தந்தையின் நாட்குறிப்பு

இன்று வேலை முடிந்து புறப்பட்டபோது மாலை எட்டு மணியாகியிருந்தது. நிலக்கீழ் தொடருந்தில் தனது மகளுடன் வந்திருந்தார் ஒரு தந்தை. அவளுக்கு மூன்று வயதிருக்கலாம். களைத்திருந்தாள்.

அவர் அவளைத் தூங்கவைப்பதற்காக ஒரு கதை சொல்லிக்கொண்டுவந்தார். சற்று நேரத்தில் அவள் அவர் மார்பில் தூங்கிப்போனாள்.

அந்தக் காட்சி என்னை இருபது ஆண்டுகளுக்குப் பின்னோக்கி இழுத்துச் சென்றது.

இரவு நேரங்களில் எனது குழந்தைகளைத் தூங்கவைப்பது என்பது பல சம்பிரதாயங்களைக்கொண்டதாக இருந்தது.

மாலை எட்டு மணிக்குக் கட்டிலில் இருக்க வேண்டும் என்பது எழுதாத சட்டம். எனவே, ஏழரையளவில் குளியலறைக்குள் அழைத்துச் சென்று பல் மினுக்கும்போது ஆரம்பிக்கும் யார் முதலில் குளிப்பது என்ற பிரச்சனை. ஒரு நாளைக்கு ஒருவர் என்று பிரச்சனையைத் தீர்த்துக்கொள்வேன். சில வேளை இருவரும் ஒரே நேரத்தில் குளித்தால். “அடியேய் குளித்தது காணும், வாங்கடீ வெளியில” என்று நான் கெஞ்ச, அவர்கள் மிஞ்ச அங்கு ஒரு திருவிழாவே நடக்கும்.

ஈரத்தினைத் துடைத்து, நனைந்த தலைமுடியினை காயவைத்து, கிறீம் பூசி, ஓடிக்கொலோன் இட்டு, இரவுப்பொழுதுக்கான உடை அணிவித்து, நீண்ட அவர்களது தலைமுடியினை சிக்கெடுத்து, இரட்டைப் பின்னலிட்டு முடிக்கும்போது அத்தனை அழகாக மாறியிருப்பார்கள்.

எனக்கு ஒற்றைப் பின்னல், இரட்டைப் பின்னல், குதிரைவால் இப்படி பலவிதமாக அவர்களின் தலைமுடியினை பின்னவும், கட்டவும் தெரிந்த காலம் அது.

அதன்பின் நாளைக்கான உடைகள் எவை, காலுறைகள், தலைச் சோடனைகள் எவையென்று அவர்களுடன் உரையாடி அவற்றை எடுத்துவைத்த பின், ஒருத்தி முதுகில் ஏறிக்கொள்ள, மற்றையவளை கைகளால் தூக்கிச் செல்வேன்.

தங்களைக் கட்டிலில் தொம்மென்று போடுமாறு அல்லது எறியச்சொல்லிக் கேட்பார்கள். மெதுவாய் எறிவேன். கல கல என்ற சிரிப்பினைக் கேட்டபடியே, மின்விளக்கினை நிறுத்தியபின், அவர்கள் என்னை அணைத்தபடியிருக்க நாம் உரையாடத்தொடங்குவோம்.

இன்றைய நாளின் அனுபவங்கள், நாளைய நாள் என்று உரையாடும்போது, கொட்டாவிவிட்டபடியே பெருவிரலைச் சூப்பியபடி “அப்பா கதை” என்பாள் இளையவள். “பூக்குட்டி, கைசூப்பக் கூடாது” என்பாள் அக்கா. அதையெல்லாம் கவனத்தில் எடுப்பதில்லை இளையவள்.

இருவருக்கும் எனக்குத் தெரிந்த அனைத்துக் கதைகளையும் கூறிமுடித்திருந்த காலத்தில் புதிது புதிதாய் கதைகளை இயற்றினேன். பாட்டி வடை சுட்ட கதையுடன், சிங்கமும் முயலும் கதையை இணைத்துச் சற்று விறுவிறுப்புக் கலந்து கூறுவேன். சாகசக் கதைகளில் இருவருக்கும் அலாதியான பிரியம் இருந்தது. சொன்னதை மட்டுமே செய்யும் சிறுவனின் கதையைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்து ரசிப்பார்கள். அலாவுதீனின் அற்புதவிளக்கு போன்று தனக்கு ஒன்று வாங்கித் தா என்றாள் மூத்தவள். தனக்கு பறக்கும் கம்பளம் வேண்டும் என்றாள் இளையவள்.

நான் எந்தக் கதையைக் கூறினாலும் அல்லது அவர்கள் தூங்குவதற்காக எதைப் பாடினாலும் முழுமனதுடன் இரசித்து அனுபவித்தவர்கள் அவர்கள் இருவர் மட்டுமே. அதற்கு முன்னும் பின்னும் நான் பாடியதே இல்லை.

அதிகமான நாட்களில் என் மார்பில் உறங்கிவிடும் இளையவளை மெதுவாய் இறக்கிவைத்ததும்... அக்காள் காலை நீட்டுவாள். அவளது காலை நீவியபடியே நான் இயற்றிய பாடலொன்றைப் பாடிக்கொண்டிருப்பேன். அவளும் தூங்கிவிட்டாள் என்பதைச் சீரான அவர்களது மூச்சின் ஒலி அறிவிக்கும்.

முகத்தில் விழுந்திருக்கும் முடியினை காதிற்குப் பின்புறமாய் நகர்த்திவிட்டு, தலைமுடியினை கோதி ஆளுக்கொரு முத்தமிட்டு இருவரில் ஒருவரை அணைத்தபடி நானும் தூங்கிப்போவேன். பேரின்பமான நேரங்கள் அவை.

மூத்தவள் தூங்கிப்போனால் மறுநாள் காலைவரை பிரச்சனையே இருக்காது.

இளையவள் அப்படி இல்லை. “அப்பா” என்று கடுமையாக நாலைந்து தடவை அழைப்பாள்... நான் நித்திரையிலிருந்து மீண்டு...

“என்னய்யா” என்பேன்.

“உஷ்ஷ் … குறட்டை விடாதே என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்”

“சரி நீங்க படுங்கோ”

“அப்பா, காலைத் தடவு” என்று காலை என் நெஞ்சில் போடுவாள். காலை முகர்ந்து முத்தமிட்டபின் மெதுவாய் நீவி விடுவேன்.

சற்றுநேரத்தில் இருவரும் தூங்கிப்போவோம். மறுபடியும் அவள் என்னை எழுப்பும் வரையில்.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்