கம்பிப்பொம்மை விற்பவனின் ஜீவிதம்

யாத்திரை சென்றிருந்த நாளொன்றில், Borgos நகரத்தின் பழம்பெரும் தேவாலயத்தின் படிகளில் உட்கார்ந்திருந்தபடியே அயர்ந்துபோனேன். சூரியனை மேகங்கள் மறைத்திருக்க, காற்றில் வெப்பம் பரவியிருந்தது. யாரோ அழைப்பது கேட்டு விழித்தபோது எதிரே ஒருவர் நின்றிருந்தார். நடுத்தர வயது. அளவான உயரம், சுருட்டையான முடி, முகத்தில் தாடி, சில பற்கள் கறுப்பாக இருந்தன. கண்கள் மஞ்சளாக, மெலிந்த சற்றே வளைந்த உடல். கையில் கம்பியினால் செய்த சில உருவங்கள் சில இருந்தன. சுற்றுலாப் பயணிகளுக்கும் யாத்ரீகர்களுக்கும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்பவர் என்று ஊகிக்க முடிந்தது.


***

வாழ்வு தரும் மனிதர்களுக்கு அளவே இல்லை. இதுவரை பெரும்பாலும் நன்மையையே வாழ்வு தந்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். இருப்பினும் நன்மையும் தீமையும் கலந்ததல்லவா மனிதர்களும் வாழ்வும்?

எல்லோரையும் போன்று நானும் நன்மையாயும் தீமையாயும் இருந்திருக்கிறேன்,
சுயவிமர்சனத்தையும் அதன் நல்விளைவுகளையும் வளர்த்துக்கொள்ளும்போது ஆழ்செல்லும் வேர்போல் மனது நிமிர்ந்து உட்கார்ந்துவிடுவதால் வாழ்வின் மேடு பள்ளங்களை இலகுவாக எதிர்கொள்ள முடிகிறது.

இப்போதெல்லாம் வாழ்வு தரும் மனிதர்களை இழந்துவிடாதிருக்கவே மனது விரும்புகிறது. அதிகமாக மனிதர்களை நெருங்காமலும், நியாய அநியாயங்களுக்காக முட்டி மோதுதல், விவாதங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொண்டாலே வாழ்வு தரும் மனிதர்கள் பல காலம் உங்களுடன் வருவார்கள் என்பது புரிந்திருக்கிறது. இவை புரியும்போது திரும்பப் பெற முடியாது இழந்தவை ஏராளம்.

காலத்தைப் பின்னோக்கிச் சுற்ற முடியுமா என்ன? கடந்தவற்றைப் பாடமாகக் கொள்ளலாம். அவ்வளவுதான்.

***

இப்படியான சிந்தனையுடன் யாத்திரைப் பயணத்தில் நடந்துகொண்டிருந்த நாளொன்றில் பெய்த பெரு மழை, ஊரைக் கழுவிவிட்டிருந்தது. Burgos நகரத்துப் பெருந்தேவாலயத்தின் படிகளில் முதுகுப்பையை இறக்கிவைத்தபோதே இனி இரண்டு நாட்களுக்கு நடக்க முடியாது என்பதை உணர்ந்திருந்தேன். முதல்நாள் ஆரம்பித்த கால்வலி இன்று வலி தாங்க முடியாதிருந்தது.

எனக்கு எங்கும் உறங்கும் கலை வசப்பட்டிருக்கிறது. சரீரத்தினை நீட்டிக்கொள்ள இடமிருந்தால் போதுமானது. அப்படி அத்தேவாலயத்தின் படிகளில் உறங்கிக் கிடந்தபோதுதான் அவர் என்னை எழுப்பி மிகச் சிறப்பான ஆங்கிலத்தில் ஆரம்பித்தார்.

“கைவினைப் பொருட்களை விற்றுக் கிடைக்கும் வருமானத்தில் வாழ்பவன். உனக்கான இப்போதே ஒரு யாத்திரிகனின் உருவத்தைக் கம்பியில் செய்து தருகிறேன்” என்றுவிட்டு எனது பதிலை எதிர்பார்க்காமலே கம்பியை எடுத்துக் குறட்டினால் வளைக்கத் தொடங்கினார். ஓரிரு நிமிடங்களில் அதை என்னிடத்தில் தந்தார். அதன் நேர்த்தியில் அசந்துபோனேன்.

