தனிமையின் யாத்திரைகள்

சில லவாரங்களுக்கு முன்னான ஒரு பின் மதிய நேரத்தில் வெளியே நடந்து செல்வொம் என்று புறப்பட்டேன். குளிர் குறைவாக இருந்தது.

மெதுவாய் தொடர் மாடியை கடந்து நடைபாதையை அண்மித்த போது முன்பொருநாள் நாள் நான் சைக்கில் திருத்திக் கொடுத்த சோமலியச் சிறுவன் நண்பர்களுடன் அவ்விடத்தில் சைக்கில் ஓடிக்கொண்டிருந்தான். அவன் என்னை அடையாளம் கண்டு புன்னகைப்பான் என்று நினைத்தேன். அதையே மனதும் விரும்பியது. ஆனால் அவனுடைய உலகில் நான் சஞ்சரிக்கவில்லை என்பது அவனின் நடவடிக்கைகளில் புரிந்தது. சென்ற வருடத்தை விட நன்கு வளர்ந்திருந்தான். கண்களில் குறும்பு குடிவந்திருந்தது. அவனையும் அவனது தோழர்களையும் அவர்களது சைக்கில் ஓட்டங்களையும் ரசித்தபடியே நடக்கத் தொடங்கினேன்.

நான் நடந்துகொண்டிருந்த நடைபாதையில் சில ஆண்டுகளுக்கு முன் எனது
பூக்குட்டி சைக்கில் ஓடிய நினைவுகளும், அவளின் குறும்புச் சேட்டைகளும்,
அதீதக் கேள்விகளும் நினைவில் வந்துபோயிற்று.

நடந்து கொண்டிருந்த பாதை சற்றுப்  பள்ளமாய் இருந்தது. தூரத்தே யாரோ
ஜாக்கிங் வருவது தெரிந்தது. அருகில் அவரது நாயும் ஜாக்கிங் வந்து
கொண்டிருந்தது. என் அருகில் வந்த போது அது ஒரு பெண் என அறிந்து கொண்டேன். அவர்கள் என்னைக் கடந்த போது நாய் மட்டும் நின்று திரும்பிப்
பார்த்துவிட்டு ஓடத்தொடங்கியது.
சற்று நேரத்தில் ஒரு இளம் தம்பதியர் இடையிடையே ஒருவரின் வாயை மற்றவர் தின்றபடியே கடந்து போயினர். எனக்கு ”கடுப்பேத்துறார் மை லாட்” என்னும் முகப்புத்தக நண்பர் நினைவில் வந்தார்.

குழந்தைகளின் விளையாட்டுத் திடல் ஒன்று வந்தது. ஒரு பக்தாத் பேரழகி தனது முழு பேரழகையும் கறுப்புத் துணியினால் மூடி கண்ணை மட்டும் நெட் போன்றதுணியீனூடாகத் தெரியும் படி நின்றிருந்தாள். அருகில்  2, 3, 4, 5
வயதளவில் நான்கு குழந்தைகள் நின்றிருந்தன. அவருடையதாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அத்தனை குழந்தைகளும் அழகாயிருந்தன.

அதில் ஒரு குழந்தை அடித்த பந்து என்னை நோக்கி வர அதை நான் எடுத்து அதன் கையில் கொடுத்தபடியே அவளின் தலையைக் கோதிவிட்டேன். புரியாத மொழியில் தாய் ஏதோ சொன:ன போது அக் குழந்தை நோர்வேஜிய மொழியில் நன்றி சொல்லியபடியே ஓடிப்போய் தாயினருகே நின்றகொண்டது. தாய் என்ன சொல்லியிருப்பார் என்று யோசனை ஓடியபோது சிரிப்பு வந்தது.

குழந்தைகளை ரசித்தபடியே நடந்து கொணடிருந்தேன். சைக்கில்கள் இரண்டு கடந்து போயின. வயோதிபத் தம்பதிகள் வணக்கம் என்று சொல்லிப் போயினர். திடீர் என்று எனது மனது மட்டும் தனிமையை உணர்வதாய் தோன்றிற்று. அது பற்றி சிந்தித்த போது கரகோஷமும், பலத்த குரல்களும் கேட்க ஆர்வத்துடன் குரல் வந்த திசை நோக்கி நடந்தேன். அருகில் இருந்த வியையாட்டுத் திடலில் குழந்தைகளுக்கான கால்ப்பந்துப் போட்டி நடந்து கொண்டிருந்தது.

என்னை மறந்து அந்தச் சிறுவர்களின் ஆட்டத்தை ரசித்துக்கொண்டிருந்தேன்.
பெற்றோரின் அட்டகாசம் தாங்க முடியாதிருந்தது. முக்கியமாய் தந்தைமார் தமது குழந்தைகளை குழந்தைகளாக உணராமல் பெரிய விளையாட்டு வீரர்களாகக் கருதிக்கொண்டார்கள். ஆ .. ஊ  என்று குதித்தார்கள். தலையில்
அடித்துக்கொண்டார்கள். சிறு பிழை விட்டாலும் துள்ளிக் குதித்தார்கள்.
தாய்மார் மட்டும் நன்றாக விளையாடுகிறாய், மீண்டும் முயற்சி செய் என்று
ஊககுவித்தார்கள்.
காலில் அடிபட்ட குழந்தையொன்று தாயினை நோக்கி ஓடிவந்து தாயினை அணைத்தபடியே ஆறுதல் தேடியது. நடுவரோ விசில் மூலமாக அக் குழந்தை கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அக் குழந்தையோ அல்லது அவனின் தாயோ நடுவரின் விசிலைக் கவனித்ததாயில்லை. அவர்கள் ஓருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடியே ஆறுதலடைந்து கொண்டிருந்தார்கள்.  நடுவர் பொறுமை இழந்து ஆட்டத்தை ஆரம்பிக்கக் கட்டளையிட்டார்.

 எனது மகள் காவியாவின் கால்பந்தாட்ட அணிக்கு நான் பயிட்சியாளனாய் இருந்த காலத்தில் நாம் கிழமையில் இரு நாட்கள்  பயிற்சி செய்வோம். எனது மகள் நாம் பயிட்சிக்கு வரும்போதே தனது அணிக்கு யார் யாரை தெரிவு செய்யவேண்டும் என்று கட்டயைிடுவாள். அவர்கள் அனைவரும்  எமது அணியின்  சிறந்த வியையாட்டு வீரர்களாக இருப்பார்கள். ஒரு அணிக்கு மட்டும் சிறந்த வியைாட்டு  வீரர்களை வழங்குவது என்பது நியாயமல்ல என்பதை அவள் ஏற்றுக்கொள்வதில்லை. இதனாலேயே
நாம் பயிற்சி முடிந்த வீடு திரும்பும் போது முகத்தை உம் என்று
வைத்துக்கொள்வாள், கோபத்தில். இப்படியான பல காலப்பந்தாட்ட நினைவுகளுடன் அந்த மைதானத்தைக் கடந்தபடியே நடக்கலானேன்.

தனிமையில் நடக்கும் போது உள் மனதுடன் மிக நெருக்கமாக உறவாட முடிகிறது. உண்மைகளை அலசிக் கொள்ளவும், நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்வுமுறைகள் சரியா என்று இடையிடையே ஏற்படும் மனக்குழப்பங்களையிட்டு மனதுடன் உரையாடி, சமரசமாகிக்கொள்ளவும், என்னை நானே ஆறுதல்படுத்திக்கொள்ளவும், சில வேளைகளில் என்னில் ஆத்திரப்பட்டுக்கொண்டு என்னை நானே திட்டிக்கொள்ளவும்
இந்த நடைப்பயணங்கள் உகந்ததாக இருக்கின்றன. ஒரு அறையினுள் அடைபட்டு இருப்பதை விட இப்படி காலாற நடக்கும் போது மனதும் உடலும் இலகுவாகிறது.

எனக்கு நன்கு அறிமுகமான ஒரு நோர்வேஐியர் ஒருவர் கடந்த வருடம் ஸ்பெயின் நாட்டில், தொடர்ச்சியாக  3 வாரங்கள் கிறீஸ்தவ தேவாலயங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார். ஏறத்தாள 500 கிலோமீற்றர்கள் மலைகளிலும், காடுகளிலும், நகரங்களிலும் ஒரு குழுவினருடன் நடந்து சென்றதாகக் கூறினார். அவரின் அனுபவங்களைக் கேட்ட பின் எனக்கும் யாத்திரை போனால் என்ன என்ற ஆசை வந்திருக்கிறது.

1970 களின் நடுப்பகுதியில், நாம் பிபிலையில் வசித்திருந்த காலங்களில் எனது தந்தையாரும் அவரது நண்பர் போடியாரும்  கதிர்காமத்துக்கு யாத்திரை சென்றிருந்தார்கள்.  அவர்கள் சென்றவழியில் யானைகள் வந்த போது பந்தங்கள் எரித்து யானைகளைக் கலைத்ததாகவும், மரங்களின் கீழ் படுத்துறங்கி,  ஆறு குளங்களில் குளித்து கதிர்காமத்தில் காவடியாடி வந்த கதைகளை அப்பாவின் நண்பர் சொன்ன போதே என் கண்கள் கனவு காணத் தொடங்கியிருந்தன.

இவை பற்றி சிந்தித்துக் கொண்டே எறத்தாள ஒரு மணிநேரம் நடந்து, வீடுவந்து சேர்ந்தபோது யாத்திரை செல்லும் ஆசை பல மடங்கு அதிகரிததிருந்தது.

கனவுகள்தானே நனவுகளாகின்றன.  எதுவும் எப்பவும் நடக்கலாம்..  நானும் யாத்திரை போகலாம்..

இன்றைய நாளும் நல்லதே!

2 comments:

  1. நாங்களும் உங்கள் நினைவுகளுடனே நடந்து வந்து கொண்டு இருந்தோம்!

    ReplyDelete
  2. தனிமையில் நடக்கும் போது உள் மனதுடன் மிக நெருக்கமாக உறவாட முடிகிறது. உண்மைகளை அலசிக் கொள்ளவும், நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்வுமுறைகள் சரியா என்று இடையிடையே ஏற்படும் மனக்குழப்பங்களையிட்டு மனதுடன் உரையாடி, சமரசமாகிக்கொள்ளவும், என்னை நானே ஆறுதல்படுத்திக்கொள்ளவும், சில வேளைகளில் என்னில் ஆத்திரப்பட்டுக்கொண்டு என்னை நானே திட்டிக்கொள்ளவும்

    அழகான வார்த்தையால் அனுபவத்தை தெளிவாக சொல்லிவிட்டீர்கள் ......... இது எல்லோரும் மனதுடன் அனுபவிக்கும் அனுபவம்...

    ReplyDelete

பின்னூட்டங்கள்