ஒட்டக மொழி

பங்குனி மாத (2014) காலச்சுவடு இதழில் வெளியாகிய எனது பதிவு.

வாழ்க்கை பல மனிதர்களை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் தங்களின் நினைவுகளை, தாக்கங்களை என்னுள் செதுக்கிவிட்டே கடந்துபோகிறார்கள். மனிதர்களின் மனம் என்னும் இரகசியப் பெட்டியினுள் பலரின் நினைவுகளும் உரையாடல்களும் சம்பவங்களும் ரகசியமாகத் தமக்குள் உரையாடியபடியே உலாவித் திரிகின்றன. சிலர் அவற்றில் சிலவற்றை என்னிடம் நம்பிப் பகிர்ந்துபோகிறார்கள்.

நான் அவர்கள் தந்துபோனவற்றைச் சுமந்து திரிகிறேன்; சுகமான சுமை அது. இன்னொரு மனிதனின் நம்பிக்கையைப் பெறுவதும், அவன் பாதுகாப்புணர்வுடனும் நம்பிக்கையுடனும் என்னை அணுகுவதும் பரம ரகசியங்களைப் பகிர்வதும் மனதுக்கு ஆறுதலைத் தரும் அதேவேளையில், வாழ்க்கை தனது வீரியத்தை மனிதர்களிடத்தில் எவ்வாறெல்லாம் காட்டிப்போகிறது என்பதை அறியவும் தருகிறது.

பால்யத்துக் காலம் தொடக்கம், பலரும் என்னை நம்பித் தங்களின் கதைகளைக் கூறியிருக்கிறார்கள். அந்நாட்களில் காதற்கதைகளே அதிகமாய் இருந்தன. காலம் செல்லச் செல்ல வயதும் ஏற ஏற வாழ்க்கையும் தனது வீரியத்தைக்காட்ட, என்னுடன் பகிரப்பட்ட கதைகளும் அவற்றின் கனங்களும் அதிகரித்தே போகின்றன.

முன்பின் அறியாத மனிதர்கள், சற்றே அறிமுகமானவர்கள், நன்றாகப் பழகியவர்கள், நண்பர்கள் என்று பலரும், என்னை நம்பி ஏன் கொட்டுகிறார்கள் என்று அடிக்க?டி நான் நினைப்பதுண்டு. சில கேள்விகளுக்குப் பதில் தேடுவதில் அர்த்தமில்லை. அப்படியான கேள்வியாகவே இருக்கட்டும் இந்தக் கேள்வியும்.

சில வாரங்களுக்கு முன், கணினி திருத்த வேண்டும் என்று ஒருவர் அழைத்தார். மிகவும் வயதானவர் போன்றிருந்தது அவரது குரல். அவரது பல சொற்களைப் புரிந்துகொள்வதே கஷ்டமாயிருந்தது. அவரின் வீட்டிற்குச் சென்றேன். நோர்வேயின் ஒஸ்லோ நகரின் மிக செல்வச் செழிப்புள்ள சிறு நகரம் அது. சற்றே குளிரான காலநிலை. மெதுவெயிலின் ஒளியில் இலையுதிர் காலத்து நிறங்களில் மரங்கள் அழகாக இருந்தன.

அழைப்பு மணியை அழுத்தினேன். வீட்டினைத் திறந்து என்னை உள்ளே அழைத்தார். அவரது பார்வையில் ஒரு கறுப்பனை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது புரிந்தது. “நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன்” என்றார். “ஸ்ரீலங்கா” என்றேன்.

அப்போதுதான் அவரைக் கவனித்தேன். நிமிர்ந்து நிற்பதற்கே தடுமாறிக்கொண்டிருந்தார். “ஆஹா.. காலையிலேயே ஆரம்பித்துவிட்டார்” என்று மனம் கூறியது. கவனமாய் இருக்க வேண்டும் என்றும் உள்மனம் எச்சரித்தது.

“உங்கள் கணினியில் என்ன பிரச்சனை” என்றேன்.

“உள்ளே சென்று கணினியின் முன் உட்கார்” என்று கட்டளை வந்தது. கணினி இருந்த அறையை நோக்கிக் காற்றில் ஆடும் உயர்ந்த கமுகுபோல நடந்து சென்றார் அவர். அவர் விழுந்தால் பிடித்துக்கொள்வதற்கான தயார்நிலையில் அவர் பின்னே நடந்துபோனேன்.