“நான் இன்னும் 400க்கும் அதிகமாகக் கி. மீ. தூரம் நடக்கவேண்டியிருக்கிறது. இதனைப் பாதுகாத்து எடுத்துச் செல்வதற்கிடையில் இந்த உருவம் நெளிந்து சிதைந்துவிடும், மன்னியுங்கள்” என்றேன்.

“ஐ அண்டஸ்டான்ட்” என்றுவிட்டு அருகே இருந்த இன்னொருவரிடம் சென்றார். நான் மீண்டும் கண்களை மூடிக்கொண்டேன்.

பின் மதியம்போல், தங்குவதற்காக ஒரு மடத்தினைத் தேடிக்கொண்டிருந்தபோது மீண்டும் அவரைச் சந்திக்க நேர்ந்தது.

“தங்குவதற்கு இடம் தேடுகிறாயா? இன்று அனைத்து மடங்களும் நிறைந்துவிட்டன. 4 – 5 நட்சத்திர விடுதிகள்தான் இருக்கின்றன. வா அழைத்துப்போகிறேன்” என்றார்.

“நட்சத்திர விடுதிகளின் விலைகள் எனக்கு ஒவ்வாதவை. அங்கு தங்க குறைந்தது 150 யூரோக்களாவது தேவை. 150 யூரோக்களில் நான் குறைந்தது நான்கு நாட்கள் உண்டு, உறங்குவேன். எனவே நட்சத்திர விடுதி வேண்டாம்”

“இந்த நகரத்தை நான் நன்கு அறிவேன். இங்கு இன்று யாத்ரீகளுக்குரிய மடங்களில் இடமே இல்லை. என்ன செய்யப்போகிறாய்?”

“எனக்குக் கால் வலி உயிர்போகிறது. இரண்டு நாட்களுக்கு நடக்க முடியாது. எனவே அடுத்த நகரத்திற்கு பேரூந்தில் செல்லாம் என்று நினைக்கிறேன்”

நான் நொண்டி நொண்டி நடப்பதைக் கண்டவர் உரிமையாக “உனது முதுகுப் பையைத் தா” என்றார்.

எனது மனதுக்குள் இருந்த சாத்தான் விழித்துக்கொண்டு “சஞ்சயா, உன்னால் நடக்கவே முடியவில்லை. உனது முதுகுப் பையினுள் கடவுச்சீட்டு, பணம், வங்கி அட்டைகள், மருந்துகள், கணினி, உடைகள் என்று அனைத்தும் இருக்கிறன. இவனைப் பார்த்தால் நம்பிக்கை தரும் முகமாக இல்லை. இவன் உனது முதுகுப் பையுடன் ஓடினால் என்ன செய்வாய்?” என்றது.
சாத்தானின் கருத்து நியாயமாகத்தான் இருந்தது. ஆனால், வாழ்வில் என்னை எவரும், அப்படி இதுவரை ஏமாற்றவில்லை. நானும் யாரையும் ஏமாற்றி அபகரித்ததில்லை.

அன்றொருநாள் ஒரு சக யாத்ரீகருக்கு கால் வலித்தபோது நான் அவரது பொருட்களைக் காவியிருந்தேன். இப்போது எனக்குக் கால்வலி. யாரோ ஒருவர் எனக்கு உதவுகிறார். இது நன்மையின் சுழற்சி. “நீ அவரை நம்பலாம்” என்றது மனது.

எனது மனதை வாசித்தவர் போன்று “யோசிக்காதே, நான் ஓடமாட்டேன்” என்றபடியே என்னிடம் இருந்த முதுகுப் பையை உரிமையாக இழுத்து எடுத்தபடியே “வா, போகலாம்” என்றார்.

ஒரு மடத்திற்கு வந்து சேர்ந்தோம். அது யாத்ரீகர்ளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அப்போது, “Pablo உனது விற்பனையைப் பிறகு பார்க்கலாம். எங்கே போய்விட்டாய்? இரவு உணவு சமைக்க ஆரம்பிக்க வேண்டும்” என்றார் மடத்தின் உரிமையாளர்.

