வார்த்தைகளின் அழகும் அசிங்கமும்

அண்மையில் ஒர் நாள், பின் மாலைப்பொழுதில் வானொலியைக் கேட்டபடியே எழுதிக்கொண்டிருந்தேன். வார்த்தைகள் பற்றி  உரையாற்றிக்கொண்டிருந்தார்கள். உரையாடல் சுவராஸ்யமாக இருந்தால்
நான் எழுதுவதை நிறுத்திவிட்டு வானொலியைக் கேட்கலானேன். என்னை மிகவும் கவர்ந்தது அந்த நிகழ்ச்சி. நிகழ்ச்சியின் முடிவில் சுயவிமர்சனம் செய்துகொள்ளவும் துண்டப்பட்டிருந்தேன்.

வார்த்தைகளின் தார்ப்பர்யம் அளப்பெரியது. வார்த்தைகள் மகிழ்ச்சியைத்
தரலாம், துன்பத்தைத் தரலாம், ஊக்கத்தைத் தரலாம், புண்படுத்தலாம்,
நட்பையும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தலாம், விரோதத்தை சம்பாதித்துத் தரலாம், எதிரிகளை உருவாக்கலாம், உறவுகளை
ஏற்படுத்தலாம் அல்லது வார்த்தைகளினூடாக உறவுகளை பகைத்தும்கொள்ளலாம்.

மனிதனின் மனம் எவ்வாறான உணர்வுகளைக் கொண்டிருக்கிறதோ அவை அவனது வார்த்தைகளிலும் பிரதிபலிக்கும் என்பது உண்மைதான் போலிருக்கிறது. சிலர் அன்பாகவும் பண்பாகவும் பேசுகிறார்கள். இன்னும் சிலருக்கு அன்பான பண்பான வார்த்தைகள் இருப்பதே தெரியாதிருக்கிறது.  வார்த்தைகளை பிரயோகிக்கத் தெரிந்தவர்கள் பாக்கியசாலிகள். குழந்தைகள் எப்போதும் அன்பாகவே பேசுகிறார்கள். நாம் வளர வளர எமக்குள் வன்மம், குரோதம், பொறாமை போன்ற குணங்களும் எமக்குள் வளர்கின்றனவோ என்று எண்ணத்தோன்றுகிறது.

என் வாழ்விலும் வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கங்கள் இருக்கின்றன. என் நாவினை  கட்டுப்படுத்தாதனால் நானும் பலரை இழந்திருக்கிறேன். அதே போல் ஒரு சில வார்த்தைகளினால் மிக மிக நெருங்கியிருந்தவர்கள் அண்மிக்க முடியாத தொலைதூரத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

”யா காவார் ஆயினும், நா காக்க; காவாக்கால், சோகாப்பர், சொல் இழுக்குப்
பட்டு”  என்பது குறள்.

எம்மில் எத்தனைபேர் இதைப் பற்றி சிந்திக்கிறோம்? தொடர்பாடலுக்கான சாதனமே வார்த்தை. அதைத் தவிர்த்து, நாம் மனிதஉறவுகளை தொலைப்பதற்கு அதனைப் பாவித்துக்கொண்டிருக்கிறோம் என்பது வேதனையானதே.

அழகிய அன்பான வார்த்தைகளைக் கேட்கும்போது நாம் உயிர்க்கிறோம். அதே போல் வார்த்தைகள் அசிங்கமானவையாக, அருவருப்பானவையாக மாறும் போது எமது மனம் சுருங்கி புண்பட்டுப்போகிறது. நான் வார்த்தைகளால் உயிர்த்துமிருக்கிறேன், உயிர்ப்பித்துமிருக்கிறேன். அதே போல் சிலரை புண்படுத்தியுமிருக்கிறேன், புண்பட்டுமிருக்கிறேன்.

தற்போதெல்லாம் வார்த்தைகளை மிக மிக அவதானமாகவே பொறுக்கி எடுத்து வசனங்களை கோர்க்கின்றேன் என்றே எண்ணத் தோன்றுகிறது. வார்த்தைகளுக்கும் எனக்குமான உறவு நாளுக்கு நாள் மேம்பட்டுக்கொண்டு வருவதாகவே உணர்கிறேன். இங்கும் வாழ்க்கை அனுபவம் எனனைச் செதுக்கியபடியே இருக்கிறது, தினமும்.

