மறதிக்கரையிடை வழியும் காலநதி

பத்தாம் வகுப்பில் கற்றுக்கொண்டிருந்தபோது, சித்திரை வெய்யில் நாளொன்றில் அம்மாவிடம் அழுது புரண்டு மட்டக்களப்பு Fashion houseஇல் நானூற்றி இருபத்தைந்து ரூபாய்க்கு நீலநிறமானதொரு 'மொண்டியா' மணிக்கூடு வாங்கிக்கொண்டேன்.


அந்நாட்களில் எனது நண்பர்களிடத்தில் பேக்கரி பாஸ்கரினிடத்தில் மட்டும்தான் மணிக்கூடு இருந்தது. பேக்கரி பாஸ்கரன் வந்தாறுமூலையிலும், நான் மட்டக்களப்பிலும் கற்றுக்கொண்டிருந்தோம். தினமும் மணிக்கூட்டை அணிந்து செல்வது, நிலவில் கால்வைத்த நீல் ஆமஸ்ட்ரோங் போன்ற பிரபல்யத்தைத் தந்திருந்த நாட்கள்.

அந்நாட்களிலொருநாள் பாடசாலை முடிந்து வரும்போது, மட்டக்களப்பின் பழைய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த உன்னிச்சை செல்வதற்கான 273 இலக்கப் பேருந்தினுள் “எத்தனை மணி?” என்று இரண்டு சொற்கள் அடங்கிய ஒரு பேரிலிக்கியத்தை நிலவின் பெயர்கொண்ட ஒருத்தி கேட்டு வைத்தாள். அவளின் கண்களில் நேரத்தையறியும் ஆவல் இருக்கவில்லை.

எனது தந்தையார் 1960களின் நடுப்பகுதியில், ஒரு ரலி மிதிவண்டியை தனது தோழர் ஒருவரிடமிருந்து வாங்கியிருந்தார். என்னிடம் “எத்தனை மணி?” என்ற கேள்வியைக் கேட்டது அப்பாவிற்குத் துவிச்சக்கர வண்டியை விற்ற தோழரின் பேத்தி என்பது எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அந்நேரத்தில் அதுவா முக்கியம்?

அழியாத கோலங்கள் - சோபா, குரு - ஸ்ரீதேவி ஆகியோரைவிட அழகானவள். நாம் கண்களால் பேசியதைவிட, நேரில் பேசிக் கொண்டதில்லை. கண்களின் மொழிபோன்ற மொழியெதுவுமில்லையல்லவா! நேரகாலமின்றி நான் அடிக்கடி எல்லைவீதிக்கு ஏன் சென்று வந்தேன் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

பதின்மக் காதலுக்கு உணர்வுகளைவிட, வேறு எதையும் கிரகிக்க முடியாதல்லவா? அவளின் இரண்டு சொற்களேயான கேள்வியில் அமிழ்ந்துபோனது ஆறேழுமாதங்கள். அது ஒரு நாவலுக்கான தனிக் கதை.

1980களின் கோடையில், அவளுடனான கதையை ஆர்வக்கோளாறின் காரணமாக ஒரு கொப்பியில் எழுதிவைத்திருந்தேன்.

அம்மா அதனைக் கண்டெடுத்து வாசித்துவிட்டு, என்னைக் கிணற்றடிக்கு வருமாறு அழைத்தார். கிணற்றடி எனக்கு போதிமரமாகலாம் என்ற நினைப்பு அவருக்கு இருந்தது.

“ராசா… நீ நன்றாக எழுதுகிறாய்...” என்று ஆரம்பித்து, “உன் வயதில் இப்படி வரும். ஆனால், இதுவே வாழ்க்கையல்ல. முதலில் படி, பின்பு உன் விருப்பப்படி செய். ஆனால், அப்பாவுக்குத் தெரிந்தால் …” என்று விட்டு நிறுத்தினார்.

அவர் “செத்தாய்” என்பதை உச்சரிக்கவில்லை என்பதை புரிந்துகொண்டேன்.