அவரிடம் சென்று என்னைக் காண்பித்து எதோ பேசினார். “மடத்தில் இடம் இல்லையே” என்றார் அவர். Pablo அவரது காதுக்குள் எதையோ குசு குசுத்தார். அவர் முகத்தைச் சுழித்தார். பின்பு சம்மதிப்பது போன்று தலையாட்டினார்.

மடத்தின் பின்புறமாக இருந்த பண்ணையிலிருந்த ஒரு குடிலின் நிலத்தில் படுக்க இடம் கிடைத்தது. “இதுதான் உனது இடம். நான் சமைக்க வேண்டும். இரவு உணவின் பின் சந்திப்போம்” என்று விட்டு மறைந்துபோனார்.

நான் குளித்து, ஓய்வெடுத்து, உறங்கி எழுந்தபோது நேரம் மாலை 19.00 மணியிருக்கும். உணவருந்த ஆயத்தங்களும், கிட்டார் இசையுடன் யாரே ஒருவர் பாடுவதும் கேட்டது. உணவு மேசையைச் சுற்றி யாத்ரீகர்கள் இருந்தார்கள். நானும் அங்கு சென்று உண்டபின், எனது படுக்கையில் சாய்ந்திருந்தபோது Pablo வந்தார்.

அருகே இருந்த ஒரு பெட்டியினுள் இருந்த சில உடைகளை எடுத்தபடியே “குளித்துவிட்டு வருகிறேன்” என்றபடி வெளியேறினார்.

அப்போதுதான் நான் அவரது அறைக்குள் இருப்பது புரிந்தது. மிகவும் சிறிய இடம். பழங்காலத்துச் சுவர். சாரளத்தின் ஒரு கண்ணாடியும் நிலத்தின் ஒரு பகுதியும் வெடித்துக் கிடக்க, கூரையில் சிலந்தி தனது கைவண்ணத்தைக் காண்பித்திருந்தது. சுவரில் தொங்கிய மங்கிய ஒரு புகைப்படத்தில் ஒருவர் கால்பந்துடன் 10ம் இலக்க மேலங்கியுடன் நின்றார். இன்னொரு புகைப்படத்தில் ரசிகர்கள் ஒருவரைத் தோளில் சுமந்து சென்றுகொண்டிருந்தார்கள். அவரது தனது கரங்களைத் தோளுக்கு மேலே தூக்கியிருந்தார். சுவரெங்கும் காற்பந்தாட்டப் படங்கள். பேலே, மரோடோனா, மற்றும் பெயர் தெரியாத வீரர்கள். மேசையில் சில பத்திரிகைகள், புத்தங்கள் இருந்தன. முள் கழன்று விழுந்த ஒரு மணிக்கூடு சுவரில் தொங்கிக்கொண்டிருந்தது.

***

1984ஆம் ஆண்டு ஒரு நாள், யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்குச் புகையிரத்தில் செல்லும் வழியில், இலங்கையின் புகையிரதச் சந்திகளில் மிக முக்கியமான மாகோ சந்தியில் ஒரு இரவு தங்க நேர்ந்தது. அது வாழ்வில் மறக்க முடியாத இரவு. இராணுவ மற்றும் காவல்துறையின் கெடுபிடியிலிருந்து என்னையும் இன்னொரு தமிழரையும் காப்பாற்றி தனது வீட்டில் தங்க வைத்தார் ரயில் நிலையத்தின் கடைநிலைச் சிற்றூழியரான ஒரு சிங்களவர். ஏழ்மை நிறைந்த குடிசையில், அவரிடம் இருந்ததை எங்களுடன் பகிர்ந்துகொண்டார். தனது கிழிந்த பாயினை எனக்குத் தந்துவிட்டு நிலத்தில் சுருண்டு படுத்துக்கொண்டார் அவர். காலையில் தனது ரொட்டியை மூன்றாகப் பிரித்துத் தேனீருடன் தந்தார். ஏறத்தாழ 38 வருடங்களின் பின்பும் அன்றைய இரவு பசைபோல் மனதில் ஒட்டிக்கிடக்கிறது.

அப்படியானதொரு இரவு எனக்கு மீண்டும் கிடைக்கவிருக்கிறது என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

***
Pablo குளித்துவிட்டு வந்தார். நான் கீழே படுத்திருந்தேன். தனது கரும் பச்சை நிறமான பழைய உறங்கும் பையினை எடுத்து எனக்கருகில் விரித்தார்.

