அம்மாவின் 84வது அட்டகாசம்

நான் ஏன் அம்மாவைப்போல் இல்லை என்று சிந்திப்பதுண்டு.

அம்மாவின் எழுத்து முத்து முத்தானது. எனது எழுத்து கோழிக்கிளறல்.
அம்மா அதிகம் பேசமாட்டார். நான் உணவைக் கண்ட பெருங் காகக்கூட்டத்திற்கு சமமானவன்.
பலரின் மனதில் அம்மா சிம்மாசனமிட்டு உட்கார்ந்திருக்கிறார். நான்.... அது வேண்டாமே.
அம்மா மிக நிதானமானவர். நான் அவசரக்குடுக்கை.
அம்மா தாவரபட்சணி. நான் வாய்க்குள் எது செல்கிறதோ அதை விழுங்கும் விலங்கு.
அம்மா கடவுள் பக்தியுள்ளவர். நான் அப்படி இல்லை.
அம்மாவிற்கு கோபம் வருவது மிக மிக அரிதானது. எனக்கு கோபம் வராத நாட்கள் மிக மிக அரிதானவை.
இப்படி அம்மாவிற்கும் எனக்கும் ஏகத்திற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன.
அம்மாவின் மூன்று குழந்தைகளில் அம்மா எனக்காகத்தான் அதிகம் வருந்தியிருப்பார், அழுதிருப்பார்.
நான் உருப்படுவேனோ என அம்மாவிற்கும் எனது பேரசான் பிரின்ஸ்சேருக்கும் 1980களில் பெரும் சந்தேகம் இருந்தது. இப்போதும் இருக்கும் என்றே நினைக்கிறேன்.
நான் முதன் முதலில் கடிதம் எழுதியது அம்மாவிற்குத்தான். இரண்டாம் வகுப்பில் இருந்து 9ம் வகுப்புவரையில் விடுதியில் தங்கியிருந்ததால் பல நூறு கடிதங்கள் எழுதியிருக்கிறேன். அம்மா, இப்போதும், அந்நாட்களைப்போன்று எனது எழுத்துப்பிழைகளை திருத்திக்கொண்டேதான் இருக்கிறார்.
அம்மாவின் மனதில் எவரும் சமம். அனைவரையும் கண்ணியமாகவும் அன்பாகவுமே நடாத்துவார். எவரது மனதையும் அவர் காயப்படுத்தியதில்லை.“
அம்மாவின் கீழ் தொழில்புரிந்த ஒரு தொழிலாளியை பதின்மவயதுத் திமிரில் பெயர்கொண்டு அழைத்தேன். அன்று மாலை கிணற்றடியில் பெரியவர்களை இப்படி அழைப்பது சரியா? என்று மட்டும்தான் கேட்டார். அன்றிலிருந்து இன்றுவரை வயதில் மூத்தவர்களைப் பெயர்கூறி அழைக்க முடிவதில்லை என்னால்.
காதலிக்கிறேன் என்றதும் திருமணம்பேசிச் சென்றதும் அவரே. விவாகரத்துவரை வாழ்க்கை சென்றிருக்கிறது என்று கூறியபோது அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். நான் அவர் மடியில் தலைவைத்தபடியே அழுதுகொண்டிருந்தேன். உனக்கு எது சரியெனத்தோன்றுகிறதோ அதைச்செய் என்றுவிட்டு முடியில்லாத தலையைக் கோதிவிட்டார்.
எந்த மனிதரையும் முற்கற்பிதங்களுடன் அம்மா அணுகுவதில்லை. ஏறாவூரில் எங்கள் வீட்டினுள் எவரும் வரலாம் செல்லலாம். தூர திசையில் இருந்து வந்திருந்த அம்மாவிலும் பல வயதுகூடிய அம்மாவின் மூத்த சகோதரிக்கு, நான் எனது மூர்க்க குணத்தைக் காண்பித்தபோது «அவரின் உலகம் அப்படியானது. பேசாமல் இரு. அவரை மாற்ற முடியாது. அவரால் எங்கள் வீட்டையும் மாற்றமுடியாது» என்றார். அவருக்கு மனித மனங்களைவிட முக்கியமானது எதுவுமில்லை. அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்ட சிலவற்றில் இது மிக முக்கியமானது.
