மணவிலக்கானவனின் சாட்சியம்

கனடாவில் வெளிவரும் ”உரையாடல்” இலக்கிய இதழில் (2014) வெளிவந்த கட்டுரை.
 
நான் விவாகரத்தானவன். இப்பதிவானது எனது சுயத்தை நான் கேள்விக்குட்படுத்தியபோது என்மனதில் தோன்றியவையே. மற்றவர்கள் என்னுடன் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று பேசுவது நாகரீகமற்றது என்பதால் நான் மற்றவரின் எதுவித சரி, பிழைகளைப் பற்றியும்  இங்கு பேசப்போவதில்லை. இந்தப் பதிவினை நீங்கள் வாசித்தபின்  சக மனிதன் ஒருவனின் தவறுகளைக் 'கற்றுக்கொண்ட பாடங்களாக”  நோக்குவீர்களாயின் நான் இப்பதிவினை எழுதிய நோக்கம் வெற்றி பெற்றிருக்கிறது என்பேன். பின்னூட்டங்களையும் 'சஞ்சயன்" என்னும் தனிமனிதனின் வாழ்க்கையனுபவம் என்பதைத்தவிர்த்து இது பேசப்படவேண்டியதொரு விடயம், பலரும் சுயத்துடன் உரையாடவேண்டிய விடயம் என்னும் நோக்கத்தின் அடிப்படையில் எழுதுவீர்களாயின் இரட்டிப்பு மகிழ்ச்சி.

மனித உறவுகள் மிகவும் சிக்கலானவை. அதிலும் சேர்ந்து வாழும் மனிதர்களின் உறவுகள் மிகவும் மிக மிகச் சிக்கல்கள் நிறைந்ததாக மாறிவிடுவதுண்டு. நானும் இப்படியானதொரு உறவினைக் கடந்து வந்தவன். அந்த வலிகள் இன்றும் என்னுள் உறைந்துவிட்டிருக்கின்றன. இன்றும் சில சம்பவங்களோ, நினைவுகளோ, அல்லது காட்சிகளோ அந்த நாட்களை அல்லது சம்பவங்களை உயிர்ப்பித்து விடும். அப்போது அவை நடைபெற்றபோது இருந்த மனநிலை, சூழ்நிலைகள் நினைவில் வந்து, என்னில் எனக்கு அருவருப்பு ஏற்படும், இதயம் படபடக்க உடம்பு முழுவதும் ஒருவித பலத்த அசௌகரீயத்தை உணர்வேன், அந்த நினைவில் இருந்து உடனேயே கழன்று கொள்ளவேண்டும் போல் உணர்வேன். ஏதோ அசிங்கந்தை மிதித்துவிட்டது போலிருக்கும்.

தற்போதேல்லாம் கடந்து காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையில் பல ஆண்டு இடைவெளி ஏற்பட்டிருப்பதால், கடந்துபோன வாழ்க்கைச் சம்பவங்கள் எனது பிழைகளை அப்படியே படம் போட்டுக்காட்டுகின்றன. ஆச்சரியமாய் இருக்கிறது. நான் அத்தனை மோசமான குணங்களைக் உடையவனா என்று எண்ணும்போது!

கோபம் தலைக்கேறி நின்று ஆடும்போது,  நிதானம் இழந்து, என்னிலை மறந்து எத்தனை எத்தனை கூத்துக்களைக் காட்டியிருக்கிறேன். கொலைவெறி என்பதன் உண்மை அர்த்தத்தை மிக நெருக்கமாகவே உணர்ந்து,  சக மனிதன் ஒருவனுக்கு எத்தனை வலிகளை கொடுக்க முடியுமோ அதை அளவற்றுக் கொடுத்திருக்கிறேன். எனக்குள் ஒரு வன்முறையாளன் இருக்கிறான் என்பதை சில ஆண்டுகள் கடந்த பின் சற்று எட்டத்தில் இருந்து, கடந்துபோன காலத்தை எட்டிப்பார்க்கையில் புரிகிறது. அக்காலங்களில் வன்முறை என்ற பிரக்ஞை இல்லாமலே வன்முறையுடன் புணர்ந்து அடங்கி ஓய்ந்திருந்திருக்கிறேன். மற்றையவரின் வலி எனக்கு மகிழச்சியாய் இருந்திருக்கிறது.