மேசையின் கீழ் இருந்து ஒரு மதுப்போத்தலையும் இரண்டு கிண்ணங்களையும் எடுத்துவந்தார்.
“பச்ரான் குடிப்பாயா?” என்றவரை நான் ஏமாற்றவில்லை. பச்ரான் ஸ்பெயின் நாட்டின் பாரம்பர்யக் குடிவகைகளில் ஒன்று. இனிப்பான மதுரசம். சிவப்பு நிறமாக இருக்கும்.

“இது உங்களின் வீடா?”

“அதுபற்றிப் பின்பு பேசுவோம். “Buen camino” (உனது யாத்திரை சிறக்கட்டும்) என்றவாறே கிண்ணத்தை எடுத்து நீட்டினார். கிண்ணங்கள் கிளிங் என்றன.

“ஆம், தற்போது இதுதான் எனது வீடு” என்ற அவரது குரலில் ஏக்கத்தினை உணரமுடிந்தது. நான் எதுவும் பேசவில்லை.

“நான் இந்த மடத்தில் சமையலறையில் உதவிக்கு நிற்கிறேன். ஓய்வு நேரங்களில் கைவினைப் பொருட்களை விற்கிறேன்” என்றார்.

மழையும், முன்னிரவுக் குளிரும், காற்றும் திறந்திருந்த கதவினூடாக அறையை நிரப்பிக்கொண்டிருக்க நாம் உரையாடிக்கொண்டிருந்தோம். எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. காலையில் விழித்தபோது Pablo ஐக் காணவில்லை.

அன்று நான் அதிகம் நடக்கவில்லை. காலையுணவின் பின் நகரத்திற்குச் சென்று வீதியோரக் கடையொன்றிற்கு வெளியே உட்கார்ந்திருந்து தேநீரருந்திக்கொண்டிருந்தபோது, பெருந் தேவாலயத்தின் மணி 10 முறை ஒலித்தோய்ந்தது. அவர் தேவாலயப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தனது கைவினைப் பொருட்களை விற்றுக்கொண்டிருப்பதைக் கண்டேன்.

அன்றும், இரவு உணவின் பின், மடத்தில் உணவின் பின்னான கொண்டாட்டங்கள் ஆரம்பித்திருந்தன. மனம் அதில் லயிக்கவில்லை. அவரது அறைக்கு வெளியே, ஒரு மரக்குற்றியில் உட்கார்ந்திருந்தபடியே பச்ரான் பானத்துடன் உரையாடிக்கொண்டிருந்தோம்.

சுவரில் தொங்கிய படங்களைப் பற்றிக் கேட்டேன். The Shawshank Redemption திரைப்படத்தில் சுவரில் ஒட்டியிருக்கும் ஒரு படத்தின் பின்னால் பெருங்கதை ஒளிந்திருக்கும் இருக்கும் அல்லவா, அதுபோன்றதொரு பெருங் கதை அந்தக் கால்பந்தாட்ட வீரனின் படத்தின் பின்னால் இருந்தது.

“நான் எனது இளமைக் காலத்தில், ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன் சிறந்த கால்பந்தாட்ட வீரனாக இருந்தேன். அக்காலத்தில் பெரும் சம்பளத்தில் இரண்டாம் நிலை கழகத்தில் முன்னணி வீரனாக விளையாடியபோது சிறந்த எதிர்காலம் உண்டு என்று கருதப்பட்ட விளையாட்டு வீரன். முதல் நிலை கழகங்கள் என்மீது கவனம் செலுத்தியிருந்த காலம். தேவையான அளவு பணம், ஊருக்குள் புகழ், வரிசையில் பேரழகிகள், பெற்றோர், சகோதரிகள் என மகிழ்வான வாழ்வு எனக்கு அமைந்திருந்தது.

எனது கழகம் இரண்டாவது லீகாவில், முன்னணி வகித்தபோது ஒரு முக்கிய போட்டியினை இறுதி நிமிடத்தில் 3-2 என்ற ரீதியில் அடித்து வென்றோம் என்று விட்டு “யார் அந்தக் கோலினை அடித்திருப்பார் என்று நினைக்கிறாய்?” என்றார்.

“நீங்களா?”

