பெருங்காதல்

வீதியெங்கும் பஞ்சுபோன்று வெள்ளையாகக் கொட்டிக் கிடந்த பனியை வழித்து வீதியின் இருகரைகளிலும் தள்ளியபடி போய்க்கொண்டிருந்தது ட்ராக்டர் ஒன்று.

கடையில் இருந்து வீடு நோக்கி நடந்துகொண்டிருந்தேன். வீதி வெறிச்சோடிக்கிடந்தது. அழுக்கற்ற வெள்ளைப் பனி மனதுக்குத் தரும் புத்துணர்ச்சியை அனுபவித்தபடி... நடந்துகொண்டிருந்தபோது, காலில் ஏதோ இடறுப்படுவதை உணர்ந்து குனிந்தேன்.

தோலினாற் செய்யப்பட்ட சிறியதொரு விலையுயர்ந்த பணப்பை. கையில் எடுத்துப் பார்த்தேன். சாரதிப்பத்திரம், வங்கிஅட்டை, பணம் என்பன இருந்தன.

சுற்றும் முற்றும் பார்த்தேன். எவரும் இல்லை. கூகிள் ஆண்டவரிடம் சாரதிப் பத்திரத்தில் இருந்த பெயரைக் கொடுத்து விலாசத்தினைக் கேட்டேன்.

எனது வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு விலாசத்தினைக் காண்பித்தது. தேடிச் சென்று கதவைத் தட்டினேன். ஹாலிவூட் பிரபலம் எலிசபத் டெய்லரின் வயதிலும், அழகிலும், ஒப்பனையிலும் கையில் விலையுயர்ந்த சிகரட்டுடன் ஒருவர் கதவைத் திறந்தார்.

சாரதிப்பத்திரத்தில் இருந்த பெயரைக் கூறி, அவரிடம் இதனைக் கொடுங்கள் என்றேன். வாங்கிக் கொண்டார்.

“நான் வருகிறேன். மாலைப் பொழுது அழகாகட்டும்” என்று கூறிவிட்டு இரண்டடி வைக்கு முன் “உன்னை உபசரிக்காது விட்டால் கர்த்தர் என்னை மன்னிக்க மாட்டார். உள்ளே வா“ என்றார்.

எனக்கும் வேலைகள் எதுவும் இருக்கவில்லையாதலால் உள்ளே சென்றேன்.

தனியே வாழும் பெண் மூதாளர். குழந்தைகள் குடும்பம் இல்லை.

இது நடந்து ஏறத்தாழ ஒரு வருடமாகிவிட்டது.

இப்போது நானும் அவரும் நண்பர்கள். அவருக்காக நான் தோட்டக்காரன், வேலைக்காரன், வீடு திருத்துபவன், கணினி ஆசிரியன், சாரதி என்று பல வேடங்களை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனக்கும் அதில் ஆட்சேபனை எதுவும் இல்லை.

அண்மையில் புதிதாக ஒரு விலையுயர்ந்த கைத்தொலைபேசியை வாங்கிக் கொண்டார். அதில் அவருக்குத் தொலைபேசி அழைப்புக்களுக்குப் பதிலளிக்கவும், குறுஞ்செய்திகளை வாசிக்கவும் மட்டுமே தெரியும்.

ஒரே ஒரு மனிதரிடம் இருந்துதான் அவருக்குக் குறுஞ்செய்தி வரும். இவருக்குப் பதில் எழுதத் தெரியாது. எனவே, நேரடியாகத் தொலைபேசி உரையாடலை ஆரம்பித்து, குறுஞ்செய்திக்கான பதிலைச் சொல்லுவார்.

அவருக்குத் தொலைபேசியை எவ்வாறு பாவிப்பது என்று கற்பிக்கும் வேலை என்னுடையது. அது சாண் ஏற முழம் சறுக்கும். எனவே, அவர் இன்றுவரை ஒரு குறுஞ்செய்தியும் எழுதியதில்லை.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை மாலை.

தொலைபேசியில் அழைத்தார். குரலில் பதட்டம் தெரிந்தது. “உடனே வரமுடியுமா?” என்றார்.

வீட்டுக் கதவை தட்டியபடி உள்ளேசென்றேன்.

பாதிவழிவரை வந்து எனது கையைப் பிடித்து இழுத்துச் சென்றார். அவரின் செய்கைகளில் பரபரப்பும் பதட்டமும் தெரிந்தது.

“என்ன விடயம் என்று சொல்லுங்கள்?" என்றேன்.

“உனக்கு ஏகிலைத் தெரியும் தானே?”