குழந்தைகளின் மனநிலைகளை எள்ளளவேனும் கருத்தில்கொள்ளாது, மற்றையவர் மீதான எனது உளவியல் வன்முறை இருந்திருக்கிறது. மெதுவாய் ஆரம்பிக்கும் உரையாடல், சொற்களின் வீரியத்தால் வேகம்கொண்டு, விவாதமாகி, வெடித்துச் சிதறும்போது குழந்தைகளின் கனவுகளை நான் அழித்திருந்ததை அந்நாட்களில் புரிந்து கொள்ளமுடியவில்லை. இன்று மிஞ்சியிருப்பது குழந்தைகள் மீதான எனது குற்ற உணர்ச்சி மட்டுமே.

மற்றையவர்களின் மனநிலைகளைப் புரியாது வார்த்தைகளைத் தீட்டி நுனியில் விச வார்த்தைகளைப் பூசியபின், குறி தவறாது எய்திருக்கிறேன். மற்றையவரின் எதிர்வினையில் வீறுகொண்டு எழுந்து மீண்டும் மீண்டும் அதிக வார்த்தை விசம் கலந்து எய்திருக்கிறேன். ஒரு வாழ்க்கையை வார்த்தைகள் அழித்துக் கொண்டிருந்ததை அன்று என்னால் உணரமுடியவில்லை, குரூரங்களின் வெற்றி தந்த போதையினால். எனது குழந்தைகளின் மனம், அமைதி ஆகியவை பற்றிய எதுவித சிந்தனையும் இருக்கவில்லை, ஏன், எனது எதிர்கால வாழ்க்கை பற்றிய பிரக்ஞையும் இருக்கவில்லை என்றே இன்று உணர்கிறேன்

வானில் இருந்து விழும் எதையும் மௌனமாய் ஏந்திக்கொள்ளும் பூமிபோல, குழந்தைகளும் பெற்றோரின் யுத்தகளத்தை, குரூரமான வார்த்தைகளை, தூசணங்களை, செயல்களை, குரூங்களை எதுவித விமர்சனமும் இன்றி, எதிர்ப்பும் இன்றி ஏற்றுக்கொண்டார்கள். அவை ஏந்திய அனைத்தும் என்னை நோக்கி ஏதோ ஒரு விதத்தில், ஒரு நாள் வீசப்படும் என்று தெரியாதவனாய்  நான் விதைத்துக் கொண்டிருந்தேன். அதன் விளைவுதான் இன்று தன்னம் தனியே ஒரு தோல்லியுற்ற தந்தையின் மனநிலையில் நான் கடந்துகொண்டிருக்கும் வாழ்வு. குழந்தைகளினுள்ளும் நாம் விதைத்த அந்த விசத்தின் விதைகள் விதைக்குப்பட்டிருக்குமோ என்ற கேள்வி பெரும் பாறையின் கனத்துடன் மனதினுள் இருக்கிறது.