எங்கள் வீட்டில் 40 வருடங்களுக்கு மேலாக சிங்களப் பெண் ஒருவர் வாழ்ந்திருந்தார். ஈன்றதாயிலும் அன்பாய் எங்களை வளர்த்ததும் அவரே. அவரது குடும்பமும் எங்கள் குடும்பமும் மிகவும் நெருக்கமானவர்கள். அம்மாவிலும் அதிக கண்டிப்பானவர் அவர்.
அவர் கீழே விழுந்து காயப்பட்டு, அவரை அவசரகால வண்டியில் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும்போது, அவரின் கால் அம்மாவின் மடியிலும், தலை எனது மடியிலும் இருந்தது. அவர் உயிர்பிரிந்தபோதும் அப்படியே. அன்று அம்மா அவரின் பாதங்களைப்பற்றி வணங்கியது இன்றும் நினைவில் இருக்கிறது.
அம்மாவைக் கலாய்ப்பதில் என்னை வெல்ல யாரும் இல்லை. அவரை எப்படி வம்பிற்கிழுப்பது என்பது எனக்குத் தெரியும். சிலவேளைகளில் «வாயைப்பொத்து» என்பார். «ஆ… ஆ… சோதிக்கு கோபம் வந்துவிட்டது» என்றால் பொக்கைவாய் சிரிக்கும். «போடா அங்கால» என்பார்.
அம்மாவுடன் சில மாதங்கள் வாழக்கிடைத்தபோது «அம்மாவின் அட்டகாசங்கள்» என்னும் தலைப்பில் அம்மாவுடனான அனுபவங்களை எழுதியிருந்தேன். அதை அவ்வப்போது வாசித்துவிட்டு «எழுத்துப்பிழையின்றி எழுதப்பழகு» என்பார்.
எனது தம்பியின் குடும்பத்தவர், தங்கை குடும்பத்தவர்போன்று நான் அம்மாவுடன் தொடர்பில் இருப்பதில்லை. அவரே எனக்கு நேரகாலம் இன்றி தொலைபேசுவார். அதிகாலை 4 மணிக்கு தொலைபேசி வரும். «அம்மா, நேரம் அதிகாலை 4 மணி» என்றால்… இங்கு நேரம் காலை 8 மணி என்பார் அப்பாவியாக. தொடர்ந்து நான்கு கேள்விகள் கேட்பார்.
சுகமாக இருக்கிறாயா?
சந்தோசமாக இருக்கிறாயா?
என்ன சாப்பிட்டாய்?
எப்போ இங்கு வருவாய்?
அம்மாவிற்காக முதல் மூன்று கேள்விகளுக்கும் பொய்களை பதிலாகக் கூறியிருக்கிறேன். நான்காவதற்கு பொய்கூற முடிவதில்லை.
நேற்று முன்தினமும் இதையே கேட்டார். ‘வருகிறேன்’ என்றிருக்கிறேன்.
அம்மாவின் சந்ததியில் அம்மாவே எஞ்சியிருக்கிறார். அம்மாவை முதுமை முழுவதுமாக விழுங்கிவிட்டது. நினைவுகள் அறுந்து அறுந்து அல்லாடுகின்றன. அயர்ச்சி அவரை ஆட்கொண்டிருக்கிறது. பேச்சில் தொடர்பு அற்றிருக்கிறது. தனது இரட்டைத் தங்கையை அடிக்கடி நினைவுகூர்வார். அப்பாவும் அவ்வப்போது வந்துபோவார்.
தனது பேரக்குழந்தைகளின் பெயர்கள் தெரிந்திருந்தாலும் அவ்வப்போது நினைவூட்ட வேண்டியிருக்கிறது. யாருடைய குழந்தைகள் அவை என்பதிலும் குழப்பம் உண்டு. அவருடைய செயற்பாடுகளில் சிறு மாற்றம் ஏற்படினும் அவர் தடுமாறுகிறார். முன்பைப்போன்று எனக்கு தொலைபேசவும் மறந்துவிடுகிறார்.
அம்மா காலத்துடன் கரைந்துகொண்டிருக்கிறார்.
84வயது என்பது இலகுவல்ல.
அப்பாவின் அழகிய ராட்சசிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்