நினைவழியா பதின்மம், பகுதி 12

இந்தக் கதைக்கும் partner in crime தயாசாமிக்கும் தொடர்பில்லை என்று சொல்லிக்கொண்டு...

எனது பால்யகாலங்களில் பல ஆண்டுகள், விடுதிவாழ்க்கை என்று விதிக்கப்பட்டிருந்தது. விடுதிவாழ்க்கை என்பது இயந்திரமயமாக்கப்பட்ட வாழ்க்கை. அன்புக்காக ஏங்கி, ஏங்கி வாழும் வாழ்க்கை அது. அப்படிப்பட்ட வாழ்க்கையையும் அழகாக்கிய நிகழ்வு இது.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி விடுதியில் தங்கியிருந்து படித்துக்கொண்டிருந்தேன். அந்நாட்களில் வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்கும், சனிக்கிழமைகளில் 2 மணிநேரம் வெளியில் செல்லவும் அனுமதிப்பார்கள். படம் பார்ப்பதற்கு அனுமதி கிடைப்பது விடுதிக்கு பொறுப்பான ஆசிரியரின் மனநிலையைப் பொறுத்தது. அத்தி பூத்தாற் போல் அதற்கும் அனுமதி கிடைக்கும்.

ஆனால், வெள்ளிக்கிழமைகளில் ஆனைப்பந்தி கோயிலுக்குப் போவது என்றால், அன்று காலையிலேயே மனம் ஆனந்தக்கூத்தாடத் தொடங்கிவிடும். காரணம் பக்தியல்ல. வெள்ளி இரவு படிப்பு இல்லாமல் போவதும், கோயில்பிரசாதமும், மோதகமும், பொறுக்கித் தின்னும் தேங்காய்ச் சொட்டுகளும்தான்.

1976இல் விடுதியில் சேர்ந்த பின், பல வெள்ளிக்கிழமைகள் கடந்து போயின. எனக்கும் பதின்மக்காலங்கள் தனது விளையாட்டுக்களை ஆரம்பித்திருப்பதை அன்று நான் உணர்ந்திருக்காவிடினும், இன்று அது நன்றாகவே புரிகிறது.

அதே கோயிலுக்கு நாம் ஒவ்வொரு வெள்ளியும் செல்வதுபோல ஆனைப்பந்தி பாடசாலையின் பெண்கள் விடுதியில் இருந்தும் பெண்கள் (சிறுமிகள்) வருவார்கள். இவர்களை நான் கண்டுகொள்வதில்லை. அவர்களும் என்னைக் கண்டுகொள்வதில்லை. கோயில்பிரசாதமும், தேங்காய் சொட்டுமாய் எனது உலகம் உருண்டோடிக் கொண்டிருந்தது.

அந்தச் சிறுமிகளில் ஒருத்தி (பெயர் தெரியாது) ஒவ்வொரு வெள்ளியும் தேவாரம் பாடுவாள். உருகி உருகிப் பாடுவாள். கேட்பவர்களையும் உருக்கி நெகிழவைக்கும் குரல் அது. அவள் தேவாரம் பாடும் நேரம் மட்டும் எனது எண்ணம் கோயிலில் இருக்கும்.

அதுவும் ஒரு வெள்ளிக்கிழமைதான். வழமைபோல் வேட்டி, திருநீறு சந்தனத்துடன் கோயில் மணலில் விளையாடிக் கொண்டிருந்தேன். தேவாரம் பாடும் பெண் கோயிலுக்குள் வந்து கும்பிட்டபடியே, உள்வீதியைச் சுற்றிவந்து கொண்டிருந்தாள். மனதுக்குள் ஏதோ செய்தது. அவளைப் பார்த்தபடியே இருந்தேன். நான் இருப்பதை அவள் கவனிக்கவேயில்லை. தேவாரங்களை முணுமுணுத்தபடியே கடந்து போனாள்.

அன்று தொடங்கியது ஹோர்மோன்களின் ஆட்டம். மனம் அவளையே தேடியது. தேவாரம் படிப்பதற்காக முன்னால் நிற்பாள். அன்று முதல் நானும் நின்றேன். அவள் தேவாரம் படிக்கத் தொடங்குவதும் தெரியாது, படித்து முடிப்பதும் தெரியாது. அவளின் முகம் மட்டுமே தெரியும். கண்மூடி, அவள் தன்னிலை மறந்து தேவாரம் படித்தபோது, நானோ என்னிலை மறந்து அவளைப் படித்துக் கொண்டிருப்பேன். இதுவும் ஒருவித பக்திதான்.

அமைதியான அழகுடன் இருப்பாள். தலையில் மல்லிகைப் பூவிருக்கும். கூப்பியிருக்கும் அவள் கைகளில் பிளாஸ்டிக் காப்புகள் இருக்கும். வெள்ளைச் சட்டையும், பழுப்படித்துப் போயிருந்த வெள்ளை பாவாடையுமாய் நின்றிருப்பாள்.

அன்று தொலைந்தவன்தான் அதன்பின் வந்த சில மாதங்கள் தொலைந்து போயிருந்தேன். ஒவ்வொரு வெள்ளியும் திருவிழா தான். வியாழன் இரவே எப்படா விடியும் என்றிருப்பேன். வெள்ளி மாலை குளித்து, மற்றவர்களுடன் வரிசையாக நடந்து சென்று கோயிலுக்குள் புகுந்தால், அவள் வரும்வரை மனது தவியாய்த் தவிக்கும். கண்டதும் அமைதி கொள்ளும். எனது தந்தையார் அடித்து, அடித்து கற்பித்த தேவாரமெல்லாவற்றையும் அவள் அடிக்காமலும், கற்றுத் தராமலும் கற்பித்தாள். சமர்த்தாய் கற்றுக்கொண்டேன்.

தேங்காய் சொட்டு பொறுக்குபவர்களும், மோதகத்துக்கு அடிபடுகிறவர்களும் ஏதோ அற்ப பிராணிகளைப் போல் எனக்குத் தெரிந்தார்கள். அவர்களுக்குப் போட்டிக்கு ஒருவன் குறைந்திருந்தான். நான் பட்டினியாய் விடுதிக்குப் போனாலும், மனம் நிரம்பியிருக்கும்.

அவளுடனான அந்த நாட்களில் ஒரு துளியேனும் காமம் என்னும் சொல்லுக்கு இடமிருக்கவில்லை.. எழுத்தில் சொல்லமுடியாத பரிசுத்தமான மகிழ்ச்சியான நிலையை மட்டுமே தந்து போன அனுபவமது.

ஒருமுறை மட்டும் அவளுடன் இருவார்த்தைகள் பேசினேன். கோயிலில் திருவிழாவின்போது அய்யர் தேவாரம் படிப்பவளைத் தேடினார். என்னையும் தேடச் சொன்னார். தேடாமலே அறிந்திருந்தேன் அவளிடத்தை. அவளிடம் சென்று “அய்யா வரட்டாம்” என்றேன். நிமிர்ந்து பார்த்தாள் என்னை. என்னால் பார்க்கமுடியவில்லை. கொலுசின் ஒலி கேட்க ஓடினாள். பதட்டம் குறைந்ததும் நானும் ஓடிச்சென்று அவளுக்கு எதிர்வரிசையில் நின்றபோது..

“இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உன்கழல் தொழுதெழுவேன்”

என்று கண்மூடி உருகிக் கொண்டிருந்தாள். “அய்யா வரட்டாம்” என்ற அந்த இரு வசனங்களைக் கொண்ட காட்சி எனது மனத் திரையரங்கில் 100 நாட்களுக்கு மேலாக ஓடிச் சாதனை புரிந்தது என்பது அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

சில மாதங்களின்பின், அவளின் வருகை நின்று போனது. ஆரம்பத்தில் கஷ்டமாயிருந்தாலும், சில காலங்களில் அவள் ஞாபகத்தில் இருந்தும் மறைந்து போனாள்.

எனக்கு அவளைத் தெரியும், அவளுக்கு நான் யார் என்றே தெரியாது.

ஒரு வேளை நான் நினைப்பது போல, 'எனக்கு அவனைத் தெரியும், அவனுக்கு என்னைத் தெரிந்திருக்காது...' என்று கடந்தபோய்விட்ட பல பத்து ஆண்டுகளில் ஒருநாளாவது அவள் நினைத்திருகக்கூடுமோ?

நினைத்திருக்கலாம்.


தொடலாம்...

நினைவழியா பதின்மம், பகுதி 11

 பதின்ம வயதுப் பரவசங்கள் - பகுதி 11

******

அருளைப்பற்றி எழுதியிருந்தேன் அல்லவா! அவன் விடுதலை இயக்கம் ஒன்றில் சேர்ந்து சற்றுக்காலத்திலேயே கொல்லப்பட்டான். அவனைப்பற்றிய சில கதைகள் இருக்கின்றன.

ஆள் பெரிய உயரமில்லை. மெல்லிய உடம்பு. அடிக்கடி ஆஸ்துமா, நெஞ்சுவலியால் அவதிப்படுவான். நகைச்சுவையுணர்வு உடையவன்.

எங்கள் ஊரில் தங்கம்மா என்ற பெயரில் ஒரு விலைமாது இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரைப்பற்றி பல கதைகள் உண்டு. விடலைப் பருவத்தில் விலைமாது என்றால் ஒரு வித குறுகுறுப்பு ஏற்படுவதுண்டல்லவா.

அருளின் வீட்டுக்கு அருகில்தான் ஒரு காணிக்குள் தங்கம்மா தகரக்கொட்டகை ஒன்று அமைத்து அதனுள் தனது ராஜ்யத்தை நடாத்திவந்தார். அந்த வீட்டைக் கடக்கும்போது யார் உள்ளே போகிறார்கள் வருகிறார்கள் என்று கவனிப்போம். சில நாட்கள் மரங்களுக்கு பின்னால் ஒளிந்திருந்து வேவு பார்ப்பதும் உண்டு.

ஒரு நாள் அருள், முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே என்ற பாடலை மாற்றி அதில் தங்கம்மாவையும் முருகையாவையும் இணைத்து கொச்சையாகப் பாடினான்.

பாட்டில் வந்த முருகையாவை நாம் அறிவோம். எனவே, என்ன நடந்தது என்று விசாரித்தபோது, கலவியைக் கண்டதாகச் சொன்னான். அதன்பின் முருகையா அண்ணன் வரும்போதெல்லாம் அந்தப் பாடலை பாடுவோம். அவருக்கு கட்டுக்கடங்காத கோபம் வரும். 'வழிசல் காவாலி நாய்கள்' என்று திட்டுவார். ஆனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை அவரால்.

***

சிங்கள நண்பனான சுமணஸ்ரீக்கு சந்திரஸ்ரீ என்று ஒரு அண்ணன் இருந்தார். சற்று அதீதமாகவே உணர்ச்சிவசப்படும் மனிதர். சகோதரர்கள் இருவரும் இரு துருவங்கள். நீரும் நெருப்பும் வாத்தியாரை வென்றவர்கள்.

சுமணஸ்ரீ குழப்படி என்றாலும் படிப்பில் படு கெட்டி. இலங்கையின் விவசாயத்துறையில் மிக முக்கிய பதவியில் இருப்பதாக அறிந்தேன். அண்ணன் அப்படியில்லை.

ஒரு நாள் ஊருக்குள் கடும் மழை. செல்வி தியேட்டரில் சுமணஸ்ரீயுடன் படம்பார்க்கக் காத்திருக்கிறோம். அவனது அண்ணர் குடையுடன் தியேட்டருக்குள் வருகிறார். இதைக் கண்ட சுமணஸ்ரீ நாற்காலியில் இருந்து சரிந்து நிலத்தில் குந்திக்கொண்டான். படம் தொடங்கியதும் எழுந்து உட்கார்ந்தான். அவனது அண்ணன் எமக்கு இரண்டு வாங்குகளுக்கு முன்னால் இருக்கிறார்.

படத்தில் திடீரென்று மழைவரும் காட்சி… பெரு மழை அடித்து ஊற்றுவதாகக் காண்பிக்கிறார்கள். சுமணஸ்ரீயின் அண்ணன் திடீர் என்று தன்னிடம் இருந்த குடையை விரித்துப் பிடித்தார். அருகிருந்த பலர் சிரிக்க சிலர் கூ... என்று கத்திய பின்தான், அவருக்கு தனது முட்டாள்தனம் புரிந்தது.

இது நடந்து இரண்டு நாட்களுக்கு பின் எம்முடன் நின்றிருந்த சுமணஸ்ரீயை அவனது அண்ணன் “வீட்ட போ” என்று வெருட்டினார். இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு சண்டையளவுக்கு சென்றபோது, சுமணஸ்ரீ ”போடா… தியேட்டருக்குள்ள மழைக்கு குடைபிடிச்ச ஆள்தானே நீ” என்று சொல்ல, நாங்கள் பெரிதாகச் சிரிக்க அண்ணன் ஆடிப்போய் விட்டார். அவர் எதுவும் பேசாது “வீட்ட வா”என்று கறுவிக்கொண்டு கலைந்தார்.

***

ஒரு முறை சித்திரைப் புத்தாண்டுக்கு விளையாட்டுப்போட்டி ஒன்றை ஒழுங்குசெய்தோம். சைக்கிள் ஓட்டப்போட்டி, மரதன், கயிறுஇழுத்தல் இன்னும் பல விளையாட்டுக்கள் என்று திட்டமிடப்பட்டது.

“மச்சான் நான் சைக்கிள் ஓட்டப்போட்டியில் வென்று காட்டுகிறேன்" என்றான் தயா. நானும் மடையன்போன்று அதை நம்பி எனது தம்பியின் புதிய பிளையிங் பிஜன் சைக்கிளைக் கடன்பெற்றுக் கொடுத்தேன்.

முதல் நான்கு கி.மீற்றர்களுக்கும் முதலாவதாக வந்த தயா அதன்பின் களைத்துப்போனான். சைக்கிளையும் ஆளையும் பின்னால் சென்ற லொறியில் ஏற்றிவந்தோம்.

அந்த விளையாட்டுவிழா இன்னும் நினைவிருக்கிறது. எமது அணியில் கவிஞர் புரட்சிக் கமாலின் மகன் அப்துல்ஹை விளையாடினார். அழகன். அழகாக உடுத்துவார். வேகமான ஓட்டக்காரன். அவருக்கு அப்துல் ஹமீட் போன்ற குரல்வளமும் இருந்தது. பிற்காலத்தில் இலங்கை ஒலிபரப்புச் சேவைக்கும் தேர்வுக்காக சென்று வந்தவர். அவர்தான் அந்த விளையாட்டுப்போட்டியை ஒலிபரப்பினார். அவரின் அழகுக்கும் திறமைக்கும் தமிழ் ரசிகைகள் சிலர் இருந்தார்கள் என்பது கொசுறுத் தகவல்.

எங்கள் மைதானத்தில்தான் விளையாட்டுவிழா நடைபெற்றது.