கணினியின் முன்னே உட்கார்ந்துகொண்டேன். அவர் பிரச்சனைகளை அடுக்கிக் கொண்டே சென்றார். நானும் ஒவ்வொன்றாகத் தீர்த்துக்கொண்டிருந்தேன்.

இப்படியே கடந்து சென்ற ஒரு மணி நேரத்தில் நாங்கள் நட்பாகிப்போனோம். அவர் ஒரு பார்க்கின்சன் நோயாளி, வயது 67தான் ஆகிறது, பார்க்கின்சன் நோயின் தாக்கத்தினைக் குறைப்பதற்காக அவரது மண்டை ஓட்டினைத் திறந்து சில இலத்திரனியல் கருவிகளை அவரது மூளையுடன் இணைத் திருக்கிறார்கள், இதயத்துடிப்பினைச் சீராக்கவும் ஒரு கருவி பூட்டப்பட்டிருந்தது அவரது நெஞ்சுப் பகுதியில். அது அவரின் நெஞ்சின் தோற்பகுதிக்கு வெளியே துருத்திக் கொண்டிருந்ததை மேலாடையைத் திறந்து காட்டினார். பார்க்கவே பயமாய் இருந்தது.

ஒரு மேசை முழுவதும் மருந்துகள் இரைந்து கிடந்தன. ஒரு நாளைக்கு ஒன்பது விதமான மருந்துகளை உட்கொள்கிறார். அவை மூன்று மணி நேரத்துக்கு ஒரு தடவை சீராக உட்கொள்ளப்பட வேண்டும் என்றார். அறுவைச்சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது வைத்தியர்கள் தவறுதலாக நான்கு நாட்கள் தேவைக்கு அதிகமாக மருந்துகளை உட்செலுத்தியிருக்கிறார்கள். அதனால், அவரின் உடல்நிலை மேலும் பாதிப்படைந்திருக்கிறது.

ஐரோப்பாவிலேயே அவருக்குத்தான் இந்தளவு நாட்கள் தொடர்ந்து தேவையற்ற மருந்துகளை வைத்தியர்கள் கொடுத்திருப்பதாகவும், தானே அந்தப் பெருமைக்குரியவன் என்றும் தனது நகைச்சுவையைக் காட்டினார்.

அவருடன் இருந்த சமயங்களில், அவரின் நகைச்சுவையுணர்வினை மிகவும் ரசித்தேன். எதிலும் நகைச்சுவை உண்டு. எதையும் நகைச்சுவையாகப் பார்க்கலாம், ஆனால் அது மற்றவரைக் காயப்படுத்தா திருத்தல் அவசியம் என்றார். எனது கொள்கையும் அதுவே என்பதால் அவருடன் உடன்பட்டேன்.

அவரது அறையில் இருந்த ஒரு சிறு கணினி அலறியது. அதனருகே சென்று பார்த்தார். என்னையும் அழைத்து அதைப் பார்க்கச் சொன்னார். அக்கணினிக்கும் அவரது வைத்தியசாலைக்கும் நேரடித் தொடர்பிருந்தது. எப்போ, என்ன மருந்தினை அவர் எடுக்க வேண்டும் என்று அது சொல்வது மட்டுமல்ல, ‘ஆம். நான் அம்மருந்தினை எடுத்துவிட்டேன்’ என்று இவர் தனது சம்மதத்தைத் தெரிவிக்கும்வரையில் அது கத்திக்கொண்டே இருக்கும். இது எனது மனைவி மாதிரி என்று அதிலும் தனது நகைச்சுவையைக் காட்டினார்.

பார்க்கின்சன் நோயுடன் சில நோய்கள் இலவசமாக வந்திருப்பதாகவும் அதில் முக்கியமானது இந்த மறதி என்றும், அதனால் தான் படும்பாடு பெரும்பாடு என்று கூறி, வீட்டில் ஆங்காங்கே “கஜினி” சூர்யா போன்று நினைவுக்குறிப்புகள் எழுதியிருப்பதைக் காட்டினார். எனக்குக் கிலி பற்றிக்கொண்டது. இப்போதே நான் ஏறத்தாழ ஒரு கஜினி போன்றே இருக்கிறேன்; அத்தனை மறதி எனக்கு.

‘இவரைப்போல் ஆகிவிட்டால்’ என்று சிந்தனையோடியது.

