எனக்கும் சமையலறைக்கும், நாய்க்கும் கல்லுக்குமான பொருத்தம். எனது நாக்கு அதிகம் எதிர்பார்ப்பதில்லை. கிடைக்கும் எதையும் ஏற்றுக்கொள்ளும். கிடைக்காவிட்டால் அதற்கேற்றவாறு சுருண்டு கிடக்கும்.
நான் Osloவிற்கு இடம்பெயர்ந்த காலத்தில், ஒரு வீட்டில், ஒரு அறையை வாடகைக்கு எடுத்திருந்தேன். அந்த வீட்டிலும் சமையலறை இருந்தது. நான் தண்ணீர் எடுப்பதற்கு மட்டுமே அங்கு செல்வேன். அந்த வீட்டிலிருந்து 6-7 நிமிடத் தொலைவில் தமிழ் உணவுகளை விற்கும் உணவகம் ஒன்று இருந்தது. அதுதான் எனது அட்சயபாத்திரம். சில காலம் மாதாந்தக் கணக்கும் இருந்தது.
ஒவ்வொரு உணவகத்திற்கும் என்று நம்பிக்கையான தொடர்ச்சியான வாடிக்கையாளர்கள் இருப்பார்கள் அல்லவா? அவ்வாறான சில வெள்ளையினத்தவர்கள் அங்கு வருவதுண்டு. அதில் பலர் தினசரி வேலை முடிந்து வந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பியர்கள் அருந்துபவர்கள். பியரின் அளவிற்கு ஏற்ப அவர்களும் ததும்பித் தள்ளாடுவார்கள்.
இப்படி ததும்புபவர்களில் ஒருவர் கடும் சிடுமூஞ்சி. எப்போதும் வேலைக்கு அணியும் மஞ்சல் நிறமான ஆடையுடன் உட்கார்ந்திருப்பார். டென்மார்க் நாட்டவர் என்றே நினைவிருக்கிறது. முகத்தைத் தாடி நிரப்பியிருக்கும். கண்களில் கடும் அலட்சியமும் வெறுப்பும் குடியிருக்கும். வார்த்தைகளில் நெடி வீசுமளவிற்குப் பேசுவார். நாக்கில் கத்தி வைத்திருக்கிறாரோ என்று நினைப்பதுண்டு நான்.
அவர் யாரைத் திட்டுவார் யாரை வாழ்த்துவார் என்று சொல்ல முடியாது. அது அவரது காலநிலையைப் பொறுத்தது.
எவரும் அவருடன் அதிகம் ஒட்டுவதில்லை. குழந்தைகளுடனும் அவருக்கு எட்டாப்பொருத்தம். தன்னுடன் பழகும் நண்பர்களுடனும் அடிக்கடி அழகிய சொற்களால் மோதிக்கொள்வார். இவனெல்லாம் ஒரு மனிதனா என்று நான் நினைப்பதுண்டு.
அவருக்கு நண்பர்கள் குறைவு. நுணலும் தன் வாயால் கெடும் என்றால், இவர் மட்டும் எப்படித் தப்பலாம்?
இவரது சிடுமூஞ்சிக் குணத்தினால் நானும் அவரைவிட்டு ஒதுங்கியே இருந்தேன்.
எனக்கு, தமிழ் உணவு என்றால் அதைக் கையால் பிசைந்து, குழைத்தெடுத்துப் பெருவிரலால் வாய்க்குள் தள்ள வேண்டும். அதற்கெனத் தனி ருசி இருக்கிறது என்று நினைப்பவன் நான். அந்த உணவகத்திலும் நான் அப்படித்தான்.
முருங்கைக்காய்க்கறி என்றால் கண்ணை மூடி, சப்பிச் சப்பி, முருக்கைச்சாறு பல்லினூடாக ஊறி, நாவில் நனைந்து தொண்டையை எரித்தபடி உள்ளிறங்கும் அந்த அற்புத உணர்வைத் தலைக்குள் இருக்கும் மூளை உணரும்போது கிடைக்கும் பேரின்பம் வேறு எங்கேனும் உண்டா?