அம்மா சொன்னது போன்றே மறுவருடம் இன்னொருத்தியுடன் காதல் கசிந்துருகியது. அதையும் அறிந்தபோது “படி” என்ற வார்த்தையுடன் நிறுத்திக்கொண்டார். அப்பாவைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. அவர் பரலோகம் சென்றுவிட்டிருந்தார்.

அக்காதல் பதினைந்து வருடங்கள் தொடர்ந்து திருமணப் பேச்சாகியபோது, முதலில் வாழ்த்தியவரும் அவர்தான். பதினாறு வருடங்களின் பின்பொருநாள் அம்மாவின் மடியில் விழுந்தழுதபோது எனது தலையை நீவிவிட்டபடியே…

“உன் விருப்ப்பபடி செய்” என்றார்

மணவிலக்காகியபோதும், அவர் எதையும் சொல்லவில்லை. இதன் பின்பு ஓரிரு வருடங்களில் அம்மாவை நினைவழிவு நோய் பற்றிக்கொள்ளத்தொடங்கியது.

அந்நாட்களில் இருந்து இன்றுவரை ஏறத்தாழ ஏழெட்டு ஆண்டுகள் அவரைப்பற்றிப் பதிவுசெய்து வந்திருக்கிறேன். நினைவுகளை எழுதிச் சேர்ப்பவன் நான் என்பதைத் தவிர, அதற்கு வேறு காரணங்கள் இல்லை.

அப்பதிவுகளை வாசித்த பலரின் பின்னூட்டங்களும் தொலைபேசி அழைப்புக்களும், உரையாடல்களும் அம்மா, அவர்களுக்கும் நெருக்கமாகிவிட்டார் என்று அறியத்தந்திருக்கின்றன. ஏன் இப்போது அம்மாவைப்பற்றி எதுவும் எழுதுவதில்லை என்று கேட்பவர்களும் உண்டு.

2022 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 11ஆம் திகதி மாலை 23.00 மணிபோல் நான்கு ஆண்டுகளுக்கு முன் எடுத்த அம்மாவின் புகைப்படம் ஒன்றினை முகப்புத்தகத்தில் பதிவிட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குள் முன்பின்பறியாத ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவருக்கு வயது இருபதுகளின் இறுதியாக அல்லது முப்பதுகளின் ஆரம்பமாக இருக்கலாம். முன்பு ஒருபோதும் அறிமுகமில்லாதவர். முகப்புத்தக நண்பர்.

“அண்ணை, அம்மாவின் படத்தை அகற்றிவிடுங்கள். அந்தப் படம் எனது மனதுக்கு மிகவும் அந்தரிப்பான உணர்வைத் தருகிறது” என்று கேட்டார்.

அந்தப் புகைப்படத்தில் அம்மா தனது கட்டிலில் அமர்ந்திருந்து கண்களை மூடிக் கைகூப்பியபடியே, தன்னை மறந்து எதையோ வேண்டிக்கொண்டிருந்தார். புகைப்படத்தின் கீழ் இப்படி எழுதியிருந்தேன்

“ பரலோகத்தில் இருக்கும் முருக பிதாவே! இந்தப் படத்தை எடுத்துக்கொண்டிருக்கும் எனது மூத்த மகனை இரட்சிப்பீராக”

எனக்கு ஒரு தம்பி ஒரு தங்கை. புனித விவிலியத்தில் தொலைந்து போய் மீண்டுவரும் மகன்போன்ற கதை என்னுடையது. அவரது மற்றைய இரண்டு குழந்தைகளையும்விட, நான் மாறுபட்டவன். என் மனம் அழைத்துச் சென்றவழியே வாழ்ந்தவன். அம்மாவும் எனது பதின்மக்காலத்திலிருந்தே என்னிஸ்டப்படியே வாழ அனுமதித்தவர். நினைவுகள் அவரை விட்டு அகலும் வரை எனக்காகக் கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தார். எனவே, அந்தப் புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்தமானது.