அவரது பிரின்டர் இயங்கவில்லை. எனவே, புதிது வாங்க வேண்டும், “வா... கடைக்குப் போவோம்”என்றார். நான் ‘‘வாருங்கள் எனது வாகனத்தில் செல்வோம்’’ என்றேன். “இல்லை, எனது வாகனத்திற்கு மாற்றுத் திறனாளி வாகனத்தரிப்பிடங்களில் நிறுத்தும் அனுமதி இருக்கிறது அதில் செல்வோம்” என்றார்.

இவர் வாகனம் ஓட்டினால் என் கதி அதோகதி ஆகிவிடும் என்பதால், என் முகத்தைப் பரி தாபமாக வைத்துக்கொண்டு ‘‘நீங்கள் வாகனம் ஓட்டுவீர்களா’’ என்றபோது, ‘‘பயப்படாதே நீ இன்று சாகமாட்டாய்’’ என்றார், வெடித்துச் சிரித்தபடியே. இருவரும் அவரின் வீட்டின் கீழ்த்தளத்திற்குச் சென்றோம். அவரின் வாகனத்தை அண்மித்தவர், ‘‘சற்றுப் பொறு, திறப்பை மறந்துவிட்டேன், எடுத்து வருகிறேன்.” என்றார். என் மனம் ‘திக் திக்’ என்று அடித்துக்கொண்டிருந்தது.

வாகனத்தின் திறப்பை எடுத்து வந்தவர் ‘‘இந்தா இதைப் பிடி, நீ தான் வாகனம் ஓட்டப்போகிறாய்” என்று கூறித் திறப்பை என்னை நோக்கி எறிந்தார். அப்போதுதான் என்னுயிர் திரும்பியது.

தான் இப்படிச் சமநிலை இழந்து இருப்பதைப் பார்த்த தனது மகள் வாகனக் கட்டுப்பாட்டு இலாகா அதிகாரிகளுக்கு அறிவித்ததனால் அதிகாரிகள் தனது சாரதிப் பத்திரத்தை ரத்து செய்துவிட்டனர் என்றும், அந்நாட்களில் தான் மகள்மீது கடும் கோபத்தில் இருந்ததாயும், இப்போது அவளின் நோக்கத்தை உணர்ந்திருப்பதனால் அவளுக்கு நன்றி கூற வேண்டும் என்றும் கூறினார்.

வாகனத்தில் அமர்ந்துகொண்டோம். அப்படியானதோர் மிக மிக சொகுசான வாகனத்தை நான் இதுவரை ஓட்டியதில்லை. அதை இயக்குவதற்குத் தடுமாறியபோது திறப்பைப் பறித்து ஒரு துளையினுள் தள்ளிவிட்டார். தூங்கிக் கொண்டிருந்த சிங்கம் உறுமியது போல் உயிர்த்தது அந்த வண்டி. அதன் சத்தமே மனதுக்கு ஒரு விறுவிறுப்பைத் தந்தது. கப்பல்போல் மிதந்து சென்றுகொண்டிருந்தது அவரது வாகனம். நாங்கள் உரையாடிக்கொண்டிருந்தோம்.

நோர்வேயிலேயே மிகப் பெரிய கடையருகில் வாகனத்தை நிறுத்தி, கடையை நோக்கி நடந்தபோது, எனது நண்பர் தள்ளாடியபடியே வந்தார். பலர் அவரை ஒருவிதமாகப் பார்த்து ஒதுங்கிக்கொண்டனர். சிலர் புறு புறுத்தனர். அவரோ ‘‘இதெல்லாம் சகஜமப்பா” என்னும் ரீதியில் இதைப் பற்றிக் கவனிக்காமல் தள்ளாடியபடியே நடந்து சென்றார், எனக்கு மனதுக்குள் ஏதோ பிசைந்தது. பனைமரத்துக்குக் கீழே இருந்து மனிதர்கள் பாலையும் குடிக்கலாம் என்பதை மனதுக்குள் எனக்கு நானே நாலைந்து தடவைகள் கூறிக்கொண்டேன்.

