கரைந்து, நிறையும் நான்


இரவு நித்திரை முறிந்து முறிந்து வந்தது. 5 மணிபோல் தூக்கம் கலைந்துபோனது. தனிமை கடும் புகார்போன்று சூழ்ந்துகொண்டபோது பாதுகாப்பற்ற, ஆநாதரவான மனநிலையை மிக மிக அருகில் உணர்ந்தேன். மார்பு தட தட என்று அடித்துக்கொண்டது. அருகில்யாரும் இருந்தால் அவரருகில் அடைக்கலமாகலாம். அப்போது மனது இப்படி அநாதரவான உணர்வினை உணர்ந்து, தவிக்காது என்பதை அறிவேன்.

முன்பு இளையமகள் என்கருகிலேயே தூங்குவாள். அவளுக்கு அடுத்ததாக மூத்தவள். அதிகாலையில் இளையவள் கையைச் சூப்பியபடியே என் மார்பில் ஏறித் தூங்கிப்போவாள். அவளை இறக்கி வைக்கமுனைந்தால், இறுக்கமாய் கட்டிக்கொள்வாள், அசையவேமாட்டாள். அவளது அக்காள் என்னருகில் ஒட்டிக்கொண்டு தூங்கியிருப்பாள். மனது பாதுகாப்பான, நம்பிக்கையான மனஉணர்வில் நிரம்பி வழியும். என்வாழ்வின் உச்சமான நாட்கள் அவை என்பதை நான் அன்று அறிந்திருக்கவில்லை.

அந்நாட்கள் கடந்துபோய் இப்போது தனிமையின் உக்கிரத்தை உணர்ந்துகொண்டிருக்கிறேன். இன்றும் குழந்தைகள் இருந்திருந்தால் என்று நினைத்தேன். மனது வலித்தது. அப்புறமாய் சற்று வாசித்தேன். அதன்பின் தூங்கியும் போனேன். அப்போது மணி 7 இருக்கலாம்.

காலை 09.00 போல் தூக்கம் கலைந்தது. தொலைபேசி மின்னிக்கொண்டிருந்தது. எடுத்துப்பார்த்தேன். இலங்கையில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.
கண்ணாடியை அணிந்துகொண்டு யார் அனுப்பியது என்று பார்த்தேன். இலக்கம் மட்டும் இருந்தது. பெயர் என்னிடம் இருந்திருந்தால் அது தெரிந்திருக்கும். எனவே இது முன்பின் அறியாத ஒருவர் என்று நினைத்தபடியே செய்தியை திறந்து வாசித்தேன். அது இப்படி இருந்தது.

“அண்ணண் வணக்கம். நான் ____ (ஒரு பெயர்). 23ம் திகதி வேலை ஆரம்பிக்கிறேன். உங்களுக்கு எனது நன்றிகள் அண்ணண்” என்றிருந்தது.
பெரைப் பார்த்ததும் அனைத்தும் புரிந்தது.

2013ம் ஆண்டு என்று நினைக்கிறேன். அவரை நான் படுவான்கரையில் ஒரு தகரக்கொட்டகையில் சந்தித்தேன். அவர் ஒரு பெண். அதிக வயதில்லை. ஒரு குழந்தையின் தாய். முள்ளிவாய்க்காலில் கணவர் காணாமல் போயிருந்தார். அவரும் போராளி. இவரும் போராளி. ஊருக்குள் இவரை வட்டமிட்டபடி ஒரு கூட்டம்.

இதனால் ஒளிந்து ஒளிந்து வாழ்ந்துகொண்டிருந்தார். எம்மால் நிரந்தர வருமானம் கொடுக்கும் தொழில் செய்துகொடுக்க முடியவில்லை. சிறு சிறு உதவிகள் செய்தோம். இலங்கை செல்லும்போது ஒவ்வொருமுறையும் அவரை கட்டாயம் சந்திப்பேன். 3 வருடங்களின்பின் அமைதியான ஒரு இடத்தில் வாழத்தொடங்கியிருந்தார் அவர்.

இந்த வருட ஆரம்பத்தில் முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டார். யாராவது ஒருவருக்கு உதவுவதற்கான அவரும் அவரது நண்பர்களும் விரும்புவதாக அறிவித்தார்.

அவர் நம்பிக்கையானவரா என்பதை உறுதி செய்துகொண்டபின், இன்று குறுஞ்செய்தி அனுப்பியவரை அறிமுகப்படுத்தினோம். இடையிடையே சில உதவிகளை செய்யவேண்டி வந்தது. இலங்கையில் உள்ள எனது நண்பர்கள் மூலமாக அவற்றைச் செய்துகொடுத்தோம்.
இரண்டு, மூன்று மாதங்கள் கடந்த நிலையில் ஒரு சிறு கைத்தொழில் முயற்சியினை ஆரம்பித்து, அதற்கான உபகரணஙகள், இயந்திரங்கள், முலப்பெருட்கள் என்று அந்தப் போராளிக்கு உதவியிருந்தார்கள்.

23ம் திகதி தொழில் ஆரம்பிக்கப்படுகிறது.
இதுதான் குறுஞ்செய்தியின் பின்னான கதை.

இன்று அதிகாலை, என் மனதில் இருந்த பாதுகாப்பற்ற அநாதரவான மனநிலை அகன்று மகிழ்ச்சியாய் உணர்ந்தேன். வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருந்தது.
வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லையே. கிடைப்பதை அடிப்படையாகக்கொண்டு வாழப் பழகுவதே மகிழ்ச்சியானது.

இன்று வரை நண்பர்களின் உதவியுடன் ஏறத்தாள 150 மணிதர்களுக்கு அவர்களின் வாழ்க்கையை சற்றாவது வளமாக மாற்றியமைப்பதறகு உதவ முடிந்திருக்கிறது என்பது எனக்கு பலதையும் கற்றுத்தந்திருக்கிறது.
மிக முக்கியமாக இந்த மனிதர்களின் அன்பில் நான் கரைந்தும், நிறைந்தும் போகிறேன். இன்றும் அப்படியே.
நிறைந்திருக்கிறேன்.

வாழ்க்கை அழகானது நண்பர்ளே.

2 comments:

  1. "வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லையே. கிடைப்பதை அடிப்படையாகக்கொண்டு வாழப் பழகுவதே மகிழ்ச்சியானது." என்ற வழிகாட்டலை வரவேற்கின்றேன்.

    ReplyDelete
  2. மீனைக் கொடுப்பதைவிட மீன் பிடிக்க கற்றுக் கொடு என்பார்கள் ஒரு குடும்பத்தை வாழ வைத்த புண்ணியம் உங்களுக்கும் , சார்ந்தவர்களுக்கும் . பாராட்டுக்கள்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்