தேற்றுதல்

பிரசவத்திற்கு முன்பே கருப்பையினுள் இருக்கும் குழந்தையைத் தாய் தேற்றியிருப்பாள். வயிற்றைத் தடவிக் கொடுத்திருப்பாள். தாயின் குரலாலும் தொடுகையாலும் குழந்தை தேற்றப்பட்டு, அமைதியை உணர்ந்திருக்கும். இப்படியாக மனிதன் பிறப்பதற்கு முன்னிருந்தே தேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறான். அவன் பிறந்தபின் இறக்கும் வரையிலும் தேற்றப்படுகிறான்.


குழந்தைப் பருவத்தில் பெரியவர்களால் கதைத்தும், அணைத்தும் நாம் தேற்றப்பட்டிருப்போம். வளர்ந்த பின்பும் இன்னொரு மனிதனின் அணைப்பில் தேற்றப்படுவதுபோன்று, மன ஆறுதலைத் தருவது எதுவுமில்லை. அது நண்பனின் தோளாக இருந்தாலென்ன... தாயின் கரங்களாக இருந்தாலென்ன... அல்லது துணையின் மடியாயிருந்தாலென்ன... தொடுகையின் மகத்துவம் தேற்றப்படும்போதுதான் அதீதமாக உணரப்படுகிறது.

தேற்றுதல் என்பது ஒரு கலை. தன்னைத்தானே தேற்றுதலும் அப்படித்தான். ஆனாலும் பலருக்கும் தன்னைத்தானே தேற்றும்கலை வாய்ப்பதில்லை.
தேற்றும் கலையறிந்தவர்களை நண்பர்களாக, அன்பர்களாக, தோழர்களாகப் பெற்றுக் கொண்டவர்கள் தம் வலிகளைப் பகிர்ந்து, அழுது, தேற்றப்பட்டு தங்களின் பாரங்களைக் கடந்து செல்கிறார்கள். இவ்வாறான தேற்றும் மனிதர்கள் கிடைக்காதவர்களின் பாடு பெரும் சிரமமாக அமைந்து விடுகிறது.

வாழ்க்கையில் என்னைத் தேற்றியவர்களை நான் என்றுமே மறக்க முடியாது. மறக்கவும் கூடாது. 'நன்றி மறப்பது நன்றல்ல' அல்லவா! வாழ்க்கையைப் புறநிலைக் காரணிகள் புரட்டிப் பந்தாடும்போதுதான், தேற்றுதலின் தாற்பரியம் எப்படியென்பது எனக்குப் புரிந்தது. அதீத காற்றடைத்த பலூன் எப்போது வெடிக்கும்...? என்பது தெரியாதிருப்பதைப்போன்று, யாரேனும்,
"நீங்கள் நலமா.. ?" எனக் கேட்கும் பொழுதுகளில் உணர்ச்சியின் உந்துதலால் துயரக்குமிழிகள் உடைந்து கொள்ள, கண்ணீர்த்துளிகள் கன்னங்களில் பொலுபொலுவென வழிந்து கொண்டிருக்கும். அவ்வேளைகளில் தங்களின் நேரங்களையும், தோளையும், மடியையும் ஆறுதலுக்காகத் தந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒருகட்டத்தில், ' இவரிடம் பேசினால் மனம் தேற்றப்பட்டு, வலிகளை ஆற்றிக் கொள்ளலாம்...' என்று வாழ்க்கை ஓரிருவரை அடையாளம் காண்பிக்கும்.

எனக்கும் அப்படித்தான் ஒரு பாதிரியர் வந்து அமைந்தார். நாம் பழகத்தொடங்கிய காலங்களில், அவர் பாதிரியார் அல்லர். காலப்போக்கில்தான் அவர் பாதிரியார் ஆனார். மனிதர்களை எவ்வாறு தேற்றுவது? என்பதுபற்றி அவரிடமிருந்தே நான் கற்றுக் கொண்டேன். மனிதர்களோடு எப்போது பேச வேண்டும்? அவர்கள் அழும்போது அவர்தம் மூக்குநீரைச் சிந்துவதற்கு எப்போது ஒரு சிறு துணி கொடுக்க வேண்டும்? என்பதுபற்றி தெளிவாகத் தெரிந்திருந்தது.