இரண்டு பெரிய மனிதர்கள் தத்தமது கருத்துப்பகிர்வுகளை  சுமூகமாக முடித்துக் கொள்ளத் தெரியாதவர்களாய் இருந்ததால், ஆரம்பத்தில் கருத்துப் பகிர்வாக இருந்தவை எல்லாம் காலப்போக்கில் விவாதங்களாக மாறி, விவாதங்கள் வார்த்தைக் குண்டுகளில் வெடித்துச் சிதறி முடிந்தபோது எனது வாழ்க்கையின் அத்திவாரம் பிளவுபடத் தொடங்கியருந்ததை நான் அறிந்துகொள்ளவில்லை. வாழ்வு தரும் சமிக்ஞைகளை அவதானிப்பதும், அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதும் அவசியம் என்பதும் இன்று புரிந்திருக்கிறது. அன்று அது புரியவில்லை. ஏன் என்பதற்கான பதிலை தேடிக்கொண்டிருக்கிறேன்.
காலப்போக்கில் எதைப் பேசினாலும், எப்படி பேசினாலும் வார்த்தை யுத்தம் ஏற்படலாம்  என்னும் நிலை வரலாம் என்றபோது பேசாது இருப்போம், என்ற சுடலை ஞானம் வரும். ஆனாலும் அதுவும் சற்று நேரம்தான். மீணடும் வேதாளம் முருங்கையில் ஏறிப் பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கும்.

ஒன்றாய் இருந்த படுக்கை வௌ;வெறு அறைகளுக்கு மாற்றப்பட்டு, உனது, எனது என்று பாகம் பிரிக்கப்பட்டு, தனித்தனிச் சமையல் என்று ஆகியிருந்த காலமும் இருந்தது.

தொலைபேசியில் மற்றயவரைக் குறை சொல்லியே மகிழ்ந்த காலங்களும், எனது தவறுகள் மிகக் குறைவு என்று நியாயம் கற்பித்த நாட்களும், அடங்காப்பிடாரி என்று மற்றையவர் முன்னிலையிலேயே ஊருக்கு அறிவித்த நாட்களிலும் எனது தவறுகளை நான் உணர்ந்து கொள்ளவில்லை. எந்த  நேரத்திலும் மற்றவருடைய மனநிலையை நான் புரிந்து கொண்டு அதிகம் விட்டுக்கொடுத்துப் போகாத மனநிலை சிறிது சிறிதாகவே எனக்குள் புகுந்து இறுதியில் அவையே வாழ்க்கையாகியது.
பேச்சற்று, குறுஞ்செய்தியில் மட்டுமே பேசிக்கொண்டேன். மற்றையவர் வாய் திறந்த நேரங்களில் காட்டுக் கத்து கத்தினேன். மற்றையவருடன் உரையாடுவதே அசிங்கமானது என்ற மனநிலையும் வாய்த்திருந்தது. இன்றும் அப்படியே! கண்ணில் எரிக்கும் வெறுப்பை உமிழ்ந்துகொண்டு திரிந்தேன். எங்கெல்லாம் மற்றையவரை அவமானப்படுத்தி, சிறுமைப்படுத்தமுடியுமோ அங்கெல்லாம் அதை மிகச் சிறப்பாக செய்து குரூரத்தின் ருசியை பருகிக்கொண்டேன்.

யார் உதவி கேட்டாலும் உடனே போய்ச் செய்வதே எனது வழக்கம். ஆனால் வீட்டிலோ என்னுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்ட மற்றையவர் ஏதும் உதவிகேட்ட நேரங்களில் 'இவ்வளவு செய்யும் உனக்கு இதைச் செய்யத்தெரியாதா” என்று இகழ்ச்சியுடன் குரூரம் காட்டியிருக்கிறேன். மற்றையவரின் அமைதியைக் குலைப்பதில் முனைப்பையையும்  மகிழ்ச்சியையும் கண்டிருக்கிறேன். மற்றையவரைக் காணும் நேரமெல்லாம் புறுபுறுத்தபடியோ, திட்டியபடியோ அல்லது பற்களை நெருமி கண்களில் நெருப்பினைக் குழைத்துக் காண்பித்தபடியே கடந்துபோயிருக்கிறேன்.  சாதாரண மனிதனுக்கு கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச அன்பை, அக்கறையை, கவனத்தை நான் ஒருபோதும் அவருக்குக் கொடுக்க விரும்பவில்லை. மாறாகக் கேலியும் அசிங்கமும் படுத்தினேன். இவையெல்லாம் பிரச்சனைகள் தொடங்கி சில ஆண்டுகளுக்குள் என! மற்றையவர் துன்பப்படும்போது, வேதனைப்படும்போது, கண்ணீர் சிந்தும்போது எனது கர்வம் மேலோங்கி, குரூரமாய் மகிழ்ந்திருந்திருந்தேன்.

