வாழ்வு பேசிக் கடப்பதற்கே!

 

சாண்டியாகோ டி கம்போஸ்டெலா நோக்கி மூன்று முறை யாத்திரை சென்றிருக்கிறேன். ஒவ்வொன்றும் சராசரி 800 கி.மீ. தூரம். இந்தத் தேவாலயத்தை நோக்கி நடப்பதற்கு ஸ்பெயின் நாட்டினுள் மட்டும் பல பாதைகள் உண்டு. இதில் ஏழு பாதைகள் யாத்திரிகர்களுக்கு உரிய வசதிகளைக் கொண்டிருக்கின்றன. இதைவிட பல பாதைகள் அநேகமான ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இருக்கின்றன. யேசுநாதரின் ஊரில் இருந்தும் ஒரு பாதை இருக்கிறது. அது ஏறத்தாழ 5000 கிமீ தூரமானது. அங்கிருந்து நடந்தவர் ஒருவரையும் நான் சந்தித்திருக்கிறேன்.

எனது வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வுகளைப் பட்டியலிட்டால், இந்த மூன்று யாத்திரைகளும் முக்கியமானவை. ஆனால், மூன்று முறையும் வாழ்வு விதித்துவிட்ட பெரும் அயர்ச்சியில் இருந்து மீண்டுகொள்ளவே நடக்க ஆரம்பித்தேன்.

பெரும் துன்பத்திலிருந்து மகிழ்ச்சிக்கு வழி கிடைத்திருப்பது எத்தனை பெரிய முரண் என்று பார்த்தீர்களா? 'துன்பம் தொடர்ச்சியானது அல்ல என்பதும், அதை மகிழ்ச்சிக்கான படிக்கட்டாகக் கொள்' என்பதும் இந்த யாத்திரைகள் கற்றுத்தந்த பெரும் பாடம்.

இதைவிட, இந்த நாட்களில் சந்தித்த மனிதர்கள் கற்றுத் தந்தவை ஏராளம். அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டளவிற்கு கொடுத்திருக்கிறேனா என்பது சந்தேகமே. யாத்திரிகர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்கள் மனதுக்குள் சுமக்கும் பெருவலிகளை ஏதோ ஒரு வழியில் கடந்துகொள்ளலாம் என்ற நம்பிக்கையிலேயே நடக்கிறார்கள். நானும் அப்படித்தான்.

பிரான்ஸ் தேசத்தின் தெற்கு எல்லைக்கு அப்பால் ஸ்பெயின் நாட்டில் பம்பலூனா (Pampalona) என்று ஒரு நகரம் இருக்கிறது. நகரத்தின் வீதிகளில் எருதுகளை ஓடவிட்டு அவற்றை மக்கள் கலைத்துக்கொண்டு ஓடும் பெருவிழாவொன்று வருடம் தோறும் அங்கு நடைபெறும். இந்த விழாவை சான் ஃபெர்மின் (San Fermín) விழா என்று அழைக்கிறார்கள்.

யாத்திரைக்கான முதல் நாள் நான் பம்பலூனா வந்தடைந்தபோது அந்த விழாவிற்கு சில நாட்கள் இருந்தன. நகரம் விழாக்கோலம் பூண்டுகொண்டிருந்தது. அங்கிருந்துதான் சாண்டியாகோ டி கம்போஸ்டெலா (Stantiago de Compostela) நகரத்தினை நோக்கிய எனது ‘பிரெஞ்சு வழி’ (French Way) என்றழைக்கப்படும் யாத்திரைப் பயணத்தை ஆரம்பித்திருந்தேன்.

பம்பலூனாவில் இருந்து புறப்பட்ட முதல்நாள் பின் மதியத்தில் கடும் வெய்யில் எறித்துக்கொண்டிருக்க, காற்றும் நின்றுபோனது. அந்த அம்மலான காலநிலையில், வேர்வையுடன் நடப்பதில் பெரும் சிரமப்பட்டுக்கொண்டு, இளைப்பாற ஒரு தோதான ஓர் இடத்தைத் தேடிக்கொண்டிருந்தேன்.

அப்பொது வீதியோரத்து மரமொன்றின் கீழே ஒருவர் தனது முதுகுப் பையை இறக்கி வைத்துவிட்டு, உட்கார்ந்திருந்தபடி, தனது சப்பாத்துக்களைக் கழற்றி, கால்விரல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது மூன்று கால்விரல்களில் நீர் கட்டியிருந்தது.