“ஆம், அது நான் பெற்ற பெருவெற்றி. ஊரே என்னைத் தலையில் வைத்துக் கொண்டாடியது. அன்றிரவு நரகமெங்கும் என்னைத் தோளில் சுமந்து சென்றார்கள்.

அளவுகடந்த உற்சாகத்தில் நண்பர்களுடன் விளையாட்டாக ஆரம்பித்த போதைப் பொருள் பாவனையும் மதுப் பாவனையும் ஆறு மாதத்தினுள் என்னை உள்ளிழுத்துக்கொண்டது.
இருந்தாலும் சிறப்பாகவே விளையாடினேன். அந்நாட்களில் நான் மிகச் சிறந்த விளையாட்டு வீரன் என்ற ஆணவமும் கர்வமும் இருந்தது. வயது அப்படியல்லவா? விளையாட்டு மங்கத்தொடங்கிய ஒரு நாள், எனது பயிற்சியாளர் “உனது விளையாட்டு மங்கிப்போகிறது. விளையாட்டின் தரத்தில் கவனம் செலுத்து” என்ற ஆரம்பித்த உரையாடல் தர்க்கமாகி, கைகலப்பில் முடிந்தபோது அணியிலிருந்து விலக்கப்பட்டேன்.

போதையின் உச்சம் அனைத்தையும் இழக்கவைத்தது. பெற்றோரும் குடும்பத்தினரும் கூட என்னைத் திருத்த முடியாது என்று ஒதுக்கிக்கொண்டனர்.

கையிலிருந்த பணமும் சொத்துக்களும் கரைந்தபின், போதைப்பொருள் கொள்வனவிற்காகச் சிறு சிறு குற்றச்செயல்களில் ஈடுபட நேர்ந்தது. போதைப்பொருட்கள் விற்றேன். வாழ்வு புரண்டு, 15-16 வருடங்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையான நிலையில் உருக்குலைந்து போனது. இரண்டுமுறை சிறைக்கும் சென்று வந்தேன்”.

மெதுவாகத் தூறிக்கொண்டிருந்த மழை பெரிதாகக் கொட்டத்தொடங்கியது. கொடியில் தொங்கிக்கொண்டிருந்த தனது உடைகளை உள்ளே எடுத்து வந்தார்.

இருவரும் உள்ளே வந்து சுவரில் சாய்ந்து கொண்டோம். “எனக்குக் குளிர்கிறது” என்றபடி நான் எனது உறங்கும் பையினுள் எனது கால்களைப் புகுத்திக் கொண்டேன். அவர் அன்றும் இரண்டு கிண்ணங்களை ‘பச்ரான்’ பானத்தால் நிரப்பினார்.

அவருக்குப் பேச வேண்டும் என்று மனம் உந்தியிருக்க வேண்டும். தன்னை மறந்து கதை சொல்லிக்கொண்டிருந்தார்.

“சமூகத்தின் கடை நிலை மனிதனாக வாழ்ந்திருந்த ஒரு நாள், Borgos பெருந்தேவாலயத்திற்கு வந்த ஒரு யாத்திரிகரிடம் யாசகம் கேட்டேன். அவரோ என்னைச் சிறப்பானதொரு உணவகத்தினுள் அழைத்துச் சென்று உபசரித்தபடி “வாருங்கள் இணைந்து நடப்போம், உணவுக்கும் தங்குமிடத்திற்கும் நான் பொறுப்பு”” என்று அழைத்தார் என்றுவிட்டு நிறுத்தினார்.

***

நான் எனது கடந்த காலத்தினை நினைத்துக்கொண்டேன். வாழ்வு எப்போது யாரை உங்களிடம் அனுப்பும் என்பது புரியாத புதிர் அல்லவா? இருட்டில் வழிதெரியாது தடுமாறும் ஒரு பொழுதில், மின்னலடித்தால் தொலைவில் இருக்கும் வழி தெரிந்து மறைவதில்லையா? அப்படி, நான் வாழ்வின் அயர்ச்சியில் மூர்ச்சையடைந்த பொழுதுகளில் காலம் சில முன்பின் அறியாத பேரன்பான மனிதர்களை என்னிடம் அனுப்பி அவர்கள் மூலமாக மூர்ச்சை தெளிவித்திருக்கிறது. அது போன்று, Pabloக்கும் அந்த மனிதர் வெளிச்சத்தினைக் காண்பித்திருக்கிறார்.