குழந்தைகளுடனான நேரங்களைத் தவிர்த்து ஏனைய நேரங்களில், வேலையே கதி என்று இருந்திருக்கிறேன். வீடுசென்றால் பிரச்சனைகள் வரும் என்பதால் வாகனத்தில் உறங்கிக் கிடந்த நாட்களும் உண்டு.

நாடுவிட்டு நாடுவந்த குடும்ப நீதிமன்றங்கள், நண்பர்களின் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போதும், கறுவிக்கொட்டியபடியே வரட்டுக் கௌரவம் பேசி, முன்வைக்கப்படும் தீர்வினை ஏனோதானோ என்று முழு மனதுடனான சமாதான பிரக்ஞை இன்றி, செயற்படுத்திய நாட்கள்,  ஒரு குடும்ப நிறுவனத்தின் இறுதிக்காலம்  என்றதையும் நான்  புரிந்துகொள்ளவில்லை.
மனிதர்கள் ஒருவரை ஒருவர் வெறுக்க எது காரணியாய் இருக்கிறது? ஆதிக்கத்தன்மையா? அன்பின்மையா? மற்றைவர் மீதான மரியாதையை மதிக்காமையா? யதார்த்தத்தை உணராத்தன்மையா?  எனக்கேதோ இவையனைத்துமே மனப்பிறள்வுகளுக்குக் காரணம் என்று படுகிறது..

காதலின் பின்பு, திருமணத்தின் பின்னான ஆரம்ப நாட்கள் கடந்து முடிந்த பின்புதான் வாழ்க்கையே ஆரம்பிக்கிறது. ஆரம்பகால வாழ்க்கையானது ஒரு கற்பனை விளம்பரம் போன்றது. எல்லாமே மகிழ்ச்சியாயும், சிறப்பானதாயும் இருக்கும். எதையும் விட்டுக்கொடுப்போம். இசைந்துபோவோம். கலந்தும் போவோம். கற்பனையில் பினாத்தும் காலமும் இதுவே
ஆனால் அதன் பின்னான காலம்தான் வாழக்கையின் பிற்காலங்களை முடிவுசெய்கிறது என்று நான் புரிந்துகொண்டபோது  திருமணமாகி இருபது வருடங்களாயும், விவாவகரத்தாகி நான்கு வருடங்களாகியும் இருந்தது.

ஆரம்பகாலங்களில் ஒருவர் மீதான ஈர்ப்பு அதிகமாய் இருக்கும். அவருடனேயே இருக்கவேண்டும், பேசவேண்டும் என்று நிலை சற்று சற்றாக மாறத்தொடங்குவது இயற்கையே. இந்த யதார்த்தத்தை பலரும் புரிந்துகொள்வதில்லை. எந்த மனிதனுக்கும் சுயம் என்று ஒன்று உண்டு. அதன் இருப்பு, விருப்பு, வெறுப்பு என்பன மனிதனுக்கு மனிதன் மாறுபடலாம். அதேபோல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும். இவற்றை உன்னிப்பாக அவதானித்து மற்றையவர் மீதான சுதந்திரத்தை மதித்து, அதே போல் எனது சுதந்திரமும் மதிக்கப்படும்போதுதான் வாழ்க்கை மீதான பலமானதொரு அத்திவாரத்தை கட்டியெழுப்ப முடிகிறது.