மீண்டும் வீடு நோக்கி அவரின் வாகனத்தில் மிதந்துகொண்டிருந்தோம். அந்தப் பெரிய வீட்டில் தனியாகவா இருக்கிறீர்கள் என்று கேட்டேன். தலையை இரு புறமும் ஆட்டியபின் சற்றுநேரம் மௌனமானார். ‘‘என் மனைவிக்கு மனஅழுத்தம், மனநோய்கள் காரணமாக இடையிடையே அவர் சுகயீனமுறுவார். நேற்றுத்தான் அவர் ஒரு வைத்தியசாலையில் இருந்து வீடு வந்திருந்தார்’’ என்றும் ‘‘அவர் தற்போது வெளியில் சென்றிருக்கிறார்’’ என்றும் கூறினார்.

நாங்கள் வீடு சென்றபோது அவர் மனைவி அங்கிருந்தார். அவரருகில் என் நிறத்தில் ஒரு நாய் நின்றிருந்தது. நாம் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டோம். அமைதியானவராய் இருந்தார். அவர்களது நாய் அவரைச் சுற்றிச் சுற்றியே வந்தது. கணவருடன் பேசியதைவிடத் தனது நாயுடன் அதிகமாகப் பேசிக்கொண்டிருந்தார் அப்பெண். எனது நண்பரோ அதைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.

உனக்கு உணவு சமைக்கிறேன் என்று கூறி எனது சம்மதத்தை எதிர்பார்க்காமலே குசினிக்குள் தள்ளாடியபடியே புகுந்துகொண்டார். சற்று நேரத்தில் மிகச் சுவையான நோர்வேஜிய உணவு பரிமாறப்பட்டது. அதன்பின் அவரே மிகமிக ருசியானதோர் இனிப்பு உணவினைத் தயாரித்தார். மிக மிக ருசியாய் இருந்தது. அவருக்குச் சமையற்கலையில் பெருந்திறமை இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். ‘‘நீ நன்றாகச் சமைப்பாயா?’’ என்று கேட்டார். அசட்டுத்தனமாய்சிரித்தபடியே தலையை அங்கும் இங்கும் ஆட்டினேன். ‘‘அது ஒன்றும் பெரிய விசயமில்லை’’ என்று என்னை ஆறுதல்படுத்தினார்.

மறுநாளும் என்னை வந்து தனது கணினியைச் சீர்செய்யச் சொன்னார். அவரிடத்தில் மூன்று கணினிகள் இருந்தன. அவை மூன்றும் இயங்க மறுத்திருந்தன. அவற்றில் ஒன்றினை இன்று இயக்கிக் கொடுத்திருந்தேன்.

மறுநாள், மீண்டும் அவரிடம் வந்தபோது, மனிதர் பெரும் பதட்டத்தில் இருந்தார். ‘‘என்ன பிரச்சனை’’ என்று கேட்டேன். ‘‘தொலைபேசியை எங்கோ மறந்து வைத்துவிட்டேன்’’ என்றார். ‘பொறுங்கள்’ என்று கூறி அவரின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்த முயற்சித்தேன். அவரது கட்டிலில் இருந்து தொலைபேசி மணியடித்தது. எடுத்துக்கொடுத்தேன். முதுகில் பெரிதாய் ஒரு தட்டு தட்டி ‘‘கெட்டிக்காரன்” என்றார். அது நக்கலா பாராட்டா என்பது புரியவில்லை.
இரண்டாம் நாள் அவருக்கு என்னில் மேலும் நம்பிக்கை வந்திருந்தது. அவர் ஒரு அலுமினியத் தொழிற்சாலையின் முக்கிய விற்பனை அதிகாரியாகத் தொழில் புரிந்ததாகக் கூறினார். ஒரு தலைமயிரினை விட 50 மடங்கு மெல்லிய தாளாக அலுமினியத்தைத் தயாரிக்க முடியும் என்பதை அலுமினியம் எவ்வளவு இலகுவாக வடிவமைக்கப்படக் கூடியது என்பதற்கு உதாரணமாக எடுத்துக்காட்டினார். அலுமினியம் பற்றி அவருக்கு அதீத அறிவு இருந்தது. பார்க்கின்சன் நோய் வந்தபின் தொழிலில் தன்னால் ஈடுபட முடியவில்லை என்றார். அவர் தனது தொழிலை மிகவும் நேசித்திருந்திருக்கிறார் என்பதை அவருடனான உரையாடலில் இருந்து புரிந்துகொண்டேன்.

