எஸ்பிபியை எப்படி நினைவுகூர்வது?

தலைசிறந்த கலைப்படைப்புக்களைத் தந்தவர்களுடனும், புகழ்மிகுந்த பெரும் கலைஞர்களுடனும் மனிதர்களுடனும் பழகும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அவர்களது படைப்பும் பிரபலமும் செயற்பாடும் கவர்ச்சியும் தரும் பிம்பத்தை அவர்களின் ‘மனவறுமை’ பெரும்பான்மையான இடங்களில் சிதறடித்திருக்கிறது. 

இன்னொரு மனிதரை வருத்தும் அல்லது அடிப்படை அறம், மனிதநேயமின்றி நடந்துகொள்ளும் மனிதர்களுடன் எனது மனம் ஒட்டுவதில்லை. ஆகக்குறைந்தது தவறை உணர்ந்து வருந்தாது ஞானச்செருக்குடன் அலையும் மனிதர்களிடத்தே ஒருவித வெறுப்பே உருவாகிறது. சில மனிதர்களது நல்நினைவுகள் மனதில் படிந்துவிடும். காலம் அவர்களை அழைத்துக்கொண்ட பின்னும் அந்நினைவுகளின் ஈரலிப்பும் கதகதப்பும் மனதைப் பல நேரங்களில் ஆற்றுப்படுத்தும்.

சில மனிதர்களின் கொள்கைகள், அரசியல், நம்பிக்கைகள் போன்றவற்றைக் கடந்து, அவர்களது சில நடவடிக்கைகளின் காரணமாக அவர்களை எமக்குப் பிடித்துப்போகும் அல்லவா! அப்படித்தான் வாழ்வின் வீரியம் புரியத்தொடங்கிய காலத்தின் பின், இசைபற்றிய அடிப்படை அறிவே அற்ற எனக்கு, பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பாடல்களைவிட, அவரது வேறு சில முகங்களாலேயே மனதுக்குப் பிடித்த மனிதராகியிருந்தார்.

அவற்றில் முக்கியமானது தன்னடக்கம், நெகிழ்ச்சித் தன்மையுடைய ஞானச் செருக்கற்ற தன்மை, மற்றையவர்களை அரவணைக்கும் குணமும் அவரது மனிதநேயமும்.

இக்குணாதிசயங்களைத் தமிழ்த் திரையுலகம் கொண்டாடும் ஞானிகளும் புரிந்துகொண்டால், அவர்களும் இறவாவரம் பெற்றுவிடுவார்கள். இதனாலோ என்னவோ எத்தனை திறமையிருந்தாலும், சில பெருங்கலைஞர்களை என் மனது கிஞ்சித்தும் கொண்டாடுவதில்லை. 

எஸ்.பி.பியின் மேடை நிகழ்வுகள், பேட்டிகளை உற்றுப் பார்த்திருப்பீர்களெனில், சக மனிதனை நேசிக்கும் அவர் மனம் அழகாக வெளிப்படும். ஒரு மனிதனுடன் கனிவு, வாஞ்சை, தோழமை, மரியாதை கலந்து உரையாடும்போது இருவருடைய மனங்களும் துளிர்க்குமல்லவா? அதை அங்கு காணலாம். 

ஒருவரின் போலியான உணர்வுடைய பேச்சினை, அவரது குரலின் தன்மையும், குரலதிர்வுகளும், உடல்மொழியும் இலகுவில் அடையாளம் காண்பித்துவிடும். எஸ்.பி.பியிடம் போலித்தனம் இருந்ததில்லை.

சக மனிதனை மனம் திறந்து பாராட்டும் தன்மை பலருக்கும் வாய்ப்பதில்லை. ஆனால், எஸ்.பி.பியிடம் இந்தக் குணம் நிறையவே இருந்தது. வயதெல்லையைக் கணக்கிலெடுக்காது, தான் ஓர் உலகப் புகழ்பெற்ற பாடகன் எனும் எண்ணத்தில் இருந்து விடுபட்டு, கண் கலங்கி, குரல் தழுதழுக்க இன்னொரு கலைஞனைப் பாராட்டும் பெருங்குணம் அனைவருக்கும் வாய்த்துவிடாது. அற்புத மனம் உள்ளவர்களுக்கு மட்டுமே வாய்க்கும் குணம் இது.