எனது தவறுகளில் முக்கியமானது நான் மற்றையவரின் சுயம், தன்மை, எதிர்பார்ப்பு,  குணம் ஆகியவற்றில் கவனம் செலுத்தாமையே என்பது எனது கணிப்பு.

எனது சுயம், தன்மை, விருப்பு வெறுப்புக்களை நான் முன்னிறுத்தியபோது என்னையறியாமலே ஒருவித ஆதிக்கத்தன்மை உருவாகும் சந்தர்ப்பம் இருக்கிறதல்லவா?  இப்படியான சந்தர்ப்பங்கள்  இரு பகுதியினருக்கும் பொருந்தக்கூடியவை.
நான் மற்றையவர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்று பேசுவது நாகரீகமற்றது என்று உணர்வதால் மற்றையவரின் சரி பிழைகள் இங்கு பேசப்படமாட்டாது. அதே வேளை நான் செய்தவை அனைத்தும் பிழை என்றோ அல்லது சரி என்றோ நான் கூறவில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

சேர்ந்து வாழும் ஆரம்பகாலங்களின் கவர்ச்சி வடியும்போது ஒருவர் மீதான கவர்ச்சியும், ஈர்ப்பும் குறையும் என்பதில் எதுவித ஐயப்பாடும் இல்லை. அது இயற்கையே. இக்காலத்தில் மற்றையவர் மீதான மரியாதையை நாம் வளர்த்துக்கொள்வது அவசியம். என்னைப்போல் மற்றையவரையும் மதிப்பதே சுதந்திரம் என்பார்கள். ஆனால் பல குடும்பங்களில் இது சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கிறது. மற்றையவரின் சுயம், விருப்பு, வெறுப்புக்கள், குணாதியங்கள், பலம், பலவீனம் ஆகியவற்றை நாம் நன்கு விளங்கி உள்வாங்கிக்கொண்டாலே அன்றி எம்மால் வளமானதொரு உறவை வளர்த்துவிடமுடியாது. நான் தலைகீழாக விழுந்து அடிபட்ட இடமும் இதுவே.

இருமனிதர்கள் சேர்ந்து வாழுதல் என்பது ஒருவித ஒப்பந்தமே. எம்மில் பலருக்கு அந்த ஒப்பந்தத்தின் கீழ் உள்ள கிளை ஒப்பந்தங்கள் புரிவதில்லை.  என்னைப் பொறுத்தவரையில் நிறுவனமயப்படுத்தப்படும் குடும்ப உறவுகளில் கிளை ஒப்பந்தங்களே முக்கியமானவை.

கிளை ஒப்பந்தங்கள் மற்றையவரின் மீது மரியாதை வளரும்போது தானாவே உருவாகிவிடுகின்றன. கோயிலுக்குச் செல்வது ஒருவருக்கு மிக அவசியமானதாயும். மற்றையவர் நாத்திகராகவும் இருக்கும்  சந்தர்ப்பத்தில், நாஸ்திகர் அவ்விடத்தில் தனது நாஸ்திகத்தை நிறுவாது, தனது துணைவரைக் கோயிலுக்குச் சென்று வர அனுமதிக்கும்போதுதான் ஒரு கிளைஒப்பந்தம் உருவாகிறது. காலப்போக்கில் இருவருக்கும் இதுபற்றிய பிரக்ஞை ஏற்படுவதும் சாத்தியமாகிறது. இது மேலோட்டமான ஒரு உதாரணமே.