எங்கள் வீட்டில் ஒரு புகைப்படம் இருக்கிறது. அது 1960களின் இறுதியில் ஏறாவூர் பொலீஸ் நிலையத்தில் எனது தகப்பனார் பணிபுரிந்த காலத்தில் எடுக்கப்பட்டது. அந்நாட்களில் நடைபெற்ற ஒரு அழகுராணிப் போட்டியில் எனது ஒன்றுவிட்ட அக்கா பங்குபற்றிய புகைப்படம் அது.

ஆம்… ஏறாவூரில் 1960களின் இறுதியில் அழகுராணிப்போட்டி நடந்திருக்கிறது. ஆதாரம் இருப்பதால் நீங்கள் நம்பத்தான் வேண்டும்.

இந்தக் கதையை நான் அறிந்திருந்ததால், எங்கள் அணியின் தலைவரிடம் “எங்கட விளையாட்டுப் போட்டியின் முடிவில் அழகுராணிப் போட்டி வைப்போம்" என்றேன்”

தயா ஆமோதித்தான். தயாவின் அழகி ஊரின் அழகிகளை நிச்சயம் தோற்கடிப்பாள் என்று அவனுக்கு தெரிந்திருந்தது. உண்மையும் அதுதான்.

ஆனால், சிங்களவரான எங்கள் அணியின் தலைவர் சந்திரே அய்யா, “அய்யோ, உங்கட ஆக்கல் என்னைய சுட்டுபோடுறது” என்றார் தனக்குத் தெரிந்த தமிழில்.

தொடரும்...

நினைவழியா பதின்மம், பகுதி 10

அந்நாட்களில் எனக்கு 18 வயதிருக்கும் உயர்தரப்பரீட்சை எழுதியிருந்தேன். ஊரில இருந்த பெண்களெல்லாம் தேவைக்கு அதிகமாகவே அழகாகத் தெரிய, நேரமே இல்லாம அவர்கள் பின்னாலும், நண்பர்களின் காதல்களுக்கு உதவியபடியும் ஓடிக்கொண்டிருந்தேன்.


எங்கள் வீட்டில 'தங்கச்சி' என்ற பெயரில் ஒரு பூலான்தேவி இருந்தாள். அவள் பண்ணிய இம்சை கொஞ்ச நஞ்சமல்ல.

அவளுக்கும் எனக்கும் 13 வயது வித்தியாசம். குழந்தைகள் என்றால் உருகும் மனம் அப்போதும் இருந்தது. என்னுடன் சைக்கிளில் அலைவதற்கு அவளுக்கும் பெரு விருப்பம் இருந்தது. இதைவிட, தங்கையை சைக்கிளில் ஏற்றிச் சென்றால் அழகிகளை மற்றையவர்களின் கண்டிப்பு இன்றிப் பார்க்கலாம் ரசிக்கலாம் என்ற நுண்ணரசியலும் இருந்ததால், எனக்கும் ஆட்சேபனை இருந்ததில்லை.

இலங்கை அரசின் அதிரடிப்படையும், சிறப்புப் பொலிசும் ஒரு நாள் தம்பியைக் கைதுசெய்து சில நாட்கள் தங்களது விருந்தினராகத் தங்கவைத்து மிகச் சிறப்பாகக் கவனித்து அனுப்பினார்கள். எங்கள் பாடசாலை அதிபர் பிரின்ஸ் சேர், ஏறாவூர் பன்சலைப் பிக்கு, இன்னும் சில பெரிய இடங்களின் உதவியுடன் அம்மா பெரும்பாடுபட்டு அவனை வெளியில் எடுத்தார்.

அம்மாவின் இளைய புத்திரனில் அதிரடிப்படையின் கண் பட்டதால் ஊரில் இருப்பது உசிதமல்ல என்று அம்மா, அவனை எலிசபெத் மகாராணியிடம் அனுப்பினார். குறைந்த வயதில் இங்கிலாந்து சென்ற அகதிகளில் அவனும் ஒருவன்.

இதனால் இரண்டு நன்மைகள் இருந்தன. ஒன்று அம்மாவின் இளையபுத்திரனின் உயிர் தப்பியது. மற்றையது நானும் அவனும் ஆளையாள் சுட்டுக்கொள்ளவில்லை.

தம்பி சென்றபின் தங்கை டவுன் பாடசாலை ஒன்றில் சேர்க்கப்பட்டாள். அதனால் தங்கையைத் தினமும் பாடசாலைக்கு செல்லும் வாகனத்தில் ஏற்றிவிடுவது எனது வேலையாகிப் போனது.

காலை 7மணியளவில் தங்கை பாடசாலைக்குச் செல்லும் வாகனம் மெயின் வீதியில் ஒரு கடையருகில் வந்து நின்றதும், அவளை அதில் ஏற்றிவிட்டு நானும் வெள்ளைச் சட்டைகளைப் பார்க்கச் செல்வது வழக்கம். என்னைப் போல் கடமையுணர்ச்சியுள்ள சில நண்பர்களும் எனக்காகக் காத்திருப்பார்கள். நாம் கடமை தவறுவதேயில்லை.

தங்கை முதன் முதலில் பாடசாலைக்குச் சென்ற மாதங்கள் ஒரு வித பிரச்சினையுமில்லாமல் கடந்துபோயின. சைக்கிளில் அழைத்து வருவேன். வரும் வழியெல்லாம் பூலான்தேவி தன் வாயையே துப்பாக்கியாக்கி, கேள்விகளைத் தோட்டாக்களாக்கி, என்னைச் சுட்டபடியே‌ வருவாள். வாய் ஓயாமல் கதைக்கும் திறமை அவளிடம் இருந்தது.

பாழாய்ப் போன யாரோ எனது தங்கைக்குக் கள்ளத் தீன் உண்ணும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இவளுக்கும் ருசி பிடித்துக்கொண்டது. ஆனால், காசுக்கு எங்கேபோவது என்னும் பிரச்சினை வந்தபோதுதான் அவள் பூலான்தேவியாக மாறினாள்.

அன்றும் சைக்கிளில் ஏற்றிவந்தேன். அவளை அழைத்துச் செல்லவேண்டிய வாகனம் நிறுத்தப்படும் கடையருகே வந்ததும் வழமை போல் இறங்கிக் கொள்வாள், நாமும் நமது கடமையைச் செய்யலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், அவளோ நான் இறங்கமாட்டேன் என்று அடம் பிடித்தாள்.

அன்பாய்ச் சொன்னேன், மறுத்தாள்.

செல்லமாய் கூறிப்பார்த்தேன், தலை அங்கும் இங்கும் ஆட்டினாள். கெஞ்சினேன், அதற்கும் அவள் அசையவில்லை.

சற்று மெதுவாக உஷ்ணத்துடன் சொல்லவேண்டியதாயிற்று, அதையும் மறுதலித்தாள்.

"இறங்கிப் போடீ, இல்லாட்டி அம்மாட்ட சொல்லுவேன்" என்றேன். நக்கலாகச் சிரித்தபடி மறுத்தாள்.

பயங்கரமாய் வெருட்டினேன், கண்களைக் குளமாக்கி அழுதபடி இருந்தாளே தவிர மசியவில்லை.

எனக்கு நேரம் போய்க்கொண்டிருந்தது. வெள்ளைச் சீருடையணிந்த பெண்களுக்கான பஸ்கள் எல்லாம் போய்விடும்... என்ற கவலையில் இரத்த அழுத்தம் கூடியது.

”சரி... அண்ணா இண்டைக்கு 10 சதம் தாறன் இறங்கிப் போங்கோ” என்றேன். பூலான்தேவி சிரித்தபடியே கையை நீட்டினாள். நானும் முதன் முதலாய் லஞ்சம் கொடுத்தேன். துள்ளிக் குதித்து ஓடினாள்.
எனக்கு முன்னிருந்த கடமையுணர்ச்சியின் அவசரத்தில் இதை நான் பெரிதாய் எடுக்கவுமில்லை, ஞாபகத்தில் வைக்கவுமில்லை

அடுத்தநாளும் வந்தது. அன்றும் அழுதாள். நானும் 10 சதம் வெட்டினேன்.

இப்படித் தொடங்கிய கொள்ளை 20 – 30 சதம் என அதிகரித்து, காலப்போக்கில் 50 சதமாகியது.

இதை எவ்வாறு அம்மாவிடம் சொல்வது? “ நீயே அவளை டவுண் பாடசாலையில் அழைத்துச்சென்று, விட்டு விட்டு வா” என்றால்... சகலதும் சிக்கலாகிவிடும் என்பதால் அடக்கியே வாசித்தேன்.

அந்நாட்களில் பொலீஸ்காரன் பெண்டாட்டியான எனது அம்மா பணம் வைக்கும் பெட்டியில் இருந்து தினமும் 2 - 3 ரூபா திருடுவது எனது வழக்கமாய் இருந்தது. தினமும் படம் பார்க்கவும் இதர செலவுகளுக்கும், அது போதும்.

அந்தப் பணத்தில் 50 சதத்தை பூலான்தேவி தினமும் பகல்கொள்ளையடித்துக் கொண்டிருந்தாள். இது பலத்த பொருளாதார சிக்கலை மட்டுமல்ல, நண்பர்கள் மத்தியில் மானப்பிரச்சினையையும் ஏற்படுத்தியது. அதைப் பல வழிகளில் முயன்றும் நிறுத்த முடியவில்லை.

1985 இன் இறுதியில், நான் ஊரில் இருந்து புறப்படும் வரை, பூலான்தேவி என்னிடம் தினமும் கொள்ளையடித்தபடியே இருந்தாள்.

தொடரும்...

நினைவழியா பதின்மம், பகுதி 9

 பதின்ம வயதுப் பரவசங்கள் - 9

******

ஏறாவூர்ப் புகையிரநிலையத்திற்கு எதிரே தொடங்கி வலப்புறமாகச் சென்று, இடதுபுறமாகத் திரும்பி பதுளைவீதியில் விழும்வரை உள்ளதுதான் எல்லை வீதி (Boundry Road). பதுளைவீதி நோக்கிச் செல்லும்போது, TC குடிமனைகளைக் கடந்து, சற்றுத்தூரத்தில் இடப்பக்கமாக வெறும் காணி ஒன்று இருந்தது.

மட்டக்களப்பின் மணிக்கூண்டுக் கோபுரத்துக்கு அருகில் இருந்த பழைய பேரூந்து நிலையத்தில், 1980களின் ஆரம்பத்தில் விலைமாதர்கள் சிலர் நிற்பார்கள். வெற்றிலை குதப்பிய உதட்டுடன், கடுமையான நிறப் புடவைகளுடன், மார்பின் பெரும்பகுதி வெளித்தெரிய, அதீத ஒப்பனையுடன் அவர்களது நடையுடைபாவனைகள் எங்களை விட, வயதிற் பெரியவர்களைக் குறிவைப்பதாய் இருக்கும்.

சிலவேளை எங்களுக்கு எதுவும் தெரியாது என்று அவர்கள் நினைத்திருக்கலாம். நாங்கள் பிஞ்சில் முற்றி வெடித்திருந்தோம் என்பதை அவர்கள் அறிந்திருக்க முடியாது.

மேலே குறிப்பிட்டவர்களுள் ஒருவர், நான் குறிப்பிட்ட அந்த வெற்றுக்காணியில் ஒரு குடிசையமைத்துக் குடியிருந்தார். தகரத்தினாலான கூரை. பெயர் தங்கம்மா அல்லது தங்கமுத்து என்றுதான் நினைவிருக்கிறது. அவர் வந்தால் ’தாகம் தீர்க்கும் தங்கம் வருகிறார்’ என்று எங்களுக்குள் ரகசியமாகப் பேசிச் சிரிப்போம்.

ஒரு நாள் மட்டக்களப்பு டவுனுக்கு தயாவும் நானும் படம் பார்க்கச் சென்றிருந்தோம். டிக்கட் வரிசையில் நின்றபோது, வயதில் மூத்த சிலருடன் எமக்கு முறுகல் ஏற்பட்டது. அவர்களின் பலம் அதிகம் என்பதாலும், அவர்களின் நகரம் என்பதாலும், தந்திரோபாயமாகப் பின்வாங்கிக்கொண்டோம். வீடு வரும்போது… “அவனுகளுக்கு பாடம் படிப்பிக்கணும்” என்றான் தயா. நானும் ஆமோதித்தேன்.

காலம் புதிர்மிக்கது என்பதை அன்றொருநாள் மாலை எமது மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது உணர்ந்தேன். மட்டக்களப்பில் இருந்து வந்த புகையிரதத்தில் இருந்து மூவரை இறக்கித் தண்டவாளத்தின் ஓரமாக நடத்திக்கொண்டு வந்தனர் தங்கம்மாவும் இன்னும் ஒரு பெண்ணும்.

மிகுதியைப் புரிய எங்களுக்கு பல்கலைக்கழக அறிவு தேவையாக இருக்கவில்லை. இருந்தாலும், விளையாட்டின் மும்முரத்தில் அவர்களில் கவனம் செல்லவில்லை.

மைதானத்தின் ஓரமாகவே தண்டவாளம் இருந்தது. அவர்கள் தண்டவாளத்தின் ஓரமாகச் சென்று, தங்கம்மாவின் குடிசைக்குச் செல்லும் பாதைக்குத் திரும்பியபோதுதான், தயா “டேய் அண்டைக்கு தியேட்டரில எங்களுடன் சண்டைபிடிச்ச ஆக்களடா” என்று கத்தினான். உற்றுப் பார்த்தோம். அவர்களேதான். 30 - 35 வயதானவர்கள்.

தயா "கூய்.. கூய்..." என்று கத்தினான். நாங்களும் இணைந்துகொண்டோம்.

தங்கம்மா சற்றேனும் கலவரப்படவே இல்லை. இப்படி எத்தனையைக் கண்டிருப்பார் அவர். ஆண்கள் மூவரும் கலவரப்படுவதும் தங்கமுத்திடம் பேசுவதும் தெரிந்தது. தங்கம்மா தனது ராஜதந்தரத்தினால் அவர்களை அமைதிப்படுத்தியிருக்கவேண்டும். அவர்கள் தங்கம்மாவை முன்னால் அனுப்பிவிட்டுப் பின்னால் நடந்தார்கள். அந்த மூவரும் எம்மை அடையாளம் காணவில்லை.

“டேய் ஏறுடா” என்று என்னைச் சைக்கிளில் ஏற்றிக்கொண்டான் தயா. நானும் வருகிறேன் என்று தொத்திக்கொண்டான் இன்னொருவன். மேலும் மூன்று சைக்கிள்களில் இன்னும் அறுவர் ஏறிக்கொள்ள, நாம் தங்கம்மாவின் வீட்டிற்கு வேறு ஒரு வழியினால் வந்து காட்டுப்பகுதியினுள் நின்றுகொண்டோம்.

