காலம் என்னும் பெரு வலையின் இழைகள்

வாழ்வு பல நகரங்களுக்குள் என்னை அழைத்துப்போய் ”வாழ்ந்து பார்” என்றிருக்கிறது. வாழ்ந்துமிருக்கிறேன். கெட்டுமிருக்கிறேன். அவற்றுள் முக்கியமானது ஒஸ்லோ.

பெரும் மனப்பாரத்துடன், இற்றைக்கு 14 வருடங்களுக்கு முன், இரண்டாம் முறையாக இந்நகரத்தினுள் குடிவந்தபோது, தங்குவதற்கு இடமிருக்கவில்லை, நிலக்கீழ் வாகனத்தரிப்பிடத்தில், ஒரு பழைய வாகனத்தினுள் சில காலங்களைக் கடந்துகொண்டேன். வேலைநேரத்தில் குளித்துக்கொள்வேன். கடைகளிலே உணவு. இருகரங்களையும் நீட்டி என்னை அணைத்துக்கொண்டது இந்நகரம்.

நண்பர்களைத் தேடிப்போக விரும்பாத மன அழுத்தம் நிறைந்த காலம் அது. அதன்பின் மெது மெதுவாக வேரூன்றி எழுந்து, நிமிர்ந்து சிலகாலங்களின்பின், மீளவும் விழுந்து, அடியுடன் சாய்ந்து, தற்போது மீளவும் உயிர்த்துக்கொண்டிருக்கிறேன்.

முன்பைப் போலல்லாமல், பல விடயங்களில் இருந்து ஒதுங்கியிருப்பதால், மனம் அமைதியாகவும் ஆறுதலாகவும் இருப்பதுபோலவும், வாழ்வு என்னைத் தன்தோளில் தூக்கிப்போகிறதுபோலவும் உணர்கிறேன்.

1989 ஆண்டுக் காலத்திலும் ஐந்து ஆண்டுகள் இங்கு குடியிருந்திருக்கிறேன். நான் நண்பர்கள் புடைசூழ அலையும் மனிதனல்லன். தன்னந்தனியே அலையும் பிரகிருதி. அன்றும் இன்றும்.

நகரின் மத்திய பகுதி, புறநகர்கள், வெளிநாட்டவர் செறிந்துவாழும் பகுதிகள், சமூகத்தின் கடைநிலை மனிதர்களான போதைப்பொருள் நுகர்வாளர்கள், பால்வினைத்தொழில் புரிபவர்கள், வதிவிட அனுமதியுற்றவர்களின் இரகசியச் சந்திப்பிடங்கள், திருட்டுப்பொருட்கள் விற்பனை செய்யுமிடங்கள், செல்வச் செழிப்புள்ள பகுதிகள், நூதனச்சாலைகள், பிரபல்யமான உணவகங்கள், புராதனக் கட்டடங்கள், வாசிகசாலைகள், கலையங்கள், கண்காட்சி நிலையங்கள், பூங்காக்கள் என நகரின் அனைத்து இடங்களும் பெரும்பாலும் எனக்குப் பரீட்சயமானவை.

நன்மையாகவும் தீமையாகவும் நகரின் அனைத்து இடங்களிலும் அவைபற்றிய ஒரு சிறு நினைவாவது மனதின் ஆழத்தில் உறங்கிக்கொண்டிருக்கும். அவ்விடங்களைக் கடந்துசெல்லும்போது அவை உயிர்பெறுவதுண்டு.

***

முதன் முதலில், எனது இளைய மகளை இந்நகருக்கு அழைத்து வந்தபோது, அவளுக்கு 3 - 4 வயதிருக்கும். Disney on ice பார்ப்பதற்காக 600 கி. மீ . கடந்து வந்திருந்தோம். அப்போதுதான் முதன் முதலாக நிலக்கீழ் தொடரூந்தையும், வீதியின் நடுவே தண்டவாளத்தில் ஓடும் ட்ராம்ப் வண்டியையும் கண்டாள். பெருவீதிகளில் ராட்சத அட்டைகள்போல் ஏதோ நகர்வது அவளுக்கு அதிசயமாக இருந்திருக்கவேண்டும். அதில் பயணிக்க வேண்டும் என்றாள். அவளுக்காகவே ஒரு மாலை முழுவதும் ட்ராம் வண்டியில் ஏறி, இறங்கி, நிலக்கீழ் தொடரூந்தில் நீண்ட தூரம் பயணித்துக்கொண்டிருந்தோம். ஐன்னலோரங்களில் உட்கார்ந்திருந்தபடியே கண்களில் பெருங் கனவுடன் எனது கைகளைப்பற்றியபடி வந்துகொண்டிருந்தாள்.