சீழ் வடிவதற்கு சத்திர சிகிச்சையொன்றும் அவசியமில்லை.நுண்ணியதொரு துளையிட்டாலே சீழ் வடிந்து, வலி மறைந்து விடுமல்லவா! அப்படித்தான் இந்தத் தேற்றுதல் கலையும் இருக்கிறது. பல வருடக் கல்வியறிவும் பட்டங்களும் இதற்கு அவசியமில்லை. மனிதர்களின் ஆன்ம ஓலங்களைப் புரிந்துகொள்ளும் சக்தியும் மன அலைவரிசையும் இருந்தாலே போதுமானது. இதைவிடப் பெறுமதியான வேறு எதையும் இந்த மனிதர்களுக்குக் கொடுத்துவிட முடியாது.

காலப்போக்கில் எனக்கும் சிலரைத் தேற்றும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. சிலரை ஓரிரு உரையாடல்கள்மூலம் தேற்ற முடிந்திருக்கிறது. வேறுசிலரை மாதக்கணக்கில் தினமும் உரையாடி, உரையாடி அவர்களது மனப்பாரத்தைக் குறைத்துக் கொள்ள உதவியிருக்கிறேன். சில மனவேதனைகள் காலாகாலங்களுக்கும் தொடர்ந்து வந்துபோகும். அதன் தாற்பரியத்தினை வாழ்க்கை முழுவதும் சுமந்து செல்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆறுதலாக இருப்பதைத்தவிர வேறு எதைச் செய்துவிட முடியும் எம்மால்?

புத்திர சோகத்தைப்போன்று தேற்ற முடியாதது எதுவுமில்லை. நீறுபூத்த நெருப்பு அது. சிலநாள்களாக நெருங்கிய நண்பர்களைத் தேற்றுவதற்கு நாம் முயன்று கொண்டிருக்கின்றோம். அவர்களுக்கு எந்தவோர் ஆறுதல் வார்த்தைகளும், தேற்றுதல்களும் மன நிம்மதியைக் கொடுப்பதாக இல்லை. அவர்களது வார்த்தைகளிலும், பார்வைகளிலும் நம்பிக்கையுணர்வு துவண்டு, ஈரம் அற்ற ஒரு வெறுமை விரவிக் கிடக்கிறது. நடந்ததை அவர்கள் ஒருகணம் ஏற்றுக் கொண்டாலும், மறுகணம் இழப்பின் வலி அந்த நடப்பை மறைத்து விடுகிறது. வார்த்தைகளால் தேற்றவே முடியாத வலி அது. தோழமைகளின் அன்பும், அரவணைப்பும், பாதுகாப்பும், உதவிகளுமே இவர்களை மீண்டும் ஓரளவேனும் சாதாரண வாழ்வுக்கு மீட்டெடுத்துக் கொள்ள உதவும்.

சாவிற்குக் காத்திருந்த நண்பனொருவனை அறிவேன். ஒரு கட்டத்திற்குப்பிறகு எந்தவோர் ஆறுதலும் அவனைத் தேற்றவில்லை. கூரையை வெறித்தபடியே பார்த்துக் கொண்டிருப்பான். சிலவேளைகளில் கையைப் பற்றியிருப்பான். கண்களில் இருந்து நீர் வடிந்து கொண்டிருக்கும்.
இறுதிக்காலங்களில் நினைவுகளை இரைமீட்பதைத் தவிர, எம்மிடையே பேசுவதற்கு எதுவுமிருக்கவில்லை. இறுதியில் அதுவும் நின்று போனது. கடைசிநாள்களில் ஒரு மனிதனுக்கு அருகே இருப்பதுவும் ஓர் ஆறுதல்தான். எவரும் அருகில் இன்றி இறந்துபோகும் மனிதர்கள்... அந்த இறப்புக்கு முன்னான கணங்களில் அனுபவிக்கும் மனவேதனை எவ்வளவு கொடியதாக இருக்க வேண்டும். கருணையான ஒரு பார்வையின்றியல்லவா இவர்கள் இந்த உலகத்தை விட்டு விடைபெறுகிறார்கள்.