***

அவர் தனது கிண்ணத்தையும் எனது கிண்ணத்தையும் மீண்டும் நிரப்பினார். நான் எதுவும் பேசவில்லை. இப்படியான பொழுதுகளில் மறையவர்களைப் பேச விட வேண்டும் என்று காலம் கற்பித்திருக்கிறது.
“அவருடன் நடந்த முதலாவது நாள், என்னால் 10 கி. மீ ஏனும் நடக்க முடியவில்லை. என்னை அழைத்தவர் அதுபற்றிக் கவலைப்படவே இல்லை. “உன்னால் முடிந்தளவு நடப்போம்” என்றார். ஒரு வாரத்தின் பின் சற்று முன்னேற்றம் கண்டேன். ஒரு மாதம் அவருடன் இணைந்து நடந்தபின் போதைப் பழக்கம் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் வரத்தொடங்கியது. அந்த மனிதர் Santiago de Compostela நகரத்திலும், தேவாலயத்திலும் ஒரு மாதம் தங்கியிருக்க உதவிவிட்டுச் சென்றார்.

அங்கு ஒரு சமூக நிறுவனத்தின் உதவியுடன் போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபட மருத்துவ உதவி கிடைத்து 6 மாதங்கள் சிகிச்சைபெற்று நலமான பொழுதில் குடும்பத்தையும் காதலியையும் சந்திக்க மனது உந்தியது. ஊருக்குச் சென்றேன்” என்று விட்டு நிறுத்தினார். குரல் நெகிழ்ந்து தழதழத்தது.

“பெற்றோர்கள் இறந்து சில ஆண்டுகள் ஆகியிருந்தன. உடன் பிறந்தவர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருந்தார்கள். அவர்கள் என்னைக் கண்டுகொள்ளவோ, தோளணைக்கவோ விரும்பவில்லை. காதலி தனித்து வாழ்வது அறிந்து அவரிடம் சென்றபோது அவரும் என்னை நண்பனாகவேனும் ஏற்றுக்கொள்ள மறுத்தார்.

எனது நகரத்தினரும் நண்பர்களும்கூட எனது கடந்தகாலத்தை மன்னிக்கத் தயாராக இல்லை. திருடன், போதைப்பொருள் பாவனையாளன் என்பவையே நிலைத்துவிட்டிருந்தன. வலிமிகுந்த வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டு இந்த நகரத்திற்கு வந்தேன்.

வாழ்வில் திருந்தி வருபவர்களைச் சமூகம் ஏற்பதில்லை. மனிதர்களிடத்தில் நம்பிக்கையை இழந்துவிட்டால் அதைப் மீளப்பெற்றுக்கொள்வது இலகு அல்ல. இதைக் கற்றுக்கொண்டபோது வாழ்வு ஏறத்தாள முடிந்துவிட்டிருக்கிறது. இப்போது, தனியே, இந்த மடத்தின் உரிமையாளரின் தயவில் வாழ்கிறேன். உணவும், தங்குவதற்கு இடமும் கிடைக்கிறது. அதற்குப் பிரதியுபகாரமாய் இங்கு வேலை செய்கிறேன். போதைப்பொருள் பழக்கம் இப்போது இல்லை. இருந்தாலும் வாழ்வு தனிமையிலும் வெறுமையிலும் கழிந்துகொண்டிருக்கிறது. மிகவும் வலியான வாழ்வு” என்ற போது கண்ணீர் வழிந்தது.

***

நானும் எனது வாழ்வில், சினத்தினால் பலரையும் இழந்திருக்கிறேன். அவர் சொன்னது உண்மைதான். கசங்கிய தாளைப் போன்றது இழந்த நம்பிக்கை. அதனை மடிப்புக்களின்றி நிமிர்த்துவதென்பது முடியாத காரியம். மன்னிக்கத் தெரிந்த மகத்தான மனமுள்ளவர்கள் மட்டுமே தவறு செய்தவர்களை முழுவதுவமாக மன்னித்து ஏற்றுக்கொள்கிறார்கள்.