அவரிடம் “அந்தப் படத்தில் என்ன தவறிருக்கிறது?” என்று கேட்டேன்.

“உங்களின் பதிவுகளின் ஊடாக அம்மாவை பல ஆண்டுகளாக மனதுக்கு மிக நெருக்கமானவராகவே உணர்கிறேன். அவரது இந்தப் புகைப்படம் உங்களது நகைச்சுவையையும் கடந்து, அவரைப்பற்றி நான் கொண்டிருக்கும் உணர்வுகளை நோகடிக்கிறது. இவ்வளவு நெகிழ்ந்து உருகி கடவுளை வேண்டும் புகைப்படத்தை அகற்றிவிடுங்கள்” என்றும் வேறு சில காரணங்களையும் சொன்னார்.

தனது தாயைத் தவிர்த்து வேறு ஒருவரிடம் இவ்வாறான உணர்வு ஏற்படுவது சாதாரணமானதல்லவே! அம்மா ஏதோ ஒரு வகையில் அவரது மனதையும் அசைத்திருக்காதிருந்திருந்தால், அவர் அவ்வாறு கேட்டிருக்க மாட்டாரல்லவா.

எப்போதும் எனது உணர்வுகளின் வழி வாழ்ந்தவன் நான். அதன் காரணமாக நான் பெற்ற வலிகளுக்கும் பெற்றுக்கொண்ட பேரிழப்புக்களுக்கும் அளவில்லை. உண்மையைத் திரிப்பதும் பொய்யும் புரட்டும் எனக்கு ஆகாதவை.

அதேபோல் வாழ்வில் சில கணங்களில் சிலரது வார்த்தைகள் சத்தியமானவை என்று தோன்றும். அப்படியான ஒரு கணத்தில் அவர் கேட்டதுபோன்று, அம்மாவின் புகைப்படத்தையும் பதிவையும் பொதுவெளியில் இருந்து மறைத்துக்கொண்டேன்.

இது நடந்து மூன்று வாரங்களில் காலம் என்னை நான்காண்டுகளின் பின்பு, திடீரென்று அம்மாவிடம் அழைத்து வந்திருக்கிறது.

இந்த நான்காண்டுகளில் அம்மா முற்றிலும் மாறிவிட்டார். நினைவழிவு நோய் அவரை முற்றிலும் தனக்குள் இழுத்துக்கொண்டுவிட்டது. நான் யார் என்பதையேனும் அவர் அறியமாட்டார். நினைவுகள் அறுந்து அறுந்து கிடக்கின்றன என்று கூறும் நிலையையும், அவர் கடந்துவிட்டார். நினைவுகள் அவரிடம் இருந்து முழுவதுமாக அகன்றுவிட்டிருக்கின்றன. மொழியையும் அவர் இழந்துவிட்டார். தொடர்ச்சியாக ஒரு சிறு வசனத்தையேனும் அவரால் பேச முடிவதில்லை. அவரிடம் “அது, ம்” ஆகிய இரண்டு மூன்று சொற்களே மீதமிருப்பதாய் உணர்கிறேன்.

1965ஆம் ஆண்டு ஏறாவூர் பொலிஸ் குவாட்டர்ஸ் க்கு முன்பாக அமைந்திருந்த சுருட்டுச் சங்கக் கட்டத்தில் வைத்து, எனது தந்தையார் நான்கு கதிரைகளையும் ஒரு மேசையையும் இன்னும் சில தளபாடங்களையும் செய்வித்தார். முதிரை மரத்திலானவை அவை.

நோர்வேயில் இருந்து இலங்கை வந்து அம்மாவிடம் சென்றபோது, அவர் அப்பா செய்வித்த நாற்காலியில் உட்கார்ந்திருந்திருந்தார். நான் ஒருவன் உள்ளே வருவதையேனும் அவர் உணரவில்லை.

அருகே அமர்ந்து “அம்மா” என்றேன்.

அமைதி.

