நமீதாவின் உதடும் சூர்யாவின் six pack ம்

அது ஒரு அழகிய நாள். வானம் முகில்கள் அற்று நீல நிறத்துடன் நிர்வாணமாய் இருந்தது. நானும் மிக அழகாய்  காற்சட்டை உடுத்தி வெறும் உடம்போடு கடற் காற்று முகத்திலடிக்க கடற்கரையில் நடந்து கொண்டிருந்தேன்

கடற்கரை எங்கும் , பெற்றோர்கள், பெற்றோர்கள் அல்லாதவர்கள், பெற்றோர்கள் ஆகிக்கொண்டிருப்வர்கள், பழசுகள், இளசுகள், குஞ்சு குறுனிகள் என மனிதர்கள் கூடியிருக்கிறார்கள்.

நான் தனியே நடந்து கொண்டிருக்கிறேன்.  எதிரே 3 குமரியுமல்லாத அதேவேளை கிழவியுமல்லாத எனது வயதையொட்டிய பெண்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது.  பார்ப்பது மட்டுமல்ல என்னைக் காட்டி ஏதோ பேசுவதும் தெரிய எனக்குள் ஒரு பரவச சூடு பரவ, மிகவும் மிடுக்காய், நெஞ்சை நிமிர்த்தி நடக்கலானேன். அவர்களை நான் கடந்த போது அவர்கள் என்னை நோக்கி விசிலடிப்பதும் கேட்டது. ”திரும்பிப் பார்க்காதேடா மடையா” என்று மனம் சொன்னதால் அவர்களை கவனிக்காதததைப் போன்ற பில்ட் அப் இல் சற்றுத் ‌தூரம் நடந்து போனேன்.

அப்போது அவர்கள் முவரும் எழும்பி ஆங்காங்கு அழகிய அங்கங்களில் ஒட்டியிருந்த மணலைத் தட்டினார்கள். மணல்  கூட அழகான பெண்களின் அழகான இடங்களில்  ஒட்டிப்பிடிக்கிறது  என்று எனது உயர்ந்த இலக்கியச் சிந்தனை தோன்றியபோது, அவர்கள் என்னை நோக்கி வரத் தொடங்கியிருந்தார்கள். அவர்கள்  நெருங்க நெருங்க எனக்கு எனது நெஞ்சின் சத்தம் மிகப் பெரிதாய் டம் டம் டம் என்று கேட்க, அந்தச் சத்தம் அவர்களுக்கு கேட்டவிடுமோ என்ற பயமாய் இருந்தது எனக்கு.

அருகில் வந்து ஒருத்தி ஹாய் என்றாள். நானும் வளிந்தபடியே ஹாய் என்று சொல்ல நினைத்தேன். ஆனால் காற்று மட்டுமே வந்தது, சத்தம் வர மறுத்தது. உடனே புன்னகையை வெளியே கட்டாயமாய் அனுப்பி நிலமையை சமாளிபிகேஷன் செய்து கொண்டேன். இப்போது அவர்களில் ஒருத்தி ஒரு வித மோகமான பார்வையுடன் அருகில் வந்து என்னைப் பார்த்தபடியே கீழுதட்டை பல்லால் நமீதாவைப் போல் கடித்துக் காட்டினாள். எனக்கு தலை சுற்றத் தொடங்க ஒஸ்லோ முருகா காப்பாத்து என்று நினைத்துக் கொண்டேன். (முருகன் காதுக்குள் ”என்ஜாய் பக்தா” என்று வடிவேலுவின் குரலில் அருள் புரிந்தார்) அவள் எனது காதுக்குள் உனது சிக்ஸ் பக் ரொம்ப செக்சியாக இருக்கிறது என்றாள்.. நெஞ்சுப பூரிக்க குனிந்து வயிற்றைப் பார்த்தேன். சூர்யா தோத்தார் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

அப்போது மற்றைய இருவரில் ஒருத்தி  மிகவும் நெருங்கி வந்து முதுப்புறத்தால் எனது சிக்ஸ்பக் வயிற்றை கட்டிப்பிடித்தாள்.  திமிறித் தள்ளினேன். தலையில் யாரோ ஒரு மரப்பலைகையால் அடித்தது போலிருந்தது. விழுந்தேன்... கையையும் காலையும் உதறி எழும்ப முயற்சிக்க மீண்டும் அதே பலகையால் தலையில் அடித்து போலிருக்க என்னாலான முழுப்பலத்தையும் உப‌யோகித்து அவர்களை தள்ளி எழுந்த போது, நான் எனது கட்டிலில் வேர்த்தொழுக உட்கார்ந்திருந்தேன். தலைமாட்டில் தலை அடிபட்டதையே நான் பலகையால் அடித்ததாக நினைத்திருக்கிறேன்.

அட..சீ நான் கனவு கண்டிருக்கிறேன்.

மேலே இருப்பது ஒரு சின்ன கற்பனை தான் என்றாலும், அந்த மாதிரி எனது வண்டியும் சிக்ஸ் பக் ஆக வரணும் என்று நான் பட்ட பாடு இருக்கிறதே.. அதையேன் கேக்குறீங்க. சாண் ஏற முழம் சறுக்கும் கதை தான் அது.

இப்போ பல தசாப்தங்களாக எனது பேத்தை வண்டிக்கு முடிவு கட்டவேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.  திடீர் என்று ஒரு ஞானம் வரும். அப்போது உடனடியாக இந்த வண்டியை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் இறங்குவேன்.

இப்படித்தான் ஒரு முறை வண்‌டியைக் குறைப்பதற்காக ஒரு Gym இல் சேர்ந்தேன். மாதம் 60 டாலர். முதல் அங்கு போனதும் பயிற்றுனர் எனது நீளம், அகலம், உயரம், எடை என எல்லாவற்றையும் ”துணிவே துணை” படத்தில் வில்லன் ஜெயசங்கருக்கு அளப்பது போல அளந்தார்.

ஒரு கருவி எனது உடலின் கொழுப்பை அளந்து, இவனுக்கு வாய்க்கொழுப்பும் அதிகம், வண்டியிலும் கொழுப்பதிகம் என்றது.

பயிற்றுனர் பல அப்பியாசங்களை கற்பித்தார். ஒவ்வொரு அப்பியாசத்தையும் மூன்று தரம் செய்யச் சொன்னார். நான் நாலு தரம் செய்தேன். ஒரு மணிநேரத்தின் பின் நடக்கமுடியாமல் நடந்து வந்து வீடு வந்து கட்டிலில் விழுந்தேன். அடுத்தநாள் காலைவரை உலகத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாதிருக்க காலையில் கட்டிலால் எழும்ப முடியாதிருந்தது.

பல்லை மினுக்குவுதற்காக கையைத் தூக்கினேன் கை மேலே வர மறுத்தது. வைத்தியருக்கு போன் பண்ணினேன். ”Ibux வாங்கிப் பாவியும்”, அதோடு தேவைக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என்றார். அவருக்கு எனக்கு சிக்ஸ்பக் வருவது பிடிக்காதிருந்ததோ என்னவோ?

அடுத்த நாள் Gym க்கு போனேன்.  அப்பியாசங்களை நாலு தரம் செய்வது அலுப்பாய் இருந்ததால் 2 தரம் செய்தேன். ஒரு மணித்தியால அப்பியாசத்‌தை 45 நிமிடமாக குறைத்தக் கொண்டேன். குளியலறையில் வயிற்றை தடிவிப் பார்த்தேன். அது குறைந்திருப்பது போலிருந்தது.  வயிற்றை சற்று எக்கிப் பிடித்தேன். கண்ணாடியில் பார்த்‌த போது மிகவும் அழகாய் இருப்பது தெரிய மனம் பூரித்துப் போனது.

3 நாட்களின் பின் பின் அப்பியாசங்களை 1 தரம் செய்தேன். சிலவற்றை தவித்து இலகுவான அப்பியாசங்களை செய்தேன். 15 நிமிடங்களில் குளியலறையில் வண்டி குறைந்திருப்பது போல தெரிந்தது.

இப்படி ஒரு வாரத்திலேயே அந்த Gym மறந்து போயிற்று. ஆனால் மாதாந்தம் 60 டாலர்  வங்கியில் இருந்து கழிந்து கொண்டிருந்தது.

ஒரு நண்பர் சைக்கில் ஓடினால் வண்டி குறையும் என்றார். ஓடிப் போய் ஒரு சைக்கில் வாங்கினேன். ஆனால் வண்டி குறையவில்லை. சைக்கில் ஓடினால் தானே வண்டி குறையும்.... 400 டாலர் சைக்கில் புதிதாய் வீட்டை அலங்கரிக்கிறது.

சாப்பாட்டை குறைத்தால் வண்டி குறையும் என்றார் நிறைமாதக் கர்ப்பிணி போலிருந்த பக்கத்துவீட்டு நண்பர்.

அவரின் ஆலோசனையினால் காலையில் 3 கிளாஸ் தண்ணீர், மதியம் ஒரு பாண் துண்டு, பிறகு ஒரு கரட், மாலையில் சலாட் என்று என்னை கொலைப்பட்டிணி போட்டார். இரு நாட்களின் பின் பசி தாங்க முடியாததால் இரண்டு கொத்துரொட்டி வாங்கி விழுங்கிக் கொண்டேன்.  அடுத்த நாள் காலையில் கழிப்பறையில்  குந்திய போது... வேண்டாம் அந்தக் கதை.

அடுத்து  கொழுப்பைக் கரைக்கும் குளிசை, களிம்பு என முயற்சித்தேன். அவை ஒன்றுக்கும் அடங்காமல் எனது வண்டி தினமும் வளர்ந்து கொண்டு வந்தது. இப்போது பக்கத்து வீட்டு நண்பர் என்னைப் பார்த்து ”எத்தனை மாதம்?” என்கிறார். அவர் ”ஓவர் டியூ” ஆக இருப்பதை அறியாமலே.

இப்போ ஒஸ்லோவில் ஒரு சாமியார் வந்திருக்கிறார். அவர்  லேகியம் கொடுக்கிறார் என்பதால், உற்ற நண்பனிடம் அது பற்றி கேட்ட போது ” டேய் .. வேண்டாம் இந்தச் சாமியார்களுக்கு வண்டியை பெரிதாக்க மட்டுமே தெரியும்” என்கிறான். உண்மையாக இருக்கலாம். எனவே அவரிடம் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டேன்.

எனது வண்டி நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியும் சீரும் சிறப்புமாய் வளர்ந்துகொண்டிருக்கிறது.

வண்டி உங்களுக்கும் வளரலாம், வளர்ந்து கொண்டிருக்கலாம் அல்லது ஏற்கனவே வளர்ந்திருக்கலாம்

அட விடுங்கய்யா இதெல்லாம்  சகஜமப்பா............!


ஒரு கொசுறுச்  செய்தி:
இந்த பதிவு எழுத எடுத்த நேரத்தை விட பல மடங்கு நேரம் செலவழிந்தது அடக்கொடுக்கமான நமீதா  ஆன்டியின் படம் ஒன்றை இணையத்தில் தேடி எடுக்க .... சரவணா என்ன கொடும இது..


.

8 comments:

 1. "சாமியார்களுக்கு வண்டியை பெரிதாக்க மட்டுமே தெரியும்” .." நல்ல ஜோக். யாரத வண்டியை எனச் சொல்லவில்லையே!

  ReplyDelete
 2. வாரத்தில் இரண்டு நாள் உபவாசம் இருந்தால் நல்ல பலன்கிடைக்கும்.கொலை பட்டினி கிடக்கவெண்டியதில்லை. ஒரு கெக்கெரியோ(கூகும்பர்),கரட்டோ, Turnip/Kohlrabi

  சாப்பிடலாம்.எடை இல்லாமலாகும். எடை குறையும்.
  (1 கிலோ/வாரம்) யாரும் முயலலாம்.

  ReplyDelete
 3. அண்ணே, உங்கள் கனவை எழுதியபிறகு "மேலிடத்தில்" இருந்து பிரச்சினைகள் வரவில்லையா? :-)

  ReplyDelete
 4. பல பேர்கள் அனுபவப்பட்ட, அனுபவப்படுகின்ற விடயந்தான். அதை மிகச் சுவாரஸ்யமாக, நகைச்சுவை இழையோட அழகாக எழுதியுள்ளீர்கள். வாய் விட்டுச் சிரிக்க வைத்து விட்டீர்கள்.

  ReplyDelete
 5. எஸ் சக்திவேல் @ மேலிடமா ..மூச் .. பேசப்படாது.

  ReplyDelete
 6. நமிதா கனவு தான் இடிக்கின்றது அந்த கடற்கரை நிகழ்ச்சிகளும். அட போங்க, ஆண்களுக்கு ஓஸ்லோ முருகன் கொஞ்சம் ஓவரா தான் சுதந்திரம் கொடுத்துள்ளார் கனவுகள் காண! 2 1/2 அடி கயறு வாங்கி தினம் 100 முறை குதியுங்கள் வண்டி தானா ஓடி விடும்!!!

  ReplyDelete
 7. வாய் விட்டுச் சிரிக்க வைத்து விட்டீர்கள்.

  ReplyDelete
 8. ஏற்கெனவே எலியானவோடு குத்து நடனம் வாசித்ததால் பாதி போகும் போதே அடுத்த கனவென புரிந்துகொண்டேன்.. :)

  வரிகள் யதார்த்தம் அருமை அதிலும் யாரோ கட்டையால் அடிப்பது போலென என்று சொன்னது என்னை எனது சிறு வயதுக்கு அழைத்து சென்று விட்டது , எனக்கு சிறு வயதில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருந்தது பெற்றோர்கள் கோவில் முதல் பரியாரி வரை என்னென்னவோ செய்து பார்த்தார்கள் முடியல்ல முடியாமல் என்னை ஏசுவார்கள் அதில் கொடுமை என்னவென்றால் தினமும் என் கனவில் நான் எழுந்து சென்று காற்சட்டையை விலக்கி பெய்வது போலவே வண்ண கனவு வரும் அப்போது ஏதோ நனைப்பதை உணர்ந்து எழும் போதுதான் புரியும் ...........

  ReplyDelete

பின்னூட்டங்கள்