அம்மாவுக்கும் அவரின்  குடியிருப்பில் வசிக்கும் ஒருவருக்கும் இடையில் 
ராஜதந்திர உறவுகள் நன்றாயில்லை. அவருக்கு வயது என்னிலும் 
குறைவாயிருக்கலாம். அவர்களுக்கு இடையில் பிரச்சனை வந்த கதைதான் இது.
அம்மா
 சாதுவானவர். மிகவும் சாதுவானவர். சத்தமாயே பேசாதவர்.  கதிரையில் உட்கார்ந்தாலும் 
கதிரைக்கு நோகாமலே உட்காருவார். தண்ணீர் குடித்தாலும் தண்ணீருக்கும் 
நோகாது, தொண்டைக்கும் நோகாது. இன்றுவரையில் அம்மா வாய்த்தர்க்கமிட்டோ 
அல்லது கடிந்து பேசியோ நான் கண்டதில்லை. எவரும் கண்டிருக்கவேமாட்டார்கள். 
அவரின் சகோதர சகோதரிகளுடனும் அவர் மனஸ்தாபப்பட்டதில்லை. அம்மாவிடம் நான் 
பொறாமைப்படுவது  அவரிடம் இருக்கும் இந்த அமைதியான பொறுமையான மனப்பான்யையே.
இப்படியான எனது அம்மா குடியிருப்பதோ ஒரு மூன்று மாடிக்குடியிருப்பின் 
உச்சியில்.  கடந்த இரண்டு வருடங்கள்வரையில் அவருக்கு பிரச்சனையே 
இருக்கவில்லை.  இப்போது இரண்டாவது மாடிக்கு  தன்னை  ”நம்பியார்” என்று 
நினைக்கும் ஒருவர் குடிவந்திருக்கிறார். 
ஆரம்பத்தில் ஆன்டி ஆன்டி என்று அவரும் அன்பாக பழகினாலும், அம்மாவுக்கு 
அவரின் நம்பியார் பார்வையும், வீரப்பாவின் குரலும் பிடிக்கவில்லை. 
அம்மாவுக்கு மட்டுமல்ல குடியிருப்பில் எவருக்கும் அவருடன் பிடிப்பில்லை. 
சிலருக்கு அவருடன் பிரச்சனை. பலருக்கு அவர் பிரச்சனை. குடியிருப்பின் பொறுப்பாளருக்கும் 
அவருக்கும் இடையிலும் பெரும்பிரச்சனையுண்டு என்றும் கேள்வி. என்னை தினமும் ஏற்றி இறக்கும் எனது ஆஸ்தான ஆட்டோ 
நண்பருக்கும் அவருடன் பிரச்சனை. இப்படி அந்த மனிதரைச் சுற்ற எக்கச்சக்க பிரச்சனைகள்.
அம்மா வீட்டுக்கு வெளியில் 4 - 5 பூங்கன்றுகள் வளர்க்கிறார்.  அவை 
அம்மாவின் குடியிருப்புக்கு வெளியே உள்ள மதில் ஒன்றுக்கு வெளியே 
இருக்கின்றன. அதற்கு நேரே கீழே குடியிருப்புக்கு வரும் வாசல் இருககிறது.
ஒரு
 அழகிய காலைப்பொழுது அம்மா பூக்கன்றுகளுக்கு நீர் ஊற்றும்போது நம்பியார் 
வாசலில் நின்றிருக்கிறார். பூக்கன்றுக்கு ஊற்றிய நீர் வடிந்து நம்பியாரின் 
உடைகளை பதம் பார்த்திருக்கிறது. நம்பியார் மேலே வந்து ”ஆன்டி, பார்த்து 
ஊற்றுங்கள்” என்றிருக்கிறார். அம்மாவும் மன்னியுங்கள் என்றிருக்கிறார். 
மீ்ணடும் ஒரு நாள் அம்மா பூக்கன்றுகளுக்கு நீர் ஊற்றும்போது நம்பியாரின் தலையில் நீர் வடிந்திருக்கிறது.
நம்பியார் கண்ணையும், வாயையும் வளைத்து, வார்த்தைகளையும் தடிக்கவிட்டிருக்கிறார். அம்மா பயந்து போனார்.
இப்போதெல்லாம்
 அம்மா தண்ணீர்  ஊற்றும்போதெல்லாம் பக்கத்துவீட்டு பெண்கள் இருவர் 
நம்பியார் நிற்கிறாரா என்று பார்ப்பதற்கு காவலுக்கு நிற்கிறார்கள்.
நம்பியாரின் வீட்டுக் கதவுக்கு முன் இரும்பினால் ஆன கதவுகள் உண்டு. 
அந்த கதவிற்கு இரவில் அவர் ஒரு பூட்டு போடுகிறார். அதன் பின் வீட்டுக் கதவை
 பூட்டிக்கொள்கிறார். 
அம்மாவிடம், மேற் கூறியதை கூறி  நம்பியார் 
போடும் பூட்டுக்கு மேலால் நாம் ஒரு பெரிய இரும்புப் பூட்டை பூட்டி 
நம்பியாருக்கு ஆப்பு அடிப்போமா என்றேன். 
அம்மா உன்ட காலில விழுந்து கும்பிடுறன். சும்மா இரடா. அவன் பொல்லாதவன் என்கிறார், நான் பயங்கரமாக எம்.ஜி.ஆர் ரசிகன் என்பதை அறியாமலே.
அம்மாவுக்கு தெரியாது நம்பியார் வென்றதாக சரித்திரமே இல்லை என்று.
 