“அம்மா”

பேரமைதி.

மீண்டும் “அம்மா, நான் சஞ்சயன். என்னைத் தெரிகிறதா?” என்கிறேன். பதில் இல்லை. என்னைத் திரும்பி பார்க்கிறார். உணர்வுகள் எதையும் முகத்தில் காண முடியவில்லை.

அவரின் கையை எனது கைக்குள் எடுத்து வைத்துப் பிடித்துக்கொண்டு “அம்மா” என்கிறேன்.

பதில் இல்லை. பலமுறை முயன்றபின்

“ம்” என்று பதில் கிடைக்கிறது.

என்னை அவருக்கு நினைவிருக்கிறது என்ற நப்பாசையில் "என்னைத் தெரியுமா அம்மா?” என்கிறேன். கணங்கள் நிமிடங்களாகிக் கடக்கின்றன. அவரிடமிருந்து பதிலேதும் இல்லை.

அவருக்குக் காலணியை அணிவித்துவிட்டு, உதவியாளருடன் இணைந்து நாற்காலியிலிருந்து எழுப்பி, இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு வாசலுக்கு அழைத்து வந்தேன். நடக்கப் பழகும் குழந்தை, தாயின் கைகளைப் பற்றி சமநிலையைப் பேணுவதுபோன்று, எனது கைகளைப் பற்றியபடி நடந்தார். எதுவுமே பேசவில்லை.

சற்று நடந்தபின், மீண்டும் அவரது நாற்காலியில் இருத்தினேன். அருகிருந்த பாவைப்பிள்ளையை கையிலெடுத்து அணைத்துக்கொண்டார்.

அம்மா திரும்பி என்னைப் பார்க்கிறார். இருப்பினும், அவரது முகத்திலோ அல்லது கண்களிலோ எதுவித உணர்வுமில்லை.

அம்மா என்னை அடையாளம் கண்டுகொள்ளவேண்டும் என்று மனது அடித்துக்கொள்கிறது. “அம்மா உங்கட மூத்த மகன் சஞ்சயன்” என்கிறேன்.

கூர்ந்து நோர்க்குகிறார் என்னை.

“என்னைத் தெரிகிறதா அம்மா?”

'முன்பின் அறியாதவர்களை ஒரு பச்சைக்குழந்தை எவ்வாறு எதிர்கொள்ளுமோ’ அவ்வாறு அவர் முகம் இருக்கிறது.

அவர் கையை நீட்டிக் காண்பித் திசையைப் பார்க்கிறேன். எதுவுமற்ற சுவற்றினை நோக்கிக் காண்பித்தபடி “அது” என்கிறார்.

அவரருகே இருந்த மேசையில் சில பக்கங்கள் கிழிந்த புத்தகம் இருக்கிறது. புத்தகத்தைக் கையில் எடுத்து சில பக்கங்களைப் புரட்டுகிறார்.

அம்மாவிடமிருந்தே எனக்கு வாசிப்புப்பழக்கம் கிட்டியது. தினமும் குறைந்தது அரைமணி நேரமாவது வாசிப்பார். சாப்பிடும்போதும் அவருக்குப் புத்தகம் வேண்டும். புத்தகம் வாங்க என்று எப்போது பணம்கேட்டாலும் தவறாமல் கிடைக்கும். "சாண்டில்யனை 13 – 14 வயதில் வாசிக்காதே வளர்ந்தாப் பிறகு வாசிக்கலாம்" என்பார். அவருக்குத் தெரியாமல் 14 வயதுக்குள் சாண்டில்யனையும், மஞ்சலழகி காஞ்சனை இளையபல்வன் ஆகியோரின் சல்லாபங்களையும் கரைத்துக் குடித்திருந்தேன்.

அம்மா அநிச்சையான செயற்பாடுபோல் தனது புத்தகத்தை எனது கையில் வைத்து அழுத்துகிறார். அவர் கண்கள் வெளியே நிலத்தில் நின்றிருந்த குருவியொன்றில் நிலைத்திருக்கின்றன.