***
ஏகில் அவரது காதலர். ஓரிரண்டு ஆண்டுக் காதல் அல்ல. ஏறத்தாழ 40 ஆண்டுப் பெருங்காதல்.

ஏன் அவர்கள் சேர்ந்து வாழவில்லை என்ற உங்கள் கேள்விகளுக்கு என்னிடம் பதில் உண்டு. ஆனால், அது இந்தக் கதைக்கு அவசியமில்லை என்பதால் தவிர்க்கிறேன்.

***
இன்று காலை ஏகிலின் வாகனத்தை இந்த வீதியில் கண்டேன். கையில் பூங்கொத்துடன் தனது காதலியிடம் அவர் செல்வதையும் கண்டேன் என்று சொல்லிக் கண்ணைச் சிமிட்டினேன்.

“உனது கிண்டல் புரிகிறது. அவர் இன்று காலை வந்திருந்தார். அவருக்கு விருப்பமான ரஸ்ய நாட்டு மீன் சினையும் பாணும் தயாரித்திருந்தேன். ரசித்து உண்டார். மதியம்போல் நாம் இருவரும் வெளியே நடந்துபோனோம்.“

“ம்“

அதன் பின் அவர் பேசிவில்லை. அமைதியாக இருந்தார். எதையோ சொல்வதற்கு சக்தியைத் திரட்டுகிறார் என்பது மட்டும் புரிந்தது.

அவரது கோப்பிக் குவளையினுள் கோப்பியினை ஊற்றினேன்.

“நன்றி“ என்றுவிட்டு இரு முறை உறுஞ்சிக் குடித்தார்.

“ஏகில் இனி வரமாட்டார்“ என்றார் விசும்பும் குரலில்.

“ம்“

“இன்று காலை நடந்து சென்ற போது நான் அநாவசியமாக அவருடன் சண்டையிட்டேன். என்னில்தான் முழுப் பிழையும். ஏகிலுக்கு கடுங்கோபம் வந்தது. என்னுடன் கடும் வாக்குவாதப்பட்டார். அதன்பின் என்னை வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். பத்து பதினைந்து தடவைகள் அவருக்கு தொலைபேசிவிட்டேன். அவர் தொலைபேசியை எடுக்கிறார் இல்லை“

“ம்“

“அவருக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். அதுதான் உன்னை அழைத்தேன்“

“சரி… என்ன எழுதவேண்டும்“ என்றுவிட்டு தொலைபேசியை எடுத்து எழுதத் தயாரானேன்.

“ஏகில் இனி வரமாட்டாரா? என்னில் தான் பிழை. நான் கோபப்பட்டது தவறு“ என்றார் மீண்டும்.

“40 ஆண்டுகளாக மயக்கி வைத்திருக்கிறீர்கள் அவரை. எனவே அச்சம் வேண்டாம். மனிதர் சினமடங்கியதும் பூங்கொத்துடன் உங்களிடம் வருவார்“ என்றேன்.

“எனக்கு நம்பிக்கையில்லை. அவரை அதீதமாக மனவருத்தப்படுத்திவிட்டேன்“

“சரி… என்ன எழுதவேண்டும்?“ என்று கதையை மாற்றினேன்.

சற்று சிந்தித்துவிட்டுத் தொடங்கினார்.

ʻஅன்பு ஏகில்! இன்று உங்களுடன் சண்டைபிடித்ததற்காக நான் வருந்துகிறேன். தவறு முழுவதும் என்னுடையது. தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்கள்ʼ.

செய்தியை அனுப்பினேன். இருப்பினும் அவர் அமைதியடையவில்லை.

“இன்னுமொரு செய்தி எழுது“

ஒரு செய்தி எழுத பத்தாயிரம் குறோணர்கள் என்று அவரை சிரிக்கவைக்க முயன்றேன். சம்பவத்தின் தாக்கத்தின் காரணமாக அவர் நகைச்சுவையை கவனிக்கவும் இல்லை, ரசிக்கவும் இல்லை.

“சரி… என்ன எழுத? “

ʻஅன்பு ஏகில், என்னை மன்னித்துவிடு. தயவுசெய்து மன்னித்துவிடு. இன்று வெள்ளிக்கிழமை. மலையில் உள்ள எனது விடுமுறை வீட்டுக்குச் செல்லலாம். நான் அனைத்துப் பொருட்களையும் எடுத்துவைத்திருக்றேன். கோவிக்காமல் தொலைபேசுʼ.

இதையும் அனுப்பிய பின், அவருடன் உட்கார்ந்திருந்து கோப்பி அருந்தியபடி அவரைத் தேற்றிக்கொண்டிருந்தேன்.

பதில் ஏதும் வரவில்லை. இவரது தொலைபேசி அழைப்புக்களுக்கு அவர் பதில் சொல்லவும் இல்லை.