***

என்னால் எதையும் பேச முடியவில்லை. கிண்ணத்தில் பச்ரான் பானத்தை ஊற்றி நீட்டி “Pablo, நீங்கள் அற்புதமானவர். உங்களிடம் எதுவுவே இல்லாதபோதும் எனக்கு உங்களின் இடத்தையும் நேரத்தையும் அன்பையும் தந்திருக்கிறீர்கள் அல்லவா? என்னை அழைத்து வந்து உங்களின் மேளாளரிடம் கெஞ்சி, இடம் எடுத்துத் தரவேண்டிய அவசியம் என்ன? உங்களுக்கும் எனக்குமான தொடர்புதான் என்ன? ஏன் இப்படி நீங்கள் செய்ய வேண்டும்? சகமனிதனை எதிர்பார்ப்பும் பிரதியுபகாரமும் இன்றி அரவணைக்கும் எவரையும் வாழ்வு ஒருபோதும் கைவிடுவதில்லை. வாழ்வு உங்களிடம் மீண்டும் வரும்.

உங்களைப் போலவே வாழ்விற்குப் பெருவிலை கொடுத்தவன் நான். உங்களை முழுவதுமாகப் புரிய முடிகிறது. சுயவிமர்சனத்தினூடாக உணர்ந்தும் என்னை மாற்றிக் கொண்ட பின்னும் எனது நண்பர்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. மன்னிப்பு கேட்டு அழுது கெஞ்சிய பொழுதில் அதை உதாசீனம் செய்தவர்களும் இருக்கிறார்கள். பேச மறுத்தவர்களும் மறுப்பவர்களும் உண்டு.

கடந்தவை கடந்தவையே. ஆனால், காயங்களுக்குக் காலத்தைப்போன்றதொரு களிம்பு வேறு எதுவும் இல்லையல்லவா? அது ரணங்களை ஆற்றும். சில ஆண்டுகள் கடந்துவிட்ட இப்போது காலம் என்னைத் தனது தோளில் தூக்கிப் போகிறதுபோல் உணர்கிறேன். ஆனால் தனித்திருப்பதான உணர்வு மிகவும் பாதிக்கிறது. நீங்கள் சொல்லும் தனிமையை வென்று கொள்ளவே நான் இந்த யாத்திரையை ஆரம்பித்தேன்.

வாழ்வில் எதுவும் நிரந்தரம் என்று எதுவும் இல்லை? தனியே இருப்பவர்களுக்கே வாழ்வினை மீட்டுக்கொள்வதற்குப் பெரும் சக்தி தேவைப்படுகிறது. சக மனிதர்களிடத்தில் நேசமும் அன்பும் இருந்தால் வாழ்வு தானாகவே சிறக்கும். உங்களிடத்தில் அது நிறையவே இருக்கிறது. அதைவிட,15 வருட போதைப் பழக்கத்தை விட்டொழிப்ப்பதற்கான திடமான மனமும் உங்களிடம் இருக்கிறது. உங்கள் வாழ்வு நிச்சயம் சிறக்கும், சியேர்ஸ்” என்றபடி கிண்ணத்தை உயர்த்தினேன்.

எழுந்துவந்து தோளணைத்துக்கொண்டார். நெஞ்சு விம்முவதை உணர்ந்தேன். நானும் நெகிழ்ந்திருந்தேன், கண்கள் கலங்கின.

***

நான் பேசுவதற்கேனும் எவரும் இல்லாது அல்லாடிய நாட்களும், சந்திப்பவர் யாராகினும் என்னுடன் உரையாடமாட்டார்களா என்று எதிர்பார்த்து ஏங்கி அலைந்த நாட்களும், தோளணைக்க எவருமின்றி தனித்திருந்த நாட்களும் நினைவிற்கு வந்தன. நான் அவரை இறுக அணைத்துக்கொண்டேன். வார்த்தைகள் இல்லாத மொழியில் பேசிக்கொண்டோம்.

அன்று, கனவுகள் அற்ற ஆழ்ந்த தூக்கம் வாய்த்தது. மறுநாள் நான் விழித்துக்கொண்டபோது அவர் இல்லை. எனது முதுகுப்பையின் மேல் பலகையால் ஆன ஒரு சிறு பெட்டி இருந்தது. எடுத்துத் திறந்து பார்த்தேன்.

அதனுள் கம்பியினால் செய்யப்பட்ட ஒரு யாத்ரீகனின் உருவம் இருந்தது.

#Camino_Sanjayan
#Santiago_de_Compostela

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்