அம்மாவின் புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன். பிரபஞ்சனின் ’மானிடம் வெல்லும்’. நான் இலங்கைக்கு வரும்போதெல்லாம் எடுத்துவரும் புத்தகங்களை அம்மா “எனக்குத் தா. வாசித்துவிட்டுத் தருகிறேன்” என்பார். நினைவழிவு நோயின் பின் ஓரிரு பக்கங்களுக்கு அதிகமாக அவர் வாசிப்பதில்லை. என்ன வாசிக்கிறோம் என்பது தெரியாது, முன்னட்டையின் பின்புறத்தில் இருந்து உரத்து வாசிக்கத் தொடங்குவார். புத்தகத்தினை அச்சிட்டது யார்? எழுதியது யார்? விலை...? என்று அனைத்தையும் வாசித்துவிட்டு, மீண்டும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பிப்பார்.

அம்மா அமர்ந்திருக்கும் நாற்காலிக்கு இரண்டு பக்கங்களிலும் அகன்ற பகுதி இருக்கிறது. அதில் ஒன்றில் நானும் மற்றையதில் தம்பியும் எமது பால்யக் காலத்தில் அம்மாவின் இருபக்கத்திலும் உட்கார்ந்திருக்க, அவர் வாசித்த கதைகளுக்கு அளவேயில்லை. அம்மா மிக அழகாக வாசிப்பார்.

சில வருடங்களுக்கு முன்பொருமுறை சிறுவர் கதையொன்றை அம்மாவிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னேன். நினைவழிவு நோய் அதிகம் பாதிக்காத நாட்கள் அவை. அதனை ஒளிப்பதிவு செய்தும் வைத்திருக்கிறேன். நினைவுகளை பதிவுசெய்துகொள்வது வாழ்வின் அயர்ச்சியைப் போக்க உதவும் என்று காலம் கற்பித்து விட்டிருக்கிறது. உண்மையும் அதுதானே.

அம்மா அருகிருந்த பாவைப்பிள்ளையை எடுத்து, அதன் தலையைத் தடவிகொடுக்கிறார். அவரின் மடிவரை குனிந்து அவரது கையை எனது தலையில் வைத்துக்கொள்கிறேன். அவர் கையை எடுத்து பாவைப் பிள்ளையின் முகத்தைத் தடவுகிறார்.

மீண்டும் அவரது கையைப் பிடித்து “அம்மா நான் உங்களின் மூத்த மகன்” என்றபோது குரல் தழும்பியது.

மடியில் தலையைச் சாய்த்துக்கொண்டேன். பாவைப் பிள்ளையின் மீதிருந்த ஒரு கையை எடுத்து எனது தலையில் வைக்கிறார். பதினாறு வருடங்களின் முன் அவரது மடியில் விழுந்து “அம்மா மணவிலக்குப் பெறப்போகிறேன்” என்றபோது, எனது தலையைத் தடவிய கையின் வெம்மையை உணர்கிறேன். அன்றும் அவர் எதையும் பேசவில்லை. இன்றும் எதையும் பேசவில்லை.

அவரிடம் இருந்து புறப்பட்டபோது “அம்மா, நான் போய்வருகிறேன்” என்றுவிட்டு, அவரின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

அமைதியாகக் கழிகின்றன சில கணங்கள்.

எனது தலையில் இருந்த கையை எடுத்து, எனது கையை தனது இரண்டு கைகளினாலும் பற்றிக்கொண்டு நீவிக்கொடுத்துவிட்டு, இறுகப்பற்றிக்கொள்கிறார்”.

அவரது கையின் அழுத்தம் அந்த கணத்தில் அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டிருந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்தியதுபோன்றிருந்தது.

#அம்மாவின்_அட்டகாசங்கள்

***

அம்மாபற்றிய பதிவுகளின் தொகுப்பு தைமாதமளவில் நூலாக வெளிவருகின்றது.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்