“அவர் வரமாட்டார்“

“உங்களில் அவருக்கு அன்பு இல்லை என்றால் நீங்கள் சண்டைபிடித்த இடத்திலேயே உங்களை விட்டுவிட்டுச் சென்றிருப்பார். வீடுவரை அழைத்துவந்து உங்களை விட்டிருக்க மாட்டார்“ என்று அவருக்கு நம்பிக்கை தருமாறு சொன்னதைக் கேட்டதும் சற்று ஆறுதலடைந்தார்.

“இன்னுமொரு செய்தி அனுப்பு“

ʻஅன்பு ஏகில், நான் இனி இவ்வாறு நடந்துகொள்ள மாட்டேன். தயவுசெய்து உடனே புறப்பட்டு வாʼ.

நேரம் போனதே தவிர பதில் ஏதும் வரவில்லை. ஏறத்தாழ ஆறு ஏழு குறுஞ்செய்திகள் அனுப்பியிருப்போம்.

அவரைத் தேற்றுவது இலகுவாய் இருக்கவில்லை.

மிகவும் சிறப்பான இரவு உணவு தயாரித்தார். அவரை அமைதிப்படுத்தாவிட்டால் இன்றைய இரவு குறுஞ்செய்திகளை எழுதுவதற்காக நான் இங்கு தங்க வேண்டி ஏற்படும் என்பது புரிந்தது.

எனவே, அவரது திராட்சைரச பானங்களில் சிறப்பான ஒரு போத்தலை எடுத்து அவருக்கு ஒரு கிண்ணத்தில் ஊற்றி நீட்டினேன்.

இரவு உணவினை உண்டபடி பேசிக்கொண்டிருந்தோம்.

புறப்படுவதற்கு முன்பும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினோம். பதில் வரவே இல்லை.

நான் புறப்பட்டு வீட்டுக்கு வந்தேன்.

மறுநாள் காலை மீண்டும் வந்தேன். சாய்மனைக் கதிரையில் வாடிய செடிபோல் கிடந்தார்.

அவருக்கு சக்கரைவியாதி உண்டு என்பதால் சக்கரையை அளவீடு செய்தேன். அளவுக்கு அதிகமாக இருந்தது. இரவு திராட்சைப்பழச்சாறினை முழுவதுமாகக் குடித்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன்.

வைத்தியருக்குத் தொலைபேசியபோது மருந்துகளைக் கொடுக்கும்படி சொன்னார். கொடுத்தேன்.

அன்றும் குறுஞ்செய்திகள் அனுப்பினோம். பதில் இல்லை.

திங்கட் கிழமை காலை, வேலைக்குப் புறப்பட்டு ரயில் நிலையத்தைநோக்கி நடந்துகொண்டிருந்தேன்.

எதிரே ஊன்றுகோலுடன் தூக்க முடியாத அளவு ரோஜாப்பூக்களைத் தனது வாகனத்தில் இருந்து ஒருவர் இறக்கிக்கொண்டிருப்பது தெரிந்தது.

என்னைக் கண்டதும்… “உனது குறுஞ்செய்திகளால் என்னைக் கரைத்துவிட்டாய். எப்படி இருக்கிறாள் எனது கிழவி“ என்றார்.

“அது சரி… அவர் அப்படி என்ன சண்டைபிடித்தார்… உங்களுக்கு இவ்வளவு கோபம் வருவதற்கு?“

“அவளுக்கு நான் அவளது அடிமை என்று நினைப்பு” என்றுவிட்டு நீண்டதொரு மூச்சை இழுத்து விட்டபின் “ஆம்… அவளது அன்புக்கு நான் அடிமைதான்“ என்றுவிட்டு வீடுநோக்கி நடந்தார்.

“அவர் வீட்டில் இல்லை. வைத்தியாலைக்கு அழைத்துச் சென்று விட்டிருக்கிறேன்“

“ஏன், என்ன நடந்தது? நீ ஏன் எனக்குச் சொல்லவில்லை? அவளைப் பார்த்துக்கொள்ளவேண்டும், என்னவென்றாலும் எனக்கு அறிவிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறேன் அல்லவா?” என்று பதறினார்.

“ஒன்றுக்கும் பயப்படாதீர்கள். சக்கரையின் அளவு அதிகமாக இருந்தது. அதுதான் வைத்தியர் அழைத்துவரச் சொன்னார்“

“நான் பயந்தே விட்டேன். கர்த்தருக்கு நன்றி. அவள் வீடு வரும்போது, நான் வீட்டினுள்ளே காத்திருக்கிறேன். கிழவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்போம்“ என்றார்.

நான் பூங்கொத்தை வாங்கி வீட்டு வாசலில் வைத்தேன். அவர் வாகனத்தை அருகில் உள்ள தெருவில் நிறுத்திவி்ட்டு கைத்தடியுடன் வந்துகொண்டிருந்தார். நடையில் காதலின் வேகமும் துடிப்பும் தெரிந்தது.

#அந்திமக்_கதைகள்

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்