அவள் அயர்ச்சியுற்று, சற்று நேரம் பயணிகளின் வாங்கு ஒன்றில் காலைநீட்டி எனது மடியில் உறங்கிப்போனாள். நான் அவளின் கேசத்தினை கோதியபடி ஆழ்ந்த அவளின் உறக்கத்தினை ரசித்துக்கொண்டிருந்தேன்.

18 ஆண்டுகளின் பின் இன்றும், பயணிகள் ஓய்வெடுக்கும் ”அந்த வாங்கு”, நகரின் மத்திய நிலக்கீழ் தொடரூந்து நிலையத்தில் இருக்கிறது. தினமும் வேலைக்கு அதனைக் கடந்துசெல்லும்போது... மகளின் வாசனையை உணர்வேன்.

***

இதேபோன்று பல வேதனையான, அவமானப்பட்ட நிகழ்வுகள் நடந்த இடங்களும் இந்த நகரத்தில் உண்டு. நகரமும் போதிமரங்களாகலாம் எனக் கற்றுக்கொண்டது இங்குதான்.

இந்நகரத்தில் ஓர் அரசனின் பெயரைக்கொண்ட, நீண்டதொரு வீதியிருக்கிறது. நகரத்தின் மத்தியிலுள்ள புகையிரத நிலையத்தில் தொடங்கி அரசனின் மாளிகையில் முடிவடையும் அது.

நான் துன்புற்றிருக்கும்போதும், மகிழ்வுடன் இருக்கும்போதும் அவ்வீதியில் நடந்துகொண்டிருப்பேன். தோழனைப்போன்று மனநிலைக்கு ஏற்ப என்னுடன் துணைநிற்கும் பெருவீதி அது. அவ்வீதியைப் பற்றிச் சொல்வதற்கு அத்தனை இருக்கிறது.

***

சில நாட்களுக்கு முன் கடும் மழை. நகரத்தின் மத்தியில் ஒரு நிகழ்வில் கலந்துகொள்ளவேண்டியுமிருந்தது. நண்பர் ஒருவரும் தன்னைச் சந்திக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.

நகரின் கிழக்கே, நண்பரைச் சந்தித்துவிட்டு நடந்து வந்துகொண்டிருக்கிறேன், காற்றின் வேகத்தில் குடை உடைந்துபோனது, வானம் உடைந்துவிட்டதுபோன்று மழை கொட்டியது. அருகிருந்த கட்டத்தினுள் கால்கள் என்னை இழுத்துப் போயின. வாசல் திறந்தேயிருந்தது, பழக்கமான இடமாயிற்றே என்று மனம் முணுமுணுத்தபோது, நிமிர்ந்து சுற்றாடலைப் பார்த்தேன்.

***

1980களின் இறுதி, புகைப்படமெடுப்பது எனது முக்கிய பொழுதுபோக்காக இருந்த காலம். ஒஸ்லோவில் பழமைவாய்ந்ததொரு ”புகைப்பட ஆர்வலர்களுக்கான சங்கம்” உண்டு. அங்கு அங்கத்தவனாக இருந்து கற்றதும் பெற்றதும் ஏராளம். வாரத்தில் பல நாட்கள் அங்கு செல்வேன். பயிற்சிப்பட்டறைகள், கருத்தரங்குகள், புகைப்படப் போட்டிகள், தொழில்நுட்ப அறைகள் என பல வசதிகள் அங்கிருந்தன.

ஒரு நாள், நகரத்தின் அடையாளம் என்ற தலைப்பில் படம் எடுத்து வரச்சொன்னார்கள். நண்பர்கள் இருவருடன் இணைந்து இதுபற்றி இயங்கிக்கொண்டிருந்தோம்.

ஒரு வாரமாயிற்று. திருப்தியாக எதுவும் கிடைக்கவில்லை. அப்போதுதான் அவர் நினைவில் வந்தார்.

வீதியில் அலையும், அழுக்கான, நல்வாசனையற்ற வயதான பெண்மணி. குப்பைகளுக்குள் இருக்கும் பெறுமதியான பொருட்களையும் போத்தல்களையும் சேகரிப்பது, யாசகம் கேட்பது, நகரத்தினுள் தனது தள்ளு வண்டிலுடன் அலைவது, தேவாலயத்திற்குச் செல்வது, தீடீர் திடீர் என்று வடக்கு நோர்வேயின் மொழியாடலில் தூசணத்தில் திட்டுவது மறுநிமிடம் கர்த்தரை நோக்கிப் பாடுவது என்று வாழ்வைக் கடத்திக்கொண்டிருந்தவர் அவர். சற்று மனசமநிலை குழம்பியவர்.

