மீட் யூ அப் தெயார்..

தினமும் கடந்து போகும் கடைத்தெரு தான் அது. இந்த இடத்தை பல தடவைகள் கடந்து போயிருக்க்கிறேன். இருப்பினும் இன்றைய நாளைப் போல் அவ்விடம் என்னைக் கவர்ந்ததில்லை. மாலையிருட்டு நேரம், கடும் பனிக்குளிரில் வாகனத்தில் அந்த இடத்தை கடந்து கொண்டு போயிருந்த போது தான் பிரகசமான வெளிச்சத்தில் அக் கடையில் வைத்திருந்த கடும் கறுப்பு நிறத்தில், வெள்ளி நிறத்திலான கைப்பிடி போட்டு, பட்டுப் போன்ற வெள்ளைத் துணியில் அலங்காரம் செய்யப்பட்டு மினுங்கிக் கொண்டிருந்த சவப்பெட்டி தெரிந்தது. சில கணங்களில் கண்ணில் இருந்து அந்தக் கடை மறைந்து விட்டாலும் சிந்தனையில் இருந்து மறையவில்லை. மரணம் என்னைக் குடைய ஆரம்பித்தது.

நானும் ஒரு நாள் இப்படியானதோர் பெட்டியில் படுத்திருப்பேன் என்னும் எண்ணமே மனதுக்குள் ஒரு விதமாக பாரமான பயத்தைத் தந்தது. யார் யார் உண்மையில் எனது பிரிவிற்காக அழுவார்கள்? மனம் பட்டியலிட்டது... மிகச் சிலரே ஞாபகத்தில் வந்தார்கள்

யார் யார் ...அப்பாடா சனியன் தெலைந்தது என்று நிம்மதியாய் மனதுக்குள் சிரித்து வெளியில் அழுவார்கள் எனற பட்டியலிலும் சிலர் வந்து போயினர்.
கடமைக்காக வரும் சிலரும் வந்து பார்த்து விட்டுப் போவார்கள்.

என்னை எரிக்கச்சொல்லவா? இல்லாட்டி புதைக்கச் சொல்லவா? பிறப்பால் இந்து என்பதால் இலலை இவரை எரிக்கத்தான் வேணும் என்றும்.... இல்லை இல்லை அவரை புதைக்க வேணும் என்று சிலரும் எனது செத்த வீட்டில் சண்டைபிடிக்காமல் இருக்க வேண்டும் என்றால் சிலவற்றை நான் முதலே முடிவெடுத்து அறிவிக்க வேணும். எரித்து சாம்பலெடுத்து கீரிமலையில் கரைப்பதால் எனக்கு லாபம்... பிளேனுக்கு டிக்கட் விக்கிவனுக்குத் தான் லாபம். புதைத்தால் புழுக்களுக்காவது உணவாகலாம் தானே. ஆகவே புதையுங்கள்.

நான் எப்படி இறப்பேன்.....?
நித்திரையிலேயே அப்படியே?
வாகனத்தில் அடிபட்டு?
விமானம் விழுந்து நொருங்கி?
நடந்து போகும் போது திடீர் என்று?
இன்டர் நெட்டில் எதையோவது பார்த்துக்கொண்டிருக்கும் போது?
பாத்ரூமில் வழுக்கி விழுந்து?
புற்று நோயால்?
மட்டக்களப்பில் நிலக்கண்ணி வெடியில் அம்பிட்டு?
யாராவது என்னை மண்டையில போட்டு?

இப்படி கனக்க சொல்லலாம்.....

எப்படியோ உடம்மை வீட்ட கொண்டு வந்து பட்டு வேட்டி, வெள்ளை சேட் போட்டு, திருநீறு சந்தனப் பொட்டு வைத்து மாப்பிளை மாதிரி வெளிக்கிடுத்தி படுக்க வைத்திருப்பார்கள்..என்று நினைக்கிறேன்.

நானும் எனது செத்தவீட்டை பிளான் பண்ணி வைக்கலாம் என்று யோசிக்கிறன்...கலியாண வீட்டை பிளான் போட்டு நடத்துறம் தானே..அது போல இதையும் பிளான் பண்ணினால் என்ன?