கட்டையான உருண்டையான உருவம். Yes, No, Thank You என்பதும் இன்னும் சில சொற்களும்தான் அவரது ஆங்கிலம். அதைவிட மோசமானது எனது ஸ்பானிஷ் பேரறிவு. கூகிள் மொழிபெயர்ப்பியை உதவிக்கு அழைத்துக்கொண்டேன்.

கால் விரல்களில் நீர் கட்டிக் கிடந்ததால் பல வாரங் களாக நடக்கிறாராக்கும் என்று நினைத்து, “பல நாட்கள் நடந்தால் இப்படித்தான். நீரை அகற்றிவிட்டு, பிளாஸ்திரி போடுங்கள், விரைவில் காய்ந்துவிடும்” என்றேன்.

அவரும் “சீ சீ” (ஓம் ஓம்) என்றார்.

நீரை அகற்றுவதற்கு ஊசியால் குத்திக்கொள்ள அவரால் முடியவில்லை. ஊசி போட்டுக்கொள்ள அஞ்சும் குழந்தை போன்று பயந்து கொண்டிருந்தார். அன்று மாலை எமது தங்குமிடம் வரும் வரையிலும் அவர் நொண்டி நொண்டியே நடந்தார்.

தங்குமிடத்தில் மேலும் இருவர், “நீரை அகற்றினால்தான் நாளை நடக்கலாம். இல்லையேல் நிலைமை மோசமாகும்” என்றபின், நீரை அகற்றுவதற்கு, தூக்கு மேடைக்குச் செல்லும் கைதிபோன்று, பயந்து பயந்து நீர்க்கொப்பளத்தில் ஊசியால் பெரும் பாடுபட்டுக் குத்திக்கொண்டார்.

அதன்பின்னான நான்கைந்து நாட்களாகப் பேபேயுடன் நடந்து கொண்டிருந்தேன். ஆம், அதுதான் அவரது பெயர். மனதுக்கு அவரைப் பிடித்திருந்ததால் மொழி ஒரு பிரச்சினையாகவே இருக்கவில்லை. நகைச்சுவை உணர்வு மிகுந்தவராக இருந்தார்.

ஆனால், அவர் கண்ணில்படும் தேவாலயங்கள் அனைத்திலும், உலகத்தில் உள்ள அனைவரின் துயரயங்களுக்காகத் தானே செபிப்பதுபோன்று 10-15 நிமிடங்கள் முழந்தாளிட்டு முணுமுணுத்துக் கொண்டிருந்ததை என்னால் தாங்க முடியவில்லை.

நாங்கள் நடந்த ஊரில் வழியெங்கும் சந்திக்குச் சந்தி ஒரு தேவாலயம் இருந்தது. அது மட்டுமல்ல, கிராமப்புறங்களில் வீதிக்கு வீதி மாதா சொரூபம் இருக்கும். சில வீதிகளில் இரண்டு இருக்கும். அந்த இடங்களிலும் நின்று நெஞ்சில் சிலுவையை வரைந்துகொண்டு செபிப்பார். எரிச்சலை அடக்கிக்கொண்டு பொறுத்திருந்தேன்.

“அப்படி என்னத்தைத்தான் கடவுளிடம் வேண்டுகிறாய்? அந்தாளுக்கு உனது வேண்டுதல்களை கவனிக்க நேரம் போதாது இருக்கும் போலிருக்கிறதே?” என்றேன்.

அவரது கண்கள் என்னை ஊடுருவிப் பார்த்தன. ஆனாலும் அவர் பதில் சொல்லவில்லை.

மனிதர்களையும் மதங்களையும் அவர்களது சடங்குகளையும் எனக்கு ஒவ்வாதவையாக இருப்பினும், மதிக்கவேண்டும். அது அவரவர்களின் ஆத்தம திருப்திக்கானது. எனது ஆத்ம திருப்திக்காக நான் எதையாவது செய்யவில்லையா? அதுபோலத்தான் இதுவும். எனவே, அதன்பின் நான் அவரிடம் எதுவுமே கேட்கவே இல்லை.