இரண்டாவது நாளும் எனக்கு விருந்து தடபுடலாக இருந்தது. உணவு தயாரிப்பதை மனிதர் மிகவும் விரும்பினார். நானும் ருசித்துச் சாப்பிட்டேன். நான் உணவில் காட்டிய ஆர்வத்தில் மனிதர் குஷியாகிவிட்டார். நானும் அவரின் கைப்பக்குவத்தைப் பாராட்டினேன். சாப்பிட்ட சாப்பாட்டுக்கு அதையாவது செய்யாவிட்டால் சரித்திரத் தவறாகிவிடுமல்லவா?

இரண்டாவது நாளின் பின், நாங்கள் மிக நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். அவரது வாழ்க்கையின் சகல பாகங்களையும் ஒப்புவித்தார். அழுதார். சிரித்தார். சிலநேரங்களில் அவரது முதுகினைத் தடவிவிட்டேன். அவ்வப்போது எனது கையினை இறுகப் பற்றிக் கொண்டார். அவரது கையின் அழுத்தத்தில் அவர் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை பிரதிபலித்தது. என் வாழ்க்கையைப் பற்றிக் கேட்டார்; பகிர்ந்தேன். கேட்டபின் பெருமூச்சொன்றை உதிர்த்தார். இருவருக்கிடையிலும் சிறிதுநேரம் கனமான மௌனம் நிலவியது. அவரின் இருமல் எமது மௌனத்தைக் கலைத்தது.

‘பார்க்கின்சன்’ நோய் அவரைச் சிறிதுசிறிதாக விழுங்கிக்கொண்டிருக்கிறது. தனது பேச்சு வல்லமையை இழந்துகொண்டிருக்கிறார். அதைத் தக்கவைப்பதற்காக அவர் தினமும் அரை மணி நேரம் ஒரு கடினமான பயிற்சி செய்கிறார். ஒரு தண்ணீர்ப் போத்தலுக்குள் ஒரு குழாயினை இட்டு, அதன் மூலமாக வாக்கியங்களை உச்சரிக்கிறார். அவர் பயிற்சி செய்யும்போது பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்குத் தலைசுற்றியது. என்னை முயற்சித்துப் பார்க்கச் சொன்னார். நான் முயற்சித்தேன். போத்தலுக்குள் காற்றினை ஊதியபடியே ஒரு சொல்லினை உச்சரிப்பதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. அவரோ வாயில் நுரை தள்ளத்தள்ள அரை மணி நேரம் பயிற்சி செய்தார்.

பயிற்சி முடிந்து, நுரைதள்ளிய வாயினைத் துடைத்த பின் என்னுடன் மிகத் தெளிவாக உரையாடினார். அவரின் கண்கள் ஒளிகொண்டிருந்தன. என்னால் நம்ப முடியவில்லை. அந்தளவுக்குத் தெளிவாகப் பேசினார். மறுநாள் பேச்சு மீண்டும் தடுமாற்றமான நிலைக்கு மாறிவிடும் என்றார். நான் அவரை உற்றுப் பார்த்தேன். முருங்கையில் ஏறிய வேதாளத்தை வெட்டிவிழுத்தும் விக்கிரமாதித்தன்போல் இருந்தார் அவர். அவரது மனஉறுதி என்னை ஆச்சரியப்படவைத்தது.

அன்று நான் விடைபெற்றபோது அவர், தான் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட பின் தனது குடும்பத்தினருக்கு எழுதிய கடிதத்தின் பிரதியை எனக்கும் தந்தார். தந்தது மட்டுமல்ல, அதை வாசித்துப் பார் என்றும் கட்டளையிட்டார். ‘‘நிச்சயமாக’’ என்று கூறி விடைபெற்றேன்.

அன்றிரவு மனம் அமைதியாக இருந்தபோது அவரது கடிதம் நினைவுக்கு வந்தது, அதை எடுத்து வாசிக்கலானேன்.

‘எனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்’ என்று ஆரம்பித்தது, அந்தக் கடிதம்.

நான் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். இது தொற்றுநோயுமல்ல, பரம்பரை நோயுமல்ல. இந்நோய் எப்படித் தோன்றுகிறது என்று இன்னமும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் மூளையில் உள்ள Dopamin கலங்கள் மிக வேகமாக இறக்கத் தொடங்கும்போது இது ஏற்படுகிறது. என்னிடம் உள்ள இக்கலங்களில் 70 - 80 வீதமானவை இறந்துவிட்டன. மருந்துகள் என்னைப் பூரணமாகக் குணப்படுத்தாது. ஆனால் மருந்துகளால் நோயின் தாக்கம் சற்று தாமதப்படுத்தப்படும். இந்நோயுடன் கூடவே வரும் சில நோய்களும் உண்டு. அவையும் என்னைப் பாதிக்கின்றன. நான் என்னை இந்தப் புதிய வாழ்வுக்குப் பழக்கிக்கொள்ள வேண்டும். உங்கள் அனைவரின் உதவியும் எனக்குத் தேவை. என்னோடு வாழ்ந்திருங்கள் என்றிருந்தது, அவரது கடிதத்தின் முதலாவது பகுதி.