உரையாடலுக்கும் விவாதத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் பற்றி நான் அறிந்துகொண்ட போது எனது வாழ்வில் உரையாடல்களை விட அதிகமாக விவாதங்களே நடந்திருக்கின்றன என்பதை உணர்ந்து கொண்டேன். உரையாடலுக்கும் விவாதத்திற்குமான இடைவெளி என்ன? மிக இலகுவாகக் கூறினால் உரையாடலில் இருவரும் வெற்றிபெறுவார்கள். ஆனால் விவாதத்தில் ஒருவரே வெற்றி பெறுவார். குடும்பம் இருவரை அடிப்படையாகக் கொண்டது எனவே உரையாடலே அவசியமாகிறது அங்கு. வாழ்க்கை நாம் கேட்பதை, வரும்புவதைத் தருவதற்கு அது நமது நண்பன் இல்லை என்ற தொனியில் ஒரு பாட்டு 'தங்கமீன்கள்" படத்தில் வருகிறது. அவ் வார்த்தைகள்  உண்மையானவை என்பதை நான் வாழ்ந்து அனுபவித்துக் கடந்திருக்கிறேன்.

வாழ்வு என்பது என்னுடையது. அதன் தரம் (Quality of life), விழுமியங்கள், சுயம், விருப்பு, வெறுப்பு பற்றிய பிரக்ஞையுடன் வாழ்வது அவசியம் என்று கருதுபவன் நான். மற்றையவருடனான எனது  கிளை ஒப்பந்தங்கள், மனங்களுக்கிடையிலான மென்மையான உணர்வுகள், அன்பு ஆகியவை பெரும்சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது பல வருடங்கள் நான் அவற்றுடன் இழுபட்டுக்கொண்டே வாழும் வழிமுறையைக் தெரிவு செய்தேன். அதுவே எனது பாரிய முட்டடாள்தனங்களில் முதன்மையானது. என் ஆழ்மனதை நான் அறிந்திருந்தும் அதன் கோரிக்கைகளுக்கு நான் செவிமடுக்கவில்லை. அதன் பயனாகத் தொடர்ந்து பத்து ஆண்டுகள் மனச்சோர்வு என்றும் நோயுடன் வாழ வேண்டியதாயிற்று. அதன் பாதிப்பு இப்போதும்   உண்டு. அதுமட்டுமல்ல எனது குழந்தைகளுக்குத் தினமும் குடும்பச்சண்டைகள் வேதனையைக் கொடுத்தன, இன்னொரு மனிதருக்கு என்னால் முடிந்தளவு வலியைக் கொடுத்தேன். நான் மனதில் வேதனையுடன், மகிழ்ச்சியற்றும்,  நடைப்பிணம்போலவும், ஏனோதானோ என்று வாழ்ந்து தீர்த்தேன்.

குடும்பம், சகோதரர்கள், பெற்றோர், ஊரார், சமூகத்தில் எனது கௌரவம், பெரியமனுசத்தன்மை என்று பலவிடயங்கள் என்னை ஒரு முடிவு எடுக்கமுடியாத நிலைக்குத் தள்ளியிருந்தன.

உண்மையில் இப்போது நினைத்துப் பார்க்கும் போது எமது சமூகக் கட்டமைப்பு மீது கடும் வெறுப்பு ஏற்படுகிறது.

என்னால் தொடர்ந்தும் சேர்ந்து வாழ முடியாதிருக்கிறது நான் இந்த உறவில் இருந்து விலகிக் கொள்ளப்போகிறேன் என்று உதவி கேட்டபோது 'சமாளித்துப் போ” என்னும் பதிலே கிடைத்தது. இந்தப் பதிலை சற்று ஆராய்வோமேயானால் என்னால் உண்மையில் 'மூச்சு எடுக்க முடியாதிருக்கிறது, உதவுங்கள் என்று நான் உதவிகோரும்போது, 'சற்று சமாளித்துக்கொள், மூச்சைக் குறைவாக எடு” என்பது போலவே சமூகத்தின் பதில் இருந்ததாக நான் உணர்கிறேன்.

என்னிடம் யாரும் திருமணம் பற்றிக் கேட்டால் 'முடிந்த வரையில் தள்ளிப்போடு” என்றே கூறுகிறேன். வாழ்க்கையில் பிரச்சினை! என்ன செய்யலாம் என்றால்  முழுமனதுடன் சேர்ந்து வாழ்வதற்கான காரியங்களில் ஈடுபடு, அது வெற்றியளிக்கவில்லை என்றால் நண்பர்களாய் பிரிந்து மகிழ்ச்சியாய் வாழுங்கள் என்பேன்.