முதலில் தங்கம்மாவும் மற்றைய பெண்ணும் குடிசைக்குள் நுழைகிறார்கள். அவர்களின் பின்னே வந்தவர்களில் இருவர் தயங்கித் தயங்கி உள்ளே செல்ல, ஒருவர் வீதியில் நின்றபடி ஒரு சிகரெட்டைப் பற்றவைக்கிறார். அது முடிய இன்னொன்றைப் பற்றவைக்கிறார். அவர் முகத்தில் பதட்டமும் அவசரமும் தெரியகிறது. வீட்டிற்கு முன்பாக அங்குமிங்குமாக நடக்கிறார். அவர் உடலில் ஊறிய காமம் புகை புகையாக வெளியேறிக்கொண்டிருந்தது.

சற்றே பொறுத்த நாம், குடிசையை நோக்கி கற்களால் எங்கள் தாக்குதலைத் தொடுக்க, அவை தகரங்களில் விழுந்து பெருஞ்சத்தமெழுப்பின.

தங்கம்மாவின் பொறுமை காற்றில் பறக்க… வெளியே வந்து “பு... மக்களே... கடுக்குது என்றா வாறதானே” என்று கத்தினார். நண்பர்கள் "கூ… கூ ..." என்றார்கள்.

அவர் உடை கலைந்திருந்தது. நாம் அவரது உழைப்பைக்கெடுத்துவிட்டோம் என்ற கோபம். உள்ளே நின்றிருந்த இருவரும் அவசர அவசரமாய்ப் பதட்டப்பட்டு வெளியே வந்து, வீதிக்குச் சென்று நண்பருடன் நின்றுகொண்டார்கள்.

நாம் இரண்டாகப் பிரிந்து பின்புறத்தால் வீதிக்கு வந்து தங்கம்மாவின் வீட்டில் இருந்து யார் புறப்பட்டாலும் எம்மைக் கடந்து செல்லவேண்டிய நிலைக்கு அவர்களைத் தள்ளினோம். விளையாட்டு முடிந்து வந்த சில நண்பர்களும் சேர்ந்துகொள்ள எங்கள் பலம் தூக்கலாகவே இருந்தது.

மாலைக் கருக்கல் ஆகும்வரை தங்கம்மா வெளியே வரவில்லை. இருளத்தொடங்கியதும் வெளியே வந்து அவர்களைக் காட்டுப்பக்கமாக அழைத்துப்போனார். அங்கு பாழடைந்த ஒரு அரிசி ஆலை இருந்தது.

அங்கும் அவர்களை நாம் விட்டுவைக்கவில்லை. மீண்டும் வீட்டுக்குள் புகுந்தார்கள். அங்கும் தகரத்தில் கற்கள் சரமாரியாக விழுந்தன. வெறுத்துப்போய் வீதிக்கு வந்து நின்றுகொண்டார்கள் மூவரும்.

இரவு எட்டு மணிபோல் தங்கம்மா எங்களைத் தூஷணத்தால் திட்டியடிபடி அவர்களை ரயில்நிலயத்திற்கு அழைத்துப்போனார். அவர்கள் போகும் வழியில் நின்று “டேய் தியேட்டரில வைத்து அடிக்கவா வந்தீங்க?” என்று தயா கேட்டான். அவர்கள் தலை நிமிரவில்லை.

ரயில்நிலையத்துத் தண்டவாளத்தில் நாம் இரும்புத் துண்டொன்றால் தாளமிட்டுக்கொண்டிருந்த போது, இரவு 9 மணிபோல் மட்டக்களப்புக்கு மாகோயாச் சந்தியில் இருந்து வரும் ரயில் வந்தது.

அது அதிகமாக மிருகங்களை ஏற்றியிறக்கும் ரயில். அந்த ரயிலில் மனிதர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். பல பெட்டிகள் காலியாகவே இருக்கும். அவர்கள் ரயிலில் காலியான ஒரு பெட்டியில் ஏறிக்கொண்டார்கள்.

ரயில் மட்டக்களப்பை அடைய ஆகக் குறைந்தது 45 நிமிடங்கள் எடுக்கும். அங்கும் விடியும்வரை எவரும் ஏறமாட்டார்கள்.

கலவிக்குக் குறுக்கே நிற்பது பெரும் பாவம் என்பதையும் காமத்தின் தாற்பரியத்தையும் தங்கம்மா போன்றவர்களின் வாழ்க்கை எத்தனை வலிகளைக் கொண்டது என்பதையும் ஒரு நேர உணவுக்காக அவர்கள் படும்பாட்டையும் காலம் பிற்காலத்தில்தான் எனக்கு உணர்த்திற்று.

தங்கம்மாவிடம் எங்களை மன்னியுங்கள் என்று கேட்பதற்கு அவர் உயிரோடு இல்லை.

'விடுதலை விரும்பிகள்' மங்களகரமாக அவரது நெற்றியில் துப்பாக்கியால் பொட்டுவைத்து அனுப்பிவிட்டார்கள்... என்றுதான் யாரோ சொன்னார்கள்.

தொடரும்...

நினைவழியா பதின்மம், பகுதி 8

அந்த நாட்களில் எனக்கு ஒரு காதலி இருந்தாள்.

அதிகம் கற்பனை பண்ணிவிடாதீர்கள். கண்ணால் கதைப்பதுடன், சரி. இந்தக் கதை என்னிலும் வயது குறைந்தவர்களிடம் பரவியிருந்தது. அந்நாட்களில் காதலி இருப்பது பெருமையான விடயம். காதலி இருந்தால், அவருக்கு எல்லாம் தெரிந்திருக்கும் என்று யாரோ கதையைக் கட்டிவிட்டிருந்தார்கள்.

நட்புவட்டத்தில் மற்றும் வயது குறைந்தவர்களிடம் காதலி இருப்பவர்களுக்கு ஒரு மரியாதை இருக்கத்தான் செய்தது. சிலருக்கு காதலி கிடைக்கலாம் என்ற நம்பிக்கை வருவதற்கு ஏதேனும் சந்தர்ப்பங்கள், சம்பவங்கள் நடந்தால், அவர்கள் காதலி உள்ள எங்களிடமே அறிவுரை கேட்க வருவார்கள்.

அறிவுரை கேட்க வருபவர்கள் தனித்தே வருவார்கள். எம்முடன் மெதுவாய் நட்பாவாா்கள். பின்பு தேநீர், பணிஸ், தேங்காய்ப்பூரொட்டி, சிலருக்கு சிகரெட் என்று லஞ்சம் கிடைக்கும். எனக்குப் படத்துக்கு டிக்கெட் எடுத்துத் தந்தால் காணும் என்ற நிலையிருந்தது. இப்படியான காலத்தில்தான், அவன் எனக்கு அறிமுகமாகினான். பெரிய உயரமில்லை. கட்டான உடம்பு, அடத்தியான மேவி இழுத்த தலைமுடி, வசதியான குடும்பத்துப்பையன் என்பதால், எப்போதும் அழகிய உடைகள். கிழக்கின் ஒரு பெருந்தளபதியின் ஊர். மட்டக்களப்பு நகரத்தில் கல்விகற்றான். தினமும் இரு மணிநேர பஸ்பயணம் என்று அவனது வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.

அவனை நான் முன்பு கண்டிருந்தாலும், அவன் எனது நட்பு வட்டத்தில் இருந்ததில்லை. யார் என்று தெரியும், அவ்வுளவு தான். இப்படியாய் இருந்தவன் மெது மெதுவாய் என்னிடம் நட்பாகினான். என்ன மாயமோ தெரியவில்லை ஓரிரு வாரங்களில் நாம் இருவரும் நட்பாகிப்போனோம்.

அப்போதுதான் கவனித்தேன், தினமும் அவன், எனக்கு முன்பே எங்கள் பேரூந்து தரிப்புநிலையத்தில் நின்றிருப்பதை. அவன் எங்கள் ஊரைக் கடந்தே அவனது ஊருக்குச் செல்லவேண்டும். எனவே, அவன் வரும் பேரூந்தில் நான் ஏறினால் அவனைச் சந்திக்கலாம். ஆனால், அவனோ தினமும் எனக்கு முன் எங்கள் பேரூந்து நிலையத்தில் வந்து நிற்கலானான். நானும் அவன் எனக்காகவே வருகிறான் என்று நினைத்திருந்தேன்.

காலப்போக்கில் அவன் காத்திருந்தது எனக்கல்ல, என்னுடன் பேரூந்தில் உரையாடும், எனக்கு அறிமுகமான சில சிறுமிகளின் கூட்டத்துடன் வரும் ஒருத்திக்காகவே. அந்த ஒருத்திக்காக அவன் காத்திருப்பதை எனது உளவுப்படை கண்டுபிடித்து எனக்கு அறியத் தந்தது.

அவனை அழைத்து “என்னடா விசயம். அவளை அடிக்கடி பார்க்கிறாய், அவளும் கண்களால் உன்னுடன் கதைக்கிறாள்” என்றேன். அன்று எனக்கு ஒரு படத்திற்கு இலவச டிக்கெட்டும், டீ, வடை, ஐஸ்கிறீம் எனப் பலமாய்க் கவனித்தான். ஆனால், படம் பார்க்க மட்டும் அவன் அனுமதிக்கவில்லை. தனது 'காதல் கதையை'ப் படம் போல எனக்குக் கூறிக்கொண்டிருந்தான்.

அவர்கள் இருவருக்கும் எப்படியோ காதல் கனிந்து கசிந்துருகிவிட்டது. ஒரு நாள் பேரூந்தில் அவளிடம் இவர் புத்தகத்தை வைத்திருங்கள் என்று கொடுத்திருக்கிறார். அவளும் பக்குவமாய் வாங்கி, அவனின் ஒரு கொப்பியை வீட்டுக்கு எடுத்துச் சென்று, அதில் இதயத்தின் படம் வரைந்து அதனுள் அவனின் பெயரை எழுதி தனது சமிக்ஞையை காட்டியிருக்கிறாள். அவளும் பேரழகிதான். பெரிய வீட்டுப்பிள்ளை. செங்கலடி - பதுளை வீதியில் பெரிய வீடு அவர்களுடையது.

சமிக்ஞையைக் கண்ட இவன் தன்னை மறந்தான், படிப்பை மறந்தான், பாடசாலையை மறந்தான், ஏன் சில நாட்களில் வீட்டையே மறந்தான். செங்கலடியில் சில நட்புக்களைப் பிடித்துக்கொண்டான். அவன் பிடித்த நட்பில் நானும் ஒருவன். எங்கள் ஊரிலேயே அலைந்தான்.

அவளிடம் இதுவரை பேசமுடியவில்லை. அவளுடன் நான் தினமும் பேசுவதுண்டு எனவே, கொப்பால் ஏறி மரத்தால் இறங்குவது போன்று என் மூலமாக அவளுடன் பேசவே என்னுடன் நட்பாகியதாகவும், நானே அவனின் காதல் குரு என்றும் அவன் கூறியபோது, நான் மனமிரங்கிப்போனேன். உதவி என்று வந்தவனைக் கைவிடலாமா? எனவே, சில அறிவுரைகளை அள்ளிவிட்டேன்.

முதலாவது கடிதம் கொடுப்பது. அவளிடம் அந்தக் கடிதத்தை சேர்ப்பிக்க நாம் பெரும்பாடு படவேண்டியதாயிற்று. ஒருவாறு அவர்கள் பாடசாலை விளையாட்டுப்போட்டி முடிந்து அவள் வீடு திரும்பும் போது, பேருந்துக்குள் வைத்து கடிதத்தைக் கொடுத்தான். அந்தக் காலத்து பாடல் வசனங்கள், ‘என் உயிர் நீ..., நீயில்லாமல் நான் இல்லை...‘ என்று அதி உயர் இலக்கியத்தரத்துடனான கடிதம் அவ‌ளிடம் கொடுக்கப்பட்டது.

கடிதம் எழுதுவதற்காகவே அழகிய படங்கள் பதிக்கப்பட்ட தாள்கள் வாங்கினோம். 4 - 5 தடவைகள் மீண்டும் மீண்டும் திருத்தி எழுதினோம், கடிதத்தை உறையினுள் இட முன்பு, அது வாசனையாக இருக்கவேண்டும் என்பதற்காய் பவுடர் பூசினோம், இரண்டு அழகிய ஸ்டிக்கர்கள் வைத்தபின், இறுதியாக 7 - 8 முத்தங்கள் கொடுத்தான். அப்புறமாயே அந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கடிதம் உறைக்குள் இடப்பட்டு, நாக்கால் உறையை சீனியை நக்குவது போல நக்கி நக்கி ஒட்டினான். கடிதத்தைக் கொப்பிக்குள் ‌மறைத்தும் கொண்டான்

சில நாட்களின்பின் அவளின் நண்பிகள் மூலமாக இவனுக்கு கடிதம் வந்து, போய்க்கொண்டிருந்தது. அவள் புதிதாய் டியுசனுக்குச் சேர்ந்தாள் இவனுக்காய். இவன், தான் படித்த டியுசனை விட்டான் அவளுக்காய்.

அடுத்ததாய் அவளைப் படம் பார்க்க அழைத்துப்போக விரும்புவதாகச் சொன்னான். என்னடா இது! நான் செய்யாததை இவன் செய்யப்போகிறானே... எனது மரியாதை என்னாவது? என்று பயந்துகொண்டிருந்தேன். நல்லவேளை அவள் மறுத்துவிட்டாள்.

"சரி அவளை Elephant house க்கு அழைத்துப்போய் ஐஸ்கிறீம் வாங்கிக்கொடு..." என்றேன். அவர்கள் இருவரும் இரண்டரை மணிநேரமாக ஒரு ஐஸ்கிறீமை குடித்துக்கொண்டிருந்தார்கள். நான் வெய்யிலில் காய்ந்தபடி வெளியே நின்றிருந்தேன். அவளின் கையைத் தொட்டானாம் என்று பையன் ஏகத்துக்கும் கற்பனையில் மிதந்துகொண்டிருந்தான். அன்று மாலை எனக்குப் படத்திற்கு டிக்கெட் கிடைத்தது. நான் அவனை அழைத்துச் செல்லவில்லை.

ஏறத்தாழ ஒருவருடத்தின் பின்பு, அவளின் தந்தைக்கு விடயம் தெரியவர, வெடித்தது பூகம்பம். பாடசாலை நிறுத்தப்பட்டது. டியுசன் நிறுத்தப்பட்டது. அப்பா வீட்டுக்கு முன்பு நந்திபோன்று குந்தியிருந்தார். நல்லவேளை அவருக்கு இந்தக் காதலில் எனது பங்கு பற்றித் தெரிந்திருக்கவில்லை. எனவே, நான் சற்றுத் தைரியத்துடன் அவள் வீட்டுப்பக்கமாய் போய்வரக்கூடியதாயிருந்தது. அவளின் வீட்டுப்பக்கம் ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது இன்னும் வசதியாகவிருந்தது.