ஒரு காணொளியில் பார்வையற்ற ரசிகர் ஒருவர், எஸ்.பி. பாலசுப்ரமணியத்தைச் சந்திப்பது தனது வாழ்நாளின் முக்கிய நிகழ்வாக இருக்கும் என்று கூறிவிட்டு, அவரது பாடலொன்றைப் பாடுவார். அப்போது அங்கு எஸ்.பி.பி அழைத்துவரப்படுவார். அவரும் அப்பாடலை அம்மனிதருடன் இணைந்து பாடுவார். தன்னுடன் இணைந்து பாடுவது யார் என்று அம்மனிதர் உணர்ந்துகொள்ளும் கணம் மிகவும் உருக்கமானது. இதன்பின், பார்வையற்றவருடன் எஸ்.பி.பி. உரையாடும் உரையாடல் என்னை மிகவும் கவர்ந்தது. 

கண்பார்வையற்ற சக மனிதனை ஆற்றுப்படுத்தி, அமைதிப்படுத்தி, உற்சாகமளித்துத் தோளணைக்கும் அந்தக் காட்சிகளில் அவரது உடல்மொழியும் வார்த்தைத் தேர்வுகளும் இன்னமும் மனதிலேயே தங்கிவிட்டிருக்கிறது. இந்த உரையாடலின்போது அமைதியான நதியின் ஒலியையும், கடலின் ஆழத்தையும் கொண்ட எஸ்.பி.பியின் குரலதிர்வுகளை மீள மீள ஒலிக்கவிட்டுக் கேட்டிருக்கிறேன். அவை அவரின் மனதின் ஆழத்தில் இருந்து வந்தவை என்பதை அறிந்துகொள்ள அதிக வாழ்பனுபவம் அவசியமில்லை.

இதேபோன்று, ஒரு மலைக் கோயிலுக்கு அவர் செல்ல விரும்புவார். ஆனால், உடற்பருமனும் உடல்வலுவும் அவர் மலையேறிச் செல்வதைத் தடுத்திருக்கும். அவரை ஒரு நாற்காலியில் உட்கார்த்தி நால்வர் அவரைத் தூக்கிச் செல்ல ஒழுங்கமைத்திருப்பார்கள்.

எமது பண்பாட்டில் காலில் விழுந்து வணங்குவது என்பது பெரும் மரியாதையைக் காண்பிப்பதற்கானது. ஆனால், உயரிய இடத்தில் உள்ளவர்கள் கீழுள்ளவர்களின் காலில் விழுவதில்லை என்பதையும் அறிவோம்.

மலைப் பயணம் தொடங்க முன், அந்த நான்கு மனிதர்களின் கால்களையும் தொட்டு வணங்கியிருப்பார் எஸ்.பி.பி. என்னை மிகவும் நெகிழவைத்த இன்னுமொரு நிகழ்வு இது. இப்படியான மனதுகொண்ட மனிதர்களாலேயே சகமனிதனை நேசிக்கும் மதிக்கும் பண்பு இப்போதும் மீதமிருக்கிறதாகக் கருதத் தோன்றுகிறது. இன்னுமொரு காணொளியில் கே.ஜே. ஜேசுதாசின் காலை மரியாதை நிமித்தம் கழுவிவிடுவார். ஞானச்செருக்கும் அகங்காரமும் தற்புகழ்ச்சியும் உள்ள எவரும் இப்படியான செயலைச் செய்யவே மாட்டார்கள். ஆனால், எஸ்.பி.பியால் இது முடிந்திருக்கிறது.

1984ஆம் ஆண்டு பாடசாலைக் காலம் முடிந்த காலத்தில், எனது ஆசிரியர்களிடம் ‘நினைவுக் குறிப்பு’ (ஆட்டோகிராப்) வாங்கிக்கொண்டபோது புண்ணியமூர்த்தி சேர் இப்படி எழுதியிருந்தார்.

“வாழ்க்கை உன்னை உயர உயரத் தூக்கிச்செல்லும். அந்நாட்களில் மேலும் மேலும் பணிவாயும் நெகிழ்வுணர்வுடனும், சக மனிதனை மதிப்பவனாகவும் இருக்கக் கற்றுக்கொள். அதுவே மனங்களை வெற்றிகொள்ளும் வழி” இன்றும் இக்குறிப்பு என்னிடம் இருக்கிறது. 

இப்போது புண்ணியமூர்த்தி சேரும் இல்லை. எஸ்.பி.பியும் இல்லை. அவர்களின் போதனைகள் மட்டுமே மீதமிருக்கின்றன. அனுபவங்களை மற்றையவர்களுக்குக் கடத்திவிட்டுக் கரைந்துபோவதுதானே வாழ்க்கை. 

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்