ஒரே ஒரு வார்த்தையினால் அவமானப்பட்டு அசிங்கப்பட்டு பலரின் முன்
நகைப்பிற்கிடமாய் நின்ற கதையொன்று  இருக்கிறது என் வாழ்வில். மறக்கமுடியாத, மறக்கக்கூடாத அனுபவம் அது.

ஏறத்தாள 28 ஆண்டுகளுக்கு முன்பு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய
கல்லூரியில் கல்விகற்ற நாட்கள் அவை. பாடசாலையின் முதன்மை மாணவர் தலைவராக தெரிவுசெய்யப்பட்டிருந்தேன். இளமைத் துடிப்பும், மட்டக்களப்பின் பிரபல பாடசாலையில் senior prefect என்ற செருக்கிலும் வானில் பறந்து திரிந்த காலம்.

ஓர் நாள் அதிபர் என்னை அழைத்து சகல மாணவர்களையும் பொது மண்டபத்திற்கு அழைத்து வா என்று  ஆங்கிலத்தில் கட்டளையிட்டார். மனிதருக்கு தமிழைவிட ஆங்கிலமே பரீட்சயமான மொழி. அது தவிர அவர் ஒழுக்கம் என்பதையே தனது மூச்சாய் நினைத்து பாடசாலையை நிர்வகித்துவந்தார். வாகரையில் இருந்து அம்பாறைவரை
அவரின் பெயர் பிரபல்யமாய் இருந்த காலம் அது. ஆசிரியர்களே அவருக்கு
நடுங்கினார்கள் என்றால் மாணவர்களாகிய எங்கள் நிலையை கேட்கவேண்டுமா என்ன?

நான் ஏனைய  மாணவதலைவர்களை அழைத்து அதிபரின் கட்டளையைக் கூறினேன். அவர்களை மாணவர்களை அழைத்துவரவும் பணித்தேன். சற்று நேரத்தில் வரிசை வரிசையாக மாணவர்கள் வந்து, மண்டபம் நிறைந்துகொண்டிருந்தது. நான் மண்டபத்து வாசலில் நின்றிருந்தேன்.

அந்நாட்களில் இளைஞர்களாகிய எமது வாயில் ஒரு தூஷன வார்த்தை நர்த்தனமாடிக்கொண்டிருந்தது. எதைச் சொன்னலும் அந்த தூஷணவார்த்தையும் அந்தவசனத்தில் இணைந்திருந்தது.

ஒரு மாணவதலைவன் என்னிடம் வந்து இரண்டு மாணவர்கள் சண்டைபிடிக்கிறார்கள் என்றான். என் வாயில் அந்தத்  தூஷண வார்த்தை வந்து, அது எனது வாயைவிட்டு வெளியேறிய போது அதிபர் என்னைக் கடந்துசென்றதை கண்டேன். எனது இதயம் வாயினுள் வந்து
போலிருந்தது எனக்கு. இருப்பினும் அதிபர் எதுவும் பேசாது  சென்றது மனதுக்கு பெருத்த ஆறுதலைத் தர, அப்பாடா என்று நிம்மதிப்பெருமூச்சு விட்டேன்.

அதிபர் மண்டபத்தினுள் நுளையும் போது எப்போதும் மயான அமைதி நிலவும்.
அன்றும் அப்படியே.

மேடையில் அனைத்து ஆசிரியர்களும் அமர்ந்திருப்பார்கள். அதிபர் மேடைக்கு முன் பகுதியில்  இருக்கும் சிறிய பேச்சு மேடைக்கு வந்து கூட்டத்தினை   இப்படி ஆரம்பித்தார்:

”என்ட பள்ளிக்கூடத்தில ஒரு ரவுடி இருக்கிறார். அவருக்கு தான் ஒரு பெரிய
ஆள் என்ற நினைப்பு” இதைக் கேட்டதும் அந்த பரிதாபமான ஜீவன் யார் என்றும், இன்று அவனுக்கு பகிரங்க தண்டணை கிடைக்கப் போகிறது என்றும் எனக்குள் யோசனை ஓடிக் கொண்டிருந்தது. அவனுக்காக பரிதாபப்பட்டேன்.

அதிபர் ஒழுக்கம் பற்றி உரையாற்றியபடியே என்னை நோக்கி ” சஞ்சயன்,  மேடைக்கு முன் ஒரு மேசையை எடுத்துப் போடு” என்றார்
ஆங்கிலத்தில்.

