எனது வீடுபோல் நினைத்து, குளிர்சாதனப் பெட்டியினைக் கிண்டினேன். பிட்டும் முருங்கைக்காய் கறியும் இருந்தது. கதிரியக்கில் சூடாக்கி, பிட்டுடன் முருங்கைக்காய் கறியைக் குழைத்து உண்டேன்.

ஏறத்தாழ 40 வருடங்களுக்கு முன் உண்ட அதே பிலாக்கொட்டை கலந்த, புளிப்பு, உவர்ப்பு, காரம் என்று சற்றும் மாறாத சுவை. கண்ணை மூடி ருசிக்கும்போது சாமியறையில் மணியடித்துக் கேட்டது. ஓரிரு நிமிடங்களில் திருநீற்றுப் பூச்சுடன், சந்தனப் பொட்டின் கீழ் குங்குமத்துடன் படிகளில் இறங்கிவந்து…

“சஞ்சயன் இஞ்சித் தேத்தண்ணி போடவா?” என்றார். குரலில் அதே வாஞ்சையும் அன்பும்.

தேநீரை உறுஞ்சினேன்.

40 வருடத்திற்கு முன் கிடைத்த அதே தேநீர். குடிக்கத் தக்க சூடு, காரமான தேயிலை, சற்று அதிகமான சீனி.

இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். சமையலறை பெரும்பாடுபடுகிறது.

பெற்றால்தான் பிள்ளையா?

வாழ்வின் கொடுப்பினை இப்படியும் வரலாம்.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்