என் நண்பன் பைத்தியம் பிடித்தவன் போலானான். 'அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி' வசனம் பேசினான். ஒரு தலை ராகம், வைதேகி காத்திருந்தாள், பயணங்கள் முடிவதில்லை போன்ற திரைப் படப்பாட்டுக்களை அழுது அழுது கேட்டான். என்னையும் கேட்கச் சொன்னான்.

அந்நாட்களில் அவனுடைய ஊரைச் சேர்ந்த கிழக்கின் அந்தப் பெருந்தளபதி, மீண்டும் மட்டக்களப்புக்கு வந்தார். ஊருக்குள் பெரிய இடத்துப் பையன் என்பதால், அவரின் கடைக்கண் பார்வை இவனுக்குக் கிடைத்தது. ஒரு நாள் இரவு அவளின் தந்தையிடம் சிலர் சில கட்டளை இட்டனர். அவரும் தன் பங்குக்கு சிபாரிசுக்கள‌ை பிடித்தார். பிரச்சினை இழுபட்டது. தளபதியை மீற முடியுமா?

நான் அந்நாட்களில் இந்தியாவுக்குப் புறப்பட்டேன். தொடர்பு அற்றுப்போனது அவனுடன்.

பின்பொரு காலத்தில் அவர்கள் திருமணம் முடித்து குழந்தைகள் பிறந்திருப்பதாகக் காற்றுவாக்கில் செய்திகள் கிடைத்தன. காலம் மட்டும் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தது.

ஏறத்தாழ 2005ஆம் ஆண்டளவில் முதன் முதலாக 20 வருடங்களின் பின், செங்கலடிக்குச் சென்றபோது... அவனைத் தேடினேன். சந்தியில் கடை வைத்திருப்பதாகச் சொன்னார்கள். கடையினுள் அவளைக் கண்டேன். "என்னைத் தெரியுமா?" என்றபோது, சற்று சிந்தித்து "ஓம்" என்றாள். “இருங்க... அவர் இப்ப வருவாா்” என்றாள். குளிர்பானம் ,சிற்றுண்டி வந்தது. சற்று நேரத்தில் உள்ளே வந்தான் அவன். நொடிப்பொழுதும் சந்தேகமின்றி ”டேய் சஞ்சயன்” பாய்ந்து வந்து அணைத்துக்கொண்டான். அன்று மதியம் அவர்கள் வீட்டில் விருந்து தடபுடலாகவிருந்தது. பழங்கதைகளைப் பேசி மகிழ்ந்திருந்தோம்.

எப்போதும் ஊருக்குச் சென்றாலும் அவனைச் சந்திக்காதிருப்பதில்லை. மறுவருடமும் சந்தித்தேன். கடையில் ஒன்றாய் தேநீர் அருந்தினோம். ஆரத்தழுவி விடைபெற்றோம்

2013ஆம் ஆண்டு, 'வலையை' மேய்ந்துகொண்டிருந்தேன். செங்கலடியில் இரட்டைக் கொலை என்றிருந்தது. பெயர்களைப் பார்த்ததும் தலை சுற்றத்தொடங்கியது.

இனி, செங்கலடியில், தோளில் கைபோட்டு, டேய் மச்சான் என்றழைத்து, பால்யத்துக் கதைபேச ரகு இருக்கப்போவதில்லை. அவனின் விப்புறாவும் இல்லை. தங்களின் குடும்பத்தவர்களாலேயே இருவரும் கொல்லப்பட்டார்கள்.

'அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி' என்னும் அவனின் வசனம் சற்று உருமாறியிருக்கிறது. அவனை இரண்டு தேவிகளும் அணைத்திருக்கிறார்கள்.

தொடரும்

நினைவழியா பதின்மம், பகுதி 7

 ஒரு நாள் செங்கலடி நண்பன் ராஜன் “சஞ்சயன் சிகரெட் குடிப்பமா?” என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியைக் கேட்டான். எனக்கும் ஆர்வம் வந்தது. ஊரில் உள்ள அனைத்துக் கடைகளிலும் உள்ளவர்கள் அம்மாவை அறிந்தவர்களாக இருந்தார்கள். அம்மா பிரபலமான வைத்தியராக இருந்ததால் அப்படி!.

எங்கு சிகரெட் வாங்குவது? என்று கேள்வி எழுந்தது. ஏறாவூரின் எல்லை கடந்து, புதுக்குடியிருப்புக்கு அருகில் இருந்த ஐஸ்கிறீம் கம்பனி வரையில் சென்றோம். அது ஊருக்கு வெளிப்பகுதி. பக்கத்துக் கிராமம். அங்கு 'கோல்ட் லீப்' இரண்டு பைக்கட்டுகள் வாங்கிக்கொண்டோம். எங்கு உட்கார்ந்து குடிப்பது? என்ற கேள்விக்கு ராஜன் “கறுத்தப் பாலத்திற்குக் கீழே இருந்து குடிக்கலாம்” என்றான். அவ்விடம் நோக்கிப் புறப்பட்டுப்போனபோது, அவனது தந்தை உழுவையியந்திரத்தில் அப்பக்கமாகச் செல்வது தெரிந்தது. பயத்தில் அத்திட்டத்தினைக் கைவிடவேண்டி வந்தது. அதுகைவிடப்பட்டதும், “வா... தளவாய் காட்டுக்குள் போவோம்” என்றேன். தயாவின் வீட்டைக் கடக்கும்போது, அவன் வீதியில் நின்றிருந்தான். அவனையும் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றோம். வீதியில் தயா நிற்பதாகவும் நானும் ராஜனும் காட்டுக்குள் சென்று புகைப்பதாகவும் யாரேனும் வந்தால் தயா குருவிபோன்று கத்துவதாகவும் ஒப்பந்தமாயிற்று. வீதியருகிருந்து கஜுப்பழங்களைத் தயா பறித்துக்கொண்டிருந்தான். நாம் காட்டுக்குள் புகுந்து சிகரெட் ஐப் பற்றவைத்தோம். இருவருக்கும் புரையேறியது. இருமினோம். கண்ணீர் வந்தது.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்போன்று, மீண்டும் மீண்டும் முயற்சித்து புகைக்கக் கற்றுக்கொண்டோம். ஒன்றரை மணிநேரத்தில் பத்துச் சிகரெட்டுக்களை ஊதித்தள்ளிவிட்டு வரும்போது, தயா மரத்தடியில் படுத்திருந்தான். எங்கள் குரல்கள் அடைத்துப்போய் சத்தம் வரவில்லை.

வாயில் சிகரெட் மணம். தயா தங்களின் வீட்டில் இருந்து வெங்காயம் எடுத்துவந்து தந்தான். சப்பித்துப்பி விட்டு வீட்டுக்குப்போனேன். மாலையாகியிருந்தது. அம்மா எனது வாயில் இருந்து சத்தம் வரவில்லை என்பதைக் கண்டுகொண்டு -

”என்ன நடந்தது?” என்றார்.

“மச்ட் ஒன்றில் சத்தம்போட்டதில் குரலடைத்துவிட்டது”

“சரி… நாளைக்குச் சுகமாகிவிடும்“

அம்மாவின் பதிலால் அமைதியாக இருந்தேன். மறுநாள் அம்மா என்னைக் கிணற்றடிக்கு அழைத்தார். அம்மா கிணற்றடிக்கு அழைத்தால், எனது திருகுதாளங்களைக் கண்டுபிடித்துவிட்டார். அதுபற்றி உரையாடப்போகிறார் என்று அர்த்தம்.

“ஐஸ்கிறீம் கொம்பனிக்குப் பக்கத்தில் ஒரு கடையில் நேற்று இரண்டு சிகரெட்பெட்டிகளை வாங்கியிருக்கிறாய்”
தமிழ் பகுதியில் மட்டும் அல்ல, அம்மாவை ஏறாவூரில் உள்ள முஸ்லீம் பகுதிகளிலும் அனைவரும் அறிவர் என்பதை, நான் கவனத்தில் எடுக்கவில்லை என்பது புரிந்தது.

தலையைக் குனிந்தபடி நின்றிருந்தேன்.

“அப்பா இல்லாததால் செல்லம் தந்தது பிழை. ஒரு நாளும் அடிக்கேல்ல. பார் அந்தக் கடைக்கார முதலாளி இவ்வளவு தூரம் வந்து சொல்விட்டுப் போகிறார். அப்பாவையும் தனக்குத் தெரியும் என்றார். “தம்பியின் நண்பர்கள் சரியில்லை அம்மா” என்றும் அவர் சொன்னதாகச் சொன்னார்.

“யாரோட போய் சிகரெட் வாங்கின நீ?”

தயாவைச் சொன்னால் அம்மா அவனின் அம்மாவிடம் சொல்வார். அவன் கதி அதோ கதியாகிவிடும். ராஜன் என்று சொல்லவே முடியாது. அத்தனை நெருக்கமான குடும்ப நண்பர்கள். சுமணஸ்ரீயை மாட்டிவிட்டேன்.

“ஓ... அவனா? ஆளைக் காணட்டும்” என்றார்.

இந்த இடத்தில் நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அந்தக் கடைக்காரர் ஒரு முஸ்லீம். இரண்டு மூன்று கி.மீற்றர்கள் நடந்துவந்து அம்மாவிடம் சொல்லிவிட்டுப்போயிருக்கிறார். கோள் சொல்வதல்ல அவர் நோக்கம். ஊரின் ஒரு பையன் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர் செய்த செயலை இன்று நினைக்கும்போது மனது நெகிழ்ந்துவிடுகிறது.

தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் என்று அக்காலத்தில் பாகுபாடு இருந்ததில்லை. அனைவரின் குழந்தைகளையும் அனைவரும் பார்த்துக்கொண்டார்கள். வழி தவறுபவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணம் இருந்தது. ராணுவம் கைதுசெய்து அழைத்துச் சென்றவர்களை மீட்க உதவிய பிக்குகளும் எங்கள் ஊரில் இருந்தார்கள். காளிகோயிலில் சாமியாடிய ஒரு இஸ்லாமியரையும் அறிவேன். தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒன்றாகக் சென்றுவந்த தர்க்காக்களும் இருந்தன.

போரும், அரசியலும் இன்று ஊரையும் மக்களின் மனங்களையும் பிளவுபடுத்தியிருக்கிறது. இது எவருக்கும் நல்லதல்ல.

அன்று மாலையே சுமணஸ்ரீயிடம்சென்று “ராசா வீட்டுப்பக்கம் வந்துவிடாதே” என்று எச்சரித்து வைத்தேன்.

“அய் மச்சாங்?” (ஏன் மச்சான்?) என்றான் பரிதாபமாக

“மகே அம்மா உம்பவ மரய்” (என் தாயார் உன்னைக் கொலைசெய்துவிடுவார்) என்றேன்.

தொடரும்

நினைவழியா பதின்மம், பகுதி 6

தயாவின் இளைய சகோதரி சித்ரா அந்நாட்களில் சிறுமி. எப்போதும் இனிப்பு இனிப்பாக உண்டபடி இருப்பாள். ஒரு இனிப்புக் கடையைக் கொடுத்தாலும், உண்டு முடிக்கும் திறமை அவளுக்கிருந்தது. தோடம்பழ இனிப்புகள் என்றால் அவளுக்கு உலகமே மறந்துவிடும். காணும் போதெல்லாம் அவளின் இனிப்பு இம்மைசையை தாங்க முடியாததால்...


ஒருநாள் சிவப்புநிறமான 'லைப்போய்' சவர்க்காரத்தை எடுத்து, தோடம்பழ இனிப்புப் போன்று வெட்டி வைத்திருந்தேன். அவர்கள் வீட்டுக்குச் சென்றதும் வழமைபோல் இனிப்புக்காறி வந்தாள். இனிப்பு வேண்டுமென்று கேட்டாள். நானும் கொடுத்தேன். அதை அவள் பார்க்கவே இல்லை. வாய்க்குள் போட்டுக்கொண்டு சப்பியவளுக்கு விடயம் புரிந்து, அவள் அன்று முழுவதும் துப்பிக்கொண்டு திரிந்தாள். அண்மையில் ஏறத்தாழ 37வருடங்களின் பின் அவளைச் சந்தித்தபோது, இதை நினைவூட்டிச் சிரித்தாள். எனக்கு வெட்கமாக இருந்தது.

இதேபோல் தயாவின் தம்பி கருணாவிற்கு யாரும் காறித் துப்பினால் அருவருக்கும். இதை நான் அறிந்தபின், அவனைக் காணும் இடமெல்லாம் காறிக்கொண்டிருப்பேன். அவன் அவ்விடத்தைவிட்டு ஓடிவிடுவான். பிற்காலத்தில் அவனும் எங்கள் அணியில் விளையாடினான். இப்போதும் கனடாவில் உள்ள செங்கலடி அணியில் விளையாடுவதாக அறிந்தேன்.

தயாவின் வீட்டிற்கு மிக அருகில் அருளின் வீடு இருந்தது. அவன் டவுணில் எங்களுடன் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கற்றுக்கொண்டிருந்தான். அச்சுப்போன்ற கையெழுத்து அவனுக்கு. அந்நாட்களில் பாடசாலை பகிஷ்கரிப்புகள், கடையப்புகள் வெள்ளைத்தாளில் சிவப்பு எழுத்தில் சுவரொட்டி மூலம் அறிவிக்கப்படும். பாடசாலையில் சிரேஷ்ட மாணவத் தலைவன் நான் என்பதால், செய்திகளைப் பரப்பும் பொறுப்பும் என் தலையில் விழும். அருகிருக்கும் பாடசாலைகளுக்கும் செய்தி பரப்பவேண்டியிருக்கும். அவை பெண்கள் பாடசாலையாகையால், அந்த வேலை களைப்பைத் தருவதில்லை.

அம்மாவுக்குத் தெரியாமல் வைத்தியசாலைக்கு வரும் விளம்பரங்களை எடுத்து அதன்பின்புறம் சுவரொட்டிகளை எழுதுவோம். அருள்தான் எழுதவேண்டும். மற்றையவர்களின் கையெழுத்து ஒனறுக்கும் உதவாது. சிவப்பு மையும், சற்றே தடிப்பான ஓவியத் தூரிகையும் வாங்கிக்கொண்டு அருளை காட்டுக்குள் அழைத்துப்போய் எழுதுவிப்போம். மாலை விளையாடி முடிந்தபின், 'செகன்ட் சோ' காட்சி பார்த்துவிட்டு, பிள்ளையார் கோயில் வீதியால் வந்து, பிரதான வீதியிலிருக்கும் பேருந்து நிலையத்தில் நின்று நோட்டம் விடுவோம். தயா பசையைப் பூசி தயாராக நிற்பான். சமிக்ஞைகள் கிடைத்ததும் ஒட்டிவிட்டு ஓடிப்போவோம். இப்படி நோட்டீஸ் எழுதிய அருள் ஒரு இயக்கத்திற்குச் சென்றதாகவும் பின்பு இறந்துபோனதாகவும் அறிந்தேன்.

