காப்பாத்துங்கய்யா காப்பாத்துங்க..

சில மாதங்களுக்கு முன் ஒரு இளிச்சவாயனும் ஒரு சுத்தத் தமிழனும் என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். அன்றுடன் சனி விட்டது என்று நினைத்திருந்தது தப்பாகிவிட்டது.

இன்று மதியம் ”வான் நிலா,  நிலா, நிலா ”  என்ற பாடலைக் கேட்டபடி எனது பால்ய காலத்து பைங்கிளியின் நினைவுகளில் மிதந்து கொண்டிருந்தேன். திடீர் என வீட்டின் அழைப்பு மணியடித்து எனது தவத்தைக் கலைத்தது. எனது நண்பர் கதவைத் திறந்தார். நான் எனது அறைக்குள் நின்றிருந்தேன், அழைப்பு மணியை அடித்தது யாராயிருக்கும் என்ற சிந்தனையில். கதவைத் திறந்த நண்பரையும் தள்ளிக்கொண்டு வந்து எனது அறைக்குள் நுளைந்தார் அந்த சுத்தத் தமிழன். தனது வீட்டுக்குள் நுழையும் அதிகாரமும், அலட்சியமும் இருந்தது அவரது நடையிலும், பார்வையிலும். நான் எனது அதிர்ச்சியில் இருந்து மீள முன்  அவர் வைத்திருந்த ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார்.

”உவளோட பெரிய பிரச்சனையா இருக்கு, இத ஒருக்கா வாசித்துச் சொல்லுங்க” என்றார் அசிங்கமான அன்பினை பல்லில் காட்டியபடி.

எனது எரிச்சல் கொதி நீர் நிலையில் இருக்க, மனேமோ இவரை எப்படியாவது வெளியில் அனுப்பு  என்றபடியிருந்தது.

”யாரோட பிரச்சன” என்றேன் அப்பாவியாய்.
”உவள் தான்.. மனிசியோட” என்றார்.
அவரும் மனைவி விடயத்தில் அடக்கமான தமிழன் என்பது புரிந்தது. எனக்குள் சிரித்துக் கொண்டேன்.
”பொறுங்கோ, டவுனுக்கு புறப்பட்டுக்கொண்டிருக்கிறேன். சற்றுப் பொறுங்கள் மொழிபெயர்க்கிறேன் என்றேன் சிறிது பொய் கலந்து.
”இல்ல  இல்ல, நான் வேலைக்கு போக வேண்டும், இப்பவே சொல்லுங்கள், காத்திருக்க நேரமில்லை” என்றும் தொனியில் கட்டளையிட்டார் தமிழன்.

நான் எனக்குள்,
நான் என்ன அவ்வளவு கேனயனாகவா தெரிகிறேன் என்று கேட்டுக் கொண்டேன். அவரின் பார்வை அதை ஆமோதித்தது போலிருந்தது.

கடிதத்தை வாங்கினேன். வாசித்தேன். அவர் விண்ணப்பத் முடிவுத்திகதிக்கு பின் தனது குழந்தைக்கு குழந்தைகள் காப்பகத்தில் இடம் கேட்டு விண்பத்திருப்பதால் அவரின் குழந்தைக்கு முன்னுரிமை வழங்கமுடியாது என்றிருந்ததை விபரித்தேன்.  என்னுடன் சண்டைக்கு வந்துவிட்டார் மனிதர். நான் அந்த திகதிக்கு முன்பு தானே விண்ணப்பித்தேன் என்றார்.
குரல் உயர்ந்து தடித்தது.
கண்கள் விரிந்தன.
பேசும் போது எச்சில் பறந்தது.
ஏதோ நான் தான் அவரின் குழந்தைக்கு இடம் தர மறுத்தது போல் குதித்தார்.

”பு. ம” என்று செந்தமிழிலும் ஆராதித்தார்.
”இவர்கள் நிறவாதிகள்” என்றார்


நான் மெதுவாய் நீங்கள் இதை என்னிடம் சொல்லுவதால் என்ன பிரயோசனம்? நீங்கள் அவர்களிடமல்லவா இதைச் சொல்ல வேண்டும் என்றேன், மெதுவாய்.
சற்று அமைதியானார் மனிதர். எனது நண்பர் கதவுக்கு அப்பால் இருந்து எட்டிப்பார்த்தபடியே இருந்தார்.  எனது பாதுகாப்பில் அவருக்கு சந்தேகம் வந்திருந்ததாகவே நான் கருதினேன். நானும் அப்படியே உணர்ந்திருந்தேன்.

ஒரு விதமாக அவரை எனது அறையில் இருந்து அழைத்தபடியே வீட்டை விட்டு வெளியேறினேன். இருவரும் எனது வாகனத்தை கடந்த போது அந்த சுத்தத் தமிழன் இப்படிக் கூறினார்.

கடந்த வாரம் ஒரு நாள் இரவு 1 மணியோல் தான் எனது வாகனத்தை கடந்த நடந்து சென்ற போது எனது வாகனத்தின் கதவுகள் திறந்திருப்பதைக் கண்டு எட்டிப் பார்த்தாராம். எவரும் இல்லாததால் திருடர்கள் எனது வாகனத்தை உடைத்துவிட்டார்கள் என நினைத்தால்  தான் மெதுவாய் அவ்விடத்தை விட்டு அகன்றதாகக் கூறினார்.

நானும் ”ஏன் எனக்கு நீங்கள் அதைப் பற்றிக் கூறவில்லை?” என்றேன். போலீஸ் கேஸ் என்றாகிவிட்டால் தனது உழைப்பு கெட்டுவிடும், போலீஸ்க்கு ஏறி இறங்க வேண்டும் என்றார், இந்தக் கேனயனின் தமிழ் நண்பர்.  நான் மனதிற்குள் அவரை ஏறத்தாள பல முறை கொலை செய்திருந்தேன்.


நண்பர் கூறிய அந்த நாள் அன்று மிகவும் அதீத களைப்பில் வந்த நான் வாகனத்தின் கதவை மூட மறந்து சென்றது என்னமோ உண்மை தான். நான் வீடு வந்த போது நேரம் இரவு 12:30 இருக்கும்.

அதை எனது நண்பர் 1 மணிக்கு கண்டிருக்கிறார். எனது வீடு 100 மீற்றர் தூரத்தில் இருந்தும் அவருக்கு என்னிடம் வந்து அதைப்பற்றி அறிவிக்க மனமிருக்கவில்லை.  மறுநாள் காலை நான் வாகனத்தினருகில் சென்ற போதே எனது ஞாபகமறதியை உணர்ந்து கொண்டேன். வாகனத்தினுள் இருந்த எதுவும் களவு போயிருக்கவில்லை.

நான் ஞாபகமறதிக்கு பெயர் பெற்றவன் என்பதை எனது நண்பர்கள் நன்கு  அறிவார்கள். அண்மையில் நண்பர்களாகிய  திரைப்பட இயக்குனர்கள் சேரன், சந்தோஷ், ராதாமோகன், பிரபுசாலமன், சீனு ராமசாமி ஆகியோரும் என்னை சஞ்சய் ராமசாமி என்றே அழைக்கிறார்கள் (கஜனி திரைப்படத்தில் சூர்யாவின் பெயர் அது தான்).


அந்த சுத்தத் தமிழனின் நெஞ்சழுத்தத்தை நான் வியந்து போனேன். என்னிடம் ஒரு உதவி கேட்டு வருகிறார். உதவியையும் பெறுகிறார். அன்றொரு நாள் அவரை நான் பயங்கரமான இக்கட்டில் இருந்து காப்பாற்றியிருக்கிறேன். அன்று நான் காப்பாற்றியிருக்காவிட்டால் நாறியிருப்பார் மனிதர்.

ஆனால் எனக்கு ஒரு உதவி செய்யும் நேரம் வந்த  போது நமக்கேன் பொல்லாப்பு என்று ஒதுங்கியோடிருக்கிறார். அவருக்கு எனது வாகனத்தின் கதவு அந்த இரவில் திறந்திருந்ததை 100 மீற்றர் நடந்து வந்து சொல்லமுடியாமல் போயிருக்கிறதே? தனது செயலை எவ்வித கூச்சமோ, தயக்கமோ  இன்றி என்னிடமும் கூறுகிறார்.

அவரின் மேலில்லாதிருந்த மரியாதை மேலும் இல்லாது போயிருந்தது.

”நான் போய் வருகிறேன்” என்றேன் அவரிடம்.
”எங்க போறீங்கள்? வேலைக்கோ?” என்று புதினம் புடுங்கினார். ஓம் ஓம் என்று சொல்லியபடியே புகையிரத நிலையத்தின் பக்கமாய் ஓடுவது போல் பாசாங்கு செய்தேன்.

எனக்குப் பின்னால்....

” நாளைக்கு வாறீங்களே அந்தக் கந்தோரில போய் கதைப்பம்” என்று ஒரு குரல் கேட்டது. எனது ஓட்டம் வேகமெடுத்தது. எனது பின்னங்கால் எனது பிடரியில் அடிபடுவது போலிருந்தது எனக்கு. ஓடினேன் ஓடினேன் ஒஸ்லோவின் எல்லைக்கே ஓடினேன்.

ஒரு மனிதன் எவ்வளவைத் தான் தாங்குவது.... ..........  ஷப்பாஆ .. தாங்கமுடியலடா சாமீ.


.

5 comments:

 1. ஆளும் வளரணும் அறிவும் வளரணும்.....இன்னும் பழைய நூற்றாண்டுக் கதை எழுதிய சாண்டில்யன் போல காலத்தோடு ஒத்த சமாச்சாரங்களை விளங்கிக்கொள்ள முடியாத அல்லது சகித்துக்கொள்ள முடியாத விசரணாக இன்னும் எத்தனை காலம்தான்....!இன்றைய உலகம் “மிக மிக குறைவயகக்கொடுத்து நிறையப் பெற்றுக்கொண்டு சா(வு)தனை செய்“ என்ற மகுட வாக்கியத்தை அடியொற்றியே உருள்கிறது.உன்னை அதற்கேற்ப மாற்றுவதற்கு முயற்ச்சி செய். இதை விடுத்து வெற்றிகரமாக வாழும் ஒருவனை விமர்சிக்காதே. முயன்று பார் மகனே... உன்னாலும் முடியும்.

  ReplyDelete
 2. தெய்வமே! எங்கே இருக்கிறீர்கள்? அதுவும் அனானியாய் வந்து அசரீரீ போல தத்துவங்களை உதிர்க்கிறீர்களே.

  எங்கே போய் தேடுவேன், நான் எங்கே போய் தேடுவேன்.

  என்னை உங்கள் சிஸ்யகோடியாக ஏற்றுக்கொள்ளுங்களேன்.

  ReplyDelete
 3. What a sense of humor! amazing! நீங்கள் சாதாரணமானவரே இல்லை! அசாதாரண நகைச்சுவை உணர்வுள்ளவர்! உங்கள் பின்னூட்டம் பதிவை விட நகைச்சுவையானது!

  ReplyDelete
 4. நண்பரே, இதே வகையில் எனக்கும் சில சம்பவங்கள் நடந்தன. கூடிய விரைவில் ஒரு பதிவு போடுகின்றேன் :-)

  ReplyDelete
 5. சிஷ்யா, உன்னைக் காப்பாற்றுகிறேன். உடனே, தட்சினையாக 150 A$, என் கணக்குக்கு அனுப்பு.

  A/C name: மொட்டைச்சாமியார்
  A/C No: 8888888888888
  Bank: கயிறு & சரடு வங்கி
  Australia

  ReplyDelete

பின்னூட்டங்கள்