இதற்காகவெல்லாம் வெட்கப்பட்டுக் கிடப்பவன் நான் அல்ல. சீன உணவகங்களுக்குச் சென்றால் குச்சியால் உண்பதில்லையா அல்லது வெள்ளைக்காரர்களின் கடைக்குச் சென்றால் முள்ளுக்கறண்டியும் கத்தியும் பாவிப்பதில்லையா… அதுபோலத்தான் இதுவும் என்பது எனது வாதம்.
ஒரு நாள் எனது மேசைக்கு முன்னால் உட்கார்ந்திருந்த அந்த மனிதர், நான் கையால் உண்பதைப் பார்த்து ஏதோ முணுமுணுத்தார்.
எனக்குச் சுர்ரென்று சூடேறி காதால் புகை வந்தது.
வேண்டும் என்றே, அவரைப் பார்த்தபடி ஒவ்வொரு விரலாக நக்கியெடுத்து உள்ளங்கையையும் நக்கினேன். மனிதர் வெறுத்துப்போய் திட்டியபடியே வெளியே சென்றார்.
அதன்பின் நாங்கள் எம்ஜிஆரும் நம்பியாரும் ஆனோம். கடுமையாகப் பார்த்துக்கொண்டோம். திட்டிக்கொண்டோம். எனது நண்பர்களுக்கும் அவர் தமிழருக்கு எதிரானவன் என்று கூறியதால் அவர்களும் அவரைக் கடுமையாகப் பார்க்கத் தொடங்கினார்கள். எங்கள் ஆட்பலத்தைக் கண்ட அவர் மோத விரும்பவில்லை.
அவர் இருக்கும் பகுதிக்கு நான் செல்வதில்லை. எனது பகுதிக்குள் அவர் வருவதில்லை. ஆளையாள் பார்ப்பதுமில்லை. எப்போதும் அவருக்குப் பிடித்தமான ஒரு மூலையில் பியருடன் உட்கார்ந்திருந்தபடியே பத்திரிகையில் மூழ்கியிருப்பார்.
பாவி போகும் இடமெல்லாம் பள்ளமும் திட்டியும் என்பதுபோல ஒரு நாள் நான் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டின் சமையறை எரிந்துபோயிற்று.
வீட்டுக்காரர் வீட்டைத் திருத்த வேண்டும் என்பதால் வீடு தேடியபோது Osloக்கு வெளியே ஒரு வீடு கிடைத்தது. அதன்பின் பல ஆண்டுகள் அங்குதான் வாழ்ந்தேன்.
அவ்வப்போது அந்த உணவகத்திற்கு வரும்போது அவரைக் காண்பேன். அப்போதுகூட எம்ஜிஆரும் நம்பியாரும் சமாதானமாகவில்லை. முடியுமான நேரங்களில் எல்லாம் பார்வையால் மோதிக் கொண்டோம்.
வாழ்க்கை என்னைப் பாலஸ்தீனத்திற்கு அழைத்துப்போயிற்று. சில காலங்களின் பின், அங்கிருந்து இடம்பெயர்ந்து மீண்டும் Osloக்கு வந்தபின், அந்தக் கடைக்கு அருகிலேயே குடியிருக்கவேண்டியாயிற்று. இப்போது முன்பைப் போன்று அந்த உணவகத்திற்குச் செல்வது குறைவு. வேலையிடத்தில் மாதாந்த அடிப்படையில் நல்ல சத்தான சாப்பாடு போடுகிறார்கள். அத்துடன் அன்பான நண்பர்களின் ராப்பிச்சையுடன் எனது காலம் ஜாம் ஜாம் என்று ஓடிக்கொண்டிருக்கிறது.
கடந்த சனிக்கிழமை உதைபந்தாட்டப் போட்டியைப் பார்ப்பதற்காக அந்த உணவகத்தினுள் உட்கார்ந்திருந்தேன்.