தான் சேகரித்துக்கொள்ளும் பணத்தில் யாசகம் செய்பவர்களுக்கு உணவு வழங்குவார். இராமாயணத்தில் வரும் கூனிபோன்று வளைந்த முள்ளந்ததண்டு. பெயர் Aagot Hanshaugen. பல முறை வீதியில் நின்றபடி உரையாடியிருக்கிறோம். எனவே, சற்றுப்பழக்கம் இருந்தது. நகருக்குள் அவர் பிரசித்தமானவர்.அனைவரும் அவரைஅறிவர்.

நண்பர்களிடம் அவரைப்பற்றிச் சொன்னேன். சம்மதித்தார்கள். அவரைத் தேடிப்பிடிக்க இரண்டு நாட்களாயிற்று. தேநீரகத்தில் இருத்தி விடயத்தைச் சொன்னோம். "உணவும், சற்றுபணமும் வேண்டும். எத்தனை படம்வேண்டுமாலும் எடுங்கள்" என்றார்.

வீதிச் சூழ்நிலைகளில் அவரைப் படம் எடுத்தோம். அவரது வீட்டுக்கு அழைத்துப்போக மறுத்துவிட்டார். மறுநாளும் படங்கள் எடுப்பதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டபோது, ஒரு குறிப்பிட்ட இடத்தைச் செல்லி, ”அங்கே நில்லுங்கள் வருவேன்” என்று கூறிவிட்டு விடைபெற்றார்.

மறுநாள், அவர் குறிப்பிட்ட இடத்தில் நின்றிருந்தேன். தூரத்தே அவர் தனது கூனிய முதுகுடன் மெதுவாக வந்துகொண்டிருந்தார். இரண்டு கைகளிலும் குப்பைகளில் பொறுக்கிய பொருட்கள்.

அருகில் இருந்த பூக்கடைக்கு வெளியே தனது பைகளை வைத்துவிட்டு உட்சென்றார். யாசகம் எடுக்கிறாராக்கும்... என்று நினைத்தேன். கையில் அழகிய பூங்கொத்துடன் வெளியே வந்தார்.

எனக்குள் ”யாருக்கு இந்தப் பூக்கள்?” என்ற ஆர்வம் வந்திருந்தது. எனவே, மறைந்து நின்று அவதானிக்கலானேன்.

***

வடக்கு நோர்வேயை பிறப்பிடமாகக்கொண்டு 24. september 1919இல் பிறந்த இவருக்கு எட்டுச் சகோதர, சகோதரிகள் இருந்தனர். இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது சுவீடனுக்கு இடம்பெயர்ந்து, ஒரு வீட்டில் வேலைக்காரியாக தொழில் புரிந்த அந்நாட்களிலேயே மன அழுத்தங்களினால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். சுவீடனில் அவர் வேலைசெய்த வீடு எரிந்துபோனபோது, அனைத்தையும் இழந்து மேலும் மனஅழுத்தத்திற்கு உட்பட்டு நோயாளியாகினாராம்.

பின்பு, வடக்கு நோர்வேயில் Bodø என்னும் இடத்திலும் Oslo விலும் மனநல மருத்துவமனைகளில் இவருக்குச் சிகிச்சை அளித்திருக்கிறார்கள். இந்நாட்களில் இவரது நோயினைக் கட்டுப்படுத்த, நினைவுகளை அகற்றும் Lobotomy சத்திர சிகிச்சை நடைபெற்றதாம். பிற்காலத்தில் இச்சத்திரசிகிச்சைமுறை நடாளவிய ரீதியில் தடைசெய்யப்பட்டபோது, இவருக்கு அரசு நட்ட ஈடும் வழங்கியது.

இவர் திருமணம் செய்திருந்தார் என்று ஒரு இணையைத்தளத்தில் வாசித்தேன். பிற்காலத்தில் வயோதிபர்களைப் பராமரிக்கும் இடத்தில் சுத்திகரிப்புத் தொழில் செய்துவந்தாராம்.

***

அவர் நான் நின்றிருந்த இடத்தை நோக்கி வந்துகொண்டிருந்தார். நான் மறைந்துகொண்டேன்.

அவர் வந்த வழியில் ஒருவர் விழுந்து கிடந்தார். போதைப்பொருள் பாவனையாளராக இருக்கலாம். அவரருகே சென்று உரையாடுகிறார். தனது கையில் இருந்த உணவினையும் ஒரு பிஸ்கட் பெட்டியையும் அவருக்குக் கொடுத்துவிட்டு, வீதியைக் கடந்து செல்லத் தயாராகியபோது, வாகனங்கள் அவருக்கு வழிவிட்டன. கையைத் தூக்கி நன்றியறிவித்தார். உரத்து கிறீஸ்தவப் பாடலைப் பாடியபடி... வீதியைக் கடந்து, அருகே இருந்த தேவாலயத்தினுள் புகுந்தார்.

எனது நண்பர்களைக் காணவில்லையாதலால் நான் அங்கு நின்றிருந்தேன். சற்று நேரத்தில் நண்பர்கள் வந்தார்கள். காத்திருந்தோம்.