ஒரு முறை தமிழருக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் பெருங்கலவரம் வெடித்து ஏறாவூர் மக்கள் செங்கலடிப்பக்கமாக இடம்பெயர்ந்தார்கள். செங்கலடிப் பாடசாலை, கொம்மாந்துறைப் பாடசாலை, வந்தாறுமூலை பல்கலைக்கழகம் எல்லாம் அகதி முகாம்களாயின. எம்மிலும் மூத்தவர்கள் ஒருங்கிணைந்து வழிநடாத்தினார்கள். வீடு வீடாகச் சென்று உணவுப்பொட்டலம் சேகரிக்கும் வேலை எமக்குக் கிடைத்தது. இரவு செங்கலடிச் சந்தியில் கத்தி, கோடரி, திருக்கை வால், அலவாங்குடன் காவல் நின்றிருந்தனர் சிலர். நாம் நண்பனின் பேக்கரி இரண்டாம் மாடியில் 304 விளையாடிக்கொண்டிருந்தோம். இரண்டு நாட்களில் எல்லாம் சுமூகமாயிற்று.

ஒரு மனிதரை அவரது சிரிப்பின் காரணமாக அவரைப் பல காலங்களாக நினைவில் வைத்திருக்கிறீர்களா? நான் வைத்திருக்கிறேன். சுகாதாரத்துறை உத்தியோகத்தர் என்று நினைவு. சாரதா தியேட்டருக்கு முன்னால் வகுப்புத் தோழன் புஸ்பராஜாவின் கடைக்கு வருவார். திருமணம் முடித்து பல வருடங்களாக குழந்தைகள் கிடைக்கவில்லை அவருக்கு. மிகவும் ஜாலியான மனிதர். அவருக்கு ஒரு பிரச்சினை இருந்தது. சிரிக்கத் தொடங்கினால் நிறுத்தத்தெரியாது. ஐந்து பத்து நிமிடங்கள் சிரித்துக்கொண்டே இருப்பார். சிரிப்பு முடிவதுபோலிருக்கும் ஆனால், முடிந்த இடத்தில் மீண்டும் தொடங்கும். சிரிப்பின் ஒலி விசித்திரமானது, எமக்குச் சிரிப்பைத் தரும்.

சாரதா தியேட்டரின் வாசலில் மரவள்ளிக்கிழங்கு, கடலை பொரித்து விற்கும் வண்டிக்கு அருகே தயாவும் நானும் நிற்கிறோம். அன்று படம் பார்ப்பதாகத் திட்டம். அவரும் நண்பரும் பக்கத்தில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

“இண்டைக்கு மத்தியானம் வீட்ட ஒரு டெஸ்ட் எழுதினேன்” என்கிறார் அந்த விசித்திரமான சிரிப்பொலியைக் கொண்டவர்

“என்ன டெஸ்ட்?“ இது மற்றையவர்.

சிரிக்கத் தொடங்கியபடி “அதுக்கு ரிசல்ட் வர ஒரு மாதமாகும்” என்று கண்ணைச் சிமிட்டுகிறார்.

“ஓ… இப்ப விளங்குது… ”

அவர்களின் கதையைப் புரியுமளவுக்கு நாம் முத்தியிருந்தோம்.

தயாவின் காதுக்குள் “டேய், இந்தாள் பகலில டெஸ்ட் எழுதியிருக்கு” என்றேன். அவன் சிரித்தான்.

மைதானத்திற்கு அருகில் உள்ள வீதியால் அவர் செல்லும் போது “அண்ணை, ரிசல்ட் என்ன?” என்று கத்திவிட்டு, எதுவும் தெரியாதது போல் விளையாடுவோம்.

அவர் பரீட்சையில் சித்தியடைந்தாரா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது.

நினைவழியா பதின்மம், பகுதி 5

தயாவுக்கு, தான் பிபிசி ஆங்கிலச் சேவையில் வேலைசெய்கிறேன் என்று நினைத்திருந்தானோ என்னவோ, ஆங்கிலத்தில் விளையாட்டுக்களை ஒலிபரப்புவதில் பலத்த விருப்பமிருந்தது. அந்நாட்களில் அவனுக்குத் தெரிந்த ஆங்கிலத்தை வைத்து கிரிக்கெட் போட்டிகளை எமக்கு ஒலிபரப்புவான். மதிய வேளைகளில் அருகிருந்த தண்ணீர்த் தாங்கியொன்றின் கீழ் உட்கார்ந்திருக்க, தயா கற்பனையில் உலகக்கோப்பைப் போட்டியை ஒலிபரப்புவதுபோல் , உலகத்தின் கிரிக்கெட் ரசிகர்கள் அனைத்தும், தான் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்ற நினைப்பிலும் கற்பனையில் போட்டிகளை உருவாக்கி ஒலிபரப்பிக்கொண்டிருப்பான். கேட்டுத்தொலைக்கவேண்டிய விதி எங்களுக்கிருந்தது.


இது போதாது என்று அவனது வீட்டுக்கு அருகில் பாழடைந்த அரிசி ஆலையொன்றின் நிலம் சீமெந்தினால் ஆனது. எம்மை அங்கு அழைத்துச்சென்று, தளத்தைச் சுற்றி மிதியுந்து ஓட்டப்போட்டி வைப்பான். அதை ஆங்கிலத்தில் விபரிக்கும்போது எமது பெயர்களைத் தவிர, வேறு எதுவும் எமக்குப் புரியாது. தயாவுக்கும்தான்.

***

ஒரு நாள் எமது வேலிக்கு ஓலை கட்டவேண்டியிருந்தது. புன்னைக்குடாவுக்குச் செல்லும் வீதியில், தளவாய்க்கு அருகில் வீதியோரத்தில் ஒரு சிறுதெய்வக் கோயிலொன்று இருந்தது. அவ்வழியெங்கும் காடும் கள்ளிப்பற்றைகளும் நிறைந்திருந்த காலம். நாம் அந்தக் காட்டுக்குள் முயல் பிடிக்கச் செல்வதுமுண்டு.

இக்காட்டுப் பகுதியில் இருந்த பனைகளில் தயா ஏறி ஓலைகளை வெட்டினான். அவற்றை வீதிக்கு இழுத்துவந்து சேர்த்தோம். அழைத்துச்சென்றிருந்த வண்டிலில் ஓலைகளை ஏற்றிக் கட்டிக்கொண்டிருந்தபோது, ஓலைகளில் மேலிருந்த தயா தடுமாறிச் சாய்ந்து விழுந்தான். அவனின் கஷ்டகாலம் அவன் விழுந்த இடத்தில் பெரும் கள்ளிப் பற்றை இருந்தது. அவனை இழுத்து வெளியே எடுத்தோம். முள்ளம்பன்றிபோன்று வெளியே வந்தான்.

முட்களை அகற்றிக் களைத்த நிலையில், அவனை ஏறாவூர் வைத்தியசாலைக்கு அழைத்து வந்தபோது, அம்மாதான் வைத்தியம் செய்தார். அவனது உடலில் இருந்த முள்ளுகளை அம்மாவும், இன்னொரு வைத்தியரும் ஒரு தாதியும் பல மணிநேரமாக அகற்றிக்கொண்டிருந்தார்கள். அதன்பின்பும் பலகாலமாக முட்கள் அவனுடலில் கிடந்து உபாதைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தன.

இந்த நாட்களில் லிங்கம் அண்ணன் என்று ஒருவர் அணியில் இணைந்தார் அவரும் கப்பலில் தொழில் பார்த்தவர். கிரிக்கெட் பைத்தியம். வாட்டசாட்டமான உடம்பு. டெனிம் நீளக்காற்சட்டையை அவரிடம்தான் முதன்முதலில் கண்டேன்.

மனிதர் கிரிக்கெட் என்றால் கண்ணை மூடிக்கொண்டு அடிப்பது என்று நினைத்திருந்தார். அவர் எந்தப் பந்தையும் தடுத்தாடிய சரித்திரமே இல்லை. எல்லாப் பந்துகளுக்கும் அடித்தார். ஒரு ரண் இரண்டு ரண் என்றால் ஓட மாட்டார். “பொறுடா, அடுத்தது ஆறுதான்” என்பார். மட்டை நிலத்தில் படாது, குனியவும் மாட்டார். ஆனால், குறி தவறாது. அவருக்கு ஆப் சைட் பந்துகளை கையாளத் தெரிந்திருக்கவில்லை. இதைவைத்தே அவரை மடக்குவோம்.

இருபது ஆண்டுகளுக்கு முன் காளிகோயில் திருவிழாவின்போது அவர்முன் போய்நின்று “லிங்கமண்ணை” என்றேன். நிமிர்ந்து கண்களைச் சுருக்கிப் பார்த்தார். “மறந்திட்டீங்க போல” என்றேன். “டேய் சஞ்சயன்" என்று வந்து கட்டிக்கொண்டார்.

இந்த நாட்களில் ஊருக்குள் மினி தியேட்டர்கள் முளைத்தன. ஓலையால் கொட்டில்போட்டு, தென்னங்குற்றிகளை நட்டு, அதன்மேல் பலகைகளை அடித்திருப்பார்கள். வீடியோ டெக்கில் படம் ஓடும். புதிய படங்கள் எல்லாம் தியேட்டருக்கு வருமுன், மினி தியேட்டர்களில் ஓடின. ஒரு தலை ராகம், சலங்கை ஒலி எல்லாம் அங்குதான் பார்த்தோம். இப்படியான மினித் தியேட்டர்களுக்குப் பெண்களும் வருவார்கள்.

ஒருநாள் தயா, சுமணஸ்ரீ, நான் படம் பார்க்கப்போனோம். பயணங்கள் முடிவதில்லை என்ற மோகனின் படம் என்றே நினைவிருக்கிறது. சுமணஸ்ரீயை வர்ணிப்பதற்கு 'கொசப்பு' அல்லது 'வழிசல்' என்ற வார்த்தைகள் போதும். நாமும் அவனுக்குக் குறைவில்லை. ஆனால், அவர்தான் எங்கள் குரு. விளையாடுவதில் ஆர்வமில்லாத ஆனால், எங்கள் அணியில் அங்கத்துவன். அடிக்கடி கொழும்பு, காலி என்று சென்றுவருவதால் அவனுக்கு எங்களை விட உலகம் தெரிந்திருந்தது.

தயா வாங்கின் ஒரு ஓரத்திலும், அவனுக்கு அடுத்ததாய் நானும், அதற்கு அடுத்ததாய் சுமணஸ்ரீயும் உட்கார்ந்திருந்தோம். மொழி சிங்களம் என்றாலும் சுமணஸ்ரீக்கு எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பாட்டுகளில் விருப்பம் இருந்ததால், அவனும் படம்பார்க்க வந்திருந்தான்.

படம் தொடங்கியது. நேரம் இரவு ஒன்பது மணியிருக்கும். சற்று நேரத்தின்பின் இரண்டு பெண்கள் உள்ளே வந்தார்கள். ஒருவர் சுமணஸ்ரீக்கு அருகிலும் மற்றையவர் முன்னால் இருந்த வாங்கிலும் உட்கார்ந்துகொண்டார்கள்.

அங்கு இடைவேளையெல்லாம் விடமாட்டார்கள். அவசியமானவர்கள்மட்டும் எழுந்து, காட்டுக்குள் போய்வரவேண்டியதுதான். சற்று நேரத்தில் சுமணஸ்ரீ எழுந்துபோனான். அவன் போனதும், சற்று வசதியாகத் தள்ளி உட்கார்ந்து கொண்டேன். அருகே அந்தப் பெண். அப்போது எதிரே உட்கார்ந்திருந்த பெண்ணும் அவருக்கு அருகிருந்த ஆணும் எழுந்து போனார்கள்.

மோகன் பூர்ணிமாவுக்காக அழுது... அழுது பாடிக்கொண்டிருந்தபோது, எனது காலில் யாரோ சுரண்டுவதுபோலிருந்தது. தவறுதலாகப் பட்டிருக்கும் என்று நினைத்து காலை சற்று ஒதுக்கிக்கொண்டேன். மீண்டும் சுரண்டுப்பட்டு தொடையிலும் சுரண்டப்பட்டது. கணப்பொழுதில் உச்சி வியர்த்து பதின்மவயதின் உடல் முறுகியது. இதயம் அடித்துக்கொண்டது. தயாவைப் பார்த்தேன். படத்தில் மூழ்கியிருந்தான்.

இப்போது மடியில் இருந்த உள்ளங்கை சுரண்டப்பட்டது. அப்போது சுமணஸ்ரீ வந்து உட்கார்ந்தான். காதுக்குள் நடந்தைச் சொன்னேன். "நீயும் உள்ளங்கையை சுரண்டு" என்றுவிட்டு, தயாவுக்கு அருகில் இடம்மாறி உட்கார்ந்துகொண்டான். மறுமுறை எனது கை சுரண்டப்பட்டதும், நானும் சுரண்டினேன். முதன் முதலில் ஒரு பெண்ணின் கையைத்தொடுகிறேன். அது சூடாக இருக்கிறது. மனம் கட்டற்று அலைகிறது. நெஞ்சு அடித்துக்கொள்கிறது. மேலும் இரண்டுமுறை உள்ளங்கையில் சுரண்டிவிட்டு, அப்பெண் எழுந்து நடந்தாள். சுமணஸ்ரீ குமட்டுக்குள் ஏன் சிரித்தான் என்று எனக்குப் புரியவில்லை.

படம் முடிந்து வெளியில் வந்தோம். சந்தியில் வீதி வெளிச்சத்தில் அப்பெண் நின்றிருப்பது தெரிந்தது. அவரைக் கடந்து சையிக்கிளில் சென்றபோது... கெட்டவார்த்தைகளால் என்னைத் திட்டினார்.

பொலிஸ் நிலையச் சந்தியில் உள்ள கடையொன்றில் நின்று, தேநீர் அருந்திக் கொண்டிருக்கையில், தயாவிடம் விடயத்தைச் சொன்னேன். “அடேய்! அது அப்படியான 'கேஸ்'! வாறியா? என்று உன்னை மறைமுகமாகக் கேட்டிருக்கிறாள். நீயும் சுரண்டி, வாறன்... என்று சொல்லியிருக்கிறாய். ஆனால், போகவில்லை. அதுதான் அவள் திட்டியிருக்கிறாள்” என்றான்.

சுமணஸ்ரீ “ஏ படுவ ஹரி நா… மச்சாங்” (அந்தச் சரக்கு சரியில்லை மச்சான்) என்றான். அன்று புதிதாக ஒரு விடயம் கற்றுக்கொண்டேன்.

மினிதியேட்டர்களில் 'பலான' படங்களும் ஓடும். ஆனால், அது இரகசியமாகச் சாமவேளையில் ஓடும். சுமணஸ்ரீக்கு எப்படியோ செய்தி வந்துவிடும். சுமணஸ்ரீயின் புண்ணியத்தில் கற்றதும் ; பெற்றதும் நிறைய உண்டு என்பதில் மறைப்பதற்கு எதுவுமில்லை.