அந்தக் கடை புதியவர் ஒருவருக்கு கைமாறி இருக்கிறது. அவருக்குத் திருமணமாகி இப்போதுதான் முதற்தடவையாகக் குட்டி ஈன்றிருக்கிறார். உரிமையாளரின் மகளுக்கு ஒன்றரை வயதிருக்கும். அதிகமாகப் பகல் நேரங்களில் உணவகத்தில் இருப்பாள். அவளின் மழலைக்குரலின் இனிமை உணவகத்திற்கு அதிக ருசியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அவளைக் கண்டாலே என் மனது புத்துணர்ச்சி பெறுகிறது. மழழைக் கால்களினால் உணவகமெங்கும் ஓடித்திரிகிறாள். அள்ளிக்கொஞ்சத் தோன்றும் பேரழகி. நாம் இப்போது நண்பர்களாகிவிட்டோம்.
இன்று மீண்டும் அந்த மனிதரைக் கண்டேன். எம்ஜிஆருக்கு ரோசம் பொத்துக்கொண்டுவந்தது. இவனுடன் கதைப்பதுமில்லை புன்னகைப்பதுமில்லை என்று நினைத்துக்கொண்டேன். பியர் குடித்தபடியே அவர் தினசரிப்பத்திரிகையில் குறுக்கெழுத்துப்போட்டிப் பகுதியை நிரப்பிக்கொண்டிருந்தார். அருகில் மெழுகுதிரி எரிந்துகொண்டிருந்தது. எப்போதும் போலத் தனியே இருந்தார்.
நான் சிறுமியின் சேட்டைகளில் என்னை மறந்து இருந்தபோது, சிறுமி அவரை நோக்கிச் சென்று அவரது மேசைக்கருகே நின்று அவரைப் பேச்சுக்கழைத்தாள். குழந்தைக்குத் திட்டப்போகிறார். அப்படி அவர் திட்டினால் களத்தில் இறங்கி நம்பியாரை ஒரு கைபார்ப்பது என்று நினைத்துக்கொண்டேன்.
அவளது மழழை மொழி அவருக்குப் புரியவில்லை என்பதை மிகவும் அழகாக ஆறுதலாக அவளிடம் சொன்னார். அவளுக்குப் புரியவில்லை. அவள் மெழுகுதிரியை இழுத்தாள். எனது மனம் இந்த மனிதன் அவளைத் திட்டப்போகிறான் என்றது.
அவரோ மெழுகுதிரியை தள்ளி வைத்தார். இப்போது அவள் இவரது பேனையைக் கேட்டாள். பேனையைக் கொடுத்தார். அவள் இவரை அழைத்தாள். எழும்பி எஜமானனின் பின்னால் செல்லும் நாய் போன்று அவளுடன் நடந்தார். அவள் இவரைக் கடைக்கு வெளியே அழைத்துச் சென்றாள். இவரும் மந்திரித்துவிட்டவர் போன்று அவளின் பின்னால் நடந்தார். அவள் கால்தடுக்கி விழுந்தபோது முழந்தாளிட்டு அமர்ந்து அவளைத் அணைத்து ஆறுதற்படுத்தினார்.
அவர்கள் எனது மேசையைக் கடந்தபோது நான் அவரைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்துத் தலையை ஆட்டினார். நான் புன்னகைக்கவில்லை.
சற்று நேரத்தில் என்னருகே வந்து நின்று “பல வருடங்களாக உன்னைக் காணவில்லையே” என்றார். அதிர்ந்துபோனேன். சமாளித்தவாறே இடப்பெயர்வுகளைச் சொன்னேன்.
வாழ்க்கை எப்போதும் எதையோ கற்றுத்தந்துகொண்டே இருக்கிறது. நீயும் இடப்பெயர்வுகளிலிருந்து பலதையும் கற்றிருப்பாய் என்றார்.
அவர் குடித்திருந்தாலும் பேச்சு நிதானமாய் இருந்தது.
அந்த மனிதர் எனக்கு எதையோ போதித்திருப்பதுபோல் உணர்கிறேன். அடுத்த முறை அவரைக் காணும்போது புன்னகைக்க வேண்டும்.
நம்பியார் திருந்திவிட்டார். MGRதான் திருந்த வேண்டும்
No comments:
Post a Comment
பின்னூட்டங்கள்