மரணபயத்தை எதனாலும் தேற்ற முடியாது என்றே நினைக்கிறேன். ஓர் அற்புதம் நிகழ்ந்து 'நான் பிழைக்க மாட்டேனா...?' என்றதொரு நம்பிக்கை... அவர்களிடத்தில் கடைசிவரையும் இருக்கும்.

' நாளை நான் இல்லாது போய்விடுவேன்...' என்பதை நினைத்துப் பார்ப்பேன். மூச்சு தன் செயற்பாட்டை நிறுத்தி விட்டதுபோன்று ஒரு பயம் என் நெஞ்சைப் பற்றிக் கொள்ளும். உடம்பும் நடுநடுங்கும்.

இதற்காகத்தான் மரணம் தன்வருகையை எவருக்கும் முன்கூட்டியே அறிவிப்பதில்லைப் போலும்!

அண்மையில் ஒரு காணொளி பார்க்கக் கிடைத்தது. ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவரைக் கொலை செய்தால், அக் கொலையைச் செய்தவருக்கு தண்டனையாக அவரையே கொலை செய்தல்... எனும் கலாசாரத்தினைக் கொண்ட, ஓர் இறுக்கமான நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு நாட்டில் நடைபெற்ற கதை இது!

ஒரு பெற்றோரின் மகனைக் கொன்றவனின் கழுத்தை வெட்டிக் கொல்வதற்காக, அவனை பொதுவெளியொன்றில் நிறுத்தியிருக்கிறார்கள். முழந்தாளிட்டு, கைகள் கட்டப்பட்டு, தலை குனிந்து நிற்கும் அந்த மனிதனுக்கு அருகில் பெரியதொரு மனிதன், கூர்மையான பளபளக்கும் ஒளி கொண்ட வாளுடன் நிற்கிறான்.

முழந்தாளிட்ட அந்த மனிதன் குலுங்கிக் குலுங்கி
அழுவது தெரிகிறது. சற்று தொலைவில் அவனது குடும்பத்தினர்... தேற்ற முடியாத சோகத்தினைச் சுமந்து கொண்டு, இந்நிகழ்வினைக் கண்கொண்டு பார்க்க முடியாமல் இறைவனை யாசிக்கிறார்கள். வாளொடு நிற்கும் அந்தப் பெரியமனிதன், தன் வாளை ஓங்குகிறான். முழந்தாளிட்ட மனிதனின் பின்கழுத்தைநோக்கி அவன் வாளைப் பதிக்கையில், ஒரு குரல் பெரிதாக ஒலிக்கிறது! ஓங்கியவனின் வாளும் ஒகணம் ஸ்தம்பித்துப் போகிறது!

கொலை செய்யப்பட்டவனின் தாய், கொலை செய்தவனை மன்னித்து விட்டாள்!

எனவே, மரண தண்டனை செயலற்றுப் போகிறது. முழந்தாளிட்ட இளைஞன் அந்தத் தாயையும் அக்குடும்பத்தாரையும் அணைத்துக்கொண்டு அழுகிறான். தேற்றமுடியாத நிலையில், அவன் கண்களில் இருந்து வழியும் கண்ணீரை... அவனை அணைத்தபடியே துடைத்து விடுகிறார் இழப்பை அனுபவித்த தந்தை. அவரது கண்களிலும் கண்ணீர்!

எத்தனை அற்புதமான காட்சி அது! செய்த குற்றத்தை மன்னிப்பதே பெருஞ்செயல். ஆனால், அதையும் கடந்து, தன் குற்றத்தையுணர்ந்து அழும் தன்மகனின் கொலையாளியை அணைத்து, அவனைத் தேற்றி, தன் மனதையும் தேற்றிக்கொள்ளும் அந்த மனிதரை நினைத்துப் பார்த்தேன். எத்தனை பெருதன்மையுடையவராக இருக்க வேண்டும் அவர்.

இந்த உலகில் தேற்றுவதற்கு ஆளில்லாது பலர் இருக்கிறார்கள். நான்குபுறமும் பார்த்துக் கொள்வோம் நண்பர்களே. தேற்றுதலுக்குத் 'தெளிதல்' என்றும் ஓர் ஒற்றைக் கருத்துள்ள சொல் இருக்கிறதாம்.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்