தேவாலத்தில் இருந்து வெளியே வந்து எம்மை உள்ளே அழைத்துச்சென்றார்.

மிகப் பழமைவாய்ந்த 1869ஆம் ஆண்டு கட்டப்பட்ட தேவாலயம் அது. பழங்காலத்து தேவாலயங்களுக்கு இருக்கும் தெய்வீக உணர்வும் வாசனையும் பேரமைதியும் அங்கிருக்க, ”வாருங்கள் வாருங்கள்” என்று எம்மை உள்ளழைத்துச்சென்ற அவர் குரல் தேவாலத்தினுள் எதிரொலித்தது.

முதலாவது வாங்கில் எம்மை இருத்திவிட்டு, தேவாலயத்தினுள் மெழுகுதிரிகளை ஏற்றினார். முழந்தாளிட்டு செபித்தார். எடுத்துவந்த பூக்களை உதிர்த்து சிலுவையின் காலடியில் பரப்பிவிட்டு உருக்கமான குரலில் தேவாரம் ஒன்றைப் பாடினார்.

அவரது உருக்கமான குரல் தேவாலயமெங்கும் பரவிற்று. ‘

***

அவரைப்பற்றிய எமது புகைப்படங்களை ஒரு பத்திரிகை நடுப்பக்கம் முழுவதிலும் பிரசுரித்திருந்தது. எமக்கு பலத்த பாராட்டும் கிடைத்தது.

இப்பத்தியை எழுதிவிட்டு இணையத்தில் அவரைப்பற்றி என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று தேடினேன்.

Kårvikhamn என்பவர் 13. September 2019 அன்று தனது முகப்புத்தகத்தில் இவ்வாறு எழுதியிருந்தார்:

***

1990இல் ஒரு நாள், ஒஸ்லோவின் பழைய விமானநிலையத்தில் Wien நகருக்குச் செல்வதற்காய் காத்திருந்தேன். ஒரு வயதான பெண் அனைவரிடமும் யாசகம் பெற்றுக்கொண்டிருந்தார்.

என்னிடமும் வருவார். ஏன் யாசகம் செய்யமாட்டேன்? என்பதற்கான வாதங்களை மனது தயார்படுத்தியிருந்தது. அங்கிருந்த அனைவரும் வசதிபடைத்தவர்கள். எவரும் அவருக்குப் யாசகம் போடவில்லை. என்னிடம் வந்தார். நானும் யாசகம் போடவில்லை.

என்னைக் கடந்துபோனபோது ”நீயும் உன்னை கிறீஸ்தவன் என்கிறாய்?” என்றுவிட்டுக் கடந்துபோனார்.

அவரது வார்த்தைகளை உள்வாங்கிப் புரிந்துகொள்ள எனக்கு நேரம் எடுத்தது.

யாசகம் கேட்பது என்பது, நான் என்னிடம் இருப்பதை பகிர்வதற்கான சந்தர்ப்பம் என்பதைப் புரிய ஆரம்பித்தேன். தவிர, இன்னொருவரது வாழ்வினை முன்அபிப்பிராயங்களுடன் அணுகுவது தவறு என்பதும், வாழ்வு எனக்குத் தந்திருக்கும் வசதிகளைக் கடைநிலை மனிதர்களுடனாவது பகிர மறுப்பது, நான் எத்தனை மனவறுமையைக் கொண்டிருக்கிறேன் என்பதைக் காட்டுகிறது என்பது புரிந்தது என்றும் Aagot அவர்கள் 31. october 2003 இல் இறந்துபோனார் என்றும் அவர் எழுதியிருந்தார்.

***

தனது வறுமையிலும் நோய்மையிலும் சக மனிதனையும், மற்றையவரது வலிகளைத் தனதாகவும் உணர்ந்த பெரு மனம் கொண்ட மனிதர் Aagot Hanshaugen. வறுமையிலும், அன்பு என்பதே கிறீஸ்தவத்தின் அடிப்படைத் தத்துவம் என்பதைப் புரிந்தவர். அதன்படி வாழ்ந்தவர்.

1992ஆம் ஆண்டு நான் ஒஸ்லோவைவிட்டு இடம்பெயர்ந்தேன். வாழ்வு என்னும் பெருங்காற்றில் Aagotஐ நினைவுகள் அகன்றுவிட்டிருந்தன.

***

வானமுடைந்து கொட்டிய பெருமழை, ஏறத்தாழ 31 வருடங்களின்பின், அவரைச் சந்தித்த அதே தேவாலயத்தினுள் என்னை ஒதுங்க வைத்திருக்கிறதே, ஏன்?

---
உள்ளம் இதழிலும், இணைய சஞ்சிகையிலும் வெளிவந்த பத்தி.

https://ullamm.com/

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்