நான், எனது வாழ்வில் பிரிவு என்பதே தீர்வு என்று உணர்ந்தவுடனேயே அதை நட்புணர்வுடன் எடுத்துக்கூறி விளக்கி அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இன்று நாம் கடும் எதிரிகளைப்போல் வாழவேண்டியதில்லை. அதனால் ஏற்படும் வேதனைகளையும் தவிரத்;திருக்கலாம். குழந்தைகளும் பல வேதனையான நாட்களை அனுபவித்திருக்கமாட்டார்கள், நான் கடந்து வந்து பாதை கரடுமுரடு குறைவானதாக இருந்திருக்கும்.

நான் தனியே பிரிந்து செல்வதாக முடிவு செய்தபோது பின்வரும் கேள்விகளே எனக்குப் பெரும் உறுதுணையாய் இருந்தன.
 • மற்றையவரில் எனக்கு அன்பு, காதல் இருக்கிறதா?
 • எனது வாழ்வில் அமைதி இருக்கிறதா?
 • நான் மனதளவில் மகிழ்ச்சியாய் இருக்கிறேனா?
 • இன்றிருக்கும் நிலை மேம்படுவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறதா? அவ்வாறு மேம்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறதா? அதை நான் விரும்புகிறேனா?
 • குழந்தைகள் மகிழ்ச்சியாய் இருக்கிறார்களா?
 • நான் இல்லாது போனால் குழந்தைகளின் நாளாந்த வாழ்வில் என்ன மாற்றம் ஏற்படும் ?
நான் இல்லாவிட்டால் தினம் தினம் சண்டைகளைக் கண்டு களைத்தவர்களுக்கு சிறிதளவாவது அமைதி கிடைக்குமல்லவா?
இப்படிப் பல கேள்விகள் எழுந்தன.

என் குழந்தைகளுக்கு நான் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுங்கள் என்பதைக் கற்றுக்கொடுக்காது சமாளித்தபடியே தினம் தினம் சண்டைகளுக்கு மத்தியில் வாழுங்கள் என்றல்லவா கற்றுக்கொடுக்கிறேன் என்ற சிந்தனை என்னை பெரிதாய் பற்றிக்கொண்டு அழுத்தத்தொடங்கியபோதே நான் விழித்துக்கொண்டேன். என் குழந்தைகளும் இப்படியானதொரு நிலைக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டால், அவர்கள் என்னையே பின்பற்றினால், எத்தகைய வேதனையை அவர்கள் அனுபவிப்பார்கள் என்ற எண்ணம் எனது முடிவுகைள விரைந்து செயற்படுத்தத் தூண்டியது!

ஒரு முடிவினை எடுப்பது மிக மிக இலகு அதை செயற்படுத்துவதுடன் ஒப்பிடும்போது. எனது முடிவினை குழந்தைகளுக்கு அவர்கள் மொழியில் எடுத்துகூறவேண்டும். அவர்களை தேவைக்கு அதிகமாய் கலரப்படுத்தக்கூடாது. இருவரையும் கடற்கரைக்கு அழைத்துப்போய் அமைதியான சூழ்நிலையில் மெதுவாய் விளக்கிக் கூறியபோது, அவர்கள் இதனை எதிர்பார்த்திருந்தவர்கள் போலவே உணர்ந்தேன்.