அன்று நவரேட் (Navarrete) என்னும் இடத்தில் இருந்து அசோஃப்ரா (Azofra) என்னும் கிராமத்தை அடைவதே திட்டம். மழை தூறிக்கொண்டிருந்தது. வழியில் கற்களாலான ஒரு செயற்கைக் குகை இருப்பதைக் கண்டு அதற்குள் சென்றேன். பேபே வெளியில் புதினம் பார்த்துக்கொண்டு நின்றார்.

1980களின் நடுப்பகுதியில் இலங்கையின் அரச தொலைக்காட்சிச் சேவையில் இங்கிலாந்தின் எஃப்ஏ கோப்பை (FA Cup) காற்பந்தாட்டக் காணொளிகளைக் காண்பிப்பார்கள். அந்நாட்களில் பிடித்தது லிவர்பூல் (Liverpool) விளையாட்டுக் கழகத்தின் மீதான எனது காதலும் பைத்தியமும். இன்றும் பைத்தியம் அகன்றதாயில்லை. முற்றியிருக்கிறது. ‘You'll never walk alone’ (நீங்கள் ஒருபோதும் தனியாக நடக்க மாட்டீர்கள்) என்பது எமது கழகத்தின் தாரக மந்திரம். உலகப் பிரசித்தமான வாக்கியம் இது. இந்த வாக்கியத்தில் ஆரம்பிக்கும் ஒரு பிரபல பாடலும் உண்டு.

அந்தக் கற்குகைக்குள் வந்த ஒரு லிவர்பூல் ஆதரவாளன் ஒருவன், அந்த வாக்கியத்தைச் சுவரில் எழுதிவிட்டுச் சென்றிருக்க வேண்டும். இந்த யாத்திரைப் பயணத்தில் எவரும் தனித்து நடப்பதில்லை. அத்தனை சக யாத்திரிகர்கள் உங்களைச் சுற்றி நடந்து கொண்டிருப்பார்கள். பேபேயை அழைத்துக் காண்பித்தேன். சிதம்பரச் சக்கரத்தைப் பார்த்தது போல் பார்த்தார். அவருக்கு அது புரியவில்லை.

அன்று எம்முடன் இன்னாரு ஸ்பானிஷ் யாத்திரிகரும் இணைந்து கொண்டிருந்தார். அவருக்கு ஆங்கிலம் கரைபுரண்டு ஓடியது. எனவே, பேபேக்கு லிவர்பூல் கழக வாசகத்தின் அர்த்தத்தைப் போதிக்க நேரம் எடுக்கவில்லை.

அதைக் கேட்டவர்… “நான் ஓர் அட்லேடிகோ மட்ரீட் கழக ஆதரவாளன், உனது கழகத்தை அறவே வெறுக்கிறேன். உனது கழகத்திற்குக் காற்பந்து விளையாடவே தெரியாது” என்றார் நக்கலாக. எனக்குச் சூடாகியது.

நானும் பதிலுக்கு, “உனது கழகத்திற்கு காற்பந்தாட்டம் என்றால் என்ன என்றே தெரியாது. மட்ரீட் நகரத்தில் ரியல் மட்ரீட் கழகம் மட்டுந்தான் பெயர்போனது. உனது கழகம் அவர்களுடன் ஒப்பிடுகையில், மவுசு குறைந்தது. இன்றுதான் உனது கழகத்தைப் பற்றிக் கேள்விப்படுகிறேன்” என்று எள்ளி நகையாடும் குரலில் கூறினேன். யாருக்குத்தான் தனது கழகத்தை மட்டம் தட்டுவதைப் பொறுக்க முடியும்?

“சரி சரி… வெய்யில் தாங்க முடியவில்லை. நீயும் கொதிக்கிறாய். வா ஒரு பியர் குடித்து அனைத்தையும் தணிப்போம்” என்று சமாதானம் பேசினார்.

மறுநாளும், புதிய நண்பர் எம்முடன் நடந்து கொண்டிருந்தார். அன்று மாலை ஓர் உணவகத்தில் நாங்கள் மூவரும் உட்கார்ந்திருந்தோம். உடல் களைத்துக் கிடந்தது. நடக்கத் தொடங்கி சில நாட்கள் ஆகிவிட்டதால், பேபேயால் உடல் உபாதைகள் இன்றி நடக்க முடிந்தது. மங்கிய விளக்குகளின் ஒளியில் சாரளங்களுக்கு அருகில் உட்கார்ந்திருந்தோம். மாலை நேரத்து கருக்கல் ஊரை மூடிவிட்டிருந்தது.