நானும் ஒரு மேசையை எடுத்துப்போட்டுவிட்டு திரும்பவும் எனது இடத்தை நோக்கி நடக்க முற்பட்டபோது ”சஞ்சயன், இந்த மேசை யாருக்காக போடப்பட்டது என்று தெரியுமா?" என்றார். நான் "இல்லை சேர்". என்றேன்.


”இந்தப் பள்ளிக்கூடத்து senior prefect சஞ்சயனுக்குத் தான்” என்றார்.
எனக்கு கீழ் இருந்த நிலம் திடீர் என்று இல்லாது போனது போல் இருந்தது.  மொனமாய் ஓடின சில கணங்கள். ”மேசையின் மேல் ஏறி நில்” என்று கட்டளை வந்தது.  அவரின் கட்டளையை மீறுவது தற்கொலைக்குச் சமனானது என்பதால் தலையைக் குனிந்தபடியே ஏறி நின்றேன்.

இவர் உங்கள் எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்கவேண்டியவர். ஆனால் இவர் கதைக்கிற பாஷை காதால் கேட்க முடியாத பாஷை  என்றார்.

சகலம் புரிந்தது எனக்கு

பொது மண்டபம் முழுவதும் மாணவர்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்கள்
என் நெஞ்சைத் துளைக்கின்றன. மண்டபத்தில் எனக்குப் பின்னால் அமர்ந்திருந்த ஆசியர்களின் கண்களும் என் முதுகை சல்லடை போடுவது போல உணர்ந்தேன். வியர்வையால் நனைந்திருந்தது உடம்பு. அவமானத்தால் கூனிக் குறுகி நடுங்கிக் கொண்டிருந்தேன். அருகில் நின்றிருந்து முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரச்சனை என்ன என்பது புரிந்திருக்காவிட்டாலும் மேசையின் மீது  சிலைபோல நின்றிருந்த  என்னை ஆ என்று வாயைத் திறந்தபடியே அண்ணாந்து பார்த்தபடியே நின்றிருந்தார்கள். எனக்கு அவ்விடத்திலேயே உயிர்போகாதா என்னுமளவுக்கு அவமானத்தை உடலெல்லாம் உணர்ந்து கொண்டிருந்தேன்.

அன்றைய கூட்டம் முடிவடைந்த பின்பும் இறங்கிப் போ என்ற கட்டளை
கிடைக்கவில்லை. ஏனைய நாட்களில் அதிபரே முதலில் மண்டபத்தை விட்டு
வெளியேறுவார். அன்று அவர் நின்றிருக்க ஆசிரியர்கள் வெளியேறினார்கள். அவர்களில் சிலர் என்னை நிமிர்ந்து பார்த்து ஏளனமாய் சிரித்துப்போனார்கள். மாணவர்கள் வெளியேறிக்கொண்டிருந்த போது என்னால் தண்டிக்கப்பட்ட பல மாணவர்கள்  என் நிலையைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கடந்துபோனார்கள். இகழ்ச்சித்தும் போனார்கள்.

அனைவரும் வெளியேறிய பின் ”எனது கந்தோருக்கு வா” என்று ஆங்கிலத்தில் கட்டையிட்டுவிட்டு அகன்றார் அதிபர்.

அவமானத்தின் கனத்தை அணு அணுவாக உணர்ந்து கொண்டிருந்தேன். மெதுவாய் என்னை சுதாரித்துக்கொண்டு அதிபரின் அலுவலத்திற்கு செல்லலானேன். மண்டபத்தில் இருந்து அவரின் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால்  பல வகுப்புக்களைக் கடந்து செல்லவேண்டும்.  அனைத்து மாணவர்களும் என்னையே பார்த்து நகைப்பது போலிருந்தது. குனிந்ததலை நிமிராது அவமானத்தை சுமந்தபடியே அதிபரின் அலுவலகத்தை வந்தடைந்தேன்.

உள்ளே வா என்று  ஆங்கிலத்தில் கட்டளை வந்தது.  நடுங்கியபடியே உள்ளே ‌ செல்கிறேன்.