பிரிந்துபோகும் மனிதர்கள் நண்பர்களாக பிரிந்துசெல்லாவிட்டால் வாழ்வு எத்தனை வலியானதாய் மாறிப்போகும் என்பதை அதன் பின்னான காலங்களில் இருந்து உணர்ந்துகொண்டிருக்கிறேன். ஒருவரின் பலவீனமான இடத்தை குறிபார்த்துத்தாக்குவதும், அதுவே போட்டியாய்மாறிப்போவதும் வாழ்க்கை விவாகரத்தின் பின்பும் நிம்மதியாய் இல்லை என்பதை உறுதிப்படுத்தும். இருவரும் நமக்குள் உறவு எதுவுமில்லை, நாம் வெவ்வேறு மனிதர்கள் என்று உணர்ந்துகொண்டு நண்பர்களாய் வாழாவிட்டாலும் எதிரிகளாய் மாறிக்கொள்ளாது வாழ்ந்தாலே குழந்தைகளுக்காவது அது ஆறுதலாயிருக்கும்.

ஒரு குடும்ப வாழ்வில் இருந்து விலகிக்கொள்வது என்பது இலகுவானதல்ல. அதுவும் எமது சமுதாயத்தில். பெண்களின் பக்கம் ஏராளமான பிரச்சனைகளும், சவால்களும் இருப்பது போல எனக்கும் சவால்கள் இருந்தன, இருக்கின்றன. குடும்பத்தை பிரிந்தவன் என்னும் ஏளனமும், குத்தல் கதைகளும், பெண் பொறுக்கி என்றும், காமுகன், பொறுப்புற்றவன் என்றும் முதுகுக்குப்பின்னே பேசக்கேட்டிருக்கிறேன். எதையும் நேரடியாக பேசிப்பழக்கமில்லா சமூகம் எம்முடையது. என்னுடன் பழகும் பெண்களையும் வாய்கூசாது என்னுடன் இணைத்துப்பேசும் பெரியமனிதர்களும் இருக்கிறார்கள்.

விவாகரத்தானவன் ஒரு மோசமான மனிதன் என்றும், விவாகரத்தாகதவர்கள் தாம் ஏதோ சிறந்த மானிடப்பிறவிகள்போலவும் நினைத்துக்கொள்ளும் ஒரு கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. இப்படியான மனிதர்களின் வார்த்தைகள் சில நேரங்களில் எனக்குள் மிஞ்சியிருக்கும் சக்தியையும் உறுஞ்சிவிடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. சில நேரங்களில் கருத்தாடல்களின் போது கருத்தை கருத்தால் வெற்றிகொள்ளமுடியாத மனிதர்கள் எனது தனிப்பட்ட வாழ்க்கையை கையில் எடுக்கும் கோமாளித்தனங்களும் நடக்கத்தான் செய்கின்றன.

இருப்பினும் விவாரத்தானவர்களும் மனிதர்களே. அவர்களுக்கும் எம்மைப்போன்றவர்களே என்று எண்ணும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மனதுக்கு ஆறுதலான விடயம் இது.

வாழ்க்கை ஒன்றை வாழந்துகொண்டிருக்கிறோம். அதன் நன்மை தீமைகள் எம்மை பாதிக்கின்றன. எது எப்படியாயினும் பிறப்பில் தொடங்கப்பட்ட இந்த வாழ்க்கையினை நாம் வாழ்ந்து முடிக்கவேண்டும். எமது வாழ்வினை முடிவெடுப்பதும் நாம்தான். அதை வாழ்வதும் நாம்தான்.

விவாகரத்தானவனும் மனிதனே. அவனொன்றும் வானத்தில் இருந்து விழுந்தவனில்லை.
2 comments:

 1. அருமையான சுய அலசல்.

  எதுவுமே காலம் கடந்தபின்தான் புரிகிறது:(

  தவறுகளைத் திருத்திக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால்..... கிடைத்தால்....... ப்ச்

  ReplyDelete
 2. சிந்திக்கதூண்டும் கருத்துக்கள். வாழ்க்கை ஒரு போர்க்களம் என்பார்கள் பெரியோர் உங்களின் பகிர்வும் அதை வழிமொழிகின்றது.

  ReplyDelete

பின்னூட்டங்கள்