எனது மனதுக்குள் அவரின் குரல் கேட்டுக்கொண்டிருந்தது. அவரே எனக்கு அக்கடிதத்தை வாசிப்பது போலுணர்ந்து கொண்டிருந்தேன்.

தொடர்ந்து வாசிக்கலானேன்.

சிலநேரங்களில் நான் அழலாம், அல்லது கோபமாக, எரிச்சலுடன் இருக்கலாம். நீங்கள் நினைப்பீர்கள். அதற்குக் காரணம் நீங்கள்தான் என்று. அது நீங்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது பார்க்கின்சன் நோயின் அறிகுறிகளில் ஒன்று. இப்படியான திடீர் திடீர் உணர்ச்சிகளின் வெளிப் பாடுகளை எனது வைத்தியர் ‘உணர்ச்சிகளின் ஒழுக்கு’ என்கிறார். எனது இப்படியான உணர்ச்சிகளின் ஓழுக்கினை நீங்கள் பெரிதுபடுத்தாதீர்கள். அது சற்றுநேரத்தில் அகன்று விடும். எனக்குத் தேவையான நேரத்தை எனக்குத் தாருங்கள். அதுவே நீங்கள் எனக்குச் செய்யும் உதவி.

எனது நினைவுகள் மழுங்குகின்றன. நான் பல சொற்களை மறந்திருக்கிறேன். உச்சரிப்புக் களையும் மறக்கிறேன் இவை யெல்லாம் இந்நோயின் பாதிப்புக்களே. நான் நடுங்கிக்கொண்டிருப்பேன் என்று நீங்கள் நினைக்கலாம், நானும் அப்படித்தான் ஆரம்பத்தில் நினைத்தேன். இன்றைய காலத்தில் பல புதிய மருந்துகள் நடுக்கத்தைக் குறைக்கின்றன. மருந்துகளைத் தவிர நடுக்கத்தைக் குறைப்பதற்காக நான் எனது கைவிரல்களின்மேல் உட்கார்ந்திருப்பேன் அல்லது காற்சட்டைப்பையினுள் கைகளை வைத்திருப்பேன்.

போதையில் மது அருந்தியவர் போன்று நான் வீதியில் தள்ளாடித் தள்ளாடித் திரிவதாக யாராவது உங்களிடம் கூறினால் அவர்களிடம் கூறுங்கள் அது மதுவின் பாதிப்பல்ல. அது பார்க்கின்சன் நோய் என்று, ‘தள்ளாடும் நிலை’ என்பது பார்க்கின்சன் நோயின் அறிகுறிகளில் ஒன்று என்றும். நான் புன்னகைப்பதோ, சிரிப்பதோ இல்லையாதலால் நான் முன்பைப் போன்று கலகலப்பாக இல்லை என்றும் நீங்கள் நினைக்கலாம். நான் ஒன்றையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கலாம். இவையெல்லாம் பார்க்கின்சன் நோயின் பாதிப்புகளே அன்றி வேறெதுவுமில்லை.

‘‘என்னை என் நோயுடன் நேசியுங்கள்’’ என்று தனது கடிதத்தை முடித்திருந்தார். கடிதத்தை வாசித்தபின் மனிதர் என்னுள் இன்னும் அதிகமாய் நெருங்கியிருப்ப தாய் உணர்ந்தேன்.

தன் நோய்மை பற்றி வெளிப்படையாகக் கூறி, ஏற்படக் கூடிய அசௌகரியமான சந்தர்ப்பங்களை விளக்கி, நோய்பற்றி நுணுக்கமாக விளக்கிக் குடும்பத்தினரை ஆறுதல்படுத்தி, தானும் ஆறுதலடைந்திருக்கிறார். எம்மில் எத்தனை பேரால் இது முடிந்திருக்கும்?