பரிசாரகன் வந்து ”குடிப்பதற்கு ஏதேனும் எடுத்து வரவா?" என்றபடியே உணவுப் பட்டியலை மூவருக்கும் தந்தார்.

பேபே, என்னைப் பார்த்து, "உனக்கு இன்று தெய்வீக பானமொன்றை அறிமுகப்படுத்துகிறேன். எனது நாட்டின் அற்புதங்களில் ஒன்று அது…" என்றுவிட்டு பரிசாரகனிடம், “மூன்று பச்ரான் பானங்கள்” என்றார். பரிசாரகன் சிவப்பு நிறத்தில் ஒரு பானத்தை எடுத்துவந்தார்.

தனது கிண்ணத்தைக் கையில் எடுத்த பேபே, என்னைப் பார்த்து, தனது பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் இணைத்து உதட்டில் வைத்து “ம்ம் மா” சொல்லி பச்ரான் பானத்தின் பராக்கிரமத்தை அறிமுகப்படுத்தினார்.

உரையாடிய படியே, அன்றைய தினம் மறுநாள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொண்டிருந்தோம். நாளை 35 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டும். காலை ஏழரைக்கு ஆரம்பித்தால் மூன்று மணி போல் இலக்கை அடையலாம் என்று தீர்மானித்துக்கொண்டோம்.

மதுசாரத்தில் பல வகைகள் உண்டு. குடித்தவுடன் சுர்ர்… என்று போதை தலைக்கு ஏறுவது ஒரு வகை. அனுபவமான குடிகாரனுக்கு இலகுவில் ஏறாத போதைபோன்று மெது மெதுவாக போதையேறுவது இன்னொரு வகை. ஏறிய போதை உடன் இறங்கும் மது அல்லது பல மணிநேரம் போதையை தக்கவைத்திருக்கும் மது என்று பலவகைகள் இருக்கிறதல்லவா?

பச்ரான் உடனேயே தனது விளையாட்டைக் காண்பித்து, நெடுநேரம் விளையாடிக் கொண்டிருக்கும் வகையானது. மது மனிதர்களை இளகச் செய்யும். கனத்து, புதைந்திருக்கும் இரகசியங்களையும் மிதக்கச் செய்யும் அல்லவா? பேபே இப்படி ஆரம்பித்தார்.

“என்னை ஓர் அனுபவமான யாத்ரிகன் என்றோ, நான் நீண்ட தூரம் நடந்திருக்கிறேன் என்றோ நீ நினைக்கக் கூடாது. நீ என்னை முதன் முதலாகச் சந்தித்தபோது நான் நடக்கத் தொடங்கி ஒரு மணிநேரமும் ஆகியிருக்கவில்லை. எனக்கு நடந்து பழக்கமில்லை. அதுதான் நடந்து ஓரிரு மணிநேரத்தினுள் காலில் நீர்க்கட்டி வந்தது.”

நான் நெற்றியில் கையால் அடித்துக்கொண்டேன். இருவரும் சிரித்தார்கள்.

பேபே பரிசாரகனை அழைத்து மீண்டும் மூன்று விரல்களைக் காண்பித்தார். மூன்று சிவப்புக் கிண்ணங்கள் வந்தன.

“நான் மட்ரீட் நகரத்தில் பிறந்து வளர்ந்த மனிதன். பிரபல வழக்கறிஞர் கம்பனியில் புகழ்பெற்ற வழக்கறிஞன், உயர் பதவியில் இருந்தவன். என் காலின் கீழ் வாழ்வு கொட்டிக்கிடந்தது. தேவையான அளவு பணம், சமூகத்தின் அனைத்து இடங்களிலும் தொடர்பு, அந்தஸ்து, மனைவி… என்று வாழ்ந்திருந்தேன்.

வாழ்வு கொண்டாட்டமாய் இருக்கும்போது, வேலை, வேலை என்று வேலையே கதி என்று கிடந்த நாட்களில், சப்தமற்ற கால்களுடன் நரகம் எனது வீட்டின் கதவைத் தட்டியிருந்ததை, கால்களில் கொட்டிய பணமும் புகழும் வசதி வாய்ப்புக்களும் மறைத்தது. ஓராண்டுக்குள் வாழ்வு புரண்டு விவாகரத்தாகி தனித்துப்போனேன்.”