எப்பயப்பா நடந்தது.. நேற்றுத் தானே கதைத்த நான்...
போன கிழமை நல்லாத்தானே இருந்தான்.. திடீர் என்று என்ன நடந்தது...
கொஞ்ச நாளாக சாவைப் பற்றி கதைத்துக் கொண்டிருந்தான்... அவனுக்கு ஏதோ முன்னுக்கு காட்டியிருக்கு.. அப்படி, இப்படி என்று கனக்க கதைவிடுவார்கள்...கண்டு கொள்ளாதீர்கள்...
உற்ற நண்பனொருவன் போய்ச் சேர்ந்த போது நானும் கூட இப்படித்ததான் கேட்டேன்....

எனது இறுதிப்பயணம் அமைதியாய் ஆர்ப்பாட்டமின்றி நடக்க வேண்டும். அழுது குழறி, ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டமெல்லாம் பண்ணாதீர்கள்...(வாற சின்னப்பிள்ளைகள் பயந்து போகுங்கள்).

முடிந்தளவு பால்ய சினேகங்களுக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் அறிவித்து கன நாட்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து இம்சை பண்ணாமல், முடிந்தளவு கெதியில் விசயங்களை முடித்து விடுங்கள்.

இது தான் கடைசியாய் நீங்கள் என்னை சந்திக்கும் சந்தர்ப்பம். அமைதியாய் என் ஞாபகங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். ஆனால் சத்தம் போட்டு எனது அமைதியை கெடுத்து விடாதீர்கள்.. ப்ளீஸ்.
ஜயர்....அவர், இவர் என்று கூப்பிட்டு தேவையில்லாத கூத்துக்களை நான் விரும்பவில்லை.... அவர்கள் மந்திரம் ஓதித்தான் நான் சொர்க்கம் போகனும் என்றால் அந்த சொர்க்கம் எனக்கு வேண்டாம் நண்பர்களே... ஐ டோன்ட் லைக் தோஸ் கைஸ்....

மனதுக்கு பிடித்த மெது இசை, மனதுக்கு பிடித்தவர்களின் ஞர்பகப் பகிர்வுகள், சொந்தங்களின் நெருக்கம், உருக்கம், அமைதி என அமைதியான மனதில் பதியக் கூடியதான பயணத்தையே நான் விரும்புகிறேன். ‌

கோவம் வந்த நேரங்களில் நீ என்ற செத்த வீட்டிற்கு வரக் கூடாது என கூறிய சந்தர்ப்பங்களும் எனது வாழ்வில் உண்டு. எதிரியே இறுதி விடை கொடுத்தனுப்புவதற்கு பெருந்தன்மையுடன் வரும் போது நானும் பெருந்தன்மையாய் நடக்க வேண்டுமல்லவா? எனவே எவருக்கும் தடை போடாதீர்கள். போகும் போது நண்பர்களை மட்டுமே எனக்கு இருக்க வேண்டும்... எதிரிகள் வேண்டாம்.

பெருங்குழியாய் வெட்டுங்கள். மிருகங்கள் கிண்டிக் கிளரி என்னை இழுத்துத்திருயும் அளவுக்கு பாவம் ஏதும் செய்யவில்லை என்றே நினைக்கிறேன்.

முப்பத்தியொண்டு செய்ய வேணும் என்ற அவசியம் எனக்கு இல்லை. உறவுகள் விரும்பினால் ஆர்ப்பாட்டமில்லாமல் செய்யுங்கள். எனக்கு படைக்கும் போது கத்தரிக்காய் பொரித்து குழம்பு, பப்படம்,இனிப்பு பண்டங்கள், பீடா, சுகர் லெஸ் கோக் கட்டாயம் வையுங்கள். மறக்காமல் நான் தினமும் போட்ட குளிசைகளையும் வையுங்கோ.
நீங்களும் மகிழ்ச்சியாய் முப்பத்தியொண்டுஜக் கொண்டாடுங்கள். இறப்பு என்பது துக்ககரமானதாய் மட்டும் இருக்க வேண்டியதில்லையே? இறப்பின் பின்னான காலம் தற்போதைய காலத்தைவிட மகிழ்ச்சிகரமானதாக இருக்கலாமல்லவா. டோன்ட் வொர்ரி பீ ஹப்பீபீ...

மீட் யூ அப் தெயார்...

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்