இனிமேல் தன்னால் மீண்டு கொள்ள முடியாது என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார். மெது மெதுவாய்த் தான் இல்லாது போய்க் கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்வது என்பதானது, இலகுவான காரியமில்லை. தன் சுயத்துடன் அவர் சமரசமாகியிருந்தார் என்பதை அறியக்கூடியதாயிருந்தது. தனது முடிவினை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவர் இந்த மனநிலைக்கு வருவதற்கு, எத்தனை காலம் தனது மனதுடன் போராடியிருப்பார். எத்தனை கடினமானது அது. இதைப்பற்றி நினைக்க நினைக்க அவர் மீதான மரியாதை எனக்குள் அதிகரித்துக்கொண்டேயிருந்தது.

அவரை இரண்டாவது நாள் நான் சந்தித்தபோது, ஒரு ஒலிப் புத்தகத்தைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆர்வக் கோளாறினால் ‘‘என்ன புத்தகம் அது?” என்று கேட்டேன். ‘‘ஒட்டக மொழி” என்று பதில் வந்தது. தொடர்ந்து ‘‘உனக்கு ஒட்டகத்தின் மொழி தெரியுமா?” என்றார். எனக்கு அவரது உரையாடலின் உள்ளர்த்தம் புரியாததால் கண்ணைச் சுருக்கிய படியே நின்றிருந்தேன். ‘உட்கார்’ என்றார். சரிந்தபடியே உட்கார்ந்து கொண்டேன்.

Marshall R. Rosenberg என்பவர் ஒரு தொடர்பாடல் செய்முறை பற்றிக் கூறியிருக்கிறார். அது Nonviolent Communication. NVC என்றும் அழைக்கப்படுகிறது. இதை அன்பின்மொழி - ஒட்டகமொழி என்றும் அழைக்கிறார்கள்.

‘‘ஒட்டகம் உலகத்திலேயே நீளமான கழுத்தையுடையதால் அதன் கண்கள் மிக உயரத்தில் இருக்கும். ஆதலால் எதையும் தெளிவாகப் பார்க்க முடிகிறது. ஒட்டகத்தின் காதுகள் பெரியவை, அவை நீ மற்றவர்கள் பேசுவதை செவிமடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அனைத்து ஜீவராசிகளின் இதயங்களுடனும் ஒப்பிடும் போது ஒட்டகத்தின் இதயம் பெரியது. இது அன்பினைக் காட்டுகிறது’.

‘‘ஒரு தொடர்பாடலில் அல்லது உரையாடலில் நீ தெளிவான பார்வை, செவிமடுத்தல், அன்பு ஆகியவற்றைக் கொள்வாயாயின் அந்தத் தொடர்பாடல் - உரையாடல் வெற்றிபெறுகிறது’’ என்று விளக்கினார். ‘‘நீ அவசியம் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும்’’ என்றும் அறிவுறுத்தினார். ‘‘எனக்கும் ஆர்வமாய் இருக்கிறது அதனை வாசிக்க’’ என்றேன் நான்.

அவர் தனது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எழுதிய கடிதத்தையும், மூன்று நாட்கள் அறிமுகமான என்னுடன் அவர் பழகும் முறையையும், நம்பிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். அவருக்கு ஒட்டகமொழி வசப்பட்டிருப்பது புரிந்தது.

இதற்குப் பின்னான நாட்களிலும் அவர் என்னை மீண்டும் மீண்டும் அழைத்தார், உபசரித்தார், உதவி கேட்டார், உரையாடினார், அழுதார், சிரித்தார். நானும் உரையாடினேன், சிரித்தேன், வாழ்க்கையைப் பகிர்ந்தேன். அவருடனான உரையாடல்களில் தொண்டை கரகரக்க கண்கள் குளமாகியிருக்கும்போது அவர் கை, என் கையைப் பற்றியிருக்கும்.

நான் ஒட்டகமொழியினைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

4 comments:

  1. அருமை நண்பா,, சொல்லாடல் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது..

    ReplyDelete
  2. அருமை. அழகாக. எழுதி. உள் ளீர்கள சஞ்சயன .

    ReplyDelete
  3. அனுபவ பகிர்வுக்கு நன்றி... ஒவ்வொருமனிதரிடத் திலும் ஒவ்வொரு பாடம் உண்டு.

    ReplyDelete
  4. அருமை,ஊசி போன்ற கருத்துக்கள்,

    ReplyDelete

பின்னூட்டங்கள்