மேசையில் இருந்த ஆலீவன் காய்களில் இரண்டை எடுத்து வாய்க்குள் போட்டுக்கொண்டார். நானும் ஒன்றை எடுத்தேன்.

“வேட்டைக்கு செல்பவன் அஞ்சினால் என்ன நடக்கும்? பெண்கள் விடயத்தில் நான் மிகவும் வெட்கப்பட்ட மனிதன். அதனாலோ என்னவோ 45 வயதுவரை திருமணம் நடக்கவில்லை.

தனிமையில் அழுந்திக் கிடந்த நாட்களில் அல்முதேனா (Almudena) தேவாலயத்திற்கு தினமும் செல்வேன். அது மட்ரீட் நகரத்தின் பெரிய தேவாலயம்.

ஒரு நாள், முழந்தாளிட்டு செபித்துவிட்டு நிமிர்ந்தபோது, வெள்ளை நிற லேஸ் துணியில் முக்காடிட்டு, முழந்தாளிட்ட நிலையில் ஒரு பெண்ணை எனக்கு அருகில் கண்டேன். என்னைப் பார்த்துப் முறுவலித்தாள். வாய் திறக்காத அந்தப் புன்னகையில் மயங்கிப் போனேன்.

பெற்றோரிடம் இருந்து வெளியேறிய நாளில் இருந்து தனியே வாழ்ந்தவன் நான். அந்நாட்களில் உறக்கம் நிம்மதியாக இருக்காது. ஆழ்ந்த உறக்கத்திலும் ஒரு ஏக்கம் என்னுடன் இருந்தது. முதன்முதலில் அவள் என் மார்பில் உறங்கியபோது நான் என்றுமில்லாத கனவுகள் அற்ற நீண்ட தூக்கத்தினை அனுபவித்தேன்.

வறண்ட நிலத்தில் விழும் மழைத்துளியைப் போல் ஓர் ஆணின் அனைத்துத் துயரையும் உறிஞ்சி எடுப்பதற்கு ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். பெண்ணின்றி ஓர் ஆணால் வாழ முடியாது. பெண்களிடம் இயற்கையாவே ஆற்றுதல்படுத்தும் குணம் இருக்கிறது. தாய்மையின் ஒரு வடிவம் அது.

நீரில் அமிழ்ந்து கொண்டிருப்பவன் கையில் எது கிடைத்தாலும் அதைப் பெரும் நம்பிக்கையோடு பற்றிக்கொள்வதில்லையா? அதுபோன்று, தனித்திருக்கும் மனிதர்களும் கிடைக்கும் அனைத்தையும் வாழ்வு மீண்டுவிட்டது என்ற நம்பிக்கையில் பற்றிக்கொள்கிறார்கள். அதுபோல நானும் அவளைப் பற்றிக்கொண்டேன்.

இன்னொருவர் மீது அளவற்ற அக்கறையைக் காண்பிப்பதும், அவருக்கான அனைத்தையும் தன் தேவைபோல் நினைத்துத் தன்னையே கொடுப்பதும், சதா அவர்களுக்கான நலனை நினைத்திருப்பதும் ஒரு கலை. எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை. அவளுக்கு ஒரு சிறு சங்கடமும் ஏற்படக்கூடாது என்று மனது அடித்துக்கொள்ளும். அதற்கான எதையும் செய்யத் தயாராக இருந்தேன். அவள் துயருற்றால் அதை எனது துயர் போன்று உணர்ந்தேன்.

மாசற்ற தூய அன்பு மட்டுமே அப்படியான அளவற்ற அக்கறையை எப்போதும் கொடுத்துக்கொண்டே இருக்கும் என்று இப்போதும் நம்புகிறேன்.

மனித மனங்கள் வித்தியாசமானவை. ஒவ்வொருவரும் அன்பு காண்பிக்கும் விதம் மனிதருக்கு மனிதர் வேறுபடும் அல்லவா? அதுபோன்று மின்னலைப் போன்று தோன்றும் அன்பு, காலப்போக்கில் மங்கி அகன்றும் போகும்.

கொடுத்த பேரன்பின் சிறுபகுதியையேனும் உரிமையுடன் மீளவும் எதிர்பார்ப்பது முதிர்ச்சி அற்ற மனதின் வெளிப்பாடு. அப்போது மனங்கள் பிரிந்துபோகின்றன. அது நடந்தது.

ஆணுக்கும் பெண்ணுக்குமான அன்பில் கொடுப்பதை எதிர்பார்ப்பதானது, அன்பு என்னும் நிலையைக் கடந்து பண்டமாற்று நிலை என்பதைக் காலம் கடந்து புரிந்துகொண்டேன்” என்றுகூறிவிட்டு… பரிசாரகனை நோக்கி கையை மீண்டும் உயர்த்தினார்.

அவர் மேலும் மூன்று சிவப்புக் கிண்ணங்களை எடுத்துவரும்போது, அவரின் பின்னே இன்னுமொருவர் சில்லுகள் பூட்டியதொரு சிறிய மேசையில் நன்கு வாட்டிய மாட்டின் தொடையிறைச்சி, பொரித்த உருளைக்கிழங்கு, அவித்த மரக்கறிகள், குளிர்நீர் என்பவற்றை எடுத்து வந்து எங்களுக்குப் பரிமாறினார்.

பேபே இறைச்சியை, பூனை பிரியத்துடன் தனது குட்டியை மணந்து பார்ப்பதுபோல் மணந்து பார்த்தார். ஆலிவ் எண்ணையும் ஆப்பிள் சிட்டரும் சேர்த்து முள்ளுக் கரண்டியால் இறைச்சியைக் குத்திப் பிடித்து, கத்தியால் ஒரு துண்டைவெட்டி எடுத்து வாய்க்குள் வைத்துவிட்டு, கண்ணை மூடி… மெய்மறந்து உண்ணத் தொடங்கியபோது, அவரது மூடிய வாய் ஆலிங்கனத்தில் உச்சம் கண்டதுபோன்று ம்...ம்...ம்.. என்று ஒலியெழுப்பியது.

மற்றைய நண்பரும் நானும் ஆளையாள் அர்த்தமாகப் பார்த்துச் சிரித்துக்கொண்டோம்.

உண்மையில், உணவின் ருசி அபரிமிதமாகத்தான் இருந்தது. பேபே எழுப்பிய சிருங்கார ஒலி அர்த்தமுள்ளது என்பதைப் புரிந்துகொண்டேன்.

“நான் பெரும் சாப்பாட்டுப் பிரியன்” என்றார் பேபே.

அவர் வாயை மூடுவதற்கு முன்பே, “அது உண்மைதான். ஒரு பெண்ணைப் போலத்தான் உணவையும் ருசிக்கிறீர்கள்.”

“இலங்கையைச் சேர்ந்தவர்கள் மோசமான அவதானிகள் போல்” என்றார்.

சேர்ந்து சிரித்தோம்.

மீண்டும் பரிசாரகனை நோக்கி கையைக் காண்பித்தார்.

இவரிடம் வந்த பரிசாரகனிடம் எதையோ சொல்லியனுப்பினார். எனக்கு மொழி புரியவில்லை. நான் வாட்டிய இறைச்சியில் கவனமாயிருந்தேன்.

மேலும் ஒரு முறை பச்ரான் பானம் எமக்குள் இறங்கியது.

அப்போது சமையலறை உடையுடனும் தலையில் வெள்ளைத் தொப்பியுடனும் ஒரு மனிதரை அழைத்து வந்தார் பரிசாரகன்.

அந்த மனிதரைப் பார்த்தபடியே, அன்றைய தினம் இரண்டாம் தடவையாக தனது பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் இணைத்து உதட்டில் வைத்து “ம்ம் மா” என்ற பேபே, ஸ்பானிஷ் மொழியில் எதையோ சொன்னபடி. உட்கார்ந்திருந்த நாற்காலியைப் பின்னால் தள்ளி, எழுந்து நின்று, முதுகை வளைத்துத் தலையை சாய்த்து நிமிர்ந்தார். அதன்பின் கைதட்டினார்.

பேபேக்கு வெறி தலைக்கேறி, நிதானம் தப்பிவிட்டது என்று நினைத்தேன்.

அருகிருந்த மற்றைய நண்பர், எனது காதுக்குள், “உணவு தயாரித்தவரை பாராட்டினார்” என்ற பின்புதான் அவர் எழுந்து முதுகு வளைத்து தலைசாய்த்து, கைதட்டியது நன்றி சொல்லவே என்பதைப் புரிந்துகொண்டேன்.

அதி ருசியான உணவு தயாரித்தவரை அழைப்பித்து மரியாதை செலுத்திய பேபேயின் பெருந்தன்மையை நானும் கற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

பாராட்டைப் பெற்றவர் தனது வலது கையை இடது மார்பில் வைத்து தலைசாய்த்து, “கிராசியஸ், கிராசியஸ்” என்று நன்றி கூறி விடைபெற்றதும், விட்ட இடத்தில் இருந்து கதையைத் தொடர்ந்தார் பேபே.

“வாழ்வின் சுவராஸ்யமே அது எப்போதும் கற்பித்துக்கொண்டே இருப்பதே. அன்பு என்பது கொடுக்கப்படும் ஒரு வஸ்துவே அன்றி, எதையும் மீள எதிர்பார்ப்பதல்ல. காலங்கடந்த ஞானம் அது. இருந்தாலும், பேரன்பின் இழப்பு என்னைப் பெரும் அயர்ச்சிக்குள் தள்ளியது. நாட்கள் வாரங்களாகி, மாதங்களாகி கடந்துபோயின. வாழ்வு நின்று போயிற்று.

அவளிடம் ஒரு யாசகனைப்போல் கெஞ்சினேன், மன்றாடினேன். “உன்னில் எனக்கு அன்பு இல்லை” என்றாள். இருந்தாலும், பல மாதங்கள் காத்திருந்தேன். தொடர்ந்து தொடர்புகொண்டேன், அழுதேன், பித்தன் போலானேன். அந்த அன்புக்காக நான் படும் வலியை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது.

இத்தனை வயதிலும் ஒரு பெண்ணின் அன்புக்காக கெஞ்சிக் கொண்டிருப்பதை நினைத்து எனக்கு என்னில் வெறுப்பாக இருந்தது. இருந்தாலும் அவள் மீதான பேரன்பு குறையவே இல்லை.

எது உனக்குரியதோ அது உன்னிடம் தங்கும். எதையும் வற்புறுத்தி வாழ்வில் நிறுத்தி வைத்துக்கொள்ள முடியாது என்பது புரிந்திருந்தாலும், காதலுற்ற மனம் அதை உள்வாங்கிக் கொள்வதாயில்லை.

பத்து நாட்களுக்கு முன், வாழ்வு மங்கி, இனி மீளமுடியாது என்று உழன்ற ஒரு மாலைப் பொழுதில், அவளைச் சந்தித்த அதே அல்முதேனா தேவாலயத்தில் மண்டியிட்டு செபித்துக்கொண்டிருந்தபோது, ஒரு குரல், ‘சாண்டியாகோ டி கம்போஸ்டெலாக்குப் போ' என்றது.

ஒரு வாரத்திற்கு முன் பணிவிடுத்தல் கொடுத்தேன். இருந்த செல்வாக்கின் காரணமாக உடனயாக பணிவிடுப்பு கிடைத்தது. வீட்டையும் வாகனத்தையும் விற்பதற்கு ஆதனத் தரகரிடம் கொடுத்தேன். அவை விற்கப்பட்டுவிட்டன என்று இன்று செய்தி கிடைத்திருக்கிறது.

முதல் நாள் நடந்து களைத்து, நீர்க் கொப்பளங்களுடன் குந்தியிருந்தபோதுதான் நீ என்னைக் கண்டாய். இந்தப் பாவியுடன் நடக்க வேண்டும் என்று உனக்கு விதிக்கப்பட்டதன் பயன்தான், இன்று உனக்கு எனது கதையைச் சொல்லியிருக்கிறேன்” என்றார்.

பச்ரான் என்னைக் காற்றில் தூக்கியிருந்தது. நான் அவரைப் பார்த்துத் தோழைமையுடன் புன்னகைத்தேன் என்றுதான் நினைக்கிறேன்.

மற்றைய நண்பர், “நான் புறப்படுகிறேன். யாத்திரை சிறக்கட்டும்” என்று தனது கிண்ணத்தை உயர்த்திப் பிடித்தார்.

எமது கிண்ணங்கள் மோதிக்கொண்டன.

அவர் எழும்பி நடந்தார். வெளியேறும் கதவைப் பரிசாரகன் அவருக்குக் காண்பிக்க வேண்டிய நிலையை பச்ரான் ஏற்படுத்தி இருந்தது.

அவர் சென்றதும் பேபே, பரிசாரகனை நோக்கி கையை உயர்த்தி... “இருப்பதில், மிக உசத்தியான இனிப்பு உணவை எடுத்து வாருங்கள்” என்றார்.

சற்று நேரத்தில் சீஸ் கேக்கும் கப்புச்சீனோ கோப்பியும் வந்தது.

மீண்டும் கையை உயர்த்தி, விரலால் எழுதுவது போன்று காண்பித்து, உணவுக்கான பற்றுச் சீட்டைத் தருமாறு காண்பித்தார்.

அதைக் கண்ட நான், “இன்று கொடுக்கிறேன்” என்றேன்,

“நீ நாளைக்கு கொடு. இன்னும் பல நாட்கள் நாம் இணைந்து நடக்கவேண்டும். எனவே, இன்று எனது முறை.”

அவரது வேண்டுகோளை மறுக்க முடியவில்லை.

பரிசாரகன், கட்டணத் தெகையை எழுதி எடுத்துவர முன்னமே, பேபே தனது ‘அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கோல்ட் கார்ட்’-ஐ மேசையில் வைத்தார். திரும்பி வந்த பரிசாரகன் இரண்டு கிண்ணங்களில் பச்ரான் எடுத்து வந்து, “இது உங்களுக்கு எங்கள் உணவகத்தின் அன்பளிப்பு” என்றார்.

நான் ஏற்கனவே காற்றில் நடப்பதுபோன்று உணர்ந்து கொண்டிருந்தேன். பேபே பறந்துகொண்டிருந்தார்.

“எனது அருமை இலங்கை நண்பனே! எனது மட்ரீட் நகரத்து வாழ்வு முடிந்து விட்டது. அவள் இல்லாது அங்கு வாழ விரும்பவில்லை. நகரத்தின் அனைத்து இடங்களிலும் அவளுடனான ஏதோ ஒரு நினைவு ஒட்டிக்கிடந்து வலியைத் தருகிறது.

ஒரு கிராமத்தில், சுற்றாடலைப் பாதிக்காத, மறுசுழற்சி முறையிலான ஒரு பண்ணை அமைத்துக்கொண்டு அமைதியாக வாழப்போகிறேன். இந்தப் பெரிய உலகில் எனக்கென்று ஒரு சிறு இடம் இருக்கும்தானே? சிலவேளை எனது பேரன்பு என்னைத் தேடி அங்கு வரலாமல்லவா?” என்று அவர் முடித்தபோது…

“பேபே… எனது மொழி உலகின் மிகப் பழைய மொழிகளில் ஒன்று. ‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’ என்று எங்களிடம் பழமொழி ஒன்று இருக்கிறது”

”முட்டாளே! பெண்ணின்றி வாழமுடியாது. அவள் நீர் போன்றவள். குளிரவும் செய்வாள், கொதிக்கவும் செய்வாள். அவளைக் கையாள்வதுதான் கலை…" என்றபோது எமது நாக்குகளில் சொற்கள் உருண்டு பிரண்டு தடக்கித் தடுமாறத் தொடங்கியிருந்தன..

பேபே… முடிந்து விட்ட சீஸ் கேக் இருந்த சிறிய பீங்கானை கரண்டியால் வழித்து வழித்து நக்கிக்கொண்டிருந்தார்.

“அருமை நண்ப… பேபே!" என்று நான் உரையாற்றத் தொடங்கினேன். எனது வாழ்வின் கதையை நான் முடித்தபோது, ”தோழனே… உலகில் ஒரே முகச்சாயலில் ஏழுபேர் இருக்கிறார்களாம்” என்றார் பேபே.

அன்றிரவு, உணவகம் மூடும்வரையில் பேபே சுந்தரத் தமிழிலும் நான் ஸ்பானிஷ் மொழியிலும் மாறி மாறி வாழ்வு பற்றி சம்பாஷித்துக் கொண்டிருந்தோம்.

(அம்ருதா புரட்டாதி இதழில் வெளிவந்த பத்தி)

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்