ஹாஸ் வானுமா சார்?

முன் மாலை நேரம் ஏதோ யோசனையில் (எப்போதும் போல) குறோன்லன்ட் (ஓஸ்லோவில் ஒரு இடம்) அண்டர் கிறவுண்ட் ஸ்டேசனுக்குள் இறங்கிக் கொண்டிருந்தேன். நாலைந்து படிகள் இறங்கியிருப்பேன் முன்னால் வந்த ஒரு ஜீவன் என்னை உரஞ்சியபடியே கடக்கும் போது எனக்கு ஏதோ சொல்லியது. அப்போது தான் எனது நான் இவ்வுலகத்துக்கு திரும்பினேன். திரும்பி, நிமிர்ந்து பார்த்தேன்.

என்னை விட இரண்டு படி மேலே நின்றிருந்தான்.
சேறு படிந்து அழுக்கான சப்பாத்து,
அழுக்கான டெனிம்,
அதை விட அழுக்கான ஒரு டீசேட்
அதை மூ‌டி ஒரு கறுப்பு தோல் ஜக்கட் திறந்தபடி நின்றிருந்தான்.
கரிய சுருட்டை மயிர்,
கறுத்து பெரித்த உதடு,
சிகரட்டின் காவிபடிந்த சூத்தை பிடித்த பற்கள்,
முகத்தில் சின்ன பெரிய தழும்புகளுடன் பயங்கரமாய் இருந்தான்
ஆனால்
முகத்தில் நட்பான சிரிப்பு படா்ந்திருந்தது.

என்ன சொன்னனான் என்று விளங்காததால் என்ன சொன்னாய் என்றேன் நோர்வேஜிய மொழியில். இரண்டு படி கீழிறங்கி வந்து மெதுவாய் ஏதோமுணுமுணுத்தான்... அப்பவும் விளங்கவில்லை எனக்கு... முகத்தல் தெரிந்த குழப்பத்தை புரிந்து கொண்டான் என நினைக்கிறேன்....மெதுவாய் காதுக்குள் ”ஹாஸ் வேணுமா?” என்றான் ...
திடுக்கிட்டு இல்ல வேணாம் என்றேன் சிரித்த படியே.
நட்பாய் கையில் சின்னதொரு குத்து விட்டு விட்டு மேலேறி பலருக்குள் ஒருவனாய் மறைந்து விட்டான்.

இந்த நிகழ்வின் பின் மனம் கொஞ்ச நேரம் வழமை போல விசர்க் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தது. அதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்... விடையையும் நீங்களே தேடிக் கொள்ளுங்கள்.

அதென்ன மற்றவர்களை விட்டு விட்டு என்னை மட்டும் ஏன் அவன் தெரிவு செய்து கேட்டான்?
தற்செயலாக நடந்ததா?
அல்லது நான் அவனுக்கு ஹாஸ் வாங்கும் கஸ்டமரின் அடையாளத்துடன் தெரிந்தேனா?
அப்படி என்றால் அது என்ன வித அடையாளம்?
ஹாஸ் என்றால் போதைப் பொருள் என்று மட்டும் தெரியும்.... எப்படி இருக்கும் அது?

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்