***
போர் உலா வந்த காலத்தில் சிங்கள மகாவித்தியாலயத்தின் அதிபர் தன்மகளை டவுனுக்குப் படிக்க அனுப்புவதை நிறுத்தினார். தயாவுக்கு செலவு மிச்சம். மதிய வெய்யிலிலும் மைதானத்தில் நின்றிருப்பான். அப்போதும் அந்த இரண்டு பொலிசாரும் அவளின் வீட்டின் அருகால் ரோந்து போயினர். அவள் அவர்களையும் நிமிர்ந்து பார்க்கவில்லை.

சில காலங்களின்பின், ஒரு மதியப்பொழுதில் தயா அவசர அவசரமாக வீட்டுக்கு வந்து, “ வா, வா அவசரம்” என்று அழைத்தான். அவனின் சைக்கிளில் ஏறிக்கொண்டேன். மைதானத்தின் அதனருகே இருந்த மதகோடு சைக்கிளை நிறுத்திவிட்டு உட்கார்ந்து கொண்டான்.

சிங்கள மகாவித்தியாலய அதிபரின் வீட்டுப் பொருட்கள் ஒரு பாரவூர்தியில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தன.

அவர்களும் இடம்பெயர்கிறார்கள் என்று புரிந்தது. அன்றும் தயாவுக்குத் தண்ணீர் விடாய்த்தது. இருவரும் தண்ணீர் அள்ளிக் குடித்தோம்.

அப்போது வெளியே வந்த அவள், எங்களிடம் “அபி கமட யனவா” (நாங்கள் ஊருக்குப் போகிறோம்) என்றாள். கதாநாயகன் எதுவும் பேசவில்லை.

அவர்களின் பொருட்களை ஏற்றிய
பாரவூர்தி புறப்பட்டபோது, மைதானத்தில் குந்தியிருந்தோம். தயா நிலத்தைப் பார்த்திருந்தான். அவன் கண்கள் கலங்கியிருந்தன.

2022ஆம் ஆண்டின் இறுதியில் கனடா சென்றபோது, தயாவின் அம்மா என்னை அழைத்து, அருகே இருத்தி “மகன்… அவன் இப்பவும் தனிய இருக்கிறான். நீதான் புத்தி சொல்லனும். நீ சொன்னாக் கட்டாயம் கேட்பான்” என்றார். நான் எதுவும் பேசவில்லை. பெற்ற மனம் பித்தல்லவா.


நினைவழியா பதின்மம், பகுதி 4

 பதின்ம வயதுப் பரவசங்கள் -4

******

சிங்கள நண்பர்கள் இடம்பெயர்ந்தார்கள். முஸ்லீம் நண்பர்களுடனான தொடர்பு குறைந்தது. கலவரங்கள் அதிகமாகின. ராணுவம் ஊருக்குள் திரியத் தொடங்கியது. கைதுகளும், தாக்குதல்களும் ஆரம்பமாகின. இயக்கங்களுக்கு ஆட்களைத் திரட்டினார்கள். திடீரென காணாமற்போன நண்பர்கள் ஆறேழு மாதங்களின் பின் முறுகிய உடம்புடனும், இடுப்பில் கட்டிய ஆயுதங்களுடனும் இரவு நேரங்களில் வந்து போனார்கள்.

மைதானத்தில் புதியவர்களும் இளையவர்களும் இணைந்து கொண்டார்கள். ஊரைப் பயம் பீடித்தது. பயந்து பயந்து விளையாடினோம் ஒரு வாரவிடுமுறையில் செங்கலடியில் அவர்களது மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது ராணுவம் ஒருவரை துரத்திக்கொண்டுவர, அவர் மைதானத்தின் நடுப்பகுதியின் ஊடாக ஓடினார். ராணுவம் தங்களின் ஏ. கே 47ஐ இயக்கியது. சுதாரித்துக்கொண்டு நிலத்தில் படுத்துக்கொண்டோம்.

அந்நாட்களில் ஒருநாள் இரவு தயாவும் நானும் 'செக்கன்ட் சோ' படம் பார்த்துவிட்டு வரும்போது, சிங்கள மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இருந்த சிவகுருநாதன் அய்யா வீட்டு இளநீர் கண்ணிற் பட்டது. சில காலமாகவே அவரது வீட்டின் மரத்தில் ஏறி இளநீரை வெட்டிக் குடித்துவிட்டு, நாம் மறைந்து விடுவதுண்டு. மரங்களின் கீழிருந்த இளநீர்க் கோம்பைகளைக் கண்ட சிவகுருநாதன் அய்யாவுக்கு கள்ளர்களைப் பிடிக்கவேண்டும் என்று தோன்றியிருக்கிறது. அப்படியான பொழுதில்தான் எமக்கும் தாகமெடுத்திருந்தது. கம்பிவேலியால் புகுந்து நான் சென்றி பார்க்க, தயா மரத்தில் ஏறி இரண்டு இளநீரை விழுத்தியபோது, “யார்டா அது...?" என்ற குரலுடன், அவரது டோர்ச் லைட் வெளிச்சம் முகத்தில் பாய்ந்தது. தயா குதித்து சாரத்தினால் தலையை மூடிக்கொண்டு ஓடினான். நான் சாரமணிந்திருக்கவில்லை. தவிர, ஓடுவதற்கிடையில் என் முகத்தைக் கண்டுவிட்டார். “டொக்டர் அம்மாவின் மகன்” என்று அவர் கத்தவும் நான் கம்பிவேலியால் பாய்ந்து ஓடவும் சரியாக இருந்தது. மறுநாள் தனது மனைவி மூலமாக அம்மாவிடம் விடயத்தை அறிவித்தார். நான் அந்தப் பக்கம் போகவே இல்லை என்று சாதித்தேன். அம்மா என்னை நம்பவில்லை.

சிவகுருநாதன் அய்யாவை நான் ஊரில் இருந்து புறப்படும்வரை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்துக்கொண்டேன். பிற்காலத்தில் எங்கள் அணியில் காற்பந்தாடிய வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சிங்கமொன்று சிவகுருநாதன் அய்யாவின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். அதுவும் காதல்திருமணம்தான். அதற்குப் பதினைந்து ஆண்டுகளின்பின் அய்யாவின் மகன் எனது தங்கையைத் திருமணம் செய்தார். அதுவும் அப்படித்தான்.

சிங்கள மாகாவித்தியாலய அதிபரின் மகள் எப்போது பாடசாலைக்குச் செல்வாள்? எப்போது வருவாள்? எந்த எந்த தினங்களில் அவளுக்கு மேலதிக வகுப்புகள் இருந்தன? எப்போது பன்சலைக்குச் செல்வாள்? என்று அவளது தந்தைக்கே தெரியாத பல விடயங்கள் தயாவுக்குத் தெரிந்திருந்தன. போயா தினங்களில் நாங்கள் மதம்மாறிப் பன்சலைக்குச் சென்றோம். மறுநாள் மீண்டும் மதம்மாறி காளிகோயிலுக்குச் சென்றோம்.

அவ்வப்போது பாடசாலைக்குச் செல்லும் பேருந்தில் எம்முடன் வருவான். புட்போட்டில் தொங்கிக்கொண்டிருப்பான். அல்லது என்னுடன் உரையாடுவதுபோல் அவளைப் பார்த்தபடியிருப்பான்.

அப்படியான 1985ஆம் ஆண்டின் கார்த்திகை மாதத்தில் ஒரு நாள் மாலை நண்பர்கள் சூழ, ஏறாவூர் புகையிரத நிலையத்தில் நின்றிருந்தேன். கையில் ஒரு சிறு பை.

அம்மா தனது இளைய மகனை ராணுவம் பிடித்து அடித்து உதைத்தபின், அவனை இங்கிலாந்துக்கு அனுப்பினார். காலப்போக்கில் மூத்த மகன்பற்றிய பயமும் அம்மாவுக்கு வந்திருந்ததால், என்னை இந்தியாவுக்கு அனுப்பும் ஒழுங்குகளைச் செய்திருந்தார். எனது காதலியும் தானும் சிலவேளை மேற்கல்விக்காக இந்தியா வரலாம்... என்றிருந்தாள். அதற்கப்புறமும் என்னால் ஊரிலிருக்க முடியுமா?

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு செல்லும் தபால் ரயில் ஏறாவூரை வந்தடைந்தது. ரயில் நிலையம் என்பதும் இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.

***

அந்நாட்களில் ரயில் நிலையத்தின் மத்திய பகுதியில் மட்டும்தான் வெளிச்சம் இருக்கும். ஆனால், ரயிலோ பத்து பதினைந்து பெட்டிகளுடன் நீண்டு நிற்கும். என்ஜின் நிற்கும் பிளாட்பாரம் பகுதியில் வெளிச்சம் இருக்காது. இவ்விடத்தில்தான் எங்கள் மைதானம் இருந்தது. ரயில் புறப்பட்டால் கடைசி ஆறேழு பெட்டிகள் எங்கள் மைதானத்தைக் கடக்கும்போது ரயில் வேகமெடுத்திருக்கும். இறங்கவோ ஏறவோ முடியாது.

ஏழு மணிக்கு கொழும்பு செல்லும் தபால் ரயில் ஏறாவூருக்கு வரும். ஒரு ரயில்பெட்டி நிறைய தயிர் ஏற்றுவார்கள். அதற்கு கால்மணிநேரமாவது தேவை. இந்த நேரத்தில் மைதானப் பகுதியின் ஊடாக இருண்டிருக்கும் பிளாட்பாரத்திற்கு வந்து நின்று கொள்வோம். ரயில் புறப்பட்டு வேகமெடுத்ததும், எடுத்துவந்த பிரம்புகளைக் கைளில் எடுத்து, ரயில் ஜன்னலில் கைவைத்திருப்பவர்களுக்கும் கதவுகளில் தொங்கிக்கொண்டிருப்பவர்களும் அடிப்போம். அவர்கள் பாடசாலையில் வாத்தியாரிடம் அடிவாங்கியதுபோல் துடிப்பார்கள். நாங்கள் சிரித்துக்கொண்டு மைதானப்பக்கமாய் ஓடுவோம்.

ஒருமுறை ரயில்நிலைய அதிபரின் தந்தையுடன் எமக்கு முரண்பாடு ஏற்பட்டது. அவருக்கு தானொரு இளைப்பாறிய பொலிஸ் அதிகாரி என்ற கர்வம் இருந்தது. நாம் வீதியில் நிற்பதும், சத்தமாகக் கதைப்பதும், அவர் வரும்போது எழுந்து நின்று மரியாதை செய்யாததும் பிடிக்கவில்லை. “நீங்கள் ரவுடிகள், பொலிஸில் பிடித்துக்கொடுப்பேன்” என்பார். எனது தாயாரை அவர் நன்கு அறிவார். என்னைப் பற்றி ஆயிரம் கோள் சொல்வார். அம்மா மரியாதைக்காக கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, “ஏன்டா, அந்தாளோட தனவுறீங்க” என்பார். அம்மாவை அவர் நன்கு அறிந்ததால் என்னிடம் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்பார். அல்லது ஆங்கிலத்தில் ’கியூ’ என்னும் சொல்லுக்கு எழுத்துக்கூட்டச் சொல்வார். எனக்கும் எமது அணியில் இருந்த எவருக்கும் அவரைப் பிடிக்காது. ஆனால், பொலிஸ் செல்வாக்குள்ளவர் என்பதால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே, அவரது மகனைக் குறிவைத்தோம்.

இரவு நேரங்களில் ரயில்நிலையத்தினுள் ரயில் நுழையும் வேளை ரயில் நிலையத்தில் மின்சாரம் நின்றுபோகத் தொடங்கியது. ரயில் புறப்பட்ட சில நேரங்களில் மின்சாரம் மீண்டும் வந்தது.

ரயில் வரும்போது பிளாட்பாரத்தில் நின்று ஒருவிதமான சத்தமெழுப்புவேன். வாசலுக்கு அருகே ஒதுக்குப் புறமாயிருந்த மின்சார கட்டுப்பாட்டுப் பெட்டியில் இருக்கும் மெயின்சுவிட்சை தயா சற்று பின்னோக்கி இழுத்துவிடுவான். பார்த்தால் மெயின்சுவிட் இயங்கிக்கொண்டிருப்பதுபோலிருக்கும் ஆனால், இயங்காது. பல வாரங்கள் இது தொடர்ந்தது. ரயில் நிலைய அதிபரால் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவே இல்லை. பிற்காலத்தில் அவரது தந்தையை ஒரு இயக்கம் கொலைசெய்தது. அத்துடன் எமக்கிடையிலான யுத்தமும் ஓய்ந்தது

***

ரயில் புறப்படுவதற்கு தயாரானது. தயா இறுக அணைத்துக்கொண்டான். அப்துல் ஹை (கவிஞர் புரட்சிக் கமாலின் மகன்), குமார, சந்திர ஸ்ரீ, ராஜன், பாமி, செங்கலடி நண்பர்கள் என்று ஒவ்வொரு தோழர்களாக அணைத்துக்கொண்டார்கள். நண்பர்களிடமிருந்து விடைபெற்று ஏறிக்கொண்டேன். ரயில் புறப்பட்டபோது அதனுடன் சற்றுத்தூரம் ஓடிவந்தான் தயா.

மைதானத்தைப் புகையிரதம் கடந்தபோது, மீளமுடியாத நீண்ட பயணமாக அது இருக்கப்போகிறது என்பதையோ வாழ்வின் அற்புதமான காலங்களையும் தோழமைகளையும் இழக்கப்போகிறேன் என்பதையோ நான் உணர்ந்திருக்கவில்லை. இருட்டைக் கிழித்துக்கொண்டு புகையிரதம் வேகமெடுத்தது.

நினைவழியா பதின்மம், பகுதி 3

ஏறாவூர் பொலீசில் அதிகாரியாக கடமையாற்றிய பறங்கியினத்தவர் ஒருவருக்கு செவிப்புலன் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. ஊரார் அவரை செவிட்டுப் பொலிஸ் என்று அழைத்தார்கள். நாம் அவரை அங்கிள் என்றோம். அமைதியான மனிதர். அவருக்கு ஒன்பது குழந்தைகள்.


அவரது மூத்தவன் இருபதுகளின் மத்தியிலும் இளையவன் ஓரிடண்டு வயதிலும் இருந்ததுபற்றி அவர் கவலைப்படவில்லை. அவரது சேவையின் காரணமாக எங்கள் அணிக்கு அவர்கள் வீட்டில் இருந்து மட்டும் ஐவர் விளையாடினார்கள். ஒருவன்பற்றி பின்பு எழுதுகிறேன்.

தயா அழைத்தவர்களில் ரோனால்ட்டும், பாமியும் மேலே எழுதிய பொலிசின் மகன்மார், இவர்களுடன் குமார, தயா, நான் புறப்பட்டோம். குமார சந்திரே அய்யாவின் தம்பி.

அன்றைய நள்ளிரவு ஊர் உறங்கிக் கிடந்தது. நாம் ரோலருக்கு எதிர்ப்புறமாய் நின்று பேசிக்கொண்டிருப்பதுபோல் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தபோது ரோலருக்கு மிக அருகில் வீதி விளக்கு எரிந்துகொண்டிருப்பதை அவதானித்த தயா…

“டேய் பக்கத்தில தேவநாயகத்தின் (அமைச்சர்) வீடு. வோச்சர் முழித்திருப்பான்” என்றான். எங்களின் சிங்கள நண்பர்களுக்கு தமிழ் நன்கு புரியும். எனவே, அருகே நின்றிருந்த குமார தயாவிடம் “ மச்சாங், தங் மொக்கத கரன்னே (மச்சான், இப்ப என்ன செய்வது?) என்று கேட்டு வாய்மூடவில்லை “கிளிங்” என்ற சத்தத்துடன் மின்குமிழ் உடைந்து அணைந்தது. எங்கள் தளபதியின் குறி தவறவில்லை.

வாழைச்சேனை பேப்பர் தொழிற்சாலைக்கு வைக்கோல் எடுத்துச் செல்லும் நீண்ட வாகனமொன்று கடந்துபோனது. அதற்கு அந்நாட்களில் ’ஆளடியன்’ என்று பெயர். அது காரண இடுகுறிப் பெயர்.

ரோலருக்கு அருகில் நின்றிருந்தோம். இன்னும் செக்கன்ட் சோ முடியவில்லை. எனவே, செங்கலடி சந்தியில் இருக்கும் வகுப்புத் தோழனின் பேக்கரிக்குச் சென்று மூன்று தேநீர் வாங்கி ஐவரும் அருந்தினோம். மறுநாளுக்கான பாண் போறணையில் வெந்துகொண்டிருக்கும் வாசனை பேக்கரியையும் கடந்து வீதிவரை வந்துகொண்டிருந்தது. நண்பன் கல்லாவில் அமர்ந்திருந்ததால் ஒரு தேநீருக்கான விலைக்கழிவு கிடைத்தது.

ஏறாவூரில் 500 மீற்றர் தூரத்திற்குள் ஒரு வீதியில் செல்வி, சாந்தி, சாரதா என்று மூன்று திரையரங்குகள் உண்டு. அவற்றில் செக்கன் சோ முடிந்து வருபவர்கள் சென்று முடியும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

படம் முடியும் நேரத்தில் இரண்டு பொலீசார் ஒரு மிதியுந்தில் வந்தாறுமூலைவரையில் ரோந்து செல்வார்கள். அவர்கள் கடந்துபோனார்கள். ரோலருக்கு அருகே சென்றோம்.

மட்டக்களப்பு வீதியின் இருபுறமும் வாகனங்கள் எதுவும் தென்படவில்லை. பதுளை வீதியிலும் அப்படியே.

மெதுவாய் ரோலரை இழுத்தோம் அது அசையவில்லை. சற்றுநேர முயற்சியின் பின் அசைந்தது. அதனை அருகில் இருந்த ஒழுங்கைக்குள் இழுத்து வந்து அந்த ஒழுங்கையின் ஊடாக எல்லை வீதிக்கு வந்து, அங்கிருந்து மைதானத்திற்கு வந்தபோது, சாமம் ஒரு மணி கடந்திருந்தது. வீதியருகே இருந்த பற்றைக்குள் ஒளித்துவைத்துவிட்டுக் கலைந்தோம்.

வீடுவந்தபோது அம்மா வாசலில் குந்தியிருந்தார். வியர்வையில் நனைந்திருந்த என்னிடம் ”எங்கே போனாய்?” என்ற கேள்விக்கு “படித்துவிட்டு வருகிறேன்” என்றேன். “படித்தால் இப்படி வேர்க்குமாக்கும்” என்றார் நக்கலாய். நான் எதுவும் பேசவில்லை..

மறுநாள் மாலை கிறவலின்மீது நீரூற்றி ரோலரை உருட்டியெடுத்தபோது “மாற வெடக் நே” (அதி சிறப்பான வேலை) என்று சிங்களத்தில் பாராட்டினார் சந்திரே அய்யா. இரண்டு நாட்கள் கடந்தபின், எங்கள் கிரிக்கெட் பயிற்சிகள் ஆரம்பித்தன. விளையாட்டு முடிந்தபின், இப்போதும் அவசியமின்றி நீர் ஊற்றிக்கொண்டிருந்தான் தயா. அப்போதும் அவள் அவனைக் கண்டுகொள்ளவில்லை.

மணிக்கட்டை எவ்வாறு திருப்பினால் லெக் ஸ்பின், ஆப் ஸ்பின் போடலாம் என்று சந்திரே அய்யா கற்பித்தார். பந்து சொன்ன சொல்கேட்டுத் திரும்பியபோதெல்லாம் சந்திரே அய்யா துள்ளிக் குதித்தார்.

எனக்கு லெக் ஸ்பின் கைவந்தது. தயாவுக்கு கூக்லி வசப்பட்டது. ரோனால்ட் ஆவ் ஸ்பினில் வல்லவன் ஆனான். தயாவின் தம்பி ராஜன் கீப்பரானான். மைதானம் களைகட்டியது. விளையாடுபவர்களைத் தவிர்த்து மைதானத்தை விட்டு வெளியேறும் பந்துகளை எடுத்துத் தரவும் ஆட்கள் இல்லாத பொழுதில் விளையாடவும் வயதிற்குறைந்தவர்கள் காத்திருந்தனர்.

ஐந்தாறு மாதங்கள் கடும் பயிற்சி தந்தார் சந்திரே அய்யா. அந்நாட்களில்தான் கப்பலில் வேலைசெய்து ஊர் திரும்பிய சேவியர் அண்ணனும் அணியில் இணைந்தார். கமலஹாசன் போன்று மிடுக்கானவர். அந்நாட்களில்தான் திருமணம் முடித்திருந்தார். அவரும் மனைவியும் விளையாட்டுப் பிரியர்கள். மனைவியை முதன் முதலில் விளையாட்டுப்போட்டியொன்றில்தான் கண்டதாக அவர் கூறியது ஞாபகமிருக்கிறது. அவர்கள் இரவுப் பொழுதில் எமது மைதானத்தில் மெது ஓட்டம் ஓடுவதை நாம் கண்டிருக்கிறோம். சேவியர் அண்ணன் இப்போது கனடாவில் இருக்கிறாராம்.

உதயா அண்ணன் என்றும் ஒருவர் இருந்தார். வயதில் மூத்தவர். வாழைச்சேனை காகிதத் தொழிட்சாலையில் வேலைசெய்தார். அவரது வேகப்பந்துக்கு முகம் கொடுப்பது இலகுவல்ல.

முதலாவது போட்டியில் செங்கலடி அணியிடம் தோற்றோம். அடுத்தது அலிகார் அணியுடன். அதுவும் தோல்வி. நலிந்தவனை போட்டிக்கு அழைப்பது வழக்கமான ஊரில் நாம் தோற்றுக் கொண்டே இருந்தோம்.

ஓராண்டின்பின் வெற்றி எமதாகத் தொடங்கியது. எம்மை அழைத்தவர்கள் தோற்றார்கள். நாம் அழைத்தவர்களும் தோற்றார்கள். மெதுவாக மட்டக்களப்புக் காற்றில் பரவியது எமது அணியின் பெயர்.

வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்புவரை அனைவரையும் வென்றாகிவிட்டது. மட்டக்களப்பு மாநகர சபையின் அணி மட்டுமே பாக்கி.

கட்டளைத் தளபதிபோன்று நின்று தமிழும் சிங்களமும் கலந்து உரையாற்றினார் சந்திரே அய்யா. இன்னும் ஒரு வாரத்தில் மாநகர சபை அணியுடன் அவர்களின் கோட்டையான வெபர் ஸ்டேடியத்தில் போட்டி. இம்முறை வெல்ல வேண்டும் என்றார்.

வெள்ளிக் கிழமை மாலைக் கருக்கலில் பந்து தொலைந்துபோகும் வரை பயிற்சியெடுத்தோம். அன்றிரவு அனைவரும் செக்கன்ட் சோ பார்த்தோம். நாளைய போட்டியைப் பற்றியே பேச்சாயிருந்தது. என்னால் அன்றிரவு உறங்க முடியவில்லை.

மறுநாள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் போட்டி தொடங்கியது. அவர்கள் பந்து தடுக்க நாம் தடுத்தாடுவதாகவும் நடுவர் தீர்மானித்தார்.

ரோனால்ட்டும் தயாவின் தம்பி ராஜனும் களமிறங்கினார்கள்.

ரோனால்ட் 80களின் ஆரம்பத்தில் இந்திய அணியில் விளையாடிய தமிழ்நாட்டு வீரரான ஸ்ரீகாந்தின் பெரும் ரசிகன். அன்று ஆட்டமிழக்காமலே ஆடினான். தனது கதாநாயகனைப் போன்று ஆப் பக்கத்தில் வந்த பந்துகளை நான்கு, ஆறு என்று அடித்துத் தள்ளினான். மாநகர சபையின் அணி அவனை ஆட்டமிழக்கச்செய்ய பெரும்பாடு பட்டது. நான் இருபது ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தேன்.

கணிசமான ரன்களுடன் ஆட்டம் கைமாறியது. தயா புயல்போல் பந்து வீசினான். சந்திரே அய்யா வெளியிலிருந்து பந்து தடுக்கும் அணியை வழிநடாத்தினார். கீப்பரான ராஜன் அசாதரணமாய் பந்துகளைப் பிடித்தான். முழு அணியும் உயிரைக் கொடுத்து விளையாடியது.

1984 என்று நினைக்கிறேன். முதன் முதலாக ஒரு குக்கிராமத்து அணி மட்டக்களப்பு மாநகர சபையின் அணியினை வென்றது.

அன்றைய மாலைப் பொழுது ஏறாவூர் வைத்தியசாலைக்கும் ரயில் பாதைக்கும் அருகிருந்த நாவலடி தேநீர்க்கடையில் அருந்திய தேநீரின் சுவை வாழ்வில் மறக்க முடியாதது. பிற்காலத்தில் காற்பந்திலும் குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிடைத்தன.

சனிக்கிழமைகளில் ஒரு மிதியுந்தில் மூவர் நால்வர் என புன்னைக் குடாவுக்கு கடல்குளிக்கச் செல்வோம். காலை சென்று இரண்டு மூன்று மணிவரை கும்மாளமிட்டு வருவோம். மாலை மீண்டும் விளையாட்டு.

இப்படி வாழ்வினை தோழமையின் ஈரலிப்பில் வாழ்ந்திருந்தபோதுதான் ஊருக்குள் 'போர்' உலா வந்தது.

தொடரும்...

நினைவழியா பதின்மம், பகுதி 2

 பதின்ம வயதுப் பரவசங்கள் -2

******
தயாபற்றிச் சொல்ல வேண்டும். எனது நண்பன். குழப்படிகளின் பங்காளன். அவனின் கிளிமூக்கு ஊருக்குள் பிரபல்யமானது. வேகப்பந்து வீச்சாளன். பந்துகாப்பாளனும் கூட. காற்பந்து விளையாட்டில் தன்னுடன் இணைந்து மேலும் பத்துப்பேர் விளையாடுகிறார்கள் என்பது அவனுக்கு மறந்துவிடும்.

எனக்கு 304 விளையாட, இன்ன பிற வயதுவந்தவர்களுக்கான இலக்கியங்களைக் கற்பித்த குரு. கொழும்பு சென்றால் Playboy இதழுடன் வருவான். காட்டுக்குள் ஒளித்துவைத்துப் பார்ப்போம். காணாததைக் கண்டது அங்குதான். இரத்தமும் உடலும் சூடாகும்.

அனுமாரின் வாரிசுகள்போல் தாவும் கலை அவனுக்கு வசப்பட்டிருந்தது. எத்தனை உயரமான மரமானாலும் குரங்குபோல் லாவகமாக ஏறியிறங்குவான். புன்னைக்குடாவுக்குக் கடலில் குளிக்கச் செல்லும் நாட்களில் கள்ள இளநீர் இறக்கும் எங்கள் தளபதி தயாதான். இவற்றைவிட வாயால் வடைசுடும் பெரு விற்பன்னன். நட்புக்காக உயிரையும் கொடுக்கும் சீவன். 37 ஆண்டுகளின் பின்பு கடந்த மாதம் எனது முதற்காதலை என்னுடன் பேசவைத்த நேசமிக்க தோழன்.

தற்போது ஊரார் அவனை(ரை) தயாசாமி என்று பெருமையுடன் அழைக்கிறார்கள். நான் அவனைக் கள்ளச்சாமி என்றழைக்கிறேன்.
அவரது பெருமைகள் பலவுண்டு.

சந்திரே அய்யா ஆமோதித்தார் என்றே அல்லவா!. அடுத்து வந்த மாலைப்பொழுதுகளில் விளையாட்டு நிறுத்தப்பட்டு, செடிகள் பற்றைகள் அகற்றப்பட்டு, மணற்கும்பங்கள் வெட்டப்பட்டு மைதானம் சமப்படுத்தப்பட்டது.

சிங்கள மகாவித்தியாலய அதிபரின் வீடும் பாடசாலை வளவுக்குள்ளேயே இருந்தது. அவர்களின் வளவுக்குள்தான் நாம் நீரருந்திய கிணறும் இருந்தது. அவருக்கு மூன்று குழந்தைகள். மூத்தவளுக்கு 15 வயதிருக்கலாம். டவுனில் இருந்த சிங்கள மகாவித்தியாலத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்தாள். எனது முதற்காதலின் தோழி. அலரிப்பூவின் அழகையும் மென்மையையும் கொண்டவள்.

மைதானம் திருத்தப்பட்ட காலத்திலும் அங்கு நாம் விளையாடிய காலத்திலும் தயா மட்டும் சிங்கள மகாவித்தியாலத்தின் வாசலின் அருகாமையிலே நின்று கொண்டிருந்தது ஏன் என்பதும், அடிக்கடி அவனுக்கு தண்ணீர்த் தாகமெடுத்தது ஏன் என்பதையும் நீங்கள் இப்போது புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நெருஞ்சி முட்கள் எம்மைப் பதம் பார்த்தமையினால் ஊருக்குள் வீசி எறியப்பட்டிருந்த வாழைத்தண்டுகளை எடுத்துவந்து மைதானம் முழுவதும் உருட்டி உருட்டி எடுத்தோம். முட்களின் பிரச்சினை கட்டுக்குள் வந்தது.

புன்னைக்குடா வீதியில் இருந்த தென்னந்தோட்டங்களில் இருந்து தென்னங்குற்றிகளை எடுத்துவந்து, மைதானத்தில் கோல்போஸ்ட் நட்டுக்கொண்டோம்.

ஓரிரு வாரங்களுக்குள் மைதானத்தினுள் இருந்த பற்றைகள், செடிகள், குப்பைகள் அகற்றப்பட்டு, மணற்கும்பிகள் வெட்டிச் சமப்படுத்தப்பட்டு ஓரளவேனும் மைதானம் போன்று வடிவமெடுத்திருந்த மைதானம் உருவாகியிருந்தது.

எங்கிருந்தோ கண்டெடுத்த மூங்கிற்தடிகளை கோல்போஸ்ட்க்கு மேல்பக்கமாக கட்டிக்கொண்ட அன்று மாலை இருண்டு பந்து கண்ணுக்குத் தெரியாமல் போனதையும் மறந்து விளையாடிவிட்டு வீதி வெளிச்சத்தில் அமர்ந்திருந்தபோது கிரிக்கெட் பிட்ச் செய்ய வேண்டும் என்றார் சந்திரே அய்யா.

அதற்கும் தயாவிடம் ஒரு ஆலோசனையிருந்தது. பிள்ளையாரடியில் இருக்கும் கிறவற்குழியிலிருந்து ஒரு ட்ராக்டர் லோட் கிறவல் கொண்டுவந்து, மைதானத்தின் நடுவே இருபதுக்கு இரண்டு மீற்றர் நீள அகலத்தில் ஒரு அடி ஆழத்தில் கிடங்கு கிண்டி அதனுள் கிறவலைக் கொட்டிக்கொண்டு விட்டால் போதும் என்றான்.

சந்திரே அய்யாவுக்கும் அவனது ஆலோசனை பிடித்துக்கொண்டது. நான் உழவியந்திரம் வைத்திருந்த எனது இன்னொரு நண்பனின் தந்தையாரிடம் உதவுமாறு கேட்டேன். அவர் பணம் கேட்டார்.

எமது அணியிடம் ஒரு பந்தேனும் இல்லை. சிறிய டென்னிஸ்பந்தில் இனியும் காற்பந்தடிக்க முடியாது. ஒரு டியூப்போல் (காற்பந்து விளையாடும் பந்து) வாங்க வேண்டும். அத்துடன் கிரிக்கெட் பிட்ச் தயாரிக்க வேண்டும். எனவே, விளையாடுபவர்கள் அனைவரும் தினமும் இரண்டு தொடக்கம் ஐந்து சதம் கொண்டுவரவேண்டும் என்றார்கள் சந்திரே அய்யாவின் மருமனான குமாரவும் தயாவின் தம்பியான ராஜனும்.

ஏறத்தாழ ஒரு மாதத்தின் பின் இருபத்தியைந்து ரூபாயுடன் நண்பனின் தந்தையாரிடம் சென்றோம். போதாது என்று வாயைப் பிதுக்கினார். அடுத்த மாதம் ஐம்பது ரூபாயுடன் அவரிடம் நின்றபோது “ஏறுங்கள் பெட்டியில்” என்றார்.

மண்வெட்டி, பிக்கான், அலவாங்குடன் சந்திரே அய்யா தளபதிபோல் ட்ராக்டர் வண்டியின் மட்காட்டில் உட்கார்ந்திருக்க, பத்துப் பதினைந்த விடலைகள் ட்ராக்டர் பெட்டியில் நின்றிருந்தோம்.

மட்டக்களப்பிற்கு போகும் பாதையில் பிள்ளையாரடியில் வலதுபக்கமாகத் திருப்பி அருகிருந்த கிறவற்குழியில் ட்ராக்டர் நிறுத்தப்பட்டதும், துரிதமாக இயங்கியது விடலைகளின் படையணி. பிக்கானால் சிலர் கொத்த. அவர்கள் கொத்திய கிறவலை சிலர் ட்ராக்டர் வண்டியின் பெட்டிக்குள் மண்வெட்டியால் அள்ளி எறிந்தார்கள். இரண்டு மணிநேரத்தின்பின் பெட்டி நிரம்பியது.

அங்கிருந்து புறப்பட்டபோது அனைவருக்கும் களைத்து வியர்த்து ஓடிக்கொண்டிருந்தது. பிள்ளையாரடியிலிருந்த ஒரு கடையில் இருவருக்கு ஒரு பிளேன் டீ வாங்கித் தந்தார் சந்திரே அய்யா. தோழமையின் ருசியைக் கொண்டிருந்த அந்தத் தேநீரின் சுவையை இன்றும் உணர்கிறேன்.

அன்று மாலையே மைதானத்திற்கான கிடங்கினை வெட்டி வீதியைச் செப்பனிட கொட்டப்பட்டிருந்த கருங்கற்களைக் கொள்ளையடித்து வந்து பிட்ச்சின் அடிப்பகுதியில் கொட்டினோம். அதன்பின் கிறவலைக் கொட்டியபோது, சிங்கள மகாவித்தியால அதிபரின் வீட்டுக் கிணற்றிலிருந்து பல வாளி நீரை எடுத்துவந்து ஊற்றினான் தயா. அவனது முகத்தில் களைப்பிருக்கவில்லை. அந்நாட்களில் அதிபரின் மகளுக்கு வேறு ஒருவன்மேல் ஈர்ப்பிருந்தது என்பதை நான் கண்டுபிடித்திருந்தேன்

நீரைக் கிறவல் மண்ணில் ஊற்றிக் காலால் மிதித்துக் குழைத்துச் சமப்படுத்தியபோது மேற்பகுதியை எவ்வாறு சமப்படுத்துவது என்ற கேள்வி எழுந்தது.

செங்கலடி சந்திக்கருகில் வீதியைச் செப்பனிடுகிறார்கள். அங்கு ஒரு ரோலர் உண்டு என்றான் தயா. அதனை எடுத்துவருவதற்கு நால்வரை அழைத்தான்.

தொடரும்...

நினைவழியா பதின்மம், பகுதி 1

நினைவழியா பதின்மம், பகுதி 1
******

காலம் 1980களின் ஆரம்பம். இலங்கையில் தலைநகரைத் தவிர்ந்த, ஏனைய இடங்களுக்குத் தொலைக்காட்சிச்சேவை ஆரம்பமாகிய நாட்கள். ஊருக்குள் இரண்டு மூன்று வீடுகளில் மட்டும்தான் கறுப்புவெள்ளைத் தொலைக்காட்சிப்பெட்டிகள் இருந்தன. அந்நாட்களில்தான் இங்கிலாந்தில் நடைபெறும் காற்பந்தாட்டப் போட்டிகளை ஒரு வாரம் கடந்தபின் இலங்கையில் காண்பிக்க ஆரம்பித்தார்கள். மான்செஸ்டர் யுனைடட், லிவர்பூல் என்று பிரபலமான அணிகள் எமக்கு அறிமுகமான காலம். அன்றிலிருந்து இன்றுவரை நான் லிவர்பூல் அணியின் ஆதரவாளன்.

ஐந்து குறிச்சிகளாகப் பிரிக்கப்பட்ட ஏறாவூர் ஒரு சிறிய கிராமம். இலங்கையின் கிழக்கே வாழைச்சேனைக்கும் மட்டக்களப்பிற்கும் நடுவே, தமிழர்களும் முஸ்லீம்களும் சிங்களவர்களுமாக வாழ்ந்திருந்தோம். சிங்களவர்களில் பலர் தொழில் நிமித்தம் அங்கு குடியிருந்தனர். பொலீஸ், வைத்தியசாலை ஆகிய இடங்களிலும் வியாபாரிகளாகவும் அவர்கள் வேலைசெய்தனர்.

எனது தாயாருடன் 1965 தொடக்கம் 1980களின் இறுதிவரை ஏறாவூர் வைத்தியசாலையில் பணியாற்றியவர் பிரேமலதா அன்ரி. கணவரின் பெயர் ஸ்ரீசேன. இவர்கள் புகையிரதநிலைய வீதியில் பழைய பொலீஸ் குவாட்டர்ஸ்ஸுக்கு அருகிலும், பழைய புகையிலைச் சங்கத்திற்கு முன்னாலும் வாழ்ந்திருந்தார்கள். இப்போது அக்கட்டிடங்கள் இல்லை. அவர்கள் வீட்டில் ஐந்து ஆண்குழந்தைகளும் இரண்டு பெண்குழந்தைகளும் இருந்ததாக நினைவு. இப்போதும் அவர்களுடன் தொடர்பு இருக்கிறது. எனது அம்மாவையும் வந்து பார்ப்பார்கள்.

அக்குடும்பத்தில் மூத்த ஆண் சரத் அய்யா. தமிழை வாசிக்கப் பேசத் தெரிந்தவர். 1970களிலிருந்தே அவர் ஒரு புரட்சிகர அமைப்பின் ஆரம்பகாலத் தொண்டர். 1980களில் ஏறாவூரில் அரசியல் பேசியவர்களில் நானறிந்த ஒரே ஒரு சிங்களவர். முகப்புத்தகத்தில் இருக்கிறார். அவர் பதிவுசெய்யவேண்டிய பல கதைகள் உண்டு. இதை அவர் நிச்சயம் வாசிப்பார். “சரத் அய்யா! காலம் கடந்துவிடுவதற்கிடையில் நினைவுகளைப் பதிவுசெய்துவிடுங்கள்”. நல்நினைவுகளைப் பதிவுசெய்வது அவசியமல்லவா!

மட்டக்களப்பு வாழைச்சேனைக்குரிய பாதையின் கிழக்கே ஏறாவூரிலிருந்து செங்கலடி வரையில் இரண்டு விளையாட்டுக் கழகங்கள் மட்டுமே இருந்ததாக நினைவு.

அதில் ஒன்று அலிகார் விளையாட்டுக்கழகம் (என்றுதான் நினைவிருக்கிறது). வைத்தியசாலைக்கும் ரயில் பாதைக்கும் நடுவே நாவலடி கடைக்கு அருகாக உட்செல்லும் கிறவல்பாதையின் முடிவில் ரயில் தண்டவாளத்திற்கும் இறைச்சி வெட்டும் கட்டிடத்திற்கும் அருகே அவர்களது மைதானம் இருந்தது. 1960களின் இறுதியில் எனது தந்தை இந்த அணிக்குக் காற்பந்துப் பயிற்சியாளராக இருந்தார் என்று அந்த அணியின் பயிற்சியாளர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இரண்டாவது எமது கழகம். 1980களில் எமக்கென்று ஒரு இடமோ பெயரோ இருக்கவில்லை. கிடைக்கும் இடங்களில் விளையாடிக்கொண்டிருந்தோம். அப்படித்தான் சிங்கள மகாவித்தியாலயத்தின் மைதானத்திற்கும் சென்றோம். காலப்போக்கில் அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை வெருட்டிக் கலைத்துவிட்டு, அவ்விடத்தைச் சிங்கள, முஸ்லீம், தமிழ் விடலைகளாகிய நாம் கைப்பற்றிக்கொண்டோம்

தொலைக்காட்சியில் காற்பந்துப் போட்டிகளைப் பார்த்ததன் விளைவாகவும் மூவினத்தவரும் இணைந்து விளையாடியதாலும் எமது அணிக்கு மான்செஸ்டர் யுனைடட் போன்று ’ஏறாவூர் யுனைடட்’ என்று பெயர் வைத்துக்கொண்டோம்.

கிரிக்கெட் விளையாடவே ரப்பர் பந்து வாங்க முடியாத இந்தக் கழகம், இன்னும் சில ஆண்டுகளில் மட்டக்களப்பின் பிரபல அணிகளை வென்று சாதனை படைக்கும் என்று காலம் விதித்திருந்ததை நாம் அன்று அறிந்திருக்கவில்லை.

‘அய்யா’ என்றால் சிங்களத்தில் அண்ணன் என்று அர்த்தம். சந்திரே அய்யா பகற்பொழுதில் ஊர்ச் சந்தையில் கறாரான வியாபாரி. மாலையில் எமது கிரிக்கெட் பயிற்சியாளர். கையில் எப்போதும் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் புத்தகத்துடன் வலம்வருவார். துலிப் மென்டிஸ்இன் ரசிகன். அந்நாட்களில்தான் இலங்கை சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களுக்குள் உள்வாங்கப்பட்டது. வானொலியல் போட்டிகளின் நேரடி ஒலிபரப்பைக் கேட்டுக்கொண்டிருப்பார்.

எமது மைதானம் வெறும் மணலினாலானது. கிரிக்கெட் விளையாடப் பந்தெறிந்தால், அது விக்கட்ஐத் தவிர்த்து அனைத்துப் பக்கங்களிலும் சென்றது. காற்பந்தாடினாலும் எப்போது எப்படிப் பந்து செல்லும் என்று பந்துக்கும் தெரியாது, எமக்கும் தெரியாது.

இதனைக் கண்ட சந்திரே அய்யா ”மல்லிலா… மெஹெம செல்லங்கரன்ட பா, அபி மே கிறவுன்ட் எக ஹதா கமு” (தம்பிகளா! இப்படி விளையாட முடியாது, இந்த மைதானத்தை நாம் திருத்தி எடுப்போம்) என்று பெரும் புரட்சிக்கு வித்திட்டார்.

அன்றைய நாள் 40 - 42 வருடங்களின் பின்னான இன்றும் நினைவிருக்கிறது. மாலை மங்கிய இருளில் வீதிவெளிச்சக் கம்பத்தின் கீழ்க் குந்தியிருந்து திட்டமிட்டோம். தயாதான் ஒரு ஆர்கிடெக்ட் போன்று முதன் முதலில் திட்டத்திற்கான வரைபை முன்மொழிந்தான். அவன் கண்களில் பெருங்கனவு தெரிந்தது.

இரயில் தண்டவாளத்திற்கும் எமது மைதானத்தின் மேற்கு எல்லைக்கும் இடையில் உள்ள செடிகளை அகற்றி, மணற்திட்டுக்களைச் சமப்படுத்த வேண்டும். மைதானத்தின் நடுவே சிங்கள மகா வித்தியாலயத்திற்கு நேரெதிரே கிரிக்கெட் பிட்ச் தயாரிக்க வேண்டும். இரயில் இலாகாவினரின் வீடுகளுக்கு அருகாமையில், ஒரு காற்பந்தாட்ட கோல் போஸ்ட்டும் மற்றையது சிங்கள மகாவித்தியாலயத்தின் வாசலுக்கு நேரெதிரேயும் நடப்படவேண்டும் என்றான். சந்திரே அய்யா அதை ஆரவாரத்துடன் ஆமோதித்தார்.

தயாவின் இந்த மைதானப் புரட்சிக்குப் பின்னால் எனக்கு மட்டும் தெரிந்த அரசியற் காரணம் இருந்தது.

பதின்மவயதில் வேறென்ன அரசியற் காரணம் இருக்கப்போகிறது.

அவளுக்கு 16 வயது. அலரிப் பூவின் மென்மையும் அழகும் கொண்டவள். சிங்கள மகாவித்தியாலயத்து அதிபரின் மூத்த மகள்.

தொடரும்...