உன்னை நினைத்து வெட்கப்படுகிறேன் சஞ்சயன் என்றார். குனிந்த தலையை நிமிர்த்த முடியாது நின்றிருந்தேன். இந்தப் பாடசாலையின் முதன்மை மாணவன் நீ. முன்மாதிரியாக இருக்கவேண்டியவன். தவறுகளை நீயே செய்து கொண்டு எவ்வாறு அதே தவறுகளை செய்பவர்களை திருத்தப்போகிறாய்? உனது தாயார் உனது பழக்கவழக்கங்களை அறிந்தால் எவ்வளவு வேதனைப்படுவார்? இப்படி அடிமனதை உலுக்கும் கேள்விகளால் என்
மனச்சாட்சியின் கதவினை தட்டிக்கொண்டிருந்தார். அவர் கடும் கோபத்தில் இருப்பதை அவர் குரல் காட்டிக்கொண்டிருந்தது.

சற்று நேரத்தின் பின் ”எனது கந்தோரை விட்டு வெளியேறு” என்றார் கோபமான ஆங்கிலத்தில். நான் குனிந்த தலையுடன் அவரின் அலுவலகத்தைவிட்டு வெளியேறினேன்.


இந் நிகழ்வின் பாதிப்பு என்னை விட்டு இலகுவில் அகலவில்லை. அதன் பின் அந்த தூஷன வார்த்தை என் நுனி நாக்கு வரை வந்திருக்கிறது இருப்பினும் அதை வெளியேறவிடாது விழுங்கிக்கொள்வேன்.

சினம் கண்களை மறைத்து, நான் தன்னிலை இழந்த நேரங்களில் இப்போதும் துஷணம் பேசுவதுண்டு. ஆனால் நிதானத்தை மீளப்பெற்றவுடன் வெட்கித் தலைகுனிந்திருப்பேன்.

ஏறத்தாள 20 ஆண்டுகளின் பின்னான ஒர் நாள் எனது அதிபரை சந்திக்கிறேன்.
இன்னும் என் பெயரை மறக்காது ”சஞ்சயன் வா வா ” என்றார்ஆங்கிலத்தில்.
பலதையும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது மேலே எழுதிய கதையை அவருக்கு நினைவுபடுத்தினேன். கண்களைச் சுருக்கியபடியே சிரித்தார்.  சில கணங்கள்  மௌனமாய் கழிந்தன.

என்னை நிமிர்ந்துபார்த்தபடியே நான் ஆசிரியனாய் வெற்றிபெற்றிருக்கிறேன்
என்பதை அறிவிக்கிறாய் என்றார். அவரின் கண்கள் கலங்கியிருந்தன.  சுற்றாடலின் மௌனம் எங்களை  தாலாட்டிக்கொண்டிருக்க
வார்த்தைகளால் உயிர்த்திருந்தோம் நாமிருவரும்.

இன்றைய நாளும் நல்லதே

எங்கள் பேராசான் பிரின்ஸ் காசிநாதருக்கு இது சமர்ப்பணம்.

9 comments:

  1. நான் Senior Prefect ஆக இருந்தபோது இந்த அளவுக்கு அவமானப்படவில்லை. அனைத்து மாணவர்கள் முன்பும் தவறுக்காக அசெம்பிளியில் அடிவாங்கிய ஞாபகம் இருக்கிறது.

    அழகாக உங்கள் அனுபவத்தை சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. நல்லதையே செய்வதற்கு விரும்பிய அந்த மூத்தோர்கள் தங்களுக்குச் சரியெனப் பட்டதைச் செய்தனர். அவர்கள் உள் நோக்கத்தினை நாம் ஐமிச்சப் படக் கூடாது. ஆனாலும் என்ன செய்வது? ஐந்து விரலும் ஒரே மாதிரி இல்லையே! மனிதர்களாகிய எமக்கு ஒவ்வொரு மாதிரியான மனம். சிலரது எதையும் தாங்கும்; பட்டுத் தெளிந்து முன்னேறும். சிலரது அவமானப் பட நேரும் பட்சத்தில் சட்டென உடைந்து நொருங்கிப் போகும்; சாவின் விளிம்பிலும் தள்ளிவிடும். சரியான ஒரு சமநிலைமையை நாம் கைக்கொள்ள வேண்டும். இது என் தாழ்மையான கருத்து.

    ReplyDelete
  3. வணக்கம் Anonymous:
    அவரவர் மனச்சாட்சி அவரவருக்குததெரியும்.அந்த முத்தோருடன் அவர்களுடன் இணைந்து சதி செய்தவர்களையும் நான் அறிவேன்.

    நீங்களும் உங்கள் முகத்தை பேடிகள்போன்று மறைக்காமல் எழுதியிருந்தால் உங்களுடன் உரையாடியிருக்கலாம். நீங்கள் Anonymou என்ற முகமூடியுடன் வந்திருப்பதால் நீங்களும் அவர்களில் ஒருவர் என்பது புரிகிறது.

    உங்கள் ஒருவரின் சகவாசமே வேண்டாம் என்பதற்காகத்தானே நான் ஒதுங்கியிருக்கிறேன். அப்படியிருக்கும் போது என் பின்னால வந்து வந்து அந்த ”மூத்தோரை” நியாயப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்?

    இழந்தவனுக்கே இழப்பின் வலியும், பெறுமதியும் புரியும்.

    நான் மனிதர்களுடனேயே பழகவிரும்புகிறேன். உங்களைப் போன்றவர்களுடன் அல்ல.

    நன்றி.

    பி.கு: எனது பதிவுலகத்திற்கு உங்களைப் போன்றவர்களின் வரவை நான் விரும்பவில்லை.

    இவ்வண்ணம்
    சஞ்சயன்

    ReplyDelete
    Replies
    1. அன்பரே அமைதி! அமைதி! கண்மூடித்தனமான கண்டிப்பு நிரம்பிய ஆசிரியப் பெருந்தகைகளின் நடவடிக்கைகளால் வாழ்வின் திசை மாறிப் போன பறவைகளை நான் அறிவேன். நான் கல்லெறிய முடியாத நிலையில் கண்ணாடி வீட்டில் இருக்கிறேன், என் நெருங்கிய உறவுகளில் மூத்தவர் மூவர் ஆசிரியர்கள். இருவரின் நடவைக்கைகளைக் கேள்விப் பட்டிருக்கிறேன். அடக்குமுறையைக் கையாண்டிருக்கிறார்கள். நீர் பட்டுத் தெளிந்து புடம் போட்ட தங்கமாக வெளிவந்தீர். வாழ்த்துக்கள். வெந்து பொசுங்கிப் போன ஆத்துமங்களுக்கு என் அஞ்சலிகள். இன்றுவரை நீ நடந்து கொண்ட முறை பிழை என்று மிஞ்சி உள்ள ஒரு சொந்தத்துக்குத் தன்னும் நேரடியாக இடித்துரைக்க என்னால் முடியவில்லை. காரணங்கள் பல. அன்பு, பட்சம், பாசம், மதிப்பு, ஒருவகைப் பயம் கலந்த மரியாதை,மனம் நோகவைக்கக் கூடாது என்ற நினைப்பு. இந்தக் களம் ஒரு மேடை. அதனாலே முகம் காட்டாத பேடியானேன். தயை செய்து பொறுத்துக் கொள்ளவும் .

      Delete
  4. நல்லதொரு பகிர்வு நானும் உங்களுக்கு இளைய மாணவனாக பிரசன்னமாயிருதேன்.
    எப்போதும் உங்களது பகிர்வுகள் எனக்கு மலரும் நினைவுகள் (ஷர்மா சார், விஜயரத்தினம் சார் புண்ணியமூர்த்தி சார்)
    இப்போது எப்படி இருக்கிறார் எங்கள் பேராசான்

    ReplyDelete
  5. நல்லதோர் பதிவு.வார்த்தைகள் தான் வாழவும்,சாகவும் செய்கின்றன..வார்த்தைக்கு கடிவாழம் நிச்சயம் வேண்டும்.வாழ்த்துக்கள் சொந்தமே!பொறுத்தார் பூமி ஆழ்வார்.:) :)சந்திப்போம்.

    ReplyDelete
  6. சொல்லாடல் குறித்த அற்புதமான பதிவு. எங்கள் பாடசாலை நாட்களை கூடவே நினைவுபடுத்தின. எங்களின் நினைவின் நெகிழ்வாகவே தங்களது சிந்தனையும் எழுத்தும் அமைந்திருக்கின்றது. ஒரே அலைவரிசையில் இணைந்திருக்கின்றோம். நன்றி.

    ReplyDelete
  7. சொல்லாடல் குறித்த அற்புதமான பதிவு. எங்கள் பாடசாலை நாட்களை கூடவே நினைவுபடுத்தின. எங்களின் நினைவின் நெகிழ்வாகவே தங்களது சிந்தனையும் எழுத்தும் அமைந்திருக்கின்றது. ஒரே அலைவரிசையில் இணைந்திருக்கின்றோம். நன்றி.

    ReplyDelete